பெரியவாளை ஆஶிர்வதிக்க, “பெரிய அம்மாவே” வந்தது போல் அழகான லீலை ஒன்று நடந்தது…
ஸாதாரணமாக அம்மா அப்பாவையும் விட தாத்தாவின் செல்லம் அலாதியானதுதான்.
ஆனால், இந்த ‘உம்மாச்சி தாத்தாவோ’ அப்படியெல்லாம் எந்த குழந்தைக்கும் செல்லம் கொடுத்ததில்லை.
அவ்வளவு ஏன்? ஸன்யாஸத்துக்குப் பிறகு பாரிஷதர்களைக் கூட, தொட்டறியாத அவர், குழந்தைகளைக் கூட தொட்டதில்லைதான்!
‘உம்மாச்சி தாத்தாவை…பார்த்தே ஆகணும்!’ என்று அடம் பிடித்தே ஶ்ரீமடத்திற்கு ஓடி வரும் குழந்தைகளும் உண்டு.
இந்த தாத்தாவும், தனக்கும் வேற வேலையே இல்லை என்பது போல, புராணக் கதை, ஊர் கதை [கிட்டிப்புள், லேட்டஸ்ட் ரிலீஸ் ஸினிமா உள்பட] குழந்தைகளிடம் பேசியதுண்டே!
“நீங்க, ஏன் உம்மாச்சி தாத்தா… இப்டி ட்ரெஸ் பண்ணிண்டு இருக்கேள்?”.....
“தாத்தா….ஒனக்கு ....ஏன்… ஷூ கிடையாது”
இத்யாதி கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்வார்.
ஒருநாள் கலவையில், இந்த அருமையான தாத்தா தங்கியிருந்த ஸமயம்…
வரிஸையாக தர்ஶனம் பண்ண வந்த அடியார்களிடையே ஒரு மூன்று அல்லது நாலு வயஸ் பெண் குழந்தை தனியாக நின்று கொண்டிருந்தது.
ஒரு ஸுமுகமான பாரிஷதர், ஒவ்வொருத்தர் கோரிக்கையையும் கேட்டு, பெரியவாளிடம் சொல்கிறார்.
குழந்தையின் turn வந்தது.....
‘ஒனக்கு என்னம்மா வேணும்?”
பெரியவாளே குழந்தையிடம் கேட்டார்.
“தான்! தன்னுடையது!” என்பதுதான் நமக்கெல்லாம் தாரகமந்த்ரம்!
ஆனால், தனதென்பதே அறியாத கள்ளமில்லாக் குழந்தையும், எல்லாமே…. தானாகிப் போன தயாபரனும் பேசிக் கொண்டால்….???
குழந்தை ஸமத்தாக கை கூப்பியபடி….
“பெரியவா தீர்காயுஸா நன்னா இருக்கணும்!”
ஸாதாரணமாக அன்பையும், பக்தியையும் கூட கட்டுப்படுத்தியே காட்டும் பெரியவா…. இந்தக் குழந்தையின் ஆஶிர்வாதத்தை கேட்டதும், உடனே அன்று அதிஸயமாக “காமாக்ஷி” என்று வாய்விட்டே கூறி விட்டார்!
சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள்!
பின்னே?
இது என்ன ப்ரார்த்தனையா? ஆஶிர்வாதமா?
குழந்தையின் ஆழ்ந்த அன்பும், கள்ளமில்லாத மனஸும் அவருக்கு தெரியாது போகுமா? குழந்தையும் தெய்வமும் ஒன்றே என்று சும்மாவா சொன்னார்கள்?
நம்மிடையே ஸதாயுஸ் காலம் பெரியவா நடமாடியதற்கு…. இந்த “பெரிய அம்மா“வின் ஆஶீர்வாதமும் ஒரு காரணமாக இருக்கலாம்!
நம்முடைய அநுராதா நக்ஷத்ரக்காரர், ‘அப்பழுக்கில்லாத நூறு‘ கண்டதற்கு “ஶதம் ஜீவேம ஶரத: ஸவீரா:” எப்படி அற்புதமாக பொருந்துகிறது!
அந்த குழந்தை வீட்டில் நமஸ்காரம் பண்ணும்போது, “தீர்காயுஸா நன்னா இரு” என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லியிருப்பதை உள்வாங்கி, இன்று இந்த மா மதுரப் பெரியோனுக்கு அவரிடமே, அவருக்காக “தீர்க்காயுள்” ப்ரார்த்தனை விடுக்கிறது!
எல்லாரையும் போல் ஸுயவிஷயமாக மட்டுமே பெரியவாளை போட்டு பிடுங்காமல், அவரது நலத்தை மட்டுமே கோரிய ஓர் அதிஸய ஜீவன்தான்!
வீடுகளிலும் எப்போதுமே நல்ல வார்த்தைகளையே பெரியவர்கள் பேசினால், குழந்தைகளும் அதை பிடித்துக் கொள்ளும்.
கூடியிருந்தோரின் மேனி சிலிர்த்தது!
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
No comments:
Post a Comment