Tuesday, May 10, 2022

ரகோபதேஸம்_7

 #ரகோபதேஸம்

எழுதியது பாஸ்கர் சத்யா 

#ரகோபதேஸம்_7

நான் அன்று படத்திற்கு வரும் போது குருநாதர் தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருந்தார்.  நானும் அவருடன் பூப்பறிப்பதில் சேர்ந்து கொண்டேன்.

'ஒரு கேள்வி கேட்கலாமா மாமா உங்க கிட்ட?'

'என்னடா பீடிகையெல்லாம் பயங்கரமா இருக்கு?  என்ன தயக்கம் தாராளமா கேளு.  தெரிஞ்சா சொல்லப்போறேன்.'

'நேத்திக்கு என்னோட ஃப்ரண்டு ஒருத்தன் கேட்டான்.  நம்ம மதத்தில மாத்திரம் எதுக்கு இத்தனை ஸ்வாமிகள்? அப்படின்னு.'

'நீ என்ன பதில் சொன்ன அவனுக்கு?  இந்த கேள்வி அவன் கேட்டானா இல்லாட்டி நீ கேட்டு தெரிஞ்சுக்கணும்னு அப்படின்னு ஆசப்பட்டு கேக்கறயா?'

நான் சிரித்து மழுப்புகிறேன்.  என் மழுப்பல் அவருக்கு உணர்த்தி இருக்க வேண்டும், எனக்கான விடை தேடலுக்கு என் நண்பனை நான் அழைத்திருக்க வேண்டும் என்று.

'பரவாயில்லை.  உன் கேள்வியோ அவன் கேள்வியோ ..  அவசியமா எல்லாரும் பதில் தெரிஞ்சுக்க வேண்டிய கேள்விதான்.  நேக்கு தெரிஞ்சத சொல்லித்தரேன்.'

பத்து செகண்டுகள் அமைதிக்குப் பிறகு தொடர்கிறார்.

'பாஸு, நோக்கு தெரியும்னு நெனைக்கறேன்.  மனுஷாளோட  மனப்பான்மைகள் பல தினுசுகளா எப்போதும் இருக்கும். ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவாளையும் ஆகர்ஷித்து, அவர்களைப் பக்தி செலுத்த வெச்சு, அவாளோட மனச சுத்தம் செஞ்சு, சித்தத்தை ஏகாக்ர படுத்தவே அதாவது ஒருமைப் படுத்தவே பரமாத்மா பலப் பல தேவதா ரூபங்களா வடிவெடுத்திருக்கிறார்.'

“இந்த ஹிந்துக்களுக்கு எத்தனை கோடி சாமிகள்!” அப்படின்னு கூட அந்நிய மதத்தை சார்ந்தவா நம்மள கேலி செய்யறதுண்டு. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக விஷயம் தெரிந்த எந்த ஹிந்துவும் நினைக்கறதில்லை.  வைதிக மதம் ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மாத்திரமில்லை; இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமிதான் என்று வேறெந்த மதமும் கண்டு பிடிக்காததையும் கண்டு பிடிச்சு சொல்லியிருக்கு.   எனவே, பிரபஞ்சத்தை  நடத்தற மகா சக்தியாக ஒரு ஸ்வாமி தான் இருக்கிறது என்பதுல எந்த விஷயமறிந்த ஹிந்துவுக்கும் சந்தேகம் இருக்கறதில்லை.'

'ஆனா பாரு ... அந்த ஸ்வாமி பல ரூபங்கள்ல வரமுடியும்; அப்படிப்பட்ட யோக்கியதையும் கருணையும் அதற்கு உண்டு என்று நாம நம்பறோம்.

ஒரே ஸ்வாமி நம் தேசத்தின் மகாபுருஷர்களுக்குப் பல ரூபங்கள்ல தரிசனம் தந்திருக்கிறார் அப்படின்னெல்லாம் கேள்விப்பட்டிருக்கோம்.'

'அந்தந்த ரூபங்களுக்குரிய மந்திரம், உபாஸனா மார்க்கம் எல்லாவற்றையும் அந்த மகாபுருஷர்கள் நமக்குத் தந்திருக்கா.  இதையெல்லாம் முறைப்படி அனுஷ்டிச்சா நாமும் அந்தந்த தேவதையின் அனுக்கிரகத்தை பெற முடியும். அது எந்த தேவதையாக இருந்தாலும் சரி, அது முடிவில் பரமாத்மாவே அப்படிங்கிற புரிதலும் நம்மகிட்ட இருக்கு. ஆகையால, நாம சந்தேகம் கொள்ளாமல் பூரண சிரத்தையோடு பக்தி செலுத்தினா அது நமக்குச் சம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை தரும்.   இந்த விடுதலைக்கு நாம பக்குவப்பட்டு நாம வர்றதுக்கு முன்னாடி லௌகிக வேண்டுதல்களைக் கூட நிறைவேற்றி பரமாத்மா அனுக்கிரகிப்பார்.'

'அவரவர் மனசைப் பொருத்து, ஒன்றில் பிடிமானம் கொள்வதற்காகத்தான் இத்தனை தேவதைகள் இருக்கு.  அத்தனை தேவதைகளுக்கான உபாஸனைகள் இருக்கு.'

'உதாரணமா அம்மாகிட்ட அன்பு செலுத்தற குழந்தை மாதிரி பரமாத்மாவை அனுபவிக்கணும் அப்படிங்கற மனப்பான்மை உள்ளவாளுக்கு அம்பாள் உபாஸனை இருக்கு. ஒரே சாந்தத்தில் அல்லது அமைதியில் அழுந்திப்போக வேணுங்கற மனோபாவம் உள்ளவனுக்கு தக்ஷிணாமூர்த்தி இருக்கிறார். ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செலுத்துவதற்குக் கிருஷ்ண பரமாத்மா இருக்கார்.  இப்படி லௌகீக விஷயங்களை சார்ந்து இருக்கிற நம்முடைய மனப்பான்மைகளுக்கு ஏற்ப பரமாத்மாவை பல ரூபங்கள்ல பார்க்கறோம் அல்லது ஏத்துக்றோம்.'

'இஷ்டம் இருந்தாலும் இஷ்டம் இல்லாட்டாலும் ஏதோ ஒரு மகா சக்தியிடம் பக்தி செய்வது ஏதோ ஒரு தத்துவத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதுக்கு அனுசரணையாவே அந்த மகாசக்தியை ஒரு மூர்த்தியில் பாவிச்சு, வெறும் தத்துவத்தை ஜீவனுள்ள ஒரு அன்பு உருவகமாக பாவிச்சு, பக்தி செலுத்த நம் மதத்தில் உள்ள “இஷ்ட தேவதை” வழிபாடே வழி வகை செய்யறது.'

'தெரிஞ்சு கேட்டியோ தெரியாம கேட்டியோ இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னாடி நீ ஏதோ இஷ்டதெய்வங்கள பத்தி ஆரம்பிச்சியே அதோட தொடர்ச்சியாகவே உன்னுடைய கேள்வி இன்னிக்கு அமஞ்சு போயிடுத்து பாரு.

'அன்போடு உபாஸிக்க வேணும்னா, உபாஸனைக்குரிய மூர்த்தி நம் மனோபாவத்துக்குப் பிடித்தமானதாக இருந்தால் தானே பக்தி ஈஸியா இருக்கும்?   இதனாலேயே இஷ்ட தேவதை என்று தனக்குப் பிடித்த மூர்த்தியை உபாஸிக்க நமது மதம் நமக்கு பரிபூரண சுதந்திரம் தந்திருக்கு.'

'நம் மனப்போக்குக்கு ஏத்தா மாதிரி இந்த உருவம் இருக்கு’ என்கிற நிலையில் ஆரம்பத்தில் ஏதோ ஒரு மூர்த்தியை இஷ்ட தேவதையாக்கிக் கொண்டாலும், போகப் போக அதனிடம் உண்மையான பக்தி உண்டாக உண்டாக, ‘நமக்கென்று என்ன ஒரு தனி மனப்போக்கு?’ என்று அதையும் விட்டுவிட அந்த தேவதையே அனுக்கிரகம் செய்யும். அப்பறம் எல்லாமே ஒரே பரமாத்ம வஸ்துவாகத் தெரியச் செய்யும்.'

'இதுல இன்னோண்ணையும் நீ நன்னா புரிஞ்சுக்கணும்.  தமக்கு இஷ்டமான தேவதைய அவரவர் உபாஸிக்கும்போது மற்றவர்களுடைய இஷ்ட தேவதைகளைத் தாழ்வாக எண்ணக்கூடாது. நமக்கு எப்படி இந்த ரூபத்தில் பரமாத்மா அனுக்கிரகம் பண்ணுகிறாரோ அப்படியே மற்றவர்களுக்கு மற்ற ரூபங்களின் மூலம் அனுக்கிரகம் பண்ணுகிறார் அப்படிங்கற தெளிவு ரொம்ப முக்கியம்.'

‘அந்தந்த தேவதைக்குரிய புராணத்தைப் பார்த்தா அது மட்டும்தான் முழுமுதற் கடவுள்; மற்ற தேவதை எல்லாம் அதற்குக் கீழானவை; இதை அவை பூஜை செய்தன; இதனிடம் அவை தோத்துப் போயிடுத்து என்றெல்லாம் இருக்கிறதே!’ அப்படின்னு எடக்கு மடக்கா நீ கேட்கலாம்.'

'இதற்கு 'நஹி நிந்தா' நியாயம் அப்படின்னு பெயர். அதாவது இதர தேவதைகளை நிந்திப்பது நோக்கம் கிடையாது. இந்த ஒரு தேவதையை ஆராதிப்பவருக்கு மனம் சிதறாமல் இதனிடம் மட்டுமே தீவிரமாகப் பற்றுதல் ஏற்படுத்தணும் என்பதே புராணங்களோட நோக்கம். இதற்காகவே இந்த தேவதைக்கு மட்டும் மற்ற தேவதைகளுக்கு இல்லாத உத்கர்ஷம் அதாவது உயர்வு அதற்குண்டான புராணங்களிலும் கதைகளிலும் சொல்லப்படறது.'

'மகானுபாவர்களாக இருந்தவர்கள் எல்லா தேவதைகளையும் சமமாகவே பார்த்தார்கள். மகா கவிகளான காளிதாசன், பாணன் அவர்களெல்லாம் கூட ஒரே வஸ்துதான் பல மூர்த்திகளாகவும் வருகிறது என்று சந்தேகமில்லாமல் கூறுகிறார்கள்.

பக்தர்களின் மனோபாவத்தைப் பொறுத்துப் பரமாத்மா பல ரூபம் கொள்கிறபோதே, பிரபஞ்சத்தில் தன்னுடைய வெவ்வேறு காரியங்களைப் பொறுத்தும் வெவ்வேறு ரூபங்களை எடுத்துக்கறது.'

'ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்யும் போது அதற்கேற்ப பிரம்மாவாகிறது; ஸத்வ குணத்தால் பரிபாலிக்கும்போது அதற்கேற்ப மகா விஷ்ணுவாகிறது; தமோ குணத்தால் சம்ஹரிக்கும்போது அதற்குரிய முறையில் ருத்ரரூபம் கொள்கிறது. இந்த மூணையும் பாணனும் காளிதாசனும் ஒரே சக்தியின் மூன்று வடிவங்களாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த மூன்றுக்கும் பொருந்துவது முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கும் பொருந்தும்.

எனவே, என் தெய்வம் உசந்தது, உன் தெய்வம் தாழ்ந்தது என்று சண்டை பிடிக்கறதுல அர்த்தமே இல்லை.'

'உன்னோட இஷ்ட தெய்வம் பிள்ளையார்னு வெச்சிக்கோ. எனக்கு ஆஞ்சநேயர பிடிக்கும் இல்லாட்டி பாண்டுரங்கனை பிடிக்கும் அப்டினு வச்சுக்கோ.  பிள்ளையார் தான் ஒசத்தி அப்படின்னு என் கிட்ட நீயும் அனுமார் தான் கிரேட் அப்படின்னு நான் உன் கிட்டேயும் தர்க்கம் பண்ணக்கூடாது.  என்னோட குணத்த ஒட்டி மனோபாவத்தை ஒட்டி ஆஞ்சநேயரை நான் இஷ்ட தேவதையாக தேர்ந்தெடுத்திருக்கலாம்.  அதே மாதிரி நீயும் கணேஸர கெட்டியா பிடிச்சுண்டு பக்தி செலுத்திண்டு வரலாம்.  கணபதிய ஸ்லாகிச்சு ஸ்தோத்திரங்கள் இருக்கலாம்.  அதே மாதிரி அனுமாருடைய வீர பராக்கிரமங்கள ஸ்லாகிச்சு புராணக் கதைகள் இருக்கலாம்.  இவைகளெல்லாம் தர்க்கங்களுக்காக கிடையாது அப்படிங்கிறத நீ நன்னா புரிஞ்சுக்கணும்.'

'ரொம்ப நன்னா சொல்லிக் கொடுக்கறேள் மாமா.'

'நீ ரொம்ப நன்னா புரிஞ்சுக்கறையா?'

'உங்கள மாதிரி சொல்லிக்கொடுத்தா புரியாம இருக்குமா?'

'என்னையே மடக்கறையாக்கும்.  அது இருக்கட்டும்.  உன்னோடு இஷ்ட தேவதை யாரு?  அதாவது ரொம்ப பிடிச்ச ஸ்வாமி.  எல்லா ஸ்வாமியும் பிடிக்கும்னு தப்பிக்க படாது.'

'உங்ககிட்ட எதுக்கும் மறைக்கனும்?  எனக்கு மகாலக்ஷ்மிதான் ரொம்ப பிடிக்கும்.'

'அப்படியா?  நீ வாலா இருக்கியே.  அனுமார்தான் நோக்கு பிடிக்கும்னு நெனச்சேன்.'

'அவரையும் பிடிக்கும்.  ஆனா எங்க ஆத்துக்கு இப்ப தேவை பணம்தானே.  மகாலக்ஷ்மிய கெட்டியா பிடிச்சுக்கோ நோக்கு பணமா கொட்டும் அப்படின்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவா.'

'அட்ரா சக்க.  இப்படி ஒரு ரூட்டு இருக்கா செல்வங்கள் கிடைக்க?'

'போங்கோ மாமா.'

'நான் உன்னை கிண்டல் பண்ணினேன் டா.  உங்க அம்மா சொல்றதுதான் சரி.  விடாம மகாலட்சுமி உருவத்தை அடிக்கடி மனசுல கொண்டு வந்து மானசீகமா அர்ச்சனை பண்ணிட்டு வா.  மகாலட்சுமி அஷ்டோத்திர ஸ்தோத்திரம் மகாலட்சுமி அஷ்டகம் ... இப்படி ஏதாவது அந்த மகாலக்ஷ்மி மனசு குளிர சொல்லிண்டு வா.  நோக்கு சகல சௌக்கியங்களும் கிடைக்கிறதா இல்லையா பார்.'

அன்று எனக்கு மகாலட்சுமி அனுக்கிரஹம் கிடைத்ததோ இல்லையோ குருநாதரின் பரிபூரண ஆசிகளும் நம்பிக்கைகளும் கிடைத்தன என்று தான் சொல்ல வேண்டும்.

'சரிடா பாஸு.  கிளம்பலாமா?  அடுத்த ஞாயித்துக்கிழமை ஹனுமத் ஜெயந்தி வர்ரது.  மடத்துல அனுமார் படத்த வெச்சு பூஜை நடக்கும்.  அவசியம் வந்து கலந்துக்கோ.'

'கண்டிப்பா மாமா.  வந்து கூட மாட ஒத்தாசையும் பண்றேன் உங்களுக்கு.'

'நீ இருக்கறச்சே நேக்கு என்ன கவலை?'

சாஷ்டாங்கமாக அவருக்கு நமஸ்காரம் அபிவாதனம் செய்துவிட்டு அவருடன் மடத்திலிருந்து கிளம்புகிறேன்.

தொடரும்

No comments:

Post a Comment