ஓம் ஸ்ரீ லஷ்மி நாரஸிம்ஹாய நம 🙏🏻🙏🏻
|| கார்த்திகை மாதத்தில் மட்டுமே கண் திறக்கும் யோக நரசிம்ஹர் ||
சோளிங்கர் கோவிலில் உள்ள நரசிம்ஹர் கார்த்திகை மாதம் கண் திறப்பதாக தலைமுறை தலைமுறையாக பார்த்தவர்கள் கூறுகின்றனர்..
ஸ்ரீ அமிர்தவள்ளி தாயார் ஸமேத ஸ்ரீ யோக நரசிம்ம (அக்காரக்கனி) ஸ்வாமி (உற்சவர் - ஸ்ரீ பக்தவத்சல பெருமாள்) திருக்கோயில்.
திருக்கடிகை (சோளிங்கர், சோளிங்கபுரம்),
(64-வது திவ்யதேசம்)
இவ்வூரில் ஒரு கடிகை (சுமார் 1/2 மணி நேரம்) தங்கி இருந்தாலே மோக்ஷம் கிடைக்குமாதலால் கடிகாசலம், திருக்கடிகை என்ற பெயர்கள் ஏற்பட்டனவாம்.
விஸ்வாமித்ரர் இங்கே கடிகையில் நரஸிம்ஹரை ஒரு கடிகை (நாழிகை) துதி செய்து ப்ருஹ்மரிஷி பட்டத்தை பெற்றதாக ஐதீகம்.
நரஸிம்ஹாவதாரத்தை தரிசிக்க விரும்பிய ஸப்த ரிஷிகள் இவ்விடத்தில் தவம் செய்ய ஆரம்பிக்க, ஒரு நாழிகைக்குள் அவர்கள் பயன் பெற்றமையால் கடிகாசலம் என்ற பெயர் பெற்றது.
இங்கு இவர் நின்ற கோலமும் அல்ல அமர்ந்த கோலமும் அல்ல.
இத்தலத்தில் ஒரு நாள் தங்கினாலும் பீடைகள் தொலைந்து மோக்ஷம் சித்திக்கும் என்று ஸ்தல புராணம் கூறுகிறது.
அதற்கான காரணம்
மகிமை வாய்ந்த நரசிம்ஹர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர்.
ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் இது.
அதனால் தான் கடிகாசலம் என்று பெயர் பெற்றது.
இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.
தக்கான்குளம் என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, யோக நரசிம்ஹரையும் யோக ஹனுமனையும் வழிபட்டு நோய் நொடி நீங்கி நலம் பெறுகிறார்கள்.
கோவில் இருப்பது மலை உச்சியில் அதனால் இளம் வயதிலேயே கோவிலைப் பார்ப்பது கோடி புண்ணியமாகும்.
ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக கூறுகின்றனர்.
ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இவருடன் அமிர்தபலவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் ஹனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும்.
அதிலும் கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் மட்டும் நரஸிம்ஹரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
எனவே இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கார்த்திகை ஞாயிற்றுகிழமைகளில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு அபிஷேகமும், பூஜைகளும் நடக்கும்.
வாழ்க்கையில் பயம் அகல முன்னேற்றம் காண ஒரு முறை சென்று பாருங்கள்.
பக்த ப்ரஹ்லாதருக்காக நேரம் காலம் பார்க்காமல் மற்றும் மற்ற அவதாரத்தை போல் கர்ப்பத்தில் அவதரிக்காமல் உடனே தோன்றியவர்.
நமக்காக உடனே வருபவர் நரஸிம்மர் மட்டுமே.
வழித்தடம்
சென்னைக்கு அருகே அரக்கோணத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலும் சோளிங்கர் அமைந்துள்ளது.
சோளிங்கர் பேருந்து நிலையத்திலிருந்து கொண்டபாளையம், 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
முக்கிய குறிப்பு
வழியில் குரங்கு கூட்டம் அதிகமாக இருக்கும் அதனால் அதற்கு ஏதாவது திண்பண்டம் கொடுத்தால் வழிவிடும்.
ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து
No comments:
Post a Comment