லஷ்மி சி
ஆன்மீகம்
புதன் கிழமை காலை திருவிடைமருதூர் கோயில் வந்தோம்.
சுதை வடிவ பெரிய நந்தி தரிசனம் முடித்து கணபதி சன்னதி அருகில் அருமையான காட்சிகள். அன்று அன்னாபிஷேகத்திற்காக மாவிலை, மட்டைத் தேங்காய், ப்லாமுசு தோரணங்கள். பக்தர்கள் கொணர்ந்து கொடுத்த அரிசியை சதுரம் சதுரமாக பரப்பி காய்கனிகளை பாத்தி கட்டியது போல் வைத்திருந்தது மிகவும் அழகாக இருந்தது.
கொஞ்சம் கும்பலாக இருந்ததால் போட்டோ எடுக்கவில்லை. மகாலிங்க ஸ்வாமி, பெருமுலைநாயகியின் அற்புத தரிசனம் முடித்து, முக்கிய சன்னதிகளை தரிசித்து கிளம்பி உப்பிலியப்பன் கோயில் வந்தோம்.
அங்கு கருடாழ்வார், உப்பிலியப்பன், பூமி பிராட்டி, மார்க்கண்டேய மகரிஷியின் திவ்யமான தரிசனம் முடித்து திருநாகேஸ்வரம் கோயில் வந்தோம்.
எனக்கு கால்வலித்ததாலும், ஏற்கனவே கோயில் தரிசித்திருப்பதாலும், நான் ஆட்டோவிலேயே இருந்து கொண்டு பத்மா, ராஜிராஜியை பார்த்து வரச் சொன்னேன்.
ராஜி ஈயச் சொம்பு வாங்க ஆசைப்பட்டதால் ஒரு கடையில் விலை கேட்டேன். 4 டம்ளர் அளவு ரசம் வைக்கும் ஈயச்சொம்பு 2850 ரூ. என்றும், 2 டம்ளர் ரசம் வைக்கும் ஈய டபரா 1650ரூ. என்று கடைக்காரர் கூறவே நான் நல்லவேளையாக மயங்கி விழாமல் வந்து ஆட்டோவில் அமர்ந்து விட்டேன். அவளும் தரிசனம் முடித்து வந்ததும் விலையைக் கேட்டதும் ஈயச்சொம்பே வேண்டாம் என்று கூறி விட்டாள்.
திருநாகேஸ்வரம் கோவிலில் திருநாகேஸ்வரர், கிரிஜாம்பிகை, ராகு பகவான், மற்றும் எல்லா சன்னதிகளும் நல்ல தரிசனம் கிடைத்து வந்தனர்.
அடுத்து திருபுவனம் சரபேஸ்வரர் கோயில் வந்தோம். முதலில் கம்பஹரேஸ்வரர், தர்மசம்வர்த்தினி இருவரின் திவ்யமான தரிசனம் செய்து சரபேஸ்வரர் சன்னதி வந்தோம். அங்கு அபிஷேகம் முடிந்து அருமையான அலங்காரத்தோடு சரபேஸ்வரர் தரிசனம் கிடைத்தது. நரசிம்மர் ஹிரண்யகசிபுவை வதம் செய்த உக்கிரம் தணிக்க சிவன் யாளி முகம், சிம்ம உடல், பறவை இறகுகள், நான்கு கால்களில் ப்ரம்மா, விஷ்ணு, சூலினி துர்க்கை, ப்ரத்யங்கராவோடு தோன்றிய அவதாரம் சரபேஸ்வரர். இவரின் உக்ரம் கண்டு நரசிம்மர் சாந்தமானதாக சொல்கிறார்கள். இங்கு செய்வினை, நரம்புக் கோளாறு முதல் எல்லா வியாதிகளுக்கும் 11 வாரம் அர்ச்சனை செய்தால் சரியாகி விடுமாம். கடைசி வாரம் ஹோமத்திற்கு நேரே வர வேண்டுமாம்.
அடுத்து நாச்சியார் கோயில் வந்தோம். கல் கருடன் பார்த்து, வஞ்சுளவல்லி, அநிருத்தன், ப்ரத்யும்னன், புருஷோத்தமன், பலராமன் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாளின் அற்புத தரிசனம் கிடைத்தது. வெளியில் வந்ததும் அற்புதமான அலங்காரத்தில் தாயார், பெருமாள் திருக்கல்யாணம் காணும் பாக்யம் கிடைத்தது. கீழே வந்து ராமானுஜர் தரிசனம் பார்த்தோம்.
நாங்கள் கும்பகோணம் வந்து சாப்பிட்டு விட்டு நன்னிலம் பஸ் ஏற நினைத்தோம். இரு வயதான அம்மாக்கள் எங்களை வற்புறுத்தி அன்னதானம் சாப்பிட அழைத்தார்கள்.
இறைவன் சித்தம் அதுவே என அங்கு சாப்பிட்டோம். பகவான் பிரசாதமானதால் அருமையான சாப்பாடு.
நேரே கும்பகோணம் வந்து நன்னிலம் பஸ்ஸில் ஏற்றி விடும் வரை ஜீவா ( ஆட்டோகாரர்) உடன் வந்தார். டிபன் இரு நாட்களும் எங்களோடு சாப்பிட்டவர் மதிய சாப்பாடு லேட்டாகும் என்றார். பொறுமையாக காத்திருந்து கூட்டி வந்தார்.
நன்னிலம் வந்ததும் ஆட்டோவில் எங்கள் ஊர் ஆனைக்குப்பத்திற்கு 3 மணிக்கு வந்தோம். என் பெரிய நாத்தனார் வீட்டில் சிறிது நேரம் ஓய்வு எடுத்து காபி குடித்து எங்கள் ஊர் சிவன் சுந்தரேஸ்வரர் கோயில் அன்னாபிஷேகம் தரிசனம் செய்தோம். அபிராமி அம்மனுக்கும் அற்புத அலங்காரம்.
சிவனுக்கு முன்னால் இருக்கும் மோதக கணபதி வெகு அழகு. மறுபுறம் தண்டாயுதபாணி. பிரகாரம் வலம் வரும் போது விநாயகர், தக்ஷிணா மூர்த்தி, கஜலெக்ஷ்மி, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், துர்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகம், சனீஸ்வரர் என்று அருமையான கோவில். கோயில் உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் சாய்பாபா சன்னதி. அருமையான அலங்காரம்.
வயதான குருக்கள் மாமா, மாமி. அலங்காரம் தினசரியே பார்த்துப் பார்த்து செய்வார்கள். மாமி நன்றாகப் பாடுவார்கள்.
சில வருடங்களாக ஊரில் அனைவரும் சேர்ந்து கோவிலில் கொலு வைத்து மாமி குழந்தைகளுக்கு பாட்டு, கும்மி, கோலாட்டம் தினம் பாட, அடிக்க சொல்லிக் கொடுப்பார்கள். வியாழன், பிரதோஷம்,
சங்கடஹரசதுர்த்தி, அஷ்டமியில் நன்றாக இருக்கும். சிவன் கோயிலில் இருந்து ஆட்டை பிடித்து ஸ்ரீவாஞ்சியம் கோவிலும் தரிசனம் செய்தோம். முதலில் குளக்கரைப் பிள்ளையாரை தரிசித்து, யமதர்மராஜன்,
சித்திரகுப்தன் தரிசனம் முடித்து அன்னாபிஷேகம் கலைத்த வாஞ்சிநாதர் திவ்யமான தரிசனம். பிறகு மங்களாம்பிகை தரிசனம் பார்த்து ஆனைக்குப்பம் சிவன் கோயில் வந்து வீடு திரும்பி, இரவு டிபன் முடித்து தூங்கினோம். கை இதற்கு மேல் டைப் அடிக்க முடியாததால் வியாழன் கோயில் தரிசனங்களை பிறகு பார்க்கலாம்
நட்புக்களே.
லெக்ஷ்மி சி.
No comments:
Post a Comment