Thursday, March 4, 2021

தீபாவளிஇனியநினைவுகள்

 முகநூல் பதிவு

#தீபாவளிஇனியநினைவுகள்.

'கும்பகோணத்தில் நவராத்திரி' என்று சமீபத்தில் ஒரு பதிவு எழுதியதும், 'கும்பகோணத்தில் தீபாவளி' என்று எழுத நினைத்தேன். ஆனால், 'ஒரே கும்பகோணம் பீத்தலா இருக்கே'😂 என்று பின்னூட்டத்தில் மத்யமர் ஒருவர் கலாய்த்ததால், தலைப்பை மாற்றி 'பள்ளிப் பருவத்தில் தீபாவளி' என்று ஒரு வாரம் முன்பு எழுதிவைத்தேன். ஆனால் தற்போது சண்டே ஸ்பெஷலில் 'தீபாவளி இனிய நினைவுகள்' என்று தலைப்பு கொடுத்ததும் மீண்டும் தலைப்பை மாற்றி விட்டேன்😂. 

பதிவு, கும்பகோணத்தில் என் பள்ளிப் பருவத்து தீபாவளி கொண்டாட்டம் பற்றியது தான். What is there in the name/title? Same content only.👍😂

எத்தனை பண்டிகைகள் வந்தாலும், அந்தக் காலத்தில் தீபாவளிக்குத் தான் முதலிடம். புதுத் துணிகள் வாங்குவதாலா, பல விதத் தின்பண்டங்கள் கிடைப்பதாலா, பட்டாசு வெடிப்பதாலா, புதுப்படங்கள் ரிலீஸாவதாலா அல்லது இவை அனைத்தும் சேர்ந்ததாலா என்று பட்டிமன்றம் வைக்கலாம். மத்யமர் விவாத மேடையிலும் அலசலாம்😂.

நான் சிறுவனாக இருந்தபோது #தீபாவளிஎன்றபெயரைக்_கேட்டாலே ஏற்பட்ட மகிழ்ச்சி, என் மகன்கள் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. எதுவுமே அரிதாகக் கிடைத்தால் தான் அதற்கு மதிப்பு என்று சமாதானம் செய்து கொள்கிறேன்👍.

தொடக்கப்பள்ளியில் படித்த காலத்தில், தினமும் காலை கண்விழிக்கும்போதே 38, 37, 36.... என்று தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாட்கள் என்பதைக் கணக்கிட்டுக் கொண்டே எழுந்திருக்கும் பழக்கம் எனக்குண்டு😂. அவ்வாறு எண்ணுவது என் தந்தைக்கு மனதில் ஒரு வித அழுத்தத்தை உண்டு பண்ணும் என்பது தெரியாத வயது. கடைகளில் கணக்கெழுதி, ஆறு குழந்தைகளை வளர்ப்பது என்பதை இப்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

எனக்குப் பத்து வயதான போது பெரிய அண்ணாவும், அதற்குச் சில வருஷங்களுக்குப் பின் அக்காவும் வேலைக்குப் போக ஆரம்பித்ததால், கஷ்டம் கொஞ்சம் குறைந்தது.

பிள்ளையார் கோவில் தெருவில் குடியிருந்தபோது, அப்பாவுக்கு போனஸோ, கைமாத்தோ கிடைத்ததும், மடத்துத்தெரு ஆர்யபவனுக்கு எதிரிலிருந்த ஜெயலக்ஷ்மி (பெயர் சரியா🤔) ஜவுளிக்கடையில் தீபாவளிக்குத்  துணிவாங்கித் தைக்கக் கொடுப்பது வழக்கம். எங்களுக்கு எதிர்வீட்டிலிருந்த, பாணாதுறை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஶ்ரீ வீஎன் சார் குடும்பத்துக்குச் சொந்தமான கடை அது. அந்தக் கடைக்கு வடக்குப் பக்கத்தில் மணிராவ் கடை என்ற ஷாப்பும், தெற்கே ஸ்வாமிமலை ஜானகிராமன் என்கிற சங்கீத வித்வான் வீடும்  இருந்த ஞாபகம். 

அரை டிராயர், அரைக்கைச் சட்டைத் துணியை எனக்கும் என் சின்ன அண்ணாவுக்கும் ஒரே துணியில் ஒன்றாகவே எடுத்தால் கொஞ்சம் சிக்கனம் என்று, எப்போதும் எங்கள் இருவருக்கும் ஒரே கலர் டிராயர், சட்டை. சாலையில் இருவரும் பள்ளிக்குப் போகையில், நாங்கள் அண்ணன், தம்பி என்று ஊருக்கேத் தெரியும்😂. 

அடுத்தது, பச்சயப்ப முதலித் தெருவுக்கு எதிரே மடத்துத் தெருவிலிருந்த ஆஸ்தான டைலர், வளரும் பிள்ளைகளுக்குத் ஸ்பெஷலாக அளவெடுப்பார்😂. கால் முட்டிக்குக் கீழே டிராயர் நன்றாகத் தொங்க வேண்டும், பழைய திரைப்படங்களில் வரும் போலீஸ் கான்ஸ்டபிள் போல. அரைக்கைச் சட்டையும் முழங்கைக்குக் கீழே இறங்கி இருக்கும். ('வானத்தைப் போல' திரைப்பட விஜயகாந்த் நினைவுக்கு வரலாம்).

சில சமயங்களில் தீபாவளிக்கு முதல்நாள் இரவு தான் துணிகளைத் தைத்துத் தருவார் டைலர். காலையிலும் மாலையிலும் அவர் கடைக்குப் போய் விசாரிப்பதும், அவர் பொத்தான் கட்டணும், காஜா தைக்கணும் என்று இரவு வரை இழுப்பதும் ஒரு தொடர்கதை.

மாதத் தவணையில் ஜவுளி வாங்குவது குறைந்து, பணம் கொடுத்து வாங்கும் நிலை வந்ததும், கடைத்தெருவில், நரசுஸ் காபி பக்கத்தில் ஜெய்ஹிந்த ஸ்டோர்ஸில் வாங்க ஆரம்பித்தோம். கறாரான சேட், பில் தொகையில் ஒரு பைசா குறைக்க மாட்டார். ஆனால் தர்மம் செய்வார்.

எவ்வளவு கஷ்டம் இருந்த காலத்திலும் பட்சண வகைகளில் எதையும் குறைக்காமல் சமாளித்த என் தாயாரை, இந்த நேரத்தில் நினைக்கத் தோன்றுகிறது🙏. (சமீபத்தில் அவர் காலமானதால் இந்த வருஷம் எங்களுக்குப் பண்டிகைகள் கிடையாது).

கொஞ்சம் வசதியான வீட்டுப் பிள்ளைகள், எனக்கு நண்பர்களாக இருந்தனர். அவர்கள் ரெடிமேட் ரகங்களில் ஹாஃப்/ஃபுல் பேன்ட், சட்டை- டெர்லீன், டெர்ரீகாட் என்று போட்டு வரும்போது,  சம்பாதிக்கத் தொடங்கியதும் அந்த ரகத்தில் டிரஸ் வாங்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது👍.

தீபாவளி நெருங்க நெருங்க பட்டாசு வாங்கத் தந்தையை நச்சரிக்கத் தொடங்குவேன். மூணு நாள்தான் இருக்கு, ரெண்டு நாள் தான் இருக்கு என்ற நச்சரிப்புப் பொறுக்காமல், 1960களின் இறுதியில் இருபது ரூபாய்க்கும் குறைவாக வாங்கிய பட்டாசுகளின் அளவைவிட, இப்போது இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வாங்குவது குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது.😩 

பொதுவாக தீபாவளிப் பண்டிகையின் போது பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறையோ அல்லது முதல் நாள் ஐந்து பீரியடோ இருக்கும்.

அப்பாவை நச்சரித்து வாங்கிய, வெடிவகைகளை, பெரிய முறத்திலும், பித்தளைத் தாம்பாளத்திலும் நன்றாகப் பரப்பிக் காயவைப்பதும், மழை வரும்போலிருந்தால், உள்ளே எடுத்து வருவதும், மீண்டும் வெய்யிலில் வைப்பதும் சாயந்தரம் வரைத் தொடரும்.

தீபாவளிக்கு முதல் நாள் காலை சாப்பாடு ஆனதும் 'தீபாவளி மருந்து' (லேகியம்) வாணலியில்/ இருப்புச்சட்டியில் கொதிப்பதே ஒரு அழகு. விறகு அடுப்பில் காலையிலிருந்து மத்தியானம் வரை கொதித்துக் கொதித்து அடங்கி வீடு முழுவதும் வாசனையைப் பரப்பி.... அப்பப்பா அது தனி. 

நாட்டு மருந்துக்கடையில் சித்தரத்தை, அரிசித்திப்பிலி, கண்டந்திப்பிலி, ஓமம்... வாங்கிச் சரியான விகிதத்தில் கலந்து, ஊறவைத்து, அரைத்து அதை வெல்லத்துடன் கொதிக்க வைத்து, கொஞ்சம் நெய் சேர்த்து... பெரிய ப்ராஸஸ். இப்போதெல்லாம் லேகியப் பொடி கிடைக்கிறது. ரெடிமேடாக லேகியமும் கிடைக்கிறது.

லேகியம் கொதித்து அடங்கும் நேரத்தில், பஜ்ஜி போடுவது ஆரம்பமாகும். இந்த வழக்கம் இன்னும் பல வீடுகளில் இருக்கிறதா என்று தெரியவில்லை. பலவித பட்சணங்கள் தீபாவளிக்குச் செய்யும் போது, மத்தியானம் பஜ்ஜி போடுவது எதற்காக?🤔 தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

முதல் நாள் இரவிலேயே சிலவீடுகளில் பட்டாசு வெடித்தாலும், நாங்கள் கப்சிப். இருப்பதே கொஞ்சம் தான், இதை முதல் நாளே வெடித்து விட்டால்!

தீபாவளிக்கு முதல் நாள் மாலை ஏழரை மணிக்கு மேலே கிளம்பி, பெரிய தெரு திரௌபதி அம்மன் கோவிலிலிருந்து நேராக மேற்கே சென்று, தெருமுனையில் இடது புறம் கடைத்தெருவில் திரும்பி பூக்கடைகள், ஆஞ்சநேயர் கோவிலைத் தாண்டி, முராரி ஸ்வீட்ஸ் வரை நடந்து, அங்கே இடது புறம் திரும்பி டைமண்ட் டாக்கீஸ் வரை ஊர்ந்து,  மீண்டும் இடது புறம் திரும்பி... அந்த ஜன வெள்ளத்தில் நீந்தித் தீபாவளிக் கடைகளையும் கடைத்தெருக்களையும் வேடிக்கை பார்ப்பது வருஷா வருஷம் தவறாது.

பெரும்பாலும் நடப்பதற்கே இடமிருக்காது. மஹாமகத்தன்று ஒருத்தரை ஒருத்தர் தள்ளிக்கொண்டு போவதைப் போல, வழியில் நடை பாதைக் கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடப்பது ஒரு அனுபவம். பிராண்டட் பட்டாசுகளைத் தவிர சுற்று வட்டாரத்தில் பட்டீஸ்வரம் போன்ற இடங்களிலிருந்து வீடுகளில் தயார் செய்த பட்டாசுகள் மலிவாகக் கிடைக்கும்.

பல கைத்தறி நெசவாளவர்கள், புடவை, வேஷ்டி, துண்டு, போர்வை போன்றவற்றை குறைந்த விலைக்குக் கூவிக் கூவி விற்பதையும், குடந்தையைச் சுற்றியுள்ள கிராமங்கள், சிற்றூர்களிலிருந்து வரும் மக்கள் அவற்றை ஆர்வமாக வாங்குவதையும் பார்க்க முடியும். 

அது போன்ற நேரங்களில், சில சமயம் மழை வந்துவிட்டால், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை நினைத்து மனது சங்கடப்படும். 

அருள்மிகு சார்ங்கபாணி கோவில் தேரடியில், ஏலத்தில் துணிமணிகள், போர்வைகள் விற்பனையாவதை வேடிக்கை பார்ப்பது ஸ்வாரஸ்யமாக இருக்கும். (ஏய் தொளசி ராமா, அந்தப் பச்சைச் சேலையை எடுரா.. நூறு ரூபா சேலை பத்து ரூபா..... பதினஞ்சு ரூபா.....).

வேடிக்கை பார்த்துவிட்டு வந்து இரவு பத்தரை மணிக்கு மேல் படுத்தால், தூக்கமே வராது😂.

விடிகாலையில் நான்கு மணிக்கே எழுந்திருந்து, தந்தை அனைத்துத் துணிகளுக்கும் சந்தனம், குங்குமம் தடவி ஸ்வாமி அலமாரியின் கீழ் வைப்பதை வேடிக்கை பார்ப்பது, (அந்த நேரத்தில் ஒரு சரவெடி கொளுத்துவது வழக்கம்- யார் கொளுத்துவது என்ற போட்டி உண்டு😂) கோலம் போட்ட பலகையில் உட்கார்ந்து அப்பா கையால் முதலில் கொஞ்சம் எண்ணெயைத் தலையில் வைத்துக் கொள்வது, ஒவ்வொருத்தராக எண்ணெய் ஸ்நானம், (கண்களில் அரப்பு விழுந்து அழுகை) புதுத் துணி உடுத்துதல், ஸ்வாமிக்கு நமஸ்காரம், லேகியமும் பட்சணமும் டேஸ்ட் பார்ப்பது முடிந்து, வெடிகள் பங்கு பிரிப்பது😁, சிம்னி விளக்கை எடுத்துக்கொண்டு ஐந்தரை மணிக்கு இருளிலேயே பட்டாசு கொளுத்த ஆரம்பித்து, புஸ் (கொம்பு)வானம், தரைச்சக்கரம் போன்றவற்றை இருளிலும் பொழுது விடிந்ததும் சீனு (சீனா🤔) வெடியை சரமாக வைக்காமல் ஒன்றொன்றாகப்😂 பிரித்து வெடிப்பது வழக்கம். அப்போது ஒன்றிரண்டு திரிகள் தனியாகப் பிரிந்து விழுந்தாலும் உபயோகப்படும்👍.

ஆறு மணிக்குப் பொழுது விடிந்த கொஞ்ச நேரத்திலேயே, என் தந்தை 'அவ்வளவுதான்டா, தீபாவளி நாகப்பட்டினத்துக்குக் கிழக்கே போயிடுத்து, இனிமே அடுத்த வருஷம்தான்' என்பார்.

ஏழு மணிக்கு மேலே பச்சயப்ப முதலித்தெரு இரட்டைத் தெருவுக்குப் போனால், தெரு முழுதும் பல வீடுகளில் பட்டாசு வெடித்தக் காகிதங்கள் சாலையை மறைத்துக் கிடக்கும். 

நாங்கள் அங்கு குடியிருந்தபோது, குளத்தை ஒட்டிய வீட்டில் இருந்ததால், ராக்கெட் போன்ற வானத்தில் செல்லக்கூடிய பட்டாசுகள் விட, தெருவில் பலரும் குளத்தங்கரைக்குத் தான் வருவது வழக்கம். (அந்தக் குளம் சீரமைக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டதாக அறிந்தேன்).👌

மற்றவர்கள் வெடிப்பதை எல்லாம் வேடிக்கை பார்ப்பது அந்த வயதில் ஆனந்தம். சேஷு என்பவர் (60ம் நம்பர் வீடு🤔) நிறைய ராக்கெட் விடுவது மனதில் பதிந்துள்ளது. இப்போது அவர் வீடு ஒரு காலனியாக மாறியுள்ளதாக அறிகிறேன். 

தெருவில் நண்பர்களோடு நடந்து போய், வெடிக்காத, வெறும் திரி மட்டும் எரிந்து போன வெடிகளைப் பொருக்கி, அவற்றில் திரியைச் சொருகி வெடிக்க வைப்பதும், மற்ற திரியில்லாத வெடிகளை பிய்த்து எல்லா வெடிமருந்துகளையும் ஒரு டப்பாவில் கொட்டி, அதற்கு நெருப்பு வைத்து, அது பெரிதாக ஜுவாலையுடன் எழும்புவதோடு, தீபாவளிக்கு  விடை கொடுப்பது வழக்கம்.

பள்ளிப் பருவத்தில் தீபாவளியன்று சினிமா பார்க்கும் பழக்கம் இருந்ததாக நினைவில்லை. 

1988க்குப் பின் முப்பதாண்டுகள் கழித்து 2018ல் என் பெரிய பிள்ளை தலை தீபாவளியைக் கும்பகோணத்தில்  கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது. 

தீபாவளிக்கு முதல் நாள் இரவு அருள்மிகு சோமேஸ்வரன் கோவில் அருகில் தீபாவளிக் கடைத்தெருக் காட்சிகளை இருபது விநாடிகள் எடுத்த வீடியோவை இணைத்துள்ளேன்.

🙏

(ரெடிமேட் ஷர்ட் வாங்கும் ஆசை பிப்ரவரி'72ல் நிறைவேறியது. ஜனவரி'72 இறுதியில் Little Flower High Schoolல் உலக தொழுநோய் தினம் பற்றிய பேச்சுப் போட்டியில், என் ஆசிரியர் எழுதிக் கொடுத்ததைப் பேசி, இரண்டாம் பரிசாகக் கிடைத்த ரூ12/-ல் பெரிய தெரு முருகன் டிரஸ் ஸ்டோர்ஸில், 'சரியான அளவுக்கு' நீலக்கலர் கோடு போட்ட அரைக்கைச் சட்டை வாங்கி, ஐந்து ரூபாய் மிச்சம் இருந்ததாக ஞாபகம். அந்தச் சட்டையைப் போட்டுக் கொண்டு பள்ளிக்குப் போகும் போதெல்லாம் பெருமையாக இருக்கும்).😂👍

No comments:

Post a Comment