Thursday, March 4, 2021

ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் 14

 ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் 14

(By Venkatesan Varadharajan 

தல வரலாறு

அதெப்படி சாத்தியம்? மனிதர்கள்தான் பிறப்பார்கள்; இறப்பார்கள். இதர உயிரினங்களுக்கும் இதுதான் கதி என விதிக்கப்பட்டிருக்கிறது. இறைவனுக்குமா இப்படி? அதுவும் அகிலத்தையே அரசாட்சி செய்பவராகக் கருதப்படும் ஜகன்நாதர் இறந்து விடுவாரா? ஆம்... இறைவன் இறக்கிறார். அதுவும் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை! கேட்கும்போதே அதிர்ச்சியாக இருக்கிறதா? அந்த நெகிழ்ச்சி தரும் மகாத்மியத்தை அறிந்துகொள்ள, ஒடிஷா தலைநகரம் புவனேஸ்வரிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் இருக்கும் பூரி என்கிற புண்ணியத் தலத்திற்கு பயணிக்கலாம். 

வாருங்கள்... அந்த அடர்ந்த வனப்பகுதிக்கு உத்கல்  என்று பெயர். அங்கே பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் விசுவாவசுவும் ஒருவர். மிகச் சிறந்த திருமால் பக்தர். கானகத்தின் நடுவிலே அவர் ஓர் அபூர்வமான மரத்தைக் கண்டார்.

நீல நிறத்தில் அமைந்திருந்த அந்த அதிசய மரத்தை கிருஷ்ணராகவே கருதி அவர் வழிபட்டு வந்தார். யாருமறியாமல் ரகசியமாக பூஜைகள் செய்தார். நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகின. அதே சமயம் பூரி மன்னன் இந்திரத்யும்னன் கனவிலே பகவான் கிருஷ்ணர் தோன்றி, தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு பணித்தார். மெய் சிலிர்த்துப் போனான் மன்னன். எத்தனை பெரிய பாக்கியம்! ஜகன்நாதரே தனக்கு கோயில் எழுப்பு என்று கூறும் அற்புதம் வேறு யாருக்குக் கிட்டும்? என்று உடனே பணியைத் தொடங்கினான்.

 இதுவரை எங்குமே இல்லாத திருவடிவில் அற்புதமாக கிருஷ்ணரின் விக்ரகத்தை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய விரும்பினான். பலவிதமான சிலைகளைப் பார்த்தான். எதுவுமே அவனுக்கு திருப்தி தரவில்லை. கருவறை நாயகனைத் தேடிக் கண்டுபிடிக்க நாற்புறங்களிலும் ஆட்கள் சென்றனர். எங்கிருந்தும் உற்சாகத் தகவல் வரவில்லை.

இந்திரத்யும்னனின் அமைச்சரான வித்யாபதிக்கு காட்டுக்கு நடுவே ஒரு கிருஷ்ணர் இருப்பது தெரிய வந்தது. அது தான் விசுவாவசு வழிபட்ட மர கிருஷ்ணர். விசுவாவசுவிடம் கேட்டுப் பார்த்தார் அமைச்சர். மானசீகமாக தான் வழிபடும் கண்ணனை அவர் எப்படித் தருவார்? அந்த மர கிருஷ்ணர் இருக்கும் இடத்தைக்கூட சொல்லவில்லை. 

எப்படியும் மன்னனுக்கு அந்தக் கிருஷ்ணரைத் தர வேண்டும் என சங்கல்பம் செய்தார் அமைச்சர். விசுவாவசுவுக்கு ஒரு அழகிய பெண் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொண்டார் வித்யாபதி. சிறிது சிறிதாக மாமனாரின் மதிப்பைப் பெற்று, அந்த மர கிருஷ்ணரை வழிபட அனுமதி கேட்டார். ஒருநாள் வித்யாபதியின் இரு கண்களையும் கட்டி அவனைக் காட்டிற்கு அழைத்துச் சென்றார் மாமனார். வித்யாபதி ரகசியமாக ஒரு காரியம் செய்தார். மாமனாருக்குத் தெரியாமல் செல்லும் பாதை நெடுக கடுகைத் தூவிக்கொண்டே சென்றார். கிருஷ்ணரை தரிசித்த பின் மீண்டும் வித்யாபதியின் கண்கள் கட்டப்பட்டன.

வீடு திரும்பினர். மழை பெய்து கடுகுகள் எல்லாம் செடிகளாயின. அதை அடையாளம் வைத்து வித்யாபதி கானகம் சென்று மர கிருஷ்ணரைத் திருடி இந்திரத்யும்னனிடம் தந்தார். மகிழ்ந்த மன்னன் அந்த சிலையை கோயிலில் வைக்க, அன்றே அந்த கிருஷ்ணர் காணாமல் போனார். புதிய இடத்தில் இருக்க விரும்பாமல், காட்டுக்கே திரும்பிச் சென்று விட்டார். கிருஷ்ணரைக் காணாதமன்னன் அதிர்ச்சியடைந்தான். அதே போன்ற புதிய சிலையை அமைக்க விரும்பினான். 

அப்போது முதியவர் ஒருவர், பெரிய மரத்துண்டுடன் மன்னனைக் காண வந்தார். அவர்தான் தேவசிற்பி விஸ்வகர்மா. தான் சிலை செய்து தருவதாகச் சொன்ன அவர், ஒரு நிபந்தனையும் விதித்தார். ‘‘சிலை செய்ய 21 நாட்கள் ஆகும். ஒரு தனியறையில் அதைச் செய்வேன். செய்து முடிக்கும் வரை யாரும் கதவைத் திறந்து பார்க்கக் கூடாது. உருவம் முழுமையடைந்ததும் நானாக வெளியே வருவேன்’’ என்றார்.

மன்னன் அதற்குச் சம்மதிக்க மரக் கட்டையுடன் தனியறையில் புகுந்தார் விஸ்வகர்மா. 

நாட்கள் நகர்ந்தன. அறையி லிருந்து சிலை செதுக்கப்படும் எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை.

சிற்பிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என மகாராணி குண்டிச்சா தேவி பயந்தாள். நிபந்தனையை மறந்து சட்டென்று கதவைத் திறக்க, விஸ்வகர்மா மறைந்து விட்டார். மரக்கட்டை மூன்று துண்டுகளாக, முற்றுப் பெறாத அமைப்பில் பலராமர், சுபத்ரா, ஜகன்நாத மூர்த்தங்கள் இருந்தன. 

           தொடரும்



No comments:

Post a Comment