Thursday, May 7, 2020

காமாக்ஷி காப்பாத்தினாளா?

ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர. (மறு பதிவு)

ஸ்ரீ மஹா பெரியவாளை பற்றிய மற்றொரு சம்பவம். 

கல்கத்தாவில்,  அந்த பக்தை தன் கணவருடன், அப்போது அவரது  வேலை நிமித்தமாக  இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம்.

அன்று கணவர் ஆபீஸ் போன அப்புறம் வாசலில் பெல் அடித்ததும், கதவை திறந்தார், அந்த பெண்மணி .

நக்ஸலைட்டுகள் 3 to 4 பேர்கள், திமுதிமு என்று உள்ளே நுழைந்ததும் என்ன செய்வது என்றே தெரியாத அவர், தன்னை கொல்ல  அவர்கள் தயாராக  இருப்பதை அவர்கள் பேச்சின் மூலம் புரிந்து கொண்டார்.

பயத்தில் வெலவெலத்து போன அந்த மாது, அவர்கள் கேட்டபடி சாய் [TEA] போட்டு கொடுத்து விட்டு, அவர்களிடம் ஒரு போன் கால் போட்டு கொள்ள அனுமதி கேட்டார்.

சென்னையில் விடுதியில் படித்து வரும் தன் அன்பு குழந்தைகளிடம் ஒரு நிமிடம் பேசினார்.

”நாளை எந்த செய்தி கேட்டாலும் அதை சுவாமி கொடுத்தது என்று எடுத்துக்கொள்ள  வேண்டும்” என்றார் .

வீட்டின் ஹால் பகுதிக்கு வந்த அவர், ஸ்ரீ மஹா பெரியவா படத்தையும் அதை அடுத்து இருக்கும் காளி  மாதாவின் படத்தையும் பார்த்து பூரண பக்தியோடு நமஸ்கரித்தார்.

’இன்னிக்கு ஏகாதசி. இன்று இந்த சோதனைக்கு உள்ளாகி இருக்கேனே’  என்று வருத்தப்பட்டார். 

அவர்களை பார்த்து ”ஓரே போடாக போட்டு விடுங்கள். வேறு ஒன்றும் என்னை செய்து விடாதீர்கள்” என்று மனமுருகச் சொன்னார்.

பெரியவா படத்தை பார்த்து மனமுருகி வேண்டினார். தரையில் அவரை வேண்டிக்கொண்டே படுத்தார் 

அப்ப அந்த அதிசயம் நடந்தது. 

நக்ஸ்லைட்ஸ் மேலே பார்த்தவர்கள் கண்ணுக்கு, பெரியவா போட்டோ இருந்த இடத்தில் பயங்கர உருவத்தோடு ”பவதாரிணி” காட்சி கொடுத்தாள். காளி பக்தர்கள் ஆன அவர்கள் திகைத்து போனார்கள் .

ஒரு காளி இருந்த இடத்தில இப்ப எப்படி ரெண்டாவது உக்ரகாளி வந்தாள் என்று ஸ்தம்பித்து போனார்கள்.

காளியை மதிக்கும் அவர்கள் அந்த அம்மையாரையும் அம்பாள் ரூபமாக பார்க்க தொடங்கினர் .

"எங்களை மன்னித்து விடுங்கள் தாயே" என்று கூறிக்கொண்டே ஓட்டம் எடுத்தனர்.

கணவர் வந்தவுடன் கண்ணீரை அடக்க முடியாமல் சொரிந்த அந்த மாது, உடனே பெரியவாளை பார்க்க காஞ்சிக்கு புறப்பட்டார் 

மடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம் . வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு ஸ்ரீ மஹா பெரியவாளை நமஸ்கரிக்க, "காமாக்ஷி காப்பாத்தினாளா?" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்குத் தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்.

உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது .

No comments:

Post a Comment