Saturday, May 9, 2020

பழுதான கண்ணாடி வழியே பார்க்காமல்..'

'' பழுதான கண்ணாடி வழியே பார்க்காமல்..'

ஒவ்வொரு நிகழ்வுக்கும் நாமாகவே ஏதும் அர்த்தம் கற்பிக்கக் கூடாது. நல்லவன், கெட்டவன் என்று யாரைப் பற்றியும் தீர்ப்பு எழுதி வாழ்க்கையைக் கொச்சைப் படுத்தக் கூடாது . 

ஆயிரம் கருத்துக்கள் சொல்லத் தெரிந்து விட்டதாலேயே எல்லாம் தெரிந்து விட்டதாக தப்புக் கணக்கு போடக் கூடாது 

ஒருவரின் பக்கத்து வீட்டுக்காரருக்கு குதிரைப் பந்தயத்தில் பத்து லட்சம் கிடைத்தது. அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்தார்.

மறுநாள் பணத்தைக் காணவில்லை, காலடித் தடங்களை வைத்துப் பணத்தைப் பின் வீட்டிலிருந்த அந்த வடநாட்டுப் பேர்வழி தான் எடுத்து இருப்பான் என்று அவர் நினைத்தார். 

அவனுக்குத் தமிழ் தெரியாது .அவன் பேசியது அவருக்குப் புரியவில்லை. கோபத்தில் துப்பாக்கியை எடுத்து விட்டார். 

இதைக் கவனித்து விட்டு இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்தார். அவசரப்படாதீர்கள் 
நான் விசாரிக்கிறேன்" என்றார்.

துப்பாக்கியால் மிரட்டப்பட்டதுமே அந்த வடநாட்டு ஆசாமி மிகவும் பயந்து, பணத்தை பூமிக்கடியில் புதைத்து வைத்து இருப்பதாகக்  கூறினான். 

பூமிக்கடியில்' என்பதை சைகையிலும் காண்பித்தான்.
பணத்தைத் திருட்டுக் கொடுத்தவருக்கு ஒன்றும் புரியவில்லை, 

பக்கத்து வீட்டுக்காரரை நோக்கி,

 "என்ன... தன்னை உயிரோடு புதைத்தாலும், பணத்தைத் திருப்பித் தர முடியாது என்கிறானா?" என்று கேட்டார், 

'ஆமாம்' என்றார் நிதானமாக பக்கத்து வீட்டுக்காரர்.

அந்தப் பக்கத்து வீட்டுக்காராரைப் போலத்தான் நாமும். வாழ்க்கைக்கு ஏதேதோ அர்த்தம் கற்பித்துக் கொண்டு வருகின்றோம்

நாம் நினைப்பது தான் சரி, நம் எண்ணம் தான் முக்கியம் என்ற இரண்டும் தான் உங்களை விலங்கிட்டு வைத்திருக்கின்றன. அவற்றைக் களையுங்கள். 

நாம் நமது பழுதான கண்ணாடி வழியே பார்க்காமல், தெளிவாகப் பார்க்கத் த‌யாராக இருந்தால் தான், வாழ்க்கைப் பயணம் எந்தக் காயமும் இல்லாமல் நிகழும். 

உங்கள் மனதின் படபடப்புகளை நிறுத்தினால் தான், எதனுடனும் சிக்கிக் கொள்ளாமல், வாழ்க்கையின் உண்மையான பக்குவம் கிடைக்கும். 

அப்போது தான் நாம் என்றென்றும் ஆனந்தமாக வாழலாம்.

வாழ்க்கையை வாழ்க்கையாக அனுபவித்து வாழ்ந்து பாருங்கள். 
சீக்கிரம் பக்குவம் அடைவீர்கள்...

No comments:

Post a Comment