எனக்கு பிடித்ததில் ஒன்று
மீசை முளைச்ச அம்மா #ganeshamarkalam
எல்லா பெண்களுக்கும் அவா அப்பா உசத்தி. எனக்கோ அப்பாதான் எல்லாமே. அவருக்கப்புரம்தான் மத்தது.
என் அம்மா அவள் 38 வயசுலேயே போயாச்சு. என்ன உடம்பு, எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கறத்துகுள்ளே. என்னைவிட அப்பாதான் ரொம்ப கலங்கிப்போயிட்டார். அப்போ எனக்கு 13. எனக்கு அப்பாவும், அவருக்கு நானும்தான் பிடிமானங்கள்.
சொந்தம்னு சொல்ல யாரும் இல்லை. அப்பாவுக்கு நல்ல வேலை, கை நிறைய சம்பளம். அடையாரில் பிளாட் வாங்கி குடிபோனோம். எனக்கு அம்மா இல்லாத குறை தெரியாம வளர்த்தார்.
சமையலுக்கு யாரையாவது ஏழை பிராம்ணா கூட்டிண்டு வச்சுக்கப் பிடாதோன்னு இவரோட ஆபீஸ் நண்பர்கள் எல்லாம் சொல்லுவா. இவர் "என் பெண்ணை கவனுச்சுக்க எனக்கு தேரியும்"னுடுவார். கார்த்தால மட்டும் ப்ரேட் பட்டர் ஜாம்முன்னு போகும். மத்தியானம், ராத்திரி அவரே எனக்கு பிடிச்சாமாதிரி சமைச்சுடுவார்.
எனக்காக வெளியூர் வேலைகளை தவிர்த்தார், விசேஷம்னா புதுஸு உடுத்திக்க வந்துடும். பண்டிகைகளுக்கு மட்டும் பக்ஷணம் கிட்டக்கேயே வாங்கிண்டு வந்துடுவார். விளையாட்டா அடுத்த வருஷம் நானே ஆத்தில் பண்ணித்தரேன்னு சொல்லுவார்.
நான் பெரியவளாகி, விவரம் தெரிஞ்சதும்தான் அவர் செஞ்ச தியாகங்கள் கொஞ்சமா புரிஞ்சது. காலேஜ்லெ செர்ந்ததும் நானும் ஆத்து காரியங்களில் எவ்வளவு முடியுமோ செய்ய ஆரம்பிச்சேன். கொஞ்சம் சமைக்கவும். என் கல்யாணத்துக்கு 2 வருஷம் முன்னாடி, சமையற்கட்டை நானே டேக் ஓவர் பண்ணியாச்சு.
நான் என்ன பண்ணினாலும் ரொம்ப நன்னா இருக்குன்னு சப்புக்கொட்டிண்டே சாப்பிடுவார். நான் அதை சாப்பிட உட்காரும்போதுதான் அவரோட அன்பு எனக்கு புரியும். அவர் பெர்த்டேக்கு பண்ணின சேமியா பாயஸம் அடிப்பிடிச்சிருக்கு, குமட்டிண்டு வரது, ஆனா நான் பண்ணினேனேன்னுட்டு அவர் சாப்பிட்டார். அதோடு நிக்காம போனில் யார்கிட்டேயோ அதை சிலாகித்து பேச்சு வேற.
அவர் என்னை கோவிச்சுண்டு நான் பார்த்ததில்லை. சிலசமையம் கோவிச்சுக்கணும்கிற மாதிரி ஏதாவது செய்வேன். ரொம்பவே கடுப்பாய்ட்டார்னா, “முட்டாள், உன்னை யார் இதையெல்லாம் செய்யச்சொன்னது”ன்னு சொல்லுவார். அவ்வளவுதான்.
காலேஜ் முடிச்சதும் CA பண்ணணும்னு ஆசை. அவர் என்னை பக்கத்திலே உக்காத்தி வச்சுண்டு, “இங்கே பாருடா செல்லம், இன்னும் படிக்கணும்னா படி, கல்யாணம் பண்ணிக்கணும்னா சொல்லு. உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தாலும் சொல்லிடு”ன்னார். அப்படி ஏதும் இல்லை.
நான் சொல்லணும்னு நினெச்சுப்பேன், “உன்னை மாதிரி என்னை பாத்துப்பான்னா யாரை வேணும்னாலும் காட்டு, பண்ணிக்கரேன்”னு. ஆனால், என் அப்பா மாதிரி வேற யாரும் அம்மாவாவும் இருக்கமுடியாது.
CA ஆரம்பிச்சேன். அதுபாட்டுக்கு போயிண்டிருந்தப்போ ஒருநாள் நல்ல வரன் வந்திருக்குன்னு சில ஜாதகங்களையும் போடோவையும் வச்சார். “எப்போ டயம் கிடைக்கிறதோ அப்போ எடுத்து பாரு”ன்னார். அன்னைக்கு ராத்திரி அவர் தூங்கினப்புரம் அதெல்லாத்தையும் எடுத்து பார்க்கிரேன். ஒண்ணும் தேறலை. ஒருத்தன் நல்ல படிப்பு, லுக்ஸ் ஓகே ஆனால் வெளிநாட்டில் உத்யோகம். அப்பாவை இங்கே விட்டுட்டு போவதாயில்லை.
அவர் இவன் போடோவை ஸ்கெட்ச் பென்னால டிக் பண்ணியிருப்பதை பாத்தா இவனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கார்னு பட்டது. அந்த டிக்கில் குறுக்கே ஒரு கோடு போட்டு வச்சுட்டு தூங்கிட்டேன்.
இப்படி மாசம் ஒரு கவர் வரதும் நான் பாக்கிரதுமா 1 வருஷம் ஓடித்து.
அப்பாவோட கழிக்கும் ஒவ்வொரு நாளும் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும். இருந்தாலும் நான் சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிண்டு செட்டில் ஆகணும்கிற கவலை அவர் முகத்தில் வந்து ஈஷிண்டு இருப்பது ஸ்பஷ்டமா தெரிஞ்சது.
திடீர்னு அவர் பால்ய நண்பர் கல்யாணசுந்தரம் அவாத்து மாமியோட ஒருநாள் வரார்.
ஞாயித்துகிழமையானதாலே நாங்க அப்போதான் லைட்டா சாப்டுட்டு ஹாலில் இருந்தோம். கதவை தொறந்ததும், “என்னம்மா கீதா எப்படி இருக்காய்? உன் அப்பன் அகோரமூர்த்தி என்ன பண்றான்? நான் வரேன்னு சொன்னானா இல்லையா? சாப்பிட என்ன பண்ணியிருக்காய்?" AK47 சுட்ராமாதிரி கேட்டுண்டே உள்ளே வரார். மீனாக்ஷி மாமியோ, “கொஞ்சம் மெள்ள பேசுங்கோ இங்கே எல்லாருக்கும் காது நன்னாவே கேக்கும்”னு பின்னாடியே வரார். என்னை அப்படியே கட்டிக்கரா.
எனெக்கென்னமோ இவா பல்லாங்குழி விளையாட வரலைன்னு மட்டும் புரிஞ்சது.
எல்லாருக்கும் காப்பி போட்டு கொடுக்கரேன். கல்யாணம் மாமா, “இங்கே வாடா குழந்தை உங்கிட்டேயே வந்த விஷயத்தை சொல்ரேன்”னு ஆரம்பிச்சார். அவர் ரெண்டாவது பையன் ராம்கோவில் வேலையாம். சென்னைதான், நல்ல சம்பளம். தனியா MRC நகரில் சீப்ராஸ் அப்பார்ட்மென்ட். என் போடோவை பாத்துட்டு இவளைத்தான் பண்ணிப்பேன்னு சொல்லிட்டானாம். “எங்காத்துக்கு வந்துடரையா”ன்னு மாமி டைரெக்டாவே கேட்டா. கையோட கொண்டுவந்த போடோ காமிச்சா. அப்பா முகத்தை பாக்கிரேன். அவர் “இதுக்காவது சரின்னு சொல்லமாட்டாளா”ன்னு ஏங்குவது தெரிஞ்சது.
நான் மெதுவா எழுந்து, “மீனாக்ஷி மாமி, கொஞ்சம் என்னோட வாங்கொ, தனியா பேசணும்”னு அவரை கூட்டிண்டு பால்கனிக்கு போரேன்.
மாமி, கொஞ்சம் பயந்துட்டாளோ? திருதிருன்னு முழிச்சுண்டு ஸ்லோ மோஷனில் என் பின்னாடி வரலாமா வேண்டாமான்னு யோசிச்சா. கல்யாணம் மாமா ‘போடி, நம்மாத்து மாட்டுபொண்ணு உன்னை ஒண்ணும் 3ஆவது மாடிலேந்து தள்ளி விட்டுட மாட்டா, போய் குழந்தை என்ன சொல்ரான்னு கேளு”ன்னு ஊக்குவித்தார்.
பால்கனி கீக்கிடத்தில் மீனாக்ஷி மாமிக்கு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ரேன். எழுந்து அவர் கையை பிடிச்சுண்டு, “மாமி, நீங்களும் மாமாவுமே எனக்கு இன்னொரு அப்பா-அம்மாவா வரப்போரேள்னா என்ன ஆட்சேபம் இருக்கமுடியும், திவாகரை எனக்கும் பிடிச்சிருக்கு, ஆனா ஒரு நிபந்தனை”ங்கிரேன். மாமிக்கு சந்தோஷம் ஆனா கடைசீலே கொக்கி போடராளேன்னு முழிச்சுண்டு நின்னா. தயங்கிண்டே, “என்னம்மா சொல்லு”ங்கிரார். “எனக்கு எங்க அப்பா எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கே தெரியும், அவரை கவனிச்சுக்கணும்னாலோ, அவரை பாக்கணும்போல இருந்தாலும் உடனே கிளம்பி வந்துடுவேன். கடைசீ காலத்தில் அவர் என்னோட தான் இருப்பார், இதுக்கு உங்க பையனுக்கு சம்மதம்னா கல்யாணம் பண்ணி வைங்கோ”ன்னு சொன்னேன்.
இது நடந்து 12 வருஷம் ஆச்சு. கல்யாணம் ஜாம் ஜாம்னு பண்ணிவச்சார் அப்பா. ஊரே திரும்பி பாத்துது. ராஜா முத்தையா ஹாலில். அப்புரம் மோரீஷியஸ் 10 நாள் ஹனிமூன் போக டிக்கெட். அப்பார்ட்மென்டில் வந்து பாத்துட்டு எதுவெல்லாம் இல்லையோ அதெல்லாத்தையும் வாங்கி கொடுத்தார்.
திவாகர்கிட்டே வசதி இல்லாம இல்லை. ஆனால் நான் வாழப்போகும் இடத்தில் அப்பா ஞாபகம் வந்துண்டே இருக்கணும்னு நான்தான் கேட்டு வாங்கிண்டேன்.
வாரம் ஒருதடவை ஏதாவது காரணத்தை சொல்லிண்டு வந்துடுவார். “இந்தப்பக்கமா போனேன்டி செல்லம் அப்படியே உன்னையும்”னு இழுப்பார். இவரும் மாப்பிள்ளையும் ஈஷிண்டு சோபாவில் உக்காந்துண்டு விம்பிள்டன் பாக்கிறது அவ்வளவு அன்னியோன்யமா இருக்கும்.
நான் இல்லாதபோது, “இவ என்ன சமைச்சாலும் தைரியமா சாப்பிடு அனால் சேமியா பாயசம் மட்டும் கேட்டுடாதே”ன்னு சொல்லி வச்சிருக்கார்.
போனவாரம் என் பையனுக்கு பூணூல் கல்யாணம். ரொம்ப நாளைக்கப்புரம் எங்காத்தில் நடக்கிற விசேஷம். குழந்தைக்கு பூணூல் போட்டப்புரம் பிக்ஷா வரிசையில் தான் அவரைப்பாத்தேன்.
முதலில் என் புக்காத்துலேந்து வந்திருக்கான்னு நினைச்சேன், முன்னாடி பாத்த ஞாபகமில்லை. அப்புரம் என் அப்பாவோட பேசிண்டிருந்ததை கவனிச்சேன். வந்தவாளை உபசரிச்சுட்டு கிட்டே போனா, சித்ரான்னு அறிமுகப்படுத்தி வைக்கரார். என் அம்மா இருந்திருந்தா என்ன வயசிருக்குமோ அதே வயசு. ஆனா நல்ல சிவப்பு, களையான மூஞ்சி. ஆங்கிலத்துலே வெளுத்துகட்டரா. கொஞ்ச நேரம் அவரோட பேசணும்னு தோணித்து. ஆனா விசேஷத்துலே முடியல.
1 மாசத்துக்கப்புரம் பாண்டி பஜாரில் எதேச்சையா கஷ்டப்பட்டு காரை பார்க் செஞ்சுட்டு வரேன் கார் கிட்டே நின்னிண்டிருக்கா. “நீதான்னு பாத்தேன், அதான் ஹாய் சொல்லலாமேன்னு நின்னேன்”ங்கிரா. எனக்கும் நேரம் இருந்ததால் சரவணபவனில் காபி குடிக்கலாமேன்னு ரெண்டு பேரும் போரோம்.
அப்பாவை 28 வருஷமா தெரியுமாம். என்னைப்பத்தி நிறையவே சொல்லியிருக்காராம். நான் அப்பாவுக்காக கல்யாணத்தை தள்ளிப் போட்டதும் அப்புரம் கல்யாணம் மாமா வந்தது, போனது எல்லாமே தெரிஞ்சிருக்கு. இப்போ நன்னா சமைக்கராய்னு கேள்விப்பட்டேன், திவாகர் எப்படி இருக்கார்? உன் பிள்ளையாண்டன் நன்னா வருவான் அப்படி இப்படின்னு. பேச்சில் அவ்வளவு வாஞ்சை, அப்பாவைப்பத்தி சொல்லும்போது கண்ணில் அவ்வளவு – அன்பு, காதல் கலந்த பலநாள் பழகினால் மட்டுமே வர மரியாதை.
எனக்கு புரிஞ்சா மாதிரியும் இருந்தது, குழப்பமாவும் இருந்தது. கொஞ்சமா கோபம் வரமாதிரி இருந்தது.
அப்பா எனக்குமட்டும்னு இவ்வளவு நாள் ஒரு பிரமையில் இருந்துட்டோமோன்னு தோணித்து. நீங்க எங்கே இருக்கேள், உங்காத்துக்காரர் எங்கே வேலை பாக்கிரார்னு கேக்கவே தோணலை, இதையெல்லாம் கேக்காமலே பதில் தெரிஞ்சதுபோல ஃபீலிங்க்.
அடுத்த ஞாயித்துக் கிழமை அப்பா வழக்கம்போல கதைவை தட்டிண்டு வரார். பேரன் ஓடிப்போய் கட்டிக்கரான். “சந்தியாவந்தனம் விடாம செய்யரயாடா”ன்னு கேட்டுண்டே உள்ளே வரார். நான் “அது கிடக்கட்டும் அன்னைக்கு திநகரில் சித்ரா அம்மாவை பாத்தேன், சொன்னாளா?" கேக்கிரேன்.
“அப்படியா”ன்னு ஒரு நிமிஷம் ஸ்தம்பித்துப் போரார். முகத்தில் இனம் புரியாத உணர்வுகள் ஒண்ணுக்கோண்ணு போட்டி போட்டுண்டு வெளீயே வரத் துடிக்கிறது.
“அப்பா, நீங்க சந்தோஷமா இருக்கேள்னு தெரிஞ்சப்புரம் நானும் சந்தோஷமா இருக்கேன்”னு மட்டும் சொல்ரேன். “சித்ரா அம்மாவை ஆத்துக்கு ஒருநாள் கூட்டிண்டு வாங்கோ”ன்னு சொல்ரேன்.
என் அப்பா, என் மீசை முளைச்ச அம்மா கண்ணில் ஈரம் பார்த்தேன்.
No comments:
Post a Comment