காட்டு ராமர் கோவில் அருகன்குளம் திருநெல்வேலி
ஸ்தல வரலாறு
சீதாபிராட்டியை அபகரித்துக் கொண்டு போக யத்தனித்த இராவணனோடு யுத்தம் புரிகிறான் ஜடாயு என்னும் கழுகரசன். போரில் தன்னுடைய இறக்கைகள் இரண்டையும் இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இந்த நிகழ்வை ராமபிரானிடம் தெரிவிக்கும் வரையிலாவது தான் உயிரோடு இருக்க வேண்டும் என்று ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான்.
சீதையைத் தேடி கானகத்தில் அலைந்து கொண்டிருந்த ராமனின் காதுகளில் ராமநாம ஜபம் விழுந்தது. நடந்தவற்றை ராமனிடம் கூறி உயிரை விட்ட ஜடாயு சாகும் தறுவாயில் தனக்கு லக்ஷ்மி நாராயணனாக காட்சி தருமாறு வேண்டினான்.
ஜடாயுவுக்கு லக்ஷ்மி நாராயணனாக காட்சியளித்த ராமர் பின்னர் ஜடாயுவுக்கு நீர்க்கடன் செய்ய ஜடாயு தீர்த்தம் உருவாக்கினார்
தர்ப்பணம் செய்த இடம் ஜடாயு துறை என்று அழைக்கப்படுகிறது. ஜடாயுவுக்கு காட்சியளித்த இடம் லக்ஷ்மி நாராயணர் கோவிலாக உள்ளது. நீர்க்கடன் முடித்து இளைப்பாறிய இடம் காட்டுராமர் கோவிலாக உள்ளது.
தர்ப்பணம் முடித்த பின் சிவபெருமானை வழிபட்ட இடத்தில் இராமலிங்க பர்வதவர்த்தினி கோவில் உள்ளது.
வில் அம்பு ஏதுமின்றி சந்தான ராமராக பிண்டம் கொடுப்பது போல பூணூலோடு காட்சி தருகிறார்.
ஜடாயு படித்துறையில் அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் செய்கின்றனர். ஜீவ நதியாக விளங்கும் தாமிரபரணியை தட்சிணகங்கை என்று சொல்வார்கள்.
இங்கு ஸ்நானம் செய்பவர்கள் செய்யும் சங்கல்ப ஸ்லோகம்
தாம்ரவர்ணியாம் மஹாநத்யாம் தக்ஷிண கங்காயாம் பூர்வ வாஹின்யாம், வேணுவனே ஜடாயு ராமச்சந்திர தீர்த்தே சகல பாபக்ஷய நிவர்த்யர்த்தம் தாம்ரவர்ணி ஸ்நானம் அஹம் கரிஷ்யே

No comments:
Post a Comment