Tuesday, May 5, 2020

இல்லத்துப் பெருமாளிடம் சொன்னீர்களா

ஊருக்குப் போவதென்றால், எதிர் வீட்டில், பக்கத்து வீட்டில், மேல் வீட்டில் என எல்லோரிடமும் சொல்கிறீர்களே, உங்கள் இல்லத்துப் பெருமாளிடம் சொன்னீர்களா?” 

    ( ஸ்ரீ பூவராகாச்சார்யார் ஸ்வாமி, தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம், நியமங்கள் குறித்து ஒரு சமயம் தனது உபந்யாசத்தில் கூறினார்).

ஸ்ரீரங்கத்தில் ஓர் அரையர் ஸ்வாமி இருந்தார். தினமும் பெருமாள் முன்பு பிரபந்தம் சேவிப்பதே அவரது கைங்கர்யம். நீண்ட நாட்களாக அவருக்கு திருமலையப்பனை சேவித்து வர ஆசை. ஆனால், அதைப் பெருமாளிடம் கேட்க தயக்கம். 

ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பெருமாளிடம் தனது ஆசையைத் தெரிவித்தார். 
பெருமாள் சற்று நேரம் யோசனை செய்தார். 
‘நான் இங்கிருக்கும்போது இவன் எதற்கு அங்கே போக ஆசைப்படுகிறான்?’ என்று நினைத்தவாறே, 
‘சரி, உன் விருப்பப்படி போய் வா. அதற்கு முன், ‘அமலனாதிபிரான்’ சேவித்து விட்டுப் போ’என்றார்.

அரையரும், ‘அப்படியே ஆகட்டும், அடியேன்’ என்று சொல்லி, அமலனாதிபிரான் சேவிக்க ஆரம்பித்தார். 
(திருப்பாணாழ்வாரின் பிரபந்தம் இது.)
‘அமலனாதிபிரான் அடியார்க்கு என்னைஆட்படுத்த விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்…’ என்று சொல்ல ஆரம்பித்தார். 

முதல் பாசுரம், இரண்டாம் பாசுரம் முடிந்து, மூன்றாம் பாசுரம் சொல்ல ஆரம்பித்தார். 
முதல் முறை சொன்னார். ஆனால், இதை இரண்டு முறை சொல்வது மரபு. ஆக, இரண்டாவது முறையாக சொன்னார்.
‘மந்திபாய்வட வேங்கட மாமலை வானவர்கள்சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவினணையான் 
அந்திபோல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில் 
உந்திமேலதன்றோ அடியேன் உள்ளத் தின்னுயிரே.’

இரண்டு முறை சொல்லி முடித்ததும் பெருமாள், ‘எங்கே மறுபடியும் சேவியும்’ என்றார்.
‘மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்திசெய்ய நின்றானரங்கத் தரவினணையான்…’
‘மறுபடி சேவியும்’ பாதி பாசுரத்திலேயே பெருமாளின் ஆக்ஞை பிறந்தது. 
இப்போது, அரையருக்குப் பெருமாள் சொல்ல வந்தது புரிந்தது. ‘அடியேன் எங்கேயும் போகவில்லை’என்று சொல்லிவிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார். 

வேங்கடமலையில் இருப்பதும் இந்த அரங்கத்து அரவின் அணையான் தானே? 
இங்கே இருப்பவரை, மெனக்கெட்டு அங்கே போய் ஏன் சேவிக்க வேண்டும்? என்று பெருமாள் நினைத்தாராம். 
அரையர்போக விரும்பியும் பெருமாள் விரும்பவில்லை.
அதனால், எங்கே போவதானாலும் நீங்களும் முதலில் உங்கள் இல்லத்துப் திருவாராதன பெருமாளிடம் சொல்லி உத்தரவு வாங்கிக் கொள்ளுங்கள். 
அவன் விருப்பப்படவில்லை என்றால் நாம் எங்கேயும் போக முடியாது!”

ஸ்ரீ ரங்கனின் திருவடிகளில் சரணம்....

No comments:

Post a Comment