Tuesday, May 5, 2020

கோயில் (சிதம்பரம்)

கோயில் (சிதம்பரம்) 608001

இறைவன் பெயர் - நடராசர், அம்பலக்கூத்தர், திருச்சிற்றம்பலமுடையார்,
அம்பலவாணர், (கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்.)
     
இறைவியின் பெயர் - சிவகாமி, சிவகாமசுந்தரி.
     
தலமரம் - தில்லை, ஆல் (திருமூலட்டானப் பிராகாரத்தில் ‘ஆல்’
கருங்கல் வடிவில் செய்து வைக்கப்பட்டுள்ளது.)
     
தீர்த்தம் - சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்ரபாத தீர்த்தம்,(திருப்புலீச்சரம்) பிரமதீர்த்தம், அனந்த தீர்த்தம்.                      
     
சோழ நாட்டு (வடகரை)த் தலம்.

‘கோயில்’ என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம். இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.

தில்லைமரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால்
தில்லைவனம் என்ற யெர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை. ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.) வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) மிகுதியான பற்றினால் பூசித்த ஊராதலின் பெரும்பற்றப்புலியூர் என்றும் ; சித் + அம்பரம் (அறிவு - வெட்டவெளி) = சிதம்பரம் ஞானாகாசம் என்றும், பூலோக கயிலாயம், புண்டரீகபுரம் சிதாகாசத்தலம் எனவும் இதற்குப்
பல பெயர்களுண்டு. 

தில்லைவாழ் அந்தணர்கள் இருந்து பெருமானைப் பூசித்துக் காத்துவரும் அற்புதத்தலம். ஜைமினி. ‘வேத பாதஸ்தவம்’ அருளிச் செய்ததும் ; சேந்தனார் அருள் பெற்றதும்;மாணிக்கவாசகர் திருவாசகமும்  திருக்கோவையாரும் பாடி முத்தி பெற்றதும் ; வியாக்ரபாதர் பதஞ்சலி உபமன்யு வியாசர், சுகர் திருநீலகண்டர், திருநாளைப்போவார் கூற்றுவ
நாயனார், கணம்புல்ல நாயனார், சந்தானாசாரியர்கள் முத்தி பெற்ற சிறப்புடையதுமாகிய பழம்பதி. தில்லைவாழ் அந்தணர்களாகிய தீக்ஷிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். 

இக்கோயிலுள் ‘திருமூலட்டானம்’ என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான இலிங்கத்தில் ஒடுங்குவதால் இம் மூர்த்திக்கு இப்பெயர் உண்டாயிற்று.எனவே தில்லைத்தலத்தில் வசிப்போர், வந்துகண்டு செல்வோர், அர்த்தசாம வழிபாட்டைக் காண வேண்டியது அவசியமாகும்.

இறைவன்- விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும்,
திருவானைக்கா ‘உந்தி’யாகவும், திருவண்ணாமலை ‘மணிபூரக’மாகவும்,
திருக்காளத்தி ‘கழுத்தாகவும்’, காசி ‘புருவமத்தி’யாகவும், சிதம்பரம்
‘இருதயஸ்தான’மாகவும் சொல்லப்படும். இக்கோயிலில் உள்ள பேரம்பலத்திற்கு
‘மேரு’ என்றும் பெயருண்டு. “பெருமதில் சிறந்த செம்பொன் மாளிகை மின்
பிறங்கு பேரம்பலம்மேரு வருமுறை வலங்கொண்டிறைஞ்சிய பின்னர்
வணங்கிய மகிழ்வொடும் சென்றார்” என்பது சேக்கிழார் வாக்கு (தடு. புரா.)
வடக்கிலொரு ‘மேரு’ இருப்பதால் இதைத் ‘தட்சிணமேரு’ என்று கூறுவர்.

     
‘மேருவிடங்கன்’ என்பது ‘சேந்தனார்’ தொடர். பஞ்சபூதத் தலங்களுள் இஃது ஆகாயத்தலம். பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை.

பதஞ்சலி வியாக்ரபாதர்களுக்குப் பெருமான் கனகசபையில் நடனக்காட்சியை அருளிய தலம். தரிசிக்க முத்தி தரும்பதி. மூவர் பாடல் பெற்ற தலம்.

     
இராசராசன் வேண்டுதலின் பேரில் நம்பியாண்டார் நம்பிகளால் பொல்லாப்பிள்ளையாரின் துணைகொண்டு திருமுறைப் பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட தெய்விகத்தலம். பெரியபுராணமென்னும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் பெருமானால் அரங்கேற்றம் செய்யப்பட்ட அருமையான தலம். வைணவத்திலும் ‘திருச்சித்திரகூடம்’ என்று புகழ்ந்தோதப்படும்
திருப்பதி. நாற்புறமும் கோபுரங்கள். தெற்குக் கோபுரவாயிலே பிரதான
வாயிலாகும்.

இக்கோயிலுள் 
1. சிற்றம்பலம்
2. பொன்னம்பலம் 
3. பேரம்பலம்
4. நிருத்தசபை 
5. இராசசபை 
என ஐந்து பெருமன்றங்கள் உள்ளன.

இத்தலத்தில் நிகழ்ந்த அரிய செயல்களுள் சில :

     1) மாணிக்கவாசகர் புத்தரை வாதில்வென்று ஊமைப் பெண்ணைப்        பேசவித்தது.

     2) திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக்       கண்டது.

     3) உமாபதிசிவம் ‘கொடிக்கவி’ பாடிக் கொடியேற வைத்தது.

     4) திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச்        செய்தது.

     5) திருமுறைகளை வெளிப்படுத்தியது.

     6) சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத் தந்தது முதலிய பலவாகும்.🙏

No comments:

Post a Comment