போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில், ஒரு சிறு துண்டுக் காகிதத்தில் எழுதித் தொங்க விடப் பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய்ப் படித்தேன்.
அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்குக் கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.
எனக்கும் பொழுது போகவில்லை, அந்தக் குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "அந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனா ஓர் பழைய வீடு இருக்கும். அங்கதான் அந்தக் கண் தெரியாத அம்மா இருக்கு".
அங்கே ஓர் சிறிய கீத்துக் கொட்டகை. ஒரு நாள் மழைக்குக் கூடத் தாங்காது. வெளியில், கண்கள் குழி விழுந்து, எலும்பும், தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடிச் சத்தம் கேட்டதும்,
யாருப்பா நீ?
அம்மா, நான் இந்த வழியா வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அதை உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார்.
தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சதுன்னு சொல்லிக் குடுத்துட்டுப் போறாங்க...
அந்த கடிதம் நான் எழுதல தம்பி. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லிக் கொடுத்துத் திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்தக் கடிதத்த மறக்காமல் கிழித்துப் போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்தத் தாய்.
என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்தக் கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடித்ததக் கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறிக் கொண்டு தான் இருப்பார். ஆனாலும் யாரும் அப்படிச் செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழிகள்
மனதில் யோசித்துக் கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம்.
"அண்ணே இந்த விலாசம் எங்கேன்னு சொல்ல முடியுமா? கீழே 50 ரூபாய் கிடந்தது. அந்த அம்மாகிட்டக் குடுக்கணும். வழி சொல்றீங்களா?"
மனித நேயம் செத்துப் போனது என்று யார் சொன்னது??? இன்னும் சாகவில்லை...
😌😌😌
படித்ததில் பிடித்ததுا..
இதுதான் பணத்தாலும் விலைக்கு வாங்க முடியாத நம் மனித நேயம்!!
No comments:
Post a Comment