Periyava Charithram – 10
ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 10
[இளையாத்தங்குடி பெரியவா கேட்ட இடம், அக்ஷரலக்ஷம் பெறும்]
இத்தனை நாள் பெரியவா சொல்லிக் கொண்டு வந்த ஸ்ரீமடம் கதையின் கதாநாயகர்; எளையவர்; ஸ்ரீமடம் முத்ராதிகாரி; ஹெஜீப்; ஶிவாஜி ராஜாவுடன் யானை மேல் ஊர்வலம் போனவர்; மஹாராஜா ஆரவாரமில்லாமல் தந்த பொன்முடிப்பை, துளியும் ஆரவாரமில்லாமல், யாரோ ஒருவரிடம் தூக்கிப் போட்டுவிட்டு, அது ஸத்தமில்லாமல் பறிபோனதை அறிந்தும், அதை துச்சமாக எண்ணியவர்; அதே ஸமயம், ஶ்ரீமடத்தின் ஶிவ ஸொத்தான 17000 ரூபாய் பொன்னை மடியில் மிகவும் ஜாக்ரதையாகக் கட்டிக் கொண்டு, தனியே குதிரையில் ஸவாரி செய்தவர்; கருப்பூரில் நிலம் வாங்கியவர்………
இத்தனை பெருமைக்குரிய மஹா மஹானுபாவர், வேறு யாருமில்லை, ஸாக்ஷாத் நம்ம பெரியவாளுடைய பூர்வாஶ்ரம தாத்தாதான் ! அதாவது, பெரியவாளுடைய அப்பாவின் அப்பா ஸ்ரீ கணபதி ஶாஸ்த்ரிகள்தான்!
திருவிடைமருதூரில் முத்ராதிகாரியாக இருந்த ‘மூத்தவர்‘ பெயர் ஸ்ரீ ஶேஷாத்ரி ஶாஸ்த்ரிகள். இவர்களுடைய அப்பாதான், நம் கதையின் வந்த ‘ஹொய்ஸள ப்ராஹ்மணர்’ ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள். அதாவது, நம்ம பெரியவாளின் கொள்ளுத்தாத்தா.
image
ஶ்ரீ ஶேஷாத்ரி ஶாஸ்த்ரிகளின் குமாரர்தான் 65-வது பீடாதிபதியான ஐந்தாவது ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.
[British Dynasty-யில் ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் எட்வர்ட், எட்டாம் சார்லஸ் போன்ற பெயர்கள் கூட, நம் பீடாதிபதிகளின் நாமகரண வழிமுறையை காப்பி அடித்ததாக இருக்கும்)
இவருடைய இன்னொரு நாமம், ஸ்ரீ ஸுதர்ஶன மஹாதேவர். இவர் ஸித்தியான ஸ்தலத்தைக் கொண்டே, இவரை “இளையாத்தங்குடி பெரியவா” என்று அழைப்பார்கள். இவருடைய பூர்வாஶ்ரம பெயர் மஹாலிங்கம். [நம்ம பெரியவாளின் ஒண்ணுவிட்ட பெரியப்பா)
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 65-வது ஆச்சார்யாளான ஶ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள், 1889-வது வர்ஷம், செட்டிநாட்டுப் பக்கம் யாத்ரை செய்தார். அப்போது இளையாத்தங்குடியில் சில மாஸங்கள் தங்கியிருந்தார். நகரத்தார்கள், ஸ்வாமிகள் மேல் அளவிலா பக்தியும், ப்ரியமும், மர்யாதையும் கொண்டவர்கள். எனவே, பெரியவா தங்குவதற்கான ஸகல ஸௌகர்யங்களையும் பார்த்துப் பார்த்து ஆசையோடு செய்தார்கள்.
image
ஒருநாள், பெரியவா இளையாத்தங்குடி க்ராமத்தின் வயல்வரப்பிலெல்லாம் பாதங்கள் பதிய நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கோவிலுக்கருகில், மிகவும் புதர்கள் மண்டிக்கிடந்த ஒரு இடத்தைக் கண்டதும், அங்கேயே கிட்டத்தட்ட ஒரு நாழிகை தங்கினார்.
அங்கு வந்த கோவில் ட்ரஸ்டிகளிடம், அந்த புதர் மண்டிய இடத்தை மடத்துக்கு தரமுடியுமா? என்று கேட்டார். மஹான்கள் ஒன்றைப் பற்றி கேட்கும் போது, அதில் எண்ணிலடங்கா அர்த்தங்கள் இருக்கும் என்பதை அறியாத, ட்ரஸ்டிகள்… பெரியவா கேட்கும் இடத்தை விட, கோவிலுக்கருகிலேயே நல்ல அகலமான இடத்தை தருவதாகச் சொன்னார்கள். ஆனால்….பெரியவாளோ…. அந்த குறிப்பிட்ட இடம்தான் தனக்கு வேண்டும் என்றார்.
இந்த ஸம்பவத்துக்குப் பின், பெரியவாளின் உடல் நலம் திடீரென்று க்ஷீணமடைந்து, 20.3.1890, விரோதி வர்ஷம், பங்குனி மாஸம், 8-ம் தேதி, குருவாரம், அமாவாஸ்யையில், ஸித்தியடைந்துவிட்டார்.
பக்தர்களும், பாரிஷதர்களும் நிலைகுலைந்து போனார்கள்! பெரியவா குறிப்பிட்டுக் கேட்ட அந்த இடத்திலேயே ஶிவலிங்கத்தையும், ஶ்ரீ ஆதிஶங்கரரையும் ப்ரதிஷ்டை செய்து, பெரியவாளின் அதிஷ்டானத்தை அமைத்தனர். இன்றும் இளையாத்தங்குடி கோவில் தேவஸ்தானமே, பெரியவாளின் அதிஷ்டானத்தை பராமரிக்கிறது.
1961-ஆம் வர்ஷத்து ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் “அன்பின் ஶக்தி” என்ற தலைப்பில், ‘இளையாத்தங்குடி பெரியவாளுடைய’ அதிஷ்டானத்தில் அமர்ந்து, ஸ்ரீ பரணீதரன் எழுதி, “அக்ஷர லக்ஷம் பெறும்” என்று பெரியவாளின் திருவாக்கால் அனுக்ரஹிப்பட்ட, பெரியவாளுடைய ஆசிச் செய்தி……
image
அன்பின் ஶக்தி:
நாட்டில் தற்போது ஒற்றுமையைப் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஒற்றுமை என்பது, வேற்றுமை பாராட்டாமல் இருப்பது அல்ல. “வேற்றுமையே கிடையாது” என்று தெளிவதுதான் அது. பரம்பொருள் ஒன்றுதான் உண்டு. அதைத் தவிர, வேறு வஸ்து தனியாகக் கிடையாது. அந்தப் பரம்பொருளைப் பற்றிய நினைவு ஒன்றுதான் எல்லோரையும் சேர்த்து வைக்கக் கூடியது. மதமும், பக்தியும், எல்லாரும் ஒன்றாக வாழ்ந்து ஸந்தோஷமாக இருக்க ஏற்பட்டவை. ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு துன்பப்பட அல்ல.
பக்திதான் பாரதநாட்டை இணைத்து வைத்த பெரிய ஶக்தி. வடக்கில், காஸியிலிருந்து தெற்கேயுள்ள ராமேஶ்வரத்துக்கும், தெற்கேயிருந்து வடக்கேயுள்ள க்ஷேத்ரங்களுக்கும், ஜனங்கள் தர்ஶனம் செய்யப் போய்க் கொண்டேயிருந்தார்கள். இன்றும், எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டும், இப்பழக்கம் மாத்ரம் விட்டுப் போகவில்லை. பாஷை, ராஜ்ய எல்லைகள், இதர பழக்க வழக்கங்கள் மாறினாலும், இந்த அடிப்படையில்தான் ஸகலவித ஜனங்களும், மற்ற எல்லாவற்றையும் மறந்து ஒன்று சேர்கிறார்கள். அழிவற்ற ஒரே வஸ்துவால் ஏற்படும் இந்த உண்மையான ஒற்றுமை, அழியவே அழியாது.
பக்திக்கு ஆதாரம் அன்பு. ஆண்டவன் கருணைக்கடல். அந்த அன்புக்குக் கட்டுப்படாத ஜீவராஸியே கிடையாது. அதேபோல் பக்தனின் அன்புக்குக் கட்டுப்படாத ஆண்டவன் இல்லை. அன்பின் ஶக்தி மகத்தானது. அன்பு, அன்பையே வளர்க்கும். தேஸ மக்கள் அனைவருமே அன்பு என்னும் வெள்ளத்தில் மூழ்க வேண்டும். அதற்கு, உள்ளங்கள் தூய்மையாக வேண்டும். தர்மம் செழித்தால், உள்ளம் ஶுத்தி பெற்றுவிடும்.
நமது வேதம்தான் தர்மத்தின் இருப்பிடம். அது அநாதியானது. உலகத்துக்கே பொதுவான பொக்கிஷம். அது நாடு பூராவும் முழங்க வேண்டும். தர்மசிந்தையும், தெய்வ வழிபாடும், கருணை உள்ளமும் நம் பாரத நாட்டின் சிறப்பான அம்ஸங்கள். ஒற்றுமையை வளர்க்க வேண்டுமானால், இவற்றை வளர்க்க வேண்டும்.
இது உலகம் பூராவுக்கும் பொருந்தும். அன்பில் விளைவதுதான் உண்மையான ஶாந்தி. ஒவ்வொருவருக்கும் மனஶாந்தி ஏற்பட்டுவிட்டால், உலகில் அமைதி தானாக நிலைத்துவிடும். முதலில், ‘வேற்றுமை உண்டு’, என்ற அறியாமை விலக வேண்டும். அந்த இருள் நீங்கி ஒளி பிறக்கவேண்டும் என்று ப்ரார்த்தித்துக் கொண்டு, இந்த தீபாவளியன்று மங்கள ஸ்நானம் செய்வோமாக.
–ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.
————————————————————–
இனி இந்த அனுக்ரஹ பாஷணம் உருவான படு ஸ்வாரஸ்யமான கதையைப் பார்ப்போம்……
1961-ல் ஆனந்தவிகடன் தீபாவளி மலருக்கான வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது. திரு பரணீதரனிடம், பெரியவாளிடமிருந்து தீபாவளி மலருக்கான அனுக்ரஹ பாஷணத்தை வாங்கிக்கொண்டு வரும் பெரும்பணி குடுக்கப்பட்டது. பரணீதரனுக்கோ இக்கட்டான ஸூழ்நிலை. ஸாதாரணமாக பெரியவாளை காண ஏங்கித் தவிக்கும் அவருடைய ஹ்ருதயம், இப்போது கொஞ்சம் ஸஞ்சலப்பட்டது.
காரணம்?
சில வாரங்கள் முன்பு விகடனில் வெளியான “மைலாப்பூரில் லவகுஶ” என்ற அவருடைய ஆர்ட்டிகிள், வாசகர்கள் மத்தியில் கொஞ்சம் சலசலப்பை உண்டாக்கிவிட்டது.
உபன்யாஸ சக்ரவர்த்தி ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரும், ஸ்ரீ நாராயண தீக்ஷிதரும் சேர்ந்து மயிலை வித்யா மந்திரில் ஸ்ரீமத் ராமாயண உபன்யாஸம் செய்தபோது, அருமையான ஆன்மீக நதியின் ஓட்டத்தில், தேவையில்லாத குறுக்கீடுகள் சேர்க்கப்பட்டதால், கொஞ்சம் அபஸ்வரம் ஒலித்தது. எனவே அதைக் கேட்ட பரணீதரன், கொஞ்சம் கடுமையாகவே அதைப்பற்றி விமர்ஸனம் பண்ணி எழுதிவிட்டார். தீக்ஷிதரின் ரஸிகர்கள் கொதித்தெழுந்ததால், விகடன் ஆசிரியருக்கு கடுமையான கண்டனங்கள் வந்தன. அதே ஸமயம், உண்மையை எழுதியதற்கு பாராட்டுக் கடிதங்களும் வந்தன.
மடத்திற்கு நெருக்கமான சிலர் பரணீதரனிடம்…..
“தீக்ஷிதரைப் பத்தி இப்டி பொறுப்பில்லாம எழுதிட்டியே! பெரியவா ஒம்மேல ரொம்ப கோவமா இருக்கா…. அவரோட மனஸை நீ ரொம்ப புண்படுத்திட்டே ! நெக்ஸ்ட் டைம் போறச்சே, நன்னா வாங்கிக் கட்டிக்கப் போற!..”
பயமுறுத்திவிட்டுப் போனார்கள்!
இந்த நிலையில்தான் இளையாத்தங்குடி போய் பெரியவாளிடமிருந்து அனுக்ரஹ பாஷணம் வாங்கும் பணி வந்து சேர்ந்தது. பரணீதரன், தன்னுடன் கூட துணைக்கு ( moral support ) க்ருஷ்ணமூர்த்தி என்ற நண்பரையும் அழைத்துச் சென்றார்.
விடியும் முன், இளையாத்தங்குடியில், அதிஷ்டானம் அருகில் அமர்ந்திருந்த பெரியவா முன்னால் நமஸ்காரம் பண்ணிவிட்டு, நேருக்குநேர் அவருடைய விழிகளின் தீக்ஷண்யத்தை அனுபவிக்கும் த்ராணி இல்லாமல், ஒதுங்கி நின்றார் பரணீதரன். பெரியவா பக்கத்தில், வயஸான பக்தர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். பெரியவா அவரிடம் பரணீதரனைக் காட்டி,
“இவன்…. யாருன்னு தெரியுமோ?..”
“தெரியும்…..’ஸ்ரீதர்’ங்கற பேர்ல, ஆனந்த விகடன்ல political கார்ட்டூன் போடறார். மெட்ராஸ்ல பெரியவா இருந்தப்போ, மடத்துக்கு அடிக்கடி வருவார்.. பாத்திருக்கேன்…..”
“ஓஹோ! ஒனக்கு…. கார்ட்டூன் போடற ஸ்ரீதரைத்தான் தெரியுமா? இவன் பரணீதரன்..ங்கற பேர்ல ஆர்ட்டிகிள்ளாம் கூட எழுதறானே! அது தெரியாதா ஒனக்கு?..”
பரணீதரனுக்கு வியர்த்துக் கொட்டியது!
“பெரியவா….. ஏதாவது திட்டணும்னா திட்டிடுங்கோ!…”
மனஸுக்குள் வேண்டிக்கொண்டார்.
பெரியவா இவர்கள் இருவரின் பக்கம் திரும்பி,
“தர்ஶனத்துக்கு வந்தேளா?”
“தீபாவளி மலருக்கு அனுக்ரஹ பாஷணம் வாங்கிண்டு வரச்சொல்லி….. கோபாலக்ருஷ்ணன் அனுப்பினார்….”
பெரியவா எதுவுமே பேசவில்லை. உள்ளே எழுந்து போய்விட்டார். ரொம்ப நேரம் காத்திருந்தும் எதுவும் தெரியவில்லை. பிறகு, குளக்கரையில் இருந்த பெரியவாளிடம் மெல்ல வந்து……
” பெரியவா……..அனுக்ரஹ பாஷணம்……”
“இந்த வர்ஷம்….. நீயே எதாவுது எழுதிடு”
உத்தரவு வந்தது.
“என்னது? பெரியவாளோட அனுக்ரஹ பாஷணத்தை, நாம எழுதறதா? காலேல நெனச்சது ஸெரிதான்…..! என்னோட தப்புக்கு தண்டனைதான் இது…!”
பாவம்…. மனஸுக்குள் புழுங்கினார்.
பெரியவா, பாரிஷதர் ஒருவரைக் கூப்பிட்டு,
“இவா… மெட்ராஸ்லேர்ந்து வந்திருக்கா… கார்த்தால, காபி குடிக்கற பழக்கம் இருக்கும். நீங்க குடிக்கற காபில, இவாளுக்கும் கொஞ்சம் குடு”
அவருடன் சென்றார்கள்.
அன்று மாலை பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினதும்,
“என்ன? எழுதிட்டியா?”
“என்ன எழுதறதுன்னு தெரியல…..”
“எதையாவுது எழுதிண்டு வா…! போ!..”
“தீக்ஷிதரைப் பத்தி எழுதினது தப்புதான்! மன்னிச்சிடுங்கோ!”
பரணீதரனுக்கு வாய்விட்டு கதறவேண்டும் போல் இருந்தது! த்ராணி இல்லை!
“என்னால ஒரு வரி கூட எழுத முடியாது…. எதையாவது அபத்தமா எழுதி வாங்கிக் கட்டிக்கவா?”
நண்பரிடம் புலம்பினார்.
“வீணா கொழம்பாதே! பெரியவாள த்யானம் பண்ணிண்டு படுத்துக்குவோம். காலேல அவரே வழி காட்டுவார்”
நண்பனின் ஆறுதல் வார்த்தைகளால், காலையில் வழி கிடைக்கும் என்று உறங்கிப் போனார்.
மறுநாள் காலை பெரியவா ஸ்நானத்துக்கு கிளம்பியதும்
“என்ன? எழுதியாச்சா?” …..
இவர் மௌனமாக நின்றதும்,
“நேத்திக்கி….. ஒனக்கு யார்றா காபி குடுத்தா?..”
குடுத்தவர் பெயரைச் சொன்னதும்,
“பக்கத்து மண்டபத்ல உக்ராணம் இருக்கு. அங்க ஒரு பெரிய்ய பிள்ளையார் இருக்கார். அவருக்கு பின்னால மறைஞ்சுண்டு… ஒரு கோஷ்டி காபி போடறா….! அது ரொம்ப நன்னா இருக்காம்! இன்னிக்கி நீ… அங்க போய்க் குடிச்சுப் பாரு!…”
ஸ்நானத்துக்குப் போய்விட்டார். போறபோக்கில், இத்தனை நாள் பரணீதரனின் மனஸை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்.
மனஸ் இப்போது லேஸானது!
இருவரும்…..பெரியவா சொன்ன பிள்ளையார் சிலைக்குப் பின்னால் போய் மெள்ள எட்டிப் பார்த்தனர். ராமேஶ்வரம் விஶு தலைமையில் ஒரு கோஷ்டி காபி தயாரித்துக் கொண்டிருந்தது.
“வாங்கோ..ஸ்ரீதர் ஸார்..!..”
“இங்க காபி ப்ரமாதமா இருக்குமாமே!…. ஒரு கப் குடுக்கறியா?”
“ஹஹ்ஹஹ்ஹா! யார் சொன்னா?…”
சிரித்துக் கொண்டே கேட்டார் விஶு.
“பெரியவா…..”
க்ஷணத்தில் சிரிப்பெல்லாம் “காக்கா உஷ்!!” ஆனது.
“ஐயையோ! பெரியவாளா!….. பெரியவாளுக்கு எப்டி தெரிஞ்சுது?…”
“பெரியவாளுக்கு தெரியாம ப்ரபஞ்சத்ல எதாவுது நடக்குமா?..”
காபியைக் குடித்துவிட்டு, கொஞ்சம் பேப்பரும், பேனாவும் எடுத்துக் கொண்டு இளையாத்தங்குடி பெரியவாளான, 65-வது பீடாதிபதி ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்துக்கு போய் நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவாளை த்யானம் செய்தபடி பிள்ளையார் சுழி போட்டு விட்டு, எழுதத் தொடங்கியதும், அதிஸயமாக, ஒன்றன்பின் ஒன்றாக, கோர்வையாக எண்ணங்கள் எழுத்து வடிவாகி, ஒரு அடித்தல், திருத்தல் இல்லாமல் ஒரே மூச்சில் எழுதி முடித்தார்.
ஸாயங்காலம், பெரியவாளை தர்ஶனம் பண்ணப் போனபோது, தென்னங்கீற்றினால் வேயப்பட்ட ஒரு சின்ன அறைக்குள் பெரியவா அமர்ந்திருந்தார். கரண்ட் வஸதி இல்லை. குத்துவிளக்கின் அமரிக்கையான ஒளியில், ஸதாஶிவமாக அமர்ந்திருந்தார்.
பரணீதரன், அதிஷ்டானத்தில் அமர்ந்து எழுதின பேப்பர்களோடு நமஸ்காரம் பண்ணியதும்,
“எழுதிண்டு வந்திருக்கியா?”
“….ஆமா….”
“…..படி..”
நின்று கொண்டிருந்த இடத்தில் விளக்கின் ஒளி பத்தவில்லை.
“அங்க வெளிச்சம் போறாது…. இங்க வெளக்குகிட்ட வந்து படி…..”
பெரியவாளுக்கு அருகாமையில் அமர்ந்து, உடலை அஷ்டகோணலாக்கி விளக்கு வெளிச்சத்துக்கு கண்ணை, கழுத்தை, பேப்பரை அட்ஜஸ்ட் செய்து, திடீரென்று கர்ணகடூரமாகி ‘ஸ்ட்ரைக்’ செய்த குரலை, கமறி, கனைத்து ஸரி செய்து கொண்டு, அவர் எழுதியது அவருக்கே புரியாமல், சுக்குமி-ளகுதி-ப்பிலி என்று ஒரு வழியாக படித்து முடித்தார்.
பெரியவா பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், நடுவில் மிக ஸன்னமான த்வனியில் அழகாக பாடிக் கொண்டிருந்ததும் கேட்டது. தேவாம்ருத கானமாக இருந்தது. நாதத்தின் தலைவனல்லவா!
படித்துக் கொண்டிருக்கும் போதே, பரணீதரனுக்கு ஸந்தேஹம்…
“நா…. படிக்கறதை பெரியவா கேக்கறாளா? இல்லியா? நா…. எழுதினது, பைஸாவுக்கு ப்ரயோஜனம் இல்ல போலிருக்கு..! அதான், பெரியவா பாடிண்டிருக்கா போலருக்கு….”
ஒருவழியாக படித்து முடித்ததும்,
“…..இத… எங்க எழுதினே?…”
“அதிஷ்டான மண்டபத்ல”
“அந்தப் பெரியவாளே ஒனக்கு எழுதிக் குடுத்துட்டா…. போலருக்கு.!..”
பரணீதரன் கண்களில் கண்ணீர் வழிய நின்றார். என்ன ஒரு தெய்வீகமான வாக்கு! அனுக்ரஹ செய்திக்கான அனுக்ரஹ சொல்லை எதிர்பார்த்து நின்றார்.
“அக்ஷர லக்ஷம் பெறும்…! ஒரு வார்த்தை கூட மாத்தாம, இத, அப்டியே….எம்பேர்ல தீபாவளி மலர்ல போட்டுடு… ! நாளக்கி கார்த்தால, ப்ரஸாதம் வாங்கிண்டு ஊருக்கு பொறப்படுங்கோ…”
“அன்பின் ஶக்தி” என்ற தலைப்பில் 1961ல் விகடன் தீபாவளி மலரை பெரியவாளின் அக்ஷர லக்ஷம் பெறும் அனுக்ரஹ பாஷணம் அலங்கரித்தது.
மறுநாள் காலை விபூதி, குங்குமப்ரஸாதம் தந்துவிட்டு, சிரித்துக் கொண்டே
“ஒன்னை….. ஏன் இங்க ரெண்டு நாள் தங்க வெச்சேன் தெரியுமோ?….நீ மடத்துக்கு வந்து ரொம்…ப நாளாறதோல்லியோ?…. அதுனாலதான்….. ஸௌக்யமா போய்ட்டு வாங்கோ!”
பரணீதரன் பெரியவாளுடைய அன்பைத் தாங்க முடியாமல், தாங்கிக் கொண்டு சென்றார். இது அவருக்கு அழகான, ஆழமான அனுபவம். தூய்மையான அன்பும், அவ்யாஜ [காரணமேயில்லாத] கருணையும் சேர்ந்த ஒரே ரூபமல்லவா நம்முடைய பெரியவா!
நாம் எப்போதும் நம்முடைய குணதோஷங்களை மட்டுமே எல்லாவற்றிலும் முன்னிலைப்படுத்தி, மஹான்களையும் அதில் ஸம்பந்தப்படுத்தி, எல்லாவற்றிலும் குழம்பித்தான் போவோம். ஆனால், மஹான்கள் எப்போதுமே கலப்படமேயில்லாத அன்பையும், வாஞ்சையையும் மட்டுந்தான் நம்மிடம் வர்ஷிக்கிறார்கள்.
அதோடு முக்யமான இன்னொரு விஷயம், மஹான்களின் அருகிலேயே அவருக்கு மிகவும் அணுக்கமாக இருப்பவர்கள் என்பதால் அவர்களுக்கு அந்த மஹான்களின் உண்மை ஸ்திதி பற்றி முழுவதுமாக தெரியும் என்பதுமில்லை;
அதே போல், எங்கோ தொலை தூரத்தில் இருப்பவர்களோ, அல்லது எப்போதாவது அவர்களை தர்ஶனம் செய்ய வருபவர்களோ அல்லது வாழ்வில் அம்மஹான்களைப் பற்றி கேள்வி மட்டும் பட்டு, ஒருமுறைகூட தர்ஶனம் செய்யாதவர்களோ யாரானாலும், அந்த மஹான்களைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியப்போகிறது? என்பதோ அர்த்தமில்லை.
திரு பரணீதரன் விஷயத்தில், பெரியவா உண்மையில் என்ன நினைத்தார், அல்லது அதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லையா? என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது. இது ஒரு episode என்பதைவிட, எல்லாருக்குமே நல்லதொரு பாடமும் கூட!
எனவே, நாம் உண்மையான மஹான்களிடம் செல்லும்போது, நமக்கும், பகவத் ஸ்வரூபமான மஹான்களுக்கும் நடுவில் எந்த விஷயத்துக்கும், யாருடைய ஸிபாரிஸும் தேவையேயில்லை! நம்முள் உறைந்திருக்கும் ஸத்யஸ்வரூபமான அந்தர்யாமி அறியாததா?
அன்பு ஸ்வரூபமாக நம் பெரியவாளும், இளையாத்தங்குடி பெரியவாளும் இணைந்திருந்த அழகே அழகு!
இப்பேர்ப்பட்ட மஹத்வம் வாய்ந்த இளையாத்தங்குடி பெரியவாளின் பூர்வாஶ்ரம சித்தப்பாவும், ஹெஜீபுமான ஶ்ரீ கணபதி ஶாஸ்த்ரிகளுக்கு மூன்று குமாரர்கள்.
1. ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள் [நம்ம பெரியவாளின் அப்பா)
2. ஸ்ரீ ராமநாத ஶாஸ்த்ரிகள்
3. ஶ்ரீ ஸுந்தரமூர்த்தி ஶாஸ்த்ரிகள்
நம் பெரியவாளுடைய தகப்பனார் ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள் 1855-ல் பிறந்தார். கணபதி ஶாஸ்த்ரிகள் [ஹெஜீப்] தன் பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் உபநயனம் செய்வித்து, ரிக்வேதத்தில் பயிற்சியும் அளித்தார். English கல்வியும் சேர்த்து அளித்தார்.
1872-ல் ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள் Kumbakonam Government High School-ல் matriculation பரிக்ஷையில் முதலாவதாக வந்தார். ஸ்கூல் முடிந்ததும், கும்பகோணத்தில் ராவ்பஹதூர் S.அப்பு ஶாஸ்த்ரிகள், ஸ்வாமிநாத ஐயர் ஆகியோரால், கும்பேஶ்வரர் கோவில் தெற்கு வீதியில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்கூலில், வாத்யாராக சேர்ந்தார். இந்த ஸ்கூல், இன்று கும்பகோணத்தில், Native High School என்ற பெயரில் உள்ளது.
திருவாரூருக்கு பக்கத்தில் உள்ள காவாலகுடி மிராஸுதார் த்யாகராஜ முதலியாருக்கு “special private tution” எடுத்தார். அதன் பின், Government Education Department-ல் முதலில் வாத்யாராகவும், பிறகு ஸூபர்வைஸராகவும் இருந்து, தென்னார்க்காடு மாவட்டம் வ்ருத்தாசலம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், விக்ரவாண்டி, மஞ்சக்குப்பம் ஆகிய ஊர்களில் 30 வர்ஷங்களுக்கு மேல் உத்யோகம் பார்த்தார்.
இனி…. பெரியவாளின் அம்மாவின் முன்னோர் பற்றி பார்ப்போம். அதில்தான் நம்ம பெரியவாளின் ‘Divine Entry’ வருகிறது……
No comments:
Post a Comment