Tuesday, November 1, 2022

கருஞ்சீரகம்

 கருஞ்சீரகத்தின் நன்மை தீமைகள் பற்றி கூற முடியுமா?

இந்திய உணவு முறை மிகவும் மருத்துவ பயன்களை கொண்டது. அதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருஞ்சீரகம் ஒன்று .கருஞ்சீரகத்தை வறுத்தோ அல்லது வறுக்காமலேயோ உணவுகளில் பயன்படுத்தி வரலாம்.

ஊட்டச்சத்துக்கள்

கருஞ்சீரகத்தில் நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்து, சோடியம் ,கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கிறது. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி ,வைட்டமின் பி12, வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்களும் அதிக அளவில் உள்ளன.

கருஞ்சீரக எண்ணெயில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில் 17 % புரதம், 26 % கார்போஹைட்ரேட்டும் மற்றும் 57% தாவர எண்ணெய்களும் உள்ளன.

நன்மைகள்

நினைவுத்திறன்

கருஞ்சீரகத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நம் நினைவுத்திறனை அதிகரிக்க செய்கிறது. வெறும் வயிற்றில் தினசரி உண்டு வந்தால், மூளையின் செயல்பாடு சிறந்ததாக இருக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைவுக்கு இது சரியான தீர்வாக இருக்கும்.

கருஞ்சீரகத்தை புதினா இலைகள் சேர்த்து பயன்படுத்தி வந்தால் அது அல்சைமர் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வாக அமையும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீரிழிவு

டைப் 2 நேரடி நோயாளிகள் கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால், அவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் நல்ல பலனை பெற ,பிளாக் டீ உடன் கருஞ்சீரகத்தை சேர்த்து உண்பது நல்லது.

இதய பராமரிப்பு

கருஞ்சீரகம்,இரத்தத்தில் கெட்ட கொழுப்புகளின் அளவை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. கருஞ்சீரகத்தை பாலில் கலந்து குடித்தால் நல்ல பலனை பெறலாம்.

வீக்கத்தைக் குறைக்க

கருஞ்சீரக விதைகளில் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உள்ளதால், உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது. கருஞ்சீரக எண்ணையை கை, கால் மூட்டுகளில் தடவுவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தமாறு ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.

இரத்த அழுத்தம்

கருஞ்சீரக எண்ணெய் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு, இரத்த அழுத்த மாறுபாடு ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது. உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் வெதுவெதுப்பான நீரில் கருஞ்சீரக எண்ணெய் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பற்களின் வலிமை

கருஞ்சீரகம் பற்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வாய் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஈறுகளில் இரத்தப்போக்கு உள்ளிட்டவைகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது. பல் வலிக்கு உடனடி தீர்வாகவும் விளங்குகிறது.

அரை தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெயை ஒரு கப் தயிரில் கலந்து தினமும் இரண்டு முறை ஈறுகளில் தேய்த்து வர பற்கள் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

ஆஸ்துமா

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருஞ்சீரக மருத்துவம் இனிய வரப்பிரசாதமாகும். வெதுவெதுப்பான நீரில் கருஞ்சீரக எண்ணெய் மற்றும் தேன் கலந்து குடித்து வர நல்ல பலன்கள் கிடைக்கும்.

எடை குறைய

கருஞ்சீரகம் உடலின் வளர் சிதை மாற்றத்தை அதிகரித்து, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் கருஞ்சீரகத்தை கலந்து தினமும் குடித்து வர, உடல் எடை குறைப்பில் நல்ல மாற்றத்தை காணலாம்.

சருமம் மற்றும் முடி வளர்ச்சி

நல்ல பளபளப்பான சருமத்திற்கு கருஞ்சீரக எண்ணையை எலுமிச்சை சாற்றில் கலந்து ,முகத்தில் தடவி வர வேண்டும்.

கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள் முடி வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு, முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகிறது.

சிறுநீரகப் பராமரிப்பு

நீரிழிவு காரணமாக சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய கருஞ்சீரகம் உதவுகிறது. இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கிரியாட்டினின் சீரம் அளவை அதிகப்படுத்துகிறது. இரத்தத்தில் யூரியாவின் அளவை கட்டுப்படுத்துகிறது .சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு தீர்வு அளிக்கிறது.

புற்றுநோய் எதிர்ப்பு

கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ,உடலில் உள்ள புற்றுநோயை உருவாக்கும் பிரீரேடிகல்ஸ்களை எதிர்த்து போராடுகிறது. மார்பக புற்றுநோய், செர்விகல் புற்றுநோய் ,நுரையீரல் புற்றுநோய் , பான்கிரியாட்டிக் புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.

பிற நன்மைகள்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

கருஞ்சீரக எண்ணையை முன் தலையில் சரி தடவி வர, கடுமையான தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கலுக்கு குணமளிக்கிறது.

மூல நோய்க்கு தீர்வு அளிக்கிறது.

உடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கிறது.

வயிற்றுப் புண்ணை குணப்படுத்துகிறது.

தீமைகள்

கருஞ்சீரக விதைகள் ரத்த உறைதலை குறைத்து இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்க கூடும் தன்மை கொண்டவை. அதிகப்படியான கருஞ்சீரக நுகர்வு இரத்தப்போக்கு கோளாறுகளை மேலும் மோசமாக்கும்.

மிக அரிதாக சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். வயிறு வலி ,வாந்தி அல்லது மலச்சிக்கலை உண்டாக்கும் .

சிலருக்கு வலிப்பு அபாயத்தை உண்டாக்கும். இத்தகைய பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதித்த பிறகு பயன்படுத்துவது நல்லது.

கருஞ்சீரக விதையிலிருந்து தயாரிக்கப் படும் ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தும் போது, சரியான விகிதத்தில் சரியான முறையில் பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் இது சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தி, ஒவ்வாமை வெடிப்புகளை ஏற்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகள், மருந்துகளோடு கருஞ்சீரக விதைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது அது திடீரென்று ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து விட செய்யும். எனவே நீரிழிவு நோயாளிகள் கருஞ்சீரக விதைகளை எடுக்கும் போது அவ்வப்போது நீரிழிவு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

கருஞ்சீரக விதைகளை குறைந்த ரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்கள் எடுக்கும் பொழுது மேலும் குறைந்த இரத்த அழுத்தத்தை உருவாக்க வாய்ப்பு உண்டு.

அறுவை சிகிச்சை திட்டமிட்டு இருந்தால் அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே கருஞ்சீரக விதைகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். காரணம் அறுவை சிகிச்சைக்கு பிறகு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். மயக்க மருந்துகளில் தலையிட கூடும்.

நன்றி 🙏 இணையம்

No comments:

Post a Comment