Tuesday, November 1, 2022

உயிர்

 **  சிறு(?)கதை

உயிர்

      உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு தகரம். காலைப் பொழுது.  பெட் காஃபி யோடு கணவன் செந்திலை எழுப்பினாள் கீதா.

"ஏங்க.. எந்திரிங்க.."

"இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானே.. அப்பாடா.. இன்னைக்கு ஒரு நாள் வேலைக்குப் போய்ட்டா அப்புறம் வீக் எண்ட் தான்.. சரி.. இந்த வாரம் எங்கே போகலாம்?" என்று கேட்டான் செந்தில்.

    அவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் சென்றிருந்தது. எப்போதும் வீக் எண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

"இன்னைக்கே  லீவு போடுங்க.. கைனகாலஜிஸ்ட் டாக்டர் கிட்ட முதல்ல அப்பாயின்ட்மென்ட் வாங்கணும்.."

"எதுவும் பிரச்சினையா..கீதா?"

"இல்லைங்க.. எனக்கு நாள் தள்ளிப் போச்சு.. நேற்றோட நாற்பது நாள்‌ ஆச்சு.. செக் பண்ணிட்டு வந்திடலாம்"

"ஐ.. இப்போவே லீவு சொல்டுறேன்" என்று விசில் அடுத்தபடியே எழுந்து சென்றான் செந்தில்.

     டாக்டர் செக் பண்ணிப் பார்த்து விட்டு சந்தோஷ சமாச்சாரம் தான் என்று சொன்னார். இருவருக்கும் தலை கால் புரியவில்லை. வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போகிறார்களே? கீதாவை அங்கேயே முத்தமிட்டலாமா என்று யோசித்த செந்திலின் கை விரல்களை இறுகப் பற்றினாள் கீதா. பாம்பின் கால் பாம்பறியும்.

       மருத்துவ மனையிலிருந்து வெளியே வந்ததும் கீதாவிடம்

"உங்க அம்மாட்ட சொல்டுறீயா? .." என்றான் செந்தில்.

"வீட்டுக்குப் போய்ட்டு பேசலாம், கிளம்புங்க"

    அவர்கள் இரு சக்கர வாகனத்தில் ஏறி வரும் வழியில், திடீரென ஒரு லாரி பின்னால் வந்து மோதியதில் இருவரும் தூக்கியெறியப் பட்டனர். செந்தில் ஹெல்மட் போட்டிருந்ததால் தப்பித்தான். சிறிய காயம் மட்டும்தான். கீதா ஹெல்மட் போடவில்லை, அவளுக்கு பின் மண்டையில் அடி. முதுகெலும்பிலும் பாதிப்பு. உடனடியாக மருத்துவ மனையில் அட்மிட் செய்தனர்.

     கீதாவுக்கு சுய நினைவு போயிற்று. முதுகெலும்பு பாதிப்பு வேறு அவளை படுத்த படுக்கை ஆக்கியது. ஆனால் வயிற்றில் உள்ள சிசுவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

"செந்தில், ... கீதாவுக்கு இன்றோடு ஒரு மாதம் ட்ரீட்மெண்ட் எடுத்து விட்டோம்.. எந்த முன்னேற்றமும் இல்லை.. இதற்கு மேல் சிகிச்சை எடுக்க வேண்டுமென்றால் டெல்லி AIIMS தான் போக வேண்டும்.." என்றார் டாக்டர்.

"ஓகே டாக்டர், ரெகமென்ட் பண்ணி டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க" என்றான் செந்தில்.

"இல்லை.. டாக்டராக ஒரு பேச்சுக்காக சொல்கிறேன்.. இவளுக்கு எப்போ சுய நினைவு வரும்னு தெரியல.. ஆனா வயிற்றில உள்ள பேபி நார்மலா தான் வளருது.. அதை என்ன பண்றதுனு நீங்க தான் சீக்கிரம் முடிவு எடுக்கணும்.."

    மனதிற்கு கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனாலும் செந்தில் தீர்மானமாக சொன்னான்...

"இவ சீக்கிரம் எந்திருச்சுடுவானு எனக்கு நம்பிக்கை இருக்கு டாக்டர்.. அப்படி ஒரு சூழ்நிலையில் என் கிட்ட குழந்தை பத்தி கேட்கும்போது நான் என்ன பண்ணுவேன்? அது நாங்க இருவரும் சேர்ந்து உருவாக்கிய முதல் உயிர்.. நான் மட்டும் அழிக்க முடிவு எடுப்பது சரியாகாது.. குழந்தை வளரட்டும்.. அது பிறப்பதற்குள் கீதா குணமாகிடுவா.." என்று சொன்னான் செந்தில்.

    டெல்லி AIIMS மருத்துவமனையில் கீதாவை அட்மிட் செய்து ஏழு மாதங்களுக்கு மேல் ஆயிற்று. கீதாவுக்கு சுய நினைவு திரும்பாததால், குழந்தை தலை குப்புற திரும்பியவுடன் சிஸேரியன் செய்து விடலாம் என முடிவு செய்து ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து‌ சென்றனர்.

    சினிமாக்களில் சொல்வார்களே 'medical miracle' என்று, அது நடந்தது

 குழந்தை வயிற்றில் முட்ட முட்ட, கீதாவுக்கு சுய நினைவு வந்தது. நார்மல் டெலிவரி. அழகான பெண் குழந்தை.  ஜனனி என்று பெயர் வைத்தனர். 

      செந்திலுக்கு இரட்டை குழந்தை பிறந்தது போல் அவ்வளவு சந்தோஷம்.

(பி.கு.: உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதியது)

No comments:

Post a Comment