Friday, May 13, 2022

பெண்மை

 *பெண்மை. - சிறுகதை!*

'சரி' ,என்று சொல்லி விட்டு அவள் செல்லை வைத்த போது வசந்தி வந்தாள்.

எஜமானி-யின் முகம் பார்த்து,

'என்னம்மா , ஏதாவது பிரச்சினையா ?

என்றதும் , ஒன்றுமில்லை , நீ போய் வேலையை பார் என்று சொல்லி விட்டு எழுந்தாள் மாதவி.

அவள் உள்ளே போனதும் தண்ணீரைக் குடித்துவிட்டு சோஃபாவில் சாய்ந்தாள் .

மனதுக்குள் பெண்ணின் பேச்சு நிழற்படம் போல ஓடியது.

அதிக பட்சம் ஒரு வாரம் ஒரே ஒருவாரம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை. அதுவும் வேலை விஷயமாக; எவ்வளவு நல்ல சான்ஸ்.; உத்தியோகத்தில் உயர்வுக்காக எவ்வளவு பேர் தவிக்கிறார்கள்.! தானாக கூப்பிட்டு கொடுப்பதையும் அனுபவிக்க முடியாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. மனதுக்குள் வேதனை பிராண்டியது மாதவிக்கு.

காபியைக் கொண்டு வந்து நீட்டியபடியே முக பாவத்தை கவனித்த வசந்தியைப் பார்த்ததும் லேசாக முறுவல் பூத்தாள்.

'ஒன்றுமில்லை. பிரபா டெல்லிக்கு வந்திருக்கிறாள் ஒரு வாரம் ஏதோ முக்கியமான வேலையாம். அதற்குள் அங்கே பாபுவை சமாளிக்க முடியாமல் அவர் திண்டாடுகிறாராம். முதல் தடவையாக இப்போது தானே பிரிகிறார்கள். அது அந்த குழந்தைக்கு எப்படி தெரியும் ஏழு வயது தானே ஆகிறது.. அவராலும் சமாளிக்க முடியவில்லை என்கிறாராம் . அதுதான் '.

'விடுங்கம்மா: இதெல்லாம் தானா சரியாப் போயிடும். விளையாட்டுப் பையன் , ஏதாவது சொல்லி மனதை மாற்ற வழியா இல்லை. இப்போதுதான் ஏகப்பட்டது வந்து விட்டதே.!

செல் , டேப்லெட் என்று எவ்வளவு வீடியோ கேம்கள்!'

அவள் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே ஃப்ரிட்ஜில் இருந்து காய்களை எடுத்துப் போனாள்.

'நிஜம் தானே! எல்லாம் ஜஸ்ட் லைக் தட் ஒரு வாரம் ஓடிவிடும்'

பாபுவைக்கூப்பிட்டு நாமும் பேசலாமே..

ஒரு பெண் தன் வாழ்க்கையில் எத்தனை தடைகளை கடக்க வேண்டியிருக்கிறது. ஆடவன் பாடு தேவலை இதே மருமகன் போயிருந்தால் தினமும் தனக்கு கிடைக்கும் பாராட்டுகளை சொல்லிக் கொண்டு இருப்பார் . ஆனால் பெண் எங்கே சென்றாலும் ஆமை ஓட்டைத் தூக்கி கொண்டு போவது போலத்தான் பிரச்சினை களையும் பொறுப்பு களையும் சுமந்து கொள்ள தான் வேண்டும்..என்ன செய்ய முடியும்?!

பாஸ்கர் வந்ததும் அவள் முகம் தெளிவில்லாமல் இருப்பதை பார்த்தார்.

'என்ன ஆச்சு ? உன் பெண் ஃபோன் பண்ணினாளாக்கும்.!

எனக்கும் பண்ணினாள் !, சொல்லியபடியே ரிமோட்டை எடுத்து டிவி யில் நியூஸ் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

அவ்வளவுதான். அவளால் தான் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

இப்போது தான் எந்த நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ள என்று வசதிகள் வந்து விட்டனவே. முன்பாவது கடிதம் வரவில்லை என்று எதிர்பார்த்து போஸ்ட் மேன் வருகைக்கு தவமிருப்போம்... எல்லா வசதிகளும் வந்த பிறகு வேறு மாதிரி தவிக்கிறோம்..

அவளுக்கே அவள் சிந்தனையின் போக்கு விசித்திரமாக பட்டது. எத்தனை பெண்கள் வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களை பட்டுக்கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கின்றார்களே.

சமீபத்தில் படித்த ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது.ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்திருந்த ஒருவர் ஃப்ரெண்டுக்கு அதன் நுணுக்கங்களை சொல்லி கொடுக்க. அவன் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு பக்கத்திலேயே புதிதாக கடை திறந்து விட்டானாம்.. சோதனையாக இவருக்கு கண் பார்வை மங்க ஆரம்பிக்க அவர் மனைவி போய் அவனிடம் ,'எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடு நான் தான் கடையை பார்க்க வேண்டும் 'என்று கேட்ட போது 'உனக்கு என்ன தெரியும்? படிக்காத முட்டாள் 'என்று அவன் வீசிய வார்த்தை அமிலங்கள் அவள் நெஞ்சில் பட்டு அனலாக எரிந்தன. துணிவுடன் களத்தில் இறங்கினாள்.

கணவனின் துணையோடு கொஞ்சம் கொஞ்சமாக கற்று தேர்ந்து இப்போது ஸ்டுடியோவை மிகவும் நன்றாக நடத்துகிறாளாம். அவளுடைய கனிவான செயல்களும் இனிமையான வார்த்தைகளும் அவளுக்கென்று ஒரு பெரிய வட்டத்தையே ஏற்படுத்தி விட்டனவாம்.

சின்ன வயது குழந்தைகள் இரண்டையும் சமாளித்துக் கொண்டு பார்வைக்குறையுள்ள கணவனையும் பார்த்துக்கொண்டு வேலைக்கு அலைவதற்காக டூ வீலரும் கற்றுக் கொண்ட அந்தப் பெண்ணை சுற்று வட்டாரத்தினர் பிரமிப்புடன் பார்ப்பதுடன் நேசக்கரமும் நீட்டுகிறார்களாம்.

ஆனால் அந்த முன்னேற்றத்தை அடைய அவள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள்! ஆடவன் சாதிப்பதை பெண் முயற்சித்து வெற்றி பெறுவது எத்தனை பெரிய விஷயம் என்று உணர்பவர்கள் மிகச்சிலரே.!

தினமும் பாபுவுடன் பேசி அவன் மனதை கலகலப்பாக வைக்க முயற்சி செய்தாள்..

அன்றும் அப்படித்தான் ஏதோ பேசிவிட்டு திரும்பிய போது சுமதி வந்தாள்.

'மாதவி , உனக்கு விஷயம் தெரியுமா?.நம்முடைய மகளிர் குழு முக்கியமான ஏரியாக்களில் போய் பெண்களின் நிலையை சர்வே எடுக்க போகிறோம்.'

'ஆமாம், பார்த்து என்ன செய்ய போகிறோம்?'. சலிப்புடன் சொன்னாள் அவள் . 'யாரையாவது மாற்ற முடியுமா ? மாறத்தான் போகிறார்களா! வீண் முயற்சி.!'

'என்ன மாதவி இப்படி சொல்லிவிட்டாய்?.எவ்வளவு தூரம் நம்மால் முடிந்தவற்றையெல்லாம் செய்ததால் தானே இவ்வளவாவது முன்னேறியிருக்கிறோம்.! எத்தனை சிறுமிகளை படிக்க வைத்திருக்கிறோம். இப்போதும் ஒரு விழிப்புணர்ச்சிக்குதான்.

முதியவர்களை குறி வைத்து தாக்கும் கும்பல் சின்னப்பெண்களைகூட விட்டு வைக்காத கயவர் கூட்டம் என்று நாடே சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கிறது. முடிந்த வரை நம்மாலான உதவிகளை செய்து வருவோம் என்றுதான்.'

சுமதி நீளமாக பேசி முடித்தாள்.

'அது சரி ,அன்றைக்கு பாரதியார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்று பாடினார். இன்றைக்கு எந்த வயது பெண்ணையும் நடமாட விடாத விந்தை மனிதர்கள்.'

அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே 'அவர்கள் விந்தை மனிதர்கள் இல்லையம்மா வெறும் சொத்தை மனிதர்கள். இல்லை அம்மா மிருகங்கள்:. மிருகங்கள் என்று சொல்வது கூட அவற்றிற்கு கேவலம். அவை கூடதன் வழியில் வந்தால்தான் நம்மிடம் பாய்கின்றன ' என்றபடியே வந்த வசந்தியைப்பார்த்துத் திடுக்கிட்டாள் சுமதி.

நீ இங்கே என்ன பண்றே?, வியப்புடன் கேட்டாள்.

'உனக்கு இவளைத் தெரியுமா?' என்றவள்

இரண்டு மாதமாக எனக்கு சமையல் மட்டும் செய்து கொடுத்து விட்டு போகிறாள் என்று சொன்னாள்.

'இவளா ! இவள் பையன் பெரிய மளிகை கடை வைத்திருக்கிறான். மருமகள் கூட ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறாளே. ஒரு குழந்தை கூட உண்டு நான் பார்த்திருக்கிறேன்!'

ஆச்சரியத்துடன் சொன்ன சுமதி 'உனக்கு என்னம்மா கஷ்டம்? என்று நேரிடையாகவே அவளிடம் கேட்டாள்.

'கஷ்டம் எனக்கு இல்லைம்மா. என் பெண்ணுக்கு திடீரென்று ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டியதாயிற்று. நிறைய பணம் கடன் வாங்கியிருக்கிறேன். அதை கட்டுவதற்கு எனக்கு தெரிந்த வழி',

பெரு மூச்செறிந்தவாறே மேலும் சொன்னாள் அவள்.

'பையனும் மருமகளும் பதினோரு மணிக்கு மேல் தான் அறையை விட்டு வெளியே வருவார்கள். அப்புறம் குழந்தை-யை பார்த்து கொள்ள வேண்டும்.. அதுதான் காலையில் இங்கு வந்து என்னால் முடிந்த வேலையை செய்துவிட்டு போகிறேன்.'

'உன் மகன் சகோதரிக்கு செய்ய மாட்டானா?'

திகைப்புடன் வினவினாள் அவள்.

'செய்வாம்மா . அது ஓரளவுக்கு தான். அதற்கு மேல் செய்ய மருமகளும் விட மாட்டாள். குடும்பத்தில் பிரச்சினை வரும்

அதனால் என்னம்மா ! என் பெண்ணுக்காக என்னால் முடிந்ததை செய்கிறேன் என்றபடி உள்ளே போன அவளை இரண்டு பேரும் கண் கொட்டாமல் வெறித்தனர்.

பெண்மை அது எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறது. சிறுமியாக இருக்கும் போது ஒரு விதம். திருமணமானபிறகு ஒருவிதம் என்றால் பேரக்குழந்தை பிறந்த பிறகு கூட நிம்மதியாக இருக்க முடியாமல் தவிக்கும் இந்த தாய் மனம்...

அவர்கள் கண்கள் குளமாகின.

-காந்திமதி உலகநாதன்.

*பகிர்வு*

No comments:

Post a Comment