Tuesday, May 10, 2022

ஸ்பரிசம்

 ஸ்பரிசம்

விடிந்தால் நாளை சதாபிஷேகம்.

'பானு ஊருக்குப்போய் மூன்று நாள் ஓடிவிட்டது..எப்படியோ மூணு நாளைத் தள்ளியாச்சு. இன்னும் மூன்றே நாள்தான் பாக்கி. அவள் வந்த பிறகுதான் வீடு வீடாகும்...' யோசித்துக் கொண்டே சோஃபாவில் சற்றே கண் அயர்ந்து விட்டான் கிரிதர்.

'அப்பா...அம்மா வர்றதுக்கு இன்னும் எவ்ளோ நாள்...-கேட்டுக்கொண்டே கிரிதரை உலுக்கினான் கோகுல்.

சட்டென்று விழித்துக் கொண்டு தன்னைச் சுதாரித்துக் கொண்டான் கிரி.

கோகுலை உற்றுப் பார்த்தான் கிரி. பெரிய கண்கள், சுண்டி விட்டால் சிவந்து போகும் நிறம். எல்லாம் இருந்தும் என்ன பயன்? கோகுலுக்கு வயது முப்பது ஆகியும் அவன் குழந்தைதான்.  உடல் நன்றாக வளர்ந்திருந்தாலும்  அவனுக்கு மனவளர்ச்சி சற்று குறைவு. கோகுலைத்  தி.நகரில் இருக்கும்  ஒரு சிறப்புப் பள்ளியில் சேர்த்திருந்தார்கள்.

கோகுலுக்கு மனவளர்ச்சி குறைபாடு உள்ளது என்று தெரிந்த அன்று பானுவும் கிரியும் தங்கள் தலைமேல் இடி விழுந்ததுபோல் ஆகிவிட்டனர்.

தனக்கு ஏன் இப்படி ஒரு பிள்ளை பிறந்தான் என்று கிரிக்கு ஒரு புறம் கோபம் வரும்.சில சமயம் தன் மேலேயே பச்சாத்தாபம் வரும்.

கோகுலை வளர்ப்பதில் கிரி அத்தனை  ஆர்வம் காட்டவில்லை. எல்லாப் பொறுப்பும் பானுவின் தலையில்தான்.கோகுலுக்கு குளிப்பாட்டி விடுவதோ பல்லைத் தேய்த்து விடுவதோ எல்லாமே பானுதான் செய்வாள். அவள் எவ்வளவு முறை சொன்னாலும் கிரி கண்டுகொள்ளவே மாட்டான். கோகுலை எடுத்து அணைத்துக் கொண்டதேயில்லை. ஒரு அவசரத்திற்குக்கூட கோகுலைத் தூக்கிக் கொள்ள மாட்டான். கோகுல் குழந்தையாக இருந்தபோது அவனை  இடுப்பில் வைத்துக் கொண்டே பானு சமையலறையில் வேலை செய்வாள். கொஞ்சம் இவனைப் பிடியுங்களேன் என்று அவள் எத்தனைக் கெஞ்சினாலும் கோகுலைத் தொடப் பிடிக்காமல் நழுவி விடுவான் கிரி. குழந்தையின் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் 'ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ' என்ற சினிமாப் பாட்டுதான் கிரியின் மனதில்  ஓடிக்கொண்டே இருக்கும்.

 தினமும் காலையில் குளித்துவிட்டு சுவாமி படத்திற்கு அருகில் வந்து கும்பிடும்போது இந்த கோகுலை ஏன் எனக்கு கொடுத்தே சாமி என்று கேட்பான். கோவிலுக்குச் சென்றாலும்  'எனக்கு  ஏன் சாமி இப்படி ஒரு குழந்தையைக் கொடுத்தே ' என்று கேட்டு விட்டுத்தான் வருவான்.

'ஒவ்வொரு குழந்தையைப் பார்த்தா நம்ம கோகுல் எவ்வளவோ தேவலை...பேச்சு எப்படியோ பகவான் புண்ணியத்துல வர்றதே ன்னு திருப்திப் பட்டுக்கோங்கோ' என்பாள்  பானு. வருடங்கள் ஓடிவிட்டன. கோகுலுக்கு வயது இருபதை எட்டும் போதுதான்  கிரிக்கு அவனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மெள்ள எட்டிப்பார்த்தது.

*******

பானுவின் சித்தப்பாவிற்கு நாளை டில்லியில் சதாபிஷேகம் நடைபெற உள்ளது.

'ஏன் மாப்பிள்ளை..நீங்களும் வாங்களேன். ரிடையர்தான் ஆயாச்சே . நீங்க ,கோகுல், பானு எல்லாருமா வந்தா இன்னும் சந்தோஷமா இருக்கும்' என்றார் அவளுடைய சித்தப்பா இரண்டு மாதம் முன்பே.

'பானு உங்களுக்கு பொண்ணு மாதிரி..அவ வருவா.

நான் எப்படியோ மேனேஜ் பண்ணிக்கறேன். ஆஃப்டர்  ஆல் ஒரு வாரம்தானே..' என்று பதிலுரைத்தான் கிரி. ஆனால், அடி மனத்தில் ஏதோ சற்று கனமாகவேதான் இருந்தது கிரிக்கு

முதல் இரண்டு நாட்கள் வேகமாக ஓடிவிட்டன. மூன்றாம் நாள் மனத்தில் ஒரு சோர்வு புகுந்து கொண்டது. எதைப் பார்த்தாலும் ஒரு சலிப்பே வந்து சேர்ந்தது.

'அடடா நாளைக்கு சனிக்கிழமையாச்சே.. கோகுலுக்கோ பள்ளி கிடையாதே.எப்படியப்பா  சமாளிக்கப் போகிறேன்' என்று நினைத்தவனுக்கு அடி வயற்றில் ஏதோ செய்தது. சட்டென்று ஒரு யோசனை தோன்றியது; பீச்சுக்குப் போய் கொஞ்சம் நேரத்தைக் கழித்திடலாம் என்று நினைத்தான்.அடுத்த நாள் காலை இருவரும் பீச்சுக்குப் போய் அங்கு சிறிது நேரம் உலாவினார்கள். அங்கிருந்து திரும்பி வரும்பொழுது, 'ஹாய் கிரி, எப்படி இந்தப் பக்கம்' என்ற குரலைக் கேட்டுத் திரும்பினான். கிரியின் வங்கியில் அவனுடனே பணிபுரிந்த ராமன் புன்னகை புரிந்து கொண்டு கையை லேசாக ஆட்டிக்கொண்டே  அவர்களை நெருங்கி வந்து கொண்டிருந்தான்.

இருவரும் குசலம் விசாரித்துக் கொண்டார்கள். பல நாட்களுக்குப் பிறகு வங்கியில் பணி புரிந்தவனைப் பார்த்தது கிரிக்கு சந்தோஷமாகவும் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் இருந்தது. பேச்சு வாக்கில்  ஞாயிற்றுக் கிழமைகளில் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் ஓய்வு பெற்ற சில வங்கி அதிகாரிகள் தற்போது இன்னும் பணியில் இருக்கும் சிலருடன் கூட்டம் போடுவதாகவும் அங்கு நிறைய விஷயங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுவதாகவும்

கூறினான்  ராமன்.

'நீங்களும் வாங்களேன் கிரி..' என்றழைத்தான். கிரியின் முகத்தில் தெரிந்த தயக்கத்தைப் பார்த்து 'ரொம்ப ஜாலியா இருக்கும் . சன்டே சன்டே இப்படி பார்த்துண்டா ஒரு சேஞ்ச் நம்மளுக்கும்.

என்ன.. நாளைக்கு வர்றீங்களா...'என்று சற்று ஆசை காட்டவே கிரியும் ஒப்புக் கொண்டான்.

மறு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கத்தைவிட அதிகமான  உற்சாகத்துடன் இருந்தான் கிரி. தன் சக ஊழியர்களைப் பார்க்கலாம்  , அவர்களுடன் பேசுவதற்கு பெரிய விஷயம் ஒன்றும் இல்லை என்றாலும் அவர்களுடன் பொதுவாக ஏதாவது பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆவலுடன் தன்னைத் தயார் செய்து கொண்டான்.

'சீக்கிரம் சீக்கிரம்..   பல் தேய்ச்சுட்டு  காபி குடிச்சுட்டு பார்க் போகலாம் வா வா' என்று கோகுலை துரிதப் படுத்தினான்.

பார்க்கில் பொழுது போனதே தெரியவில்லை. சிரிப்பு அலைகளும் கேலிப் பேச்சும் மிகவும் சுவாரசியமாக இருந்தன .

'அப்பா ..ஆத்துக்கு , அப்பா ஆத்துக்கு..' என்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை நச்சரித்துக் கொண்டிருந்தான் கோகுல். ஆனால் கிரி பேச்சில் மூழ்கியிருந்ததால் கோகுல் சொல்வதை மனத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. பிறகு எப்படியோ அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டான். சிறிது தூரம் சென்ற பிறகுதான் செல்போனைப்  பார்த்தான். மணி ஒன்பதைக் காட்டிக்கொண்டிருந்தது. பசி ஒரு பக்கம் லேசான தலைவலி வேறு ஒரு பக்கம். பேச்சு சுவாரசியத்தில் எல்லாவற்றையும் மறந்திருந்தான் கிரி.

வீட்டுக்குப் போகும் வழியில் 'அப்பா மேகி நூடுல்ஸ் வாங்கித்தா... நேக்கு மேகி வேணும்' என்று ஒவ்வொரு கடைப் பக்கத்திலும் கேட்டுக் கொண்டிருந்தான் கோகுல். பசித்தலைவலியில் ஒன்றுமே செய்யத் தோன்றவில்லை கிரிக்கு.  தலைவலி நிமிடத்திற்கு நிமிடம்  அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால், கோகுல் மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்ததால் ஒரு கடையில் கோகுலுக்குப் பிடித்த மேகியை வாங்கினான்.வீட்டிற்குப் போனதுமே கிரிக்கு வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. நேரே பாத்ரூமுக்குப் போய் வாஷ்பேஸினில் வாந்தி எடுத்தான். தலைவலி  வேறு மண்டையைப் பிளந்து கொண்டிருந்ததால் குனியும்போது இன்னும்

 'விண் விண் 'என்று வலித்தது. அதே சமயம் சமையலறையில் ஏதோ சத்தம் கேட்டதால் கிரிக்கு 'பக்'கென்று அடி மனத்தில் கவலை பிடித்துக் கொண்டது.

 'இந்த கோகுல் எதையோ உருட்டிக் கொண்டிருக்கிறான் போலிருக்கே...கடவுளே...பானு இல்லாம ரொம்பக் கஷ்டமா இருக்கே..' என்று மனதில் புலம்பிக் கொண்டான். வேகவேகமாக முகத்தைக் கழுவி வாயைக்  கொப்பளித்து வாஷ்பேஸினை அலம்பி அவன் தள்ளாடி வருவதற்கும் கோகுல் வரவேற்பறையில் இரு கைகளிலும் மேகி உணவுடன் வருவதற்கும் சரியாக இருந்தது.

கிரிக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை.கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தான்.

'அட..இது என்ன, என் கோகுலா இப்படி மேகி நூடுல்ஸ் செய்திருக்கிறான் ..நான் பார்ப்பது கனவா நனவா...ஒண்ணுமே புரியலையே...'என்று மனதில் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம்!   

 கிரிதருக்கு  அப்போது நடப்பதற்கும் சக்தியும் இல்லை ; பேசுவதற்கும் முடியவில்லை...

சோர்வு தாங்காமல் அப்படியே பக்கத்தில் இருக்கும்  சோபாவில் மெதுவாக உட்கார்ந்தான் .

'இந்த கோகுல் எப்போ மேகி செய்யக் கற்றுக்கொண்டான்' என்று கிரிக்கு வியப்பாக இருந்தது. அவனுக்கு பேச்சே எழவில்லை.ஏதோ பேசவேண்டும் என்று நினைத்தாலும்  அவனுடைய தொண்டை

ஒத்துழைக்கவில்லை  

 தலைவலி இன்னும் இருந்ததால் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.

'தலை வலிக்கிறதா அப்பா...நா மருந்து தர்றேன்' என்று சொல்லிக் கொண்டே கோகுல் தான் தயார் செய்த நூடுல்ஸை மேஜை மீது வைத்து விட்டு வேகமாகச் சென்று அம்ருதாஞ்சன் பாட்டிலுடன் வந்தான்.

கிரிக்குத் திகைப்புக்கு மேல் திகைப்பு. இவனுக்கு எப்படி தெரியும் தலைவலித்தால் இந்த மருந்து தேவைப்படும் என்று.

கோகுல் கிரிக்கு அருகே வந்து  அந்த பாட்டிலைத் திறந்து அதிலிருந்து சிறிது மருந்தை எடுத்து கிரியின் நெற்றியில் லேசாகத் தடவினான்.

அவ்வளவுதான்.கிரி அப்படியே நெகிழ்ந்து போனான். அந்த ஸ்பரிசத்தில் இருந்த  அன்பை கிரியால் ஜீரணிக்க முடியவில்லை. அடிமனதிலிருந்து மென்மையான உணர்வுகள் பீரிட்டு எழுந்தன.கோகுலின் ஸ்பரிசத்தில் வெளிப்பட்ட அன்பு கிரியை எங்கோ  கொண்டு சென்றது. முதன் முதலில் ஓர் அசாதாரண அநுபவம் இது கிரிக்கு.  இப்படிப்பட்ட ஸ்பரிசத்தை அவன் இத்தனை வருடங்களில் ஒரு நாளும் அனுபவித்ததில்லை.

இந்த ஸ்பரிசத்தில்தான் எத்தனை உண்மை..எத்தனை அன்பு..இவன் தொட்டாலே எவ்வளவு இதமாக இருக்கு...கிரி மேலும் மேலும் உணர்ச்சிவசப்பட்டான். அப்படியே கோகுலின் கையைப் பிடித்து அதில் முத்தமாரி பொழிந்தான். தான் தன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு குழந்தையின் பசியைக்கூடக்  கண்டுகொள்ளவில்லையே என்று தன்னையே நொந்துகொண்டான்.

'நான் இதுநாள் வரையிலும் எத்தனையோ பேருடன் பழகியிருக்கிறேனே.ஆபீஸில்தான் எத்தனை எத்தனை சம்பவங்கள் !

எல்லாம் போலிப் புன்னகை.போலிப் புகழ்ச்சி. வேண்டா வெறுப்பாக கொடுக்கும் கை குலுக்கல்கள்..எதிலும் உண்மை இல்லை, எதிலும் அன்பு இல்லை..'.கிரியின் மனதில் உணர்ச்சி அலைகள் மோதின.

இத்தனைக்கும் கிரியோ கோகுலை எதிலும் உற்சாகப் படுத்தியதில்லை.இப்போது அவை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன.

கோகுல் ஸ்கூலில் அவன்தான் நிறைய சாக்பீஸ் செய்து இருக்கிறானாம்.அதனால் அவனுக்கு இண்டிபென்டென்ஸ் டே அன்னிக்கு  ப்ரைஸ் தரப்போறா. நீங்களும் வாங்கோ என்று எத்தனை முறை பானு ஓயாது கூப்பிட்டிருக்கிறாள். நானோ கோகுலின் பள்ளிக்குப் போகாமல் தூங்கியிருக்கிறேனே....

கோகுல் ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் டே, நீங்களும் வாங்கோளேன் ஒருநாள் லீவு போடலாமே என்று ஒவ்வொரு ஆண்டும் கெஞ்சியிருக்கிறாள். ஊஹூம்...நான்  அதைக் கண்டு கொள்ளவே இல்லையே....

கோகுலுக்கு நன்னா ரோடை க்ராஸ் பண்ண வந்துடுத்து தெரியுமா என்று எவ்வளவு ஆவலுடன் சொல்லியிருக்கிறாள் பானு. அதைப் பற்றி துளியும் நான் சிந்தித்தே பார்க்கலையே.

வண்டிகளும் ஸ்கூட்டர்களும் அலைமோதுகிற சென்னையில்  கோகுல் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறான் என்பது சிறிதும் என்   மூளைக்கு எட்டலையே....

ஐயோ கண்ணா, கோகுல் கண்ணா... நான் தப்பு பண்ணிட்டேன்டா...பெரிய தப்புடா ..நான் பண்ணினது..இந்த அப்பாக்கு ஒண்ணுமே தெரியலையே.  நான் உனக்கு கொடுக்க வேண்டிய அன்பை சரியாவே கொடுக்கலையே..உனக்கு அப்பா மேல இவ்வளவு லவ்வா, இவ்வளவு அன்பா, இவ்வளவு அக்கறையா....

கிரியின் தொண்டை அடைத்துக் கொண்டது. உள்ளம் குமுறியது. கண்களிலிருந்து நீர் முட்டியது.

கிரியின் ஆழ்மனத்தில் புதைந்திருந்த எதிர்மறை உணர்வுகள் எல்லாம் பறந்து போயின.

'கோகுல் ..என் கோகுல் கண்ணா' என்று உருகிக் கொண்டே அவனை வாரி அணைத்துக் கொண்டான்.

அவன் நெஞ்சம் விம்மியது.

உள்ளம் குமுற நா தழுதழுக்கத் தட்டுத்தடுமாறிக் கொண்டு வார்த்தைகள் மெல்ல வெளிவந்தன.

'நான் உனக்குத் தரவேண்டிய அன்பைத் தரவே இல்லையே....ஆனா  நீ...எனக்கு இவ்வளவு அன்பைத் தர்றியே....'

சட்டென்று கிரிக்கு உள்ளிருந்து ஒரு புதுமையான உணர்வு தென்பட்டது.

'இந்த கோகுலை ஏன் கொடுத்தே சாமின்னு எத்தனை முறை கேட்டிருக்கிறேன். இப்போ தெரியறது சாமி. இப்போதான் தெரியறது. யார் நம்ம கிட்ட எப்படி இருந்தாலும் எப்படி நடந்து கொண்டாலும் நாம அவாளுக்கு அன்பைக் கொடுக்கணும்னு புரிய வைக்கத்தான் சாமி நீ எனக்கு கோகுலை கொடுத்திருக்கே.  சாமி...நான் புரிஞ்சுண்டுட்டேன்....'

உணர்ச்சிப் பெருக்கால்  கண்களிலிருந்து கண்ணீர் வழிய கிரி அப்படியே கோகுலை இன்னும் இறுகத் தழுவிக்கொண்டான்.

No comments:

Post a Comment