○#சித்திரம் பேசுதடி
லட்சுமி அலுவலகத்தில் பரபரப்பாக இருந்தார். ஒரு முக்கியமான புள்ளிவிவரம் தலைமை அலுவலகத்துக்கு ஐந்து மணிக்குள் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி மெயில் அனுப்ப வேண்டும். அவசரத்தில் ஒரு இடத்தில் 54 போடுவதற்குப் பதிலாக 45 டைப் பண்ணிவிட்டார். கடைசியில் புள்ளி விவரம் சமமான கூட்டுத் தொகை வராமல் நெஞ்சுக்குள் பீதியைக் கிளப்பியது. வாய் உலர்ந்து போனது. சில நொடிகள் மூளை வேலை செய்யாமல் வேலை நிறுத்தம் பண்ணியது.
"என்ன லட்சுமி...ரெடியா... நேரமாச்சு... "
" டேலியாகல ஸார்ர்ர்" தொனி இறங்கியது லட்சுமிக்கு.
அதிகாரிக்கு மூக்குக்கு மேலே.....ஏன்... கண்ணுக்குத் மேலே கோபம் வந்தது. மனதுக்குள் அவளை முட்டாள் என திட்டிக் கொண்டு...." அதைக் கொண்டு வா ...பார்ப்போம்.... " என கத்தினார். அவரும் சீக்கிரமா வீட்டுக்குப் போட வேண்டியிருந்தது. மனைவியிடமிருந்து ஏற்கனவே ஒரு ஃபோன் வந்தாச்சு.
அனுபவசாலியான அதிகாரி ஏதோ எண்கள் இடம் மாறிவிட்டன என புரிந்து கண்டு கடகடவென கண்டு பிடித்து விட்டார். லட்சுமிக்கு மூச்சு நிதானமானது. அதிகாரி அவளை....
"இது கூட கண்டு பிடிக்க துப்பில்லை.... நீயெல்லாம்..... " என மனசுக்குள் சொன்ன மாதிரி கூர்மையான பார்வை பார்த்தார். கூசிப்போன லட்சுமி மெயிலை அனுப்பி விட்டு ஒரு டம்ளர் தண்ணீரை மடமடவென .... பாலைவனத்தில் அரிதாக சோலை நீர் கிடைத்த மாதிரி குடித்தாள்.
இந்த பதற்றத்தில் வீட்டுக்குப் போகும்போது காலையில் மகள் மாலா சொல்லியிருந்த க்ரேயான் வாங்காமல் போய்விட்டார். லட்சுமி நன்றாகப் படம் வரைபவள். அவளைப் பார்த்து நாலு வயசு மகள் மாலாக்குட்டியும் பென்சிலால் வரைந்து பார்ப்பாள். பென்சிலுக்கு அடுத்து க்ரேயான் பயன்படுத்த ஆசைப்பட்டு இன்று காலை பூரி சாப்பிடும்போது அம்மாவிடம் கெஞ்சலாகக் கேட்டிருந்தாள். லட்சுமியும் சரி என சொல்லியிருந்தாள்.
வீட்டுக்குள் நுழையும்போதே மாலாவின் கண்கள் லட்சுமி கைப்பையைத் துளைத்தன.
லட்சுமி உள்ளுக்குள் துடித்தாள். செல்ல மகள் கேட்டது கூட வாங்க மறந்துவிட்டோமேன்னு. ஊருக்கு ஒதுக்குப்புறமான வீடு என்பதால் ஒரு கிலோ மீட்டராவது நடந்தால்தான் க்ரேயான் விற்கும் கடையிருக்கும்.
" செல்லக்குட்டில்ல..... அம்மாக்கு... ஆஃபிஸ்ல வேலை நிறைய.. ..க்ரேயான் வாங்க மறந்துட்டேன்.... அப்பாக்கு ஃபோன் பண்ணி வாங்கிட்டு வரச்சொல்றேன்" னு மகள் கன்னத்தில் முத்தம் கொடுத்து சமாதானம் படுத்த முற்பட்டாள். மாலா ஒன்றுக்கும் மசியவில்லை. மூக்கைச் சுளித்துக் கொண்டு வேறொரு அறைக்குள் சென்று படுத்து விட்டாள்.
" அதுவரைக்கும் அழகாக உன் படத்தையே வரைஞ்சு தாரேன் செல்லம்" என பின்னாடியே போனாள் லட்சுமி...சினிமாவில் சரோஜாதேவி பின்னாடி எம்ஜியாரு சமாதானப் படுத்தப் போவது போல.
" வேண்டாம் போ.... எம் முகத்தை ஒன்னும் நீ வரைய வேண்டாம்.. ..bad mummy " என முகத்தை அஷ்டகோணமாக்கினாள் மாலா.
மாலா முகத்தைக் காட்டாமல் லட்சுமி வரைந்த அழகுப் படம்தான் கீழே நீங்க பார்ப்பது. மாலா இந்தப் படத்தைப் பார்த்தவுடன் சிரித்து விட்டாள் என சொல்லவும் வேண்டுமா?
No comments:
Post a Comment