Friday, May 13, 2022

மூங்கில் தட்டில் முழு ரூபாய்

 கடவுளின் குரல் - தொகுப்பு:  ஆர். என். ராஜன்            

09 /12 /2020  குமுதம் இதழிலிருந்து...

""மூங்கில் தட்டில் மகாபெரியவர் வைக்கச் சொன்ன முழு ரூபாய் நாணயம்!""

மகாபெரியவருக்குச் செய்யும் தொண்டே மகேசன் தொண்டாக நினைத்து அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பக்தர் அவர்.

வயதான அம்மா, மனைவி, கல்யாண வயதில் ஒரு மகள் என்று சின்னக் குடும்பம்தான் அவருடையது.  ஆனால், அதைக் குறையில்லாமல் நடத்தவே அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தார் அவர். தினமும் ஏதாவது சின்னச் சின்ன வேலைகள் செய்து, அதனால் கிடைக்கும் சொற்பப் பணத்தில்தான் குடும்பமே நடந்து கொண்டிருந்தது. இத்தகைய சூழலிலும், சேர்ந்தார்போல இரண்டு மூன்று நாட்களை சமாளிக்கத் தேவையான பணம் கிடைத்துவிட்டால் போதும், வீட்டில் கொடுத்துவிட்டு, நடந்தே ஸ்ரீமடத்துக்கு வந்துவிடுவார். அடுத்து எப்போது குடும்ப ஞாபகம் வருகிறதோ அதுவரை அவரது உலகம் முழுக்க மகான் சன்னதிதான்.

அப்படிப்பட்ட பக்தர், வழக்கம் போல ஒருநாள், ஸ்ரீமடத்துக்கு வந்தார். எப்போதும்போல தொண்டுகள் செய்தார். ஆனால், இந்த முறை அவரது மனதில் வழக்கத்துக்கு மாறாக சில போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதற்குக்  காரணம், முதல்நாள் அவர் மனைவி சொன்ன வார்த்தைகள்.

"நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன்... நீங்க கண்டுக்கறதே இல்லை. பொண்ணுக்கு இப்பவே கல்யாண வயசாயிடுச்சு. இன்னும் காலத்தைத் தள்ளிக்கிட்டே இருந்தா எப்படி? அங்கே இங்கே யாரையாவது கேட்டு ஒரு அஞ்சாயிரம் ஆறாயிரம் ரெடி பண்ணினா, இவளை ஒருத்தன் கையில பிடிச்சுக்  கொடுத்துடலாம்.!" கொஞ்சம் கோபமாகவே சொன்னாள் அவர் மனைவி.

"இத்தனை பணத்தைக் கடனாவோ யாசகமாவோ கேட்க எனக்கு யாரைத் தெரியும்? யாரோ கூப்பிட்டு வேலை தராங்க. கூலி கொடுக்கறாங்க. அடுத்த வேலை, யாரோ எவரோ!  இதைவிட்டா ஸ்ரீமடம் தெரியும், பெரியவா தெரியும்! பொண்ணு கல்யாணம் எப்போ எப்படின்னு அவ தலையில எழுதி இருக்கோ, அப்படி நடக்கட்டும்!"

குடும்பத்தில் நடந்த இந்த உரையாடல்தான், மகானுக்குத் தொண்டு செய்துவிட்டு, மடத்தின் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த அவர் மனதுக்குள் பாரமாக மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டே இருந்தது. உறக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்த அவர், எப்படியோ தூங்கிப் போனார். 

மறுநாள் காலை, எப்போதும் போல அனுஷ்டானம், பூஜைகளை முடித்துவிட்டு, பக்தர்களின் தரிசனத்துக்காக வந்து அமர்ந்தார். மகான் தன் அருகே இருந்த ஸ்ரீமடத்துத் தொண்டரை அழைத்தார். 

"மூங்கில் தட்டு ஒண்ணுலே, முழு  ரூபாய் நாணயம் ஒண்ணும், வெத்தலை பாக்கும் வைச்சு எடுத்துக் கொண்டு வா!" சொன்னார். 

அப்படியே தொண்டர் கொண்டு வந்த மூங்கில் தட்டை தனக்குப் பக்கத்தில் வைக்கச் சொன்னார். அதன் பிறகு அதை பற்றி எதுவும் சொல்லவில்லை மகான். அதனால், அது எதற்கு என்ற  ஆச்சரியம் எல்லோருக்குமே எழுந்தது.

பக்தர்கள் வரிசையாக வந்து மகானை தரிசித்தார்கள். அவரவர் விருப்பப்படியான பழங்கள், பூக்கள் என்று மகான் முன் சேர்ப்பித்தார்கள். ஆசியும் அனுக்கிரஹமும் பெற்றுக் கொண்டு சென்றார்கள். இப்படி எல்லாமும் எல்லா நாளிலும் நடப்பதுபோலவே நடந்தன. ஒரே ஒன்றைத் தவிர. அது, அன்றைய தினம் வந்த பக்தர்களில் கொஞ்சம் பேர் மட்டும், மகானோ மற்றவர்களோ எதுவும் சொல்லாமலே, பரமாசார்யா ஒரு ரூபாய் நாணயத்துடன் ஒரு மூங்கில் தட்டினை வைத்தாரே, அதில் தங்கள் காணிக்கைகளை வைத்தார்கள். எல்லா பக்தர்களும் தரிசித்துச் சென்றதும், மனபாரத்தோடு இருந்தாரே அந்த பக்தரை அழைத்தார், மகான்.

"இதோ, இந்தா இந்தத் தட்டுல இருக்கறது எல்லாமும் உனக்குத்தான். எடுத்துண்டு போய் பொண்ணு கல்யாணத்தை நல்லபடியா நடத்து!" சொன்னார். 

ஒன்றும் புரியாமல், கண்கள் கசிய கைகள் நடுங்க, அந்தத் தட்டை பக்தர் எடுத்துக் கொண்டதும் மகான் சொன்ன வார்த்தைகள்தான் அந்த அதிசயத்தை அவருக்கே உணர்த்தியது.

"பொண்ணு கல்யாணத்துக்கு எவ்வளவு வேணும்னு நீ சொன்னியோ, அந்தத் தொகை அதுல சரியா இருக்கான்னு எண்ணிப் பார்த்துக்கோ!" பெரியவர் சொல்ல, அப்படியே திடுக்கிட்டுப் போனார் பக்தர். ஏனென்றால், மகானிடம் தன் மகள் திருமணம் குறித்து அவர் எதுவுமே சொல்லவில்லை, கேட்கவில்லை.

ஒன்றும் புரியாமல் நின்றவரிடம், "என்ன புரியலையா? நேற்றைக்கு ராத்திரி மனபாரத்தோடு இருந்த உன்னிடம் உன் பிரச்னைக்குத் தீர்வாக எவ்வளவு தொகை தேவைப்படும் என்று கேட்டதற்கு, ஆறாயிரம் ரூபாயும்  கூரைப் புடவை, வேஷ்டி, திருமாங்கல்யமும் இருந்தால் போதும் என்று சொன்னாயே மறந்துவிட்டாயா?" புன்னகை மாறாமல் கேட்டார், பெரியவர். 

அப்போதுதான் அந்த பக்தர்க்கு, முதல்நாள் இரவு மனதுக்குள் பிரச்னை நிவர் புயலாக அலைமோதியபோது, யாரோ தன் மனதுக்குள், "ஏன் இப்படித் தவிக்கிறாய்? உன் பிரச்னை தீர நான் இருக்கிறேன்!" என்று ஆறுதலாகப் பேசியது நினைவுக்கு வந்தது அவருக்கு. 

மகேசன் குரலாக மனதுக்குள் கேட்ட அந்தக் குரல் மகானுடையது என்பதை உணர்ந்த அவர், அப்படியே நெடுஞ்சாண்கிடையாக அவரது திருவடியில் விழுந்தார். 

மகானுடைய ஆணைக்கு இணங்க அந்தத் தட்டில் இருந்தவற்றை எடுத்தார், பார்த்தார்.  பலவகை பழங்கள், பூக்களோடு யார் யாரோ தந்த தொகை மொத்தமாக ஆறாயிரம் இருந்தது. அதோடு ஒரு பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி, அரை சவரனில் திருமாங்கல்யம் அத்தனையும் இருந்தது.

மென்மையாகச் சிரித்த மகான், "நீ கேட்டதோட, ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுத்திருக்கிறேன்.  தாம்பூலத்தோடு சேர்த்து எடுத்துக்கோ!" சொல்ல, மூங்கில் தட்டில் முழு ரூபாய் நாணயத்தை வைக்கச் சொல்லி அவர் நடத்திய திருவிளையாடலை அங்கிருந்தவர்கள் புரிந்து கொண்டதன் அடையாளமாக அங்கே சங்கர கோஷம் எழுந்து நிறைந்து சங்கமித்தது!              

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!

காஞ்சி சங்கர! காமகோடி சங்கர! காமாட்சி சங்கர!!

ஓம் ஸ்ரீ மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!

No comments:

Post a Comment