Wednesday, May 11, 2022

ரகோபதேஸம்_9

 #ரகோபதேஸம்

எழுதியது பாஸ்கர் சத்யா 

#ரகோபதேஸம்_9

என் குருநாதர் ரகுபதி சாஸ்திரிகள் திட்டமிட்டிருந்ததைப் போல அன்று ஹனுமத் ஜெயந்தி பூஜை பாண்டுரங்க மடத்தில் வெகு விமரிசையாக நடந்தது.  திருப்பாற்கடல் தெரு வாசிகளை தவிர பிற தெருக்களில் இருந்தும் பலர் வந்திருந்தனர்.

முக்கியமான வேலைகளை அவர் பார்த்துக் கொண்டாலும் சிறு சிறு வேலைகளில் நானும் மும்முறமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.

'பாஸு, பூஜைகள் எல்லாம் முடிஞ்சோண்ண அவசரப்பட்டு கிளம்பிடாத.  நான் சொல்ற வரைக்கும் நீ இங்க தான் இருக்கணும்.'

பூஜைகள் நிறைவேறும் தருவாயில் இருந்த சமயத்தில் பிரத்தியேகமாக என்னை அழைத்து அவர் இப்படி சொல்ல நானும் சம்மதம் தெரிவிக்கும் வகையில் தலையசைத்தேன்.

என் குருநாதர் ரகுபதி சாஸ்திரிகள் மட்டுமின்றி அன்றைய பூஜைக்கு சில வேத விற்பன்னர்களும் மன்னார்குடியில் இருக்கும் சில புரோஹிதர்களும் அன்று அங்கு வந்து உச்சஸ்தாயிகளில் பூஜா மந்திரங்களையும் அர்ச்சனை மற்றும் ஆராதனை மந்திரங்களையும் சேர்ந்து இசைத்தது கூடியவர்கள்

நேரிடையாக ஆஞ்சநேயர் தரிசனம் கிடைத்த உணர்வு மேலிட இருந்தார்கள் என்றால் அது மிகையல்ல.

பூஜைகள் முழுவதுமாக முடிந்தபின் சிறிய அளவில் பிரசாத விநியோகமும் நடந்தேறி எல்லோரும் பூஜை நடந்த விதத்தை ஸ்லாகித்து குருநாதரிடம் பிரத்தியேகமாக விடைபெற்றுக்கொண்டு சென்றார்கள்.

இப்போது நானும் அவரும் மாத்திரம் மடத்தில்.  அவர் அங்கிருந்த நாற்காலி ஒன்றில் சிறிது தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த நேரம்.

'குழந்த, பிரமாத படுத்திட்டியே!'

'அதெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா.  நான் என்ன பெருசா செஞ்சுட்டேன்?'

'எப்படி நடந்தது பூஜையெல்லாம்?   திருப்தியா இருந்ததா?'

'ஆஞ்சநேய ஸ்வாமியே நேரில் வந்து பூஜையில் கலந்து கொண்ட மாதிரி இருந்தது மாமா.  மத்த சாஸ்திரிகளும் உங்களோட சேர்ந்து மந்திரங்கள் சொன்னது பிரமிக்க வெச்சது.'

'ஆமாண்டா.  நீ சொன்னது வாஸ்தவம்தான்.'

'மாமா, நான் உங்ககிட்ட ஒண்ண கேட்டு தெரிஞ்சுக்கலாமா?'

'தாராளமா கேளு.  நீ கேட்டு நான் எதைச் சொல்லிக் கொடுக்காமல் இருந்தருக்கேன்?  கேளு கேளு.'

'கடைசியா ஹாரத்தி காண்பிக்கும் போது எல்லா சாஸ்திரிங்களும் நீங்களும் சேர்ந்து ஒரு மந்திரம் சொன்னேளே.  அந்த மந்திரத்தை நான் ஒரு சில பூஜைகள்ல்ல கூட கேட்ருக்கேன் மாமா.  நல்ல ரிதமிக்கா கோர்வையா ரம்மியமா இருக்கும் எப்ப இந்த மந்திரத்த கேட்டாலும்.  எனக்கு கூட ஒரு சில வார்த்தைகள் பரிச்சியம் ஆயிடுத்து.  நானும் கூட கூட சொல்லணும்னு முயற்சிப்பேன்.'

'நீ எதை சொல்ற?  யோமாம் புஷ்பம் வேதா.... அப்படின்னு ஆரம்பிக்கறதே அதைத்தானே சொல்ற?'

'அதே தான் மாமா.  இந்த மந்திரத்த கேட்கும்போது கத்துக்கறதுக்கு ஈசியா இருக்கும் போல தான் தோண்றது.'

'நோக்கு கத்துக்கறதுல ஒரு கஷ்டமும் இருக்காது.  பாஸு நெனைச்சுட்டான்னா அவனுக்கு எல்லாமே ஈசிதான்.  இப்ப உனக்கு அந்த மந்திரத்தோட பொருள் தெரிஞ்சுக்கணும்.  அப்படித்தானே?  இன்னைக்கு சொல்லி தரணுமா இல்ல நாளைக்கு சொல்லித் தரலாமா?'

'உங்க இஷ்டம்.  ஆனா தெரிஞ்சுக்கணும்.  ஆசையா இருக்கு.'

'அதுக்கென்ன இப்பவே சொல்லி தந்துட்டா போச்சு.  மந்திரத்தோட உட்பொருள மேலோட்டமா இன்னிக்கு சொல்லித்தரேன்.  சாவகாசமா இன்னொரு நாள் அதை நீ மனப்பாடம் செஞ்சுக்கற அளவுக்கு கத்துக்கலாம், சரியா?'

அன்று அவர் என் மனதிலே இருந்த ஆர்வத்தை புரிந்து கொண்டு அந்த மந்திர விளக்கத்தை உடனேயே சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தது எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதினேன்.

அவர்முன் ஒரு மணையை போட்டுக் கொண்டு உட்கார சொல்கிறார்.  புருவங்களை நன்கு உயர்த்திக்கொண்டு முதுகை நேராக உயர்த்தியவாறு இரு கைகளையும் கட்டிக்கொண்டு ஆர்வத்துடன் அமர்கிறேன்.

இப்போது அந்த ஸ்லோகத்தை அவரே ஒரு முறை சொல்கிறார்.  எப்போதும்போல உச்சஸ்தாயியில் அந்த ஸ்லோகத்தை சொல்லவில்லை.  ஆனால் நிறுத்தி நிதானமாக என் மனதில் ஆர்வமும் மேலிடும் வகையில் அந்த மந்திரத்தை உச்சரிக்கிறார்.

யோ பாம் புஷ்பம் வேத’ புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |

சம்த்ரமா வா அபாம் புஷ்பம்” | புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |

ய ஏவம் வேத’ | யோ‌உபாமாயத’னம் வேத’ | ஆயதன’வான் பவதி|

அக்னிர்வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யோ”க்னேராயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோவா அக்னேராயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’‌உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

வாயுர்வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யோ வாயோராயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோ வை வாயோராயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’‌உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

அஸௌ வை தப’ன்னபாமாயத’னம் ஆயத’னவான் பவதி |

யோ’‌உமுஷ்யதப’த ஆயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

ஆபோ’ வா அமுஷ்யதப’த ஆயத’னம் |ஆயத’னவான் பவதி |

ய ஏவம் வேத’ | யோ’‌உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி|

சந்த்ரமா வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி

| ய சந்த்ர ம்த்ரம’ஸ ஆயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

ஆபோ வை சந்த்ரம’ஸ ஆயத’னம் | ஆயத’னவான் பவதி |

ய ஏவம் வேத’ | யோ’‌உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான்பவதி|

நக்ஷ்த்ர’த்ராணி வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி |

யோ நக்ஷ்த்ர’த்ராணாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

ஆபோவை னக்ஷ’த்ராணாமாயத’னம் | ஆயத’னவான் பவதி |

ய ஏவம் வேத’ | யோ’‌உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி|

பர்ஜன்யோ வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி |

ய பர்ஜன்ய’ஸ்யாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

ஆபோ வை பர்ஜன்யஸ்யாயத’னம் | ஆயத’னவான் பவதி |

ய ஏவம் வேத’ | யோ’‌உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி|

ஸம்வத்ஸரோ வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி

| யஃ ஸம்’வத்ஸரஸ்யாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

ஆபோ வை ஸம்’வத்ஸரஸ்யாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

ய ஏவம் வேத’ | யோ”‌உப்ஸு னாவம் ப்ரதி’ஷ்டிதாம் வேத’ | ப்ரத்யேவ தி’ஷ்டதி |

'இந்த மந்திரங்கள்ல நீ ஒன்னோட மனச பறி கொடுத்து லயிச்சதுல ஒரு ஆச்சரியமும் இல்லை.  எப்பேர்பட்ட மந்திரங்கள் தெரியுமோ?  லோக ஷேமத்துக்காக சொல்லப்படற இந்த மந்திரத்தோடு உட்பொருளும் ஆச்சரியமான விஷயத்தை நமக்கு உணர்த்தும்.'

'இப்ப நான் சொன்ன மந்திரங்களையெல்லாம் சேர்ந்து மந்த்ர புஷ்பம் அப்படின்னு சொல்லுவா.  இந்த மந்திரங்களோடு நிறைவா இன்னொரு மந்திரத்தையும் சேர்த்து சொல்லுவா. அதை அப்புறமா தனியா நோக்கு சொல்லித்தறேன்.'

'நம்ம ஆம்களுல நடக்கிற எல்லா சுப கார்யங்கள் போதும், ஆலயங்களிலும் தீபாராதனை சமயத்துல கேட்கும் ஒரு அருமையான சின்னதான சில நிமிஷ ஸமஸ்க்ரித மந்திரங்கள் தான் காதுகளுக்கு இனிமையான  இந்த ”மந்த்ர புஷ்பம்'.

'வைதிகர்கள் லௌகீகர்கள் எல்லாருமே சேர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம்.  இதோட நோக்கம் பரோபகார சிந்தனைய விதைக்கிறது தான்.  அர்த்தத்தை புரிஞ்சுண்டா இதோட அருமை நோக்கே புரியும்.  விரும்பி மனப்பாடம் செய்ய தோணும்... இப்ப நோக்கு தோணியிருக்கே அதுமாதிரி.'

'வேதத்தில் தைத்ரீய அரண்யகம் அப்படிங்கற பகுதிலே இந்த மந்திர புஷ்பம் வர்றது.'

'சுருக்கமா இந்த மந்திரம் நீர் ஆதாரங்களையும் நீரோட முக்கியத்துவத்தையும் எல்லோரும் புரிஞ்சிக்கணும் அப்படிங்கற அடிப்படைல எழுதப்பட்டிருக்கு.  கற்பூர ஹாரத்தி நடக்கும்போது பூஜை சபையில ஆத்மார்த்த உணர்வோடு இருக்கிறவா பூமியில் இருக்கிற அனைத்து ஜீவராசிகள் உயிர் வாழ முக்கிய பங்கு வகிக்கிற ஜலத்தை தங்கு தடையில்லாமல் கிடைக்க வழி செய்ய பகவான் கிட்ட பிரார்த்திக்கறத உட்பொருளா கொண்டிருக்கிற மந்திரமாய் இருக்கு.  உட்பொருளா சொல்லப்படுகிற மந்திரம் இது அப்படிங்கறதுல ஒரு ஆச்சரியமே இருக்கு.'

'ஏற்கனவே சொன்னதப் போல இந்த மந்திரம் லோக க்ஷேமத்தை அனுசரிச்சு சொல்ல வேண்டிய மந்திரம்.  எல்லோருமா சேர்ந்து தங்களுடைய தெய்வீக உணர்வுகளை கலந்து இந்த மந்திரத்தை கற்பூர ஹாரத்தி காண்பிக்கும்போது சொல்றச்ச லோக க்ஷேமம் பலப்படறது.'

'இந்த மந்திரங்களை பத்தி பத்தியா பிரிச்சு பொருள சொல்றேன.  அதுக்கு முன்னாடி நீ சாப்பிட வேண்டாமா?  கார்த்தாலேந்து இங்கேயே இருக்கியே.  விநியோகம் பண்ணினது போக அந்த எவர்சில்வர் வாளியில சக்கர பொங்கலும் அதுக்குப் பக்கத்துலேயே கொஞ்சம் வடையும் இருக்கு பார்.  அதை நாம ரெண்டு பேரும் கொஞ்சம் சாப்பிட்டுட்டு மேற்கொண்டு பாடத்தை தொடரலாம்.'

'பாடத்த முடிச்சுட்டு சாப்பிடலாமே மாமா.  ரொம்ப இன்டரஸ்டிங்கா போறதே மாமா'

'இல்லடா நீ சின்ன குழந்தை.  பசியோட இருக்க வேண்டாம்?'

இருவரும் பசியாறும் விதத்தில் அங்கிருந்த பிரசாதங்கள் சிலவற்றை சாப்பிடுகிறோம்.

தொடரும்...

No comments:

Post a Comment