#ரகோபதேஸம்
எழுதியது பாஸ்கர் சத்யா
#ரகோபதேஸம்_6
நான் அன்று பாண்டுரங்க மடத்திற்கு வந்தபோது என் குருநாதர் நித்தியப்படி பூஜையில் மும்முரமாக இருந்தார்.
எப்படியும் அரைமணி நேரம் ஆகும் அவர் பூஜையை முடிப்பதற்கு என்று எனக்கு தோன்றியது. அதுவரை மடத்தை ஒட்டிய ஆற்றங்கரையில் நின்றுகொண்டு நீரோட்டத்தையும் சூரியனின் கதிர்களில் நீரோட்டம் ஏற்கும் வெள்ளி வெளிச்சங்களையும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
பாண்டுரங்க மடத்திலிருந்து பூஜை மணி ஓசை கேட்கிறது. குருநாதரின் பூஜை முடியும் தருவாயில் இருப்பதை அந்த மணி ஓசை எனக்கு உணர்த்துகிறது. உள்ளே வருகிறேன்.
'வா கொழந்த. கரெக்டான நேரத்துலதான் வந்திருக்கே. கற்பூர ஹாரத்தி காமிக்க போறேன். பாரு.'
சாம்பிராணி புகையோடு பாண்டுரங்கன் சன்னதி முழுவதும் தெய்வீக சூழல் எனக்கு இனம்புரியாத உணர்வை அளித்துக் கொண்டிருந்தது.
கற்பூர ஆரத்தியை கண்ணில் ஒத்திக்கொண்டு இரு கரங்களையும் கூப்பிய நிலையில் கண்களை மூடிக்கொண்டு பாண்டுரங்கனின் படத்திற்கு முன்னால் சற்று நின்றுவிட்டு நமஸ்கரிக்கிறேன்.
'என்ன பாஸு, திடீர் விஜயம் மடத்துக்கு?'
'bபோர் அடிச்சது மாமா. அதான்'
'ஆக, ஒனக்கு பொழுது போக்கற இடம் மடமாக்கும்.'
'போங்க மாமா நான் சாதாரணமா சொன்னேன். நீங்க ப்ரீயா இருந்தா நாலு சொல்லிக் கொடுப்பேள் இல்லையா?'
'சரி சரி. நானும் சாதாரணமாத் தான் சொன்னேன்டா. ஆனா இன்னிக்கு எதுவும் சொல்லிக் கொடுக்க முடியாது. இன்னும் பத்து பதினஞ்சு நிமிஷத்துல நான் கிளம்பிடுவேன். நான் கிளம்பற வரைக்கும் வேணா பேசிண்டே இருக்கலாம்.'
அவரிடம் என்ன பேசுவது என்ன கேட்பது என்று நான் யோசித்துக் கொண்டிருந்த அந்த சில நொடிகளில் அவரிடமிருந்து முதல் கேள்வி வருகிறது.
'பாஸு, பாண்டுரங்கன் முன்னாடி கண்ண மூடிண்டிருந்தியே... என்ன வேண்டிண்ட?'
'ஒண்ணும் வேண்டிக்கலை மாமா. அவருக்கே தெரியுமே. எனக்கு என்ன வேணுமோ அத கொடுக்க மாட்டாரா என்ன?'
'அட்ரா சக்க. இப்படி ஸ்வாமி முன்னாடி எதையும் கேட்காமல் நிற்கறது ஒரு ஒசத்தியான நிலை தெரியுமோன்னோ?'
'இதைக்கொடு, அதைக்கொடு அப்படின்னு நாம் பிரார்த்திக்க வேண்டியதே இல்லைதான். நம் யோக்கியதைக்கு என்ன தரவேண்டும் என்று அவருக்கு தெரியாதா என்ன? இருந்தாலும் நடைமுறைல இப்படி விவேகத்தோடு இருக்க முடிய மாட்டேங்கறது. இது வேணும். அது வேணும் அப்படிங்கறதுக்காகத்தான் பிரார்த்தனை செய்கிறோம்.
யோசிச்சுப் பார்த்தா இதை அடியோடு தப்பு அப்படின்னு சொல்ல முடியல.'
'கீதைல பகவான் பக்தர்களை நாலு தினுசாகப் பிரிச்சு சொல்றார். அதில மோக்ஷத்தை விரும்பி உபாஸிக்கிற சாதகன், அந்த மோக்ஷ லட்சியத்தையே பிடித்துவிட்ட ஞானி ஆகிய இரு சாராரைச் சொன்னதோடு பகவான் நின்னுடல. நோய் நொடி முதலான துன்பங்கள் நீங்குவதற்காகப் பிரார்த்திக்கிறவன், பொருளை வேண்டிப் பிரார்த்தனை பண்ணுகிறவன் ஆகிய இரு சாராரைக் கூட சேர்த்துக்கறார்.'
'இம்மாதிரி லௌகிக சௌக்யத்துக்காக வழிபடுகிறவர்கள் கூட தன்னை பூஜிப்பதாக பகவானே ஒத்துக்கறார். பகவானே ஒப்புக்கொண்ட விஷயத்தை நாம் ஆட்சேபிப்பதற்கில்லை.
ஆனா, கீதா சாஸ்திரம் முதலிய எந்த ஞான நூலாகட்டும், சமய கிரந்தமாகட்டும், இகலோக சௌக்கியங்களைத் தள்ளிவிட்டு, சாஸ்வதமான பேரின்பத்தைத்தான் நாடணும் என்பதத் தான் லட்சியமாக சொல்றது. அப்படியானால் பகவானே முரண்பட்டு பேசறாரா? அப்படி அதுக்கு அர்த்தமில்லை.'
'லௌகிக காரியங்களை எடுத்த எடுப்புல யாராலும் விட்டுட முடியறதில்லை. ஆனாலும் இந்த நிலையில் இருக்கிற போதுகூட, “எல்லாம் நம்மாலேயே முடியும், நாம் நினைத்ததை எல்லாம் நாமே ராஜாவாக நடத்திக் கொள்ள முடியும்’ என்று நெனைச்சுக்காம, ‘நமக்கு மேலே ஒரு மகா சக்தி இருக்கு. அதற்குச் சக்தி இருப்பதோடு கருணையும் இருக்கிறது. நாம் நெஞ்சுருக வேண்டினால் அது அநுக்கிரகம் பண்ணும்’ என்கிற நம்பிக்கை இருந்தால், அது விசேஷம் தானே, இல்லையா?'
'பணம் வேணும், வீடு வேணும், பதவி வேணும் என்றெல்லாம் பிரார்த்தனை செய்யறச்சே கூட, இப்படி ஒரு மகா சக்தியிடம் நம்பிக்கை வெச்சு, அதனிடம் நம்மளோட அகங்காரத்தையெல்லாம் தாழ்த்திண்டு நிற்கிறோம் இல்லையா? அந்த மட்டில் இது நாஸ்திகத்தைவிட எத்தனையோ சிலாக்கியம்தானே?'
'முதல்ல ஏதேதோ வஸ்துக்களுக்கள வேண்டி பகவானிடம் போறோம். பூஜை, கோவில் தரிசனம், ஸ்தோத்திரம், ஜபம் அப்படி இப்படின்னெல்லாம் செய்யறோம். கொஞ்சம் கொஞ்சமாக இதுகள்ல பிடிப்பு உண்டாக உண்டாக, மற்ற வஸ்துக்களில் பிடிப்புக் குறைகிறது. கடைசியில் பகவானுக்காகவே பகவானைப் பக்தி பண்ணணுங்கற ருசி மட்டும் நிக்கறது.
அதனால்தான் லக்ஷ்மீ கடாக்ஷத்தை விரும்பியே பக்தி செலுத்துகிறவர்களைக்கூட, ‘அர்த்தார்த்தி’ என்று தனியாச் சொல்லி, அவா தன்னையும் பூஜிப்பவனாக பகவான் ஒப்புக் கொள்கிறார்.'
“ஆசைக்கு அளவில்லை”. இது எல்லோரும் சொல்றதுதான். முக்கியமா செல்வம் வேணும் என்கிற ஆசைக்கு எல்லையே இல்லாமல் போயிடறது. இதனால்தான் அனர்த்தம் எல்லாம் வந்துடறது. ஞானம் வேணும், குணம் வேணும் என்றெல்லாம் பிரார்த்திக்கிறவர்கள் எங்கேயாவது துர்லபமாக இருப்பார்களோ என்னவோ?'
'லக்ஷ்மீ கடாக்ஷத்திற்கு மட்டும் பிரார்த்திக்காதவர் இல்லை. இதுல எந்தக் கோடீஸ்வரனுக்காகவது திருப்தி வந்திருக்குமா அப்படின்னா அதையும் காணோம். சௌக்கிய அநுபோகம் அதிகமாக ஆக, ஞானம் வேணும் அப்படிங்கற எண்ணம் கொறஞ்சுண்டே போறது. இதனால்தானோ என்னவோ லக்ஷ்மி இருக்கிற இடத்தில் ஸரஸ்வதி இருப்பதில்லை என்று பொதுவில் வசனம் கூட வந்துட்டுது.'
'வாஸ்தவத்தில் இருக்கறது ஒரு பராசக்திதான். அவள்தான் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த விதமாக அநுக்கிரகம் செய்து பக்குவத்தைத் தரணுமோ அப்படிச் செய்வதற்காக மகாலக்ஷ்மியா, ஸரஸ்வதியா, ஞானாம்பிகையா வருகிறாள். ஏதோ ஒரு ரூபத்தில் பக்தினு வந்துட்டா போதும். அப்பறம் நடக்க வேண்டியதை அவளே பார்த்துப்பள். இந்த பக்திதான் நமக்குப் பெரிய சொத்து செல்வம் எல்லாம். அதுவே மிகப் பெரிய லக்ஷ்மி.'
'என்ன வேண்டிண்ட? இப்படி என்னை கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்து பிரார்த்தனையை பற்றிய ஒரு புரிதலையே என்னுள் செலுத்தி விட்டார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
என்னுடன் பேசிக் கொண்டிருந்தே மனத்தினுள் சிறுசிறு வேலைகளையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டு கிளம்ப தயாராகி விட்டார்.
'என்ன பாஸு, கிளம்பலாமா?'
'ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது மாமா நீங்க பக்தியை பத்தி சொன்னது.'
'இதெல்லாம் நானா எங்க சொல்றேன் நோக்கு. காஞ்சி பெரியவா அப்பப்ப சொன்ன விஷயங்களை க்ரஹிச்சிண்டு நோக்கு சொல்லிண்டு இருக்கேன். எல்லாருக்கும் மனசுல பதியற மாதிரி உபதேசங்கள் சொல்ல அவரால் மட்டுமே முடியும்.'
'மாமா, உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்னு ரொம்ப நாளா நெனச்சிண்டு இருக்கேன். இஷ்ட தெய்வங்கள் அப்படின்னா யாரெல்லாம் இருப்பா மாமா.'
'நல்ல கேள்விதான். பதில் சொல்ல இன்னிக்கு நேரமில்ல. சாவகாசமா இஷ்ட தெய்வங்களை பத்தி நோக்கு சொல்லித்தரேன் இன்னொரு நாள்ல.'
அவரை அதற்குமேல் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
மடத்திலிருந்து கிளம்புகிறோம்.
தொடரும்.
No comments:
Post a Comment