Saturday, May 14, 2022

ரகோபதேஸம்_12

 #ரகோபதேஸம்

எழுதியது பாஸ்கர் சத்யா 

#ரகோபதேஸம்_12

மந்திர புஷ்பங்கள் பற்றிய விளக்கங்களை அவரிடமிருந்து தெரிந்துகொண்ட தினத்திலிருந்து சிறிது காலம் என்னால் மடத்திற்கு வந்து அவருடைய உபதேசங்களை கேட்க முடியாமல் இருந்தது.  அதற்கு காரணம் என் பள்ளியில் நடந்துகொண்டிருந்த வருடாந்திர தேர்வுகளும் அதற்கான ஆயத்தங்களும் தான்.

பரிட்சைகள் முடிந்து பாண்டுரங்க மடத்திற்கு ஒருநாள் செல்கிறேன்.

'என்னடா பாஸு,  பரீட்சைகள் எல்லாம் நன்னா எழுதி இருக்கியா?  எல்லா பரீட்சைகளும் முடிஞ்சாச்சோண்ணோ?'

'எல்லாப் பரீட்சைகளும் முடிஞ்சுது மாமா.  நன்னா எழுதி இருக்கேன்.  ஒரு மாசத்துக்கு மேல லீவு விட்டாச்சு.  இனிமே அடிக்கடி இங்க வருவேன்.  எனக்கு மந்திரங்கள் எல்லாம் அர்த்தங்களோடு சொல்லித் தரணும்.  சொல்லிட்டேன்.'

'மஹாராஜா உத்தரவு போட்டாச்சோண்ணோ?  தட்ட முடியுமா என்னால?'

அவர் இப்படி சொல்ல இருவரும் சிரிக்கிறோம்.

'முடிஞ்சவரைக்கும் சொல்லிக் கொடுக்கிறேன் எனக்கு தெரிஞ்சத.  மந்திரங்கள் மாத்திரம் அப்படின்னு இல்லாம பக்தி சம்பந்தமான விஷயங்களையும் தெரிஞ்சுக்கோ.   இன்னிக்கு உனக்கு கிடைக்கிற நேரம் நாளைக்கு கிடைக்காமல் போகலாம்.  மந்திரங்கள் எல்லாத்தையும் கத்துண்டு எல்லாத்தையும் தெனந்தோறும் சொல்றது நோக்கு முடியாம போலாம்.  ஆனா பக்திங்கற உணர்வ ஸ்ட்ராங்கா மனசுல விதைச்சுட்டா எந்த காலகட்டத்திலேயும் பகவானோடு ஒரு தொடர்பு நோக்கு இருந்துண்டே இருக்கும்.  ஸ்லோகங்கள் வாசிக்கறது முக்கியம்தான்.  ஆனால் அதைவிட முக்கியம் பகவானோட பரிபூரண பந்தத்தில் இருக்கறது.  அதுக்கு மொழி முக்கியம் இல்ல.   நோக்கு நன்னா தெரிஞ்ச தமிழ் பாஷையிலேயே அவனோட பேசலாம்.  அவனுடைய புகழ சொல்லலாம்.  அவன் கிட்ட உன்னோட தேவைகளுக்கான வேண்டுதல்களை கோரிக்கைகளை வைக்கலாம்.'

'சிருஷ்டியில் பலவிதமான சக்திகள் பல்வேறு விதமான வஸ்துக்களிடம் வியாபிச்சிருக்கு.  நம்மைச் சுற்றி இருக்கிற இயற்கையை பார்த்தாலே ஒன்றின் சக்தியைவிட இன்னொன்றுக்குச் சக்தி அதிகம்னு புரியும்

அதையும்விட இன்னொண்ணுக்கு அதிகம் சக்தி; என்கிற ரீதியில் போய்க் கொண்டே இருக்கும்.'

'பௌதிக அடிப்படையில நமக்குக் கொஞ்சம் சக்தி இருக்கு. அதனால்தான் நாம் கொஞ்சம் கனத்த தூக்கறோம். மாடு நம்மைவிட அதிக கனம் தூக்கறது. ஒட்டகம் அதையும்விட அதிக பளு தூக்கும். யானையால் அதை விட அதிக கனத்தைத் தூக்க முடிகிறது.  இவைகள் எல்லாம் உடல் சம்பந்தப்பட்ட சக்திகள்.'

'இப்ப புத்தி பலத்தைப் பார்ப்போம். தாவரங்களைவிடப் புழுவுக்கு அதிக அறிவு இருக்கிறது. புழுவை விட எறும்புக்கு அதிக புத்தி இருக்கிறது. எறும்பைவிட ஆடு மாடுக்கு அதிக அறிவு.  இவைகள விட மனுஷாளுக்கு புத்தி அதிகம்.

இந்த ரீதியில் யோஜனை பண்ணினா உடல் பலம் புத்தி பலம் எல்லாம் பூரணமாக இருக்கிற ஒர் ஆதார வஸ்துவும் இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது.   அதைத்தான் நாமெல்லாம் பகவான், ஸ்வாமி, பரம்பொருள், ராமன் கிருஷ்ணன்.... அப்படிங்கறோம்.'

'நாம் நம் புத்தி பலத்தையும் தேக பலத்தையும் வெச்சிண்டு ஒரு வீட்டைக் கட்டறோம். குருவி தன் புத்தி பலத்தையும் தேக பலத்தையும் வெச்சிண்டு கூட்டை கட்றது.  இப்படி மேல மேல யோசிச்சுண்டே போனாம்னா இந்த லோகத்தை எல்லாம் நிர்மாணிக்கிற புத்தியும், சக்தியும் கொண்ட ஏதோ ஒண்ணு இருக்குங்கறது புரியறதோன்னோ? அதைத்தான்டா ஸ்வாமிங்கறோம்.'

'ஒண்ணிலிருந்து ஒண்ணா சக்தி அதிகமாயிண்டே போகற இயற்கைலேந்து இப்படி ஈசுவர தத்துவத்துக்குப் போறோம்.  ஒண்ணுக்கு ஒண்ணு மாற்றா அதாவது pair of opposites அப்படின்னு இங்கிலீஷ்ல சொல்லுவோமே அதுமாதிரி எதிரெதிர்ச் சக்தி ஜோடிகளையும் நாம் இயற்கையில் பாக்கறோம். கடும் பனிக்காலம் என்று ஒன்று இருந்தால் கடும் வெயில் காலமும் இருக்கு. இரவு என்று ஒன்று இருந்தால் பகல் என்பதாக ஒண்ணு இருக்கு. மிருதுவான புஷ்பங்கள் இருப்பதுபோல கூரான முட்கள் இருக்கு. தித்திப்புக்கு மாறாக கசப்பு இருக்கு. அன்புக்கு எதிராக துவேஷம் இருக்கு. எதற்கும் எதிர்வெட்டாக ஒரு மாற்று இயற்கையில் இருக்கிறது.  இந்த ரீதியில் ஆலோசனை செஞ்சா மனித மனசுக்கு மாத்தா ஒண்ணு இருக்கத்தானே வேணும்?'

'மனுஷாளோட மனஸின் சுபாவம் என்ன? ஆசாபாசங்களில் முழுகி சஞ்சலிச்சிண்டே இருக்கறது இல்லையா?  திருப்தியே இல்லாமல் தவிப்பது இல்லையா?  இதுக்கு மாறாக ஆசாபாசமே இல்லாம, சஞ்சலமேயில்லாம, சாஸ்வத சாந்தமாகவும் சௌக்கியமாகவும் திருப்தியாகவும் இருக்கிற வஸ்துவும் இருந்துதான வேணும்?  அப்படிப்பட்ட வஸ்துதான் ஸ்வாமி.'

'இயற்கையில் சகலமும் மாறிண்டிருக்கு.  சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரியறது. ஆனா நாம் மாறாததாக நினைக்கிற மலையும், சமுத்திரமும்கூட காலக்கிரமத்தில் மாறிண்டேதான் இருக்கு. இயற்கையில் எதுவுமே சாஸ்வதம் இல்ல. இதற்கு எதிராக மாறாமலேயே ஒண்ணு இருக்கத்தான வேணும்.   அது தான் ஸ்வாமி.'

'ஸ்வாமி சரி.  புரிஞ்சிக்க முடியறது.  ஆனா அதை எதுக்கு உபாஸிக்கணும் அப்படின்னு கேட்கலாம். நாம எப்படி இருக்கோம்?  எப்போதும் எல்லையில்லாத தேவைகளோட இருக்கோம் இல்லையா? பரமாத்மா ஒரு தேவையும் இல்லாமல் இருக்கிறார். இத்தனை தேவையுள்ள நாம் அற்ப சக்தியோடு இருக்கோம். ஒரு தேவையும் இல்லாத பரமாத்மாவோ ஸர்வசக்தராக இருக்கிறார்.  நாம் ஒரே பள்ளமாக இருக்கிறோம். அவர் பரம உன்னதமாக இருக்கிறார். அவர் சக்தியிலும் ஞானத்திலும் மட்டும் உயர்ந்தவர் என்பதில்லை; தயையிலும் உயர்ந்தவராக இருக்கிறார். அதனால்தான் அவரைத் தியானித்தால் பள்ளமாக இருக்கிற நம்மையும் தூர்த்து நிரம்பச் செய்கிறார். நாம் குறைந்தவர்கள்; அவர் நிறைந்தவர். நம் குறையைத் தீர்த்து நிறைவாகச் செய்ய அந்த நிறைவால்தானே முடியும்? அப்படிச் செய்கிற கருணா மூர்த்தி அவர். நாம் உபாஸித்தால் நம் குறைகள போக்கறார்.'

'குறை இருக்கு அப்படின்னா எதோ தேவைப்படறது அப்படின்னு தானே அர்த்தம்? அடியோடு தேவையே இல்லாட்டா அப்படியே மனசு  நெறஞ்சு இருந்துடலாமே. நம் குறைகளை நிவர்த்தி செய்கிற பரமாத்மா கடைசியில் நமக்கு எதுவும் தேவையே இல்லை என்ற நிறைவையும் தந்துடுவார். அப்போது அந்த உயர்ந்த மேடு நம்மைத் தூர்த்துத் தூர்த்து, பள்ளமாயிருந்த நாமும் அதோடு சமமாக, ஏன், அதாகவே ஆகியிருப்போம்.'

'சுருக்கமா சொன்னா மிக உயர்வான வஸ்து ஸ்வாமி.  சக்திகள் அபரிமிதமாக இருக்கற ஸ்வாமிக்கு கருணையும் இருக்கு.  அதனால அந்த வஸ்துவை விடாம உபாஸனை பண்ணி பண்ணி அவனோட கருணைக்குப் பாத்திரமாகி நாம நம்ம நிலையை எந்தத் தேவையும் எனக்கு இல்லை அப்படிங்கற ஒரு உன்னதமான ஸ்தானத்திற்கு உயர்த்திக்கறோம்.  இதைத்தான் சுருக்கமா பக்தி அப்படின்னு சொல்றோம்.'

'நான் ஏற்கனவே ஒன்கிட்ட சொல்லியிருக்கேன்னு நெனைக்கிறேன்.  பக்திக்கு

பிரதானம் நம்பிக்கை

இன்னிக்கு நாத்து நடறவன் மூணு மாசத்துல மழை பெய்யும்னு நம்பறான்.

நீ விளையாடிட்டு ஆத்துக்கு போனா, அம்மா உனக்கு சாப்பாடு தயாரா வச்சிருப்பான்னு நம்பற.

இங்க வந்தா சில நல்ல விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம்னு நம்பற.

இது மாதிரி, பக்தி ஸ்ரத்தையோட எது செஞ்சாலும் நமக்கு நல்லது நடக்கும்னு நம்பறோம், நம்பணும்.

நரசிம்ம அவதாரம், கஜேந்திர மோக்ஷம் இப்படிப்பட்ட புராண கதைகள் எல்லாம் கடவுளை நம்பினவாளுக்கு கடவுள் நிச்சயமா துணை இருப்பார்னு காட்டறது இல்லையா பாஸு?'

'இதோட இப்ப நிறுத்திப்போம்.  இன்னொரு நாள் இதை தொடருவோம்.  எனக்கு முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு.  அதனால இப்ப சப்திக்கு கிளம்பலாமா?'

'மாமா, நித்ய பூஜைகளெல்லாம் பக்தியோட ஒரு பகுதிதானே?'

'ஏன் உனக்கு இதுல சந்தேகம்.  கண்டிப்பா நாம பக்தி அப்படிங்கற வளையத்தை எந்த சமயத்துலேயும் தாண்டாம பாத்துக்கறதுக்கு நாம ஆத்மார்த்தமாக செய்யக்கூடிய பூஜைகள் ஹெல்ப் பண்றது.  பூஜைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அப்படிங்கறத அடுத்த கிளாஸ்ல சொல்லிக் கொடுக்கறேன்.  நீயும் என்னை ஞாபகப்படுத்து மறக்காம.'

'ரொம்ப தேங்க்ஸ் மாமா.  ரொம்ப நாள் ஆச்சே மடத்துக்கு வந்து உங்களப் பாத்து அப்படின்னு தான் இங்க வந்தேன்.  வந்ததுக்கு எனக்கு ஜாக்பாட்.  பக்தியப் பத்தி ரொம்ப நன்னா சொல்லிக்கொடுத்தேள்.'

'ஆர்வம் இருக்குற குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்காமல் இருக்க முடியுமோ?  இப்ப நான் சொல்லிக் கொடுத்தத மனசுல வாங்கிண்டு பக்தி ஸ்ரத்தையோடு எப்போதும் இருக்கணும்.'

'கண்டிப்பா மாமா.  நமஸ்காரம் பண்ணிக்கறேன் மாமா.'

'இரு நான் திரும்பி நின்னுக்கறேன்.  இப்ப பண்ணு.'

'நல்லா இருடா கண்ணு.  பரிட்சைகள்ல நல்ல மார்க் வாங்கி நல்ல உத்தியோகத்துல உக்காரணும்.  உங்க அப்பா மாதிரி எல்லார்கிட்டயும் அன்பா பழகிண்டு வரணும்.'

'எங்கடா உங்க ஃபிரெண்ட சேக்கலையேன்னு பார்த்தேன்.'

இப்படி நான் சொன்னவுடன் அவர் சிரித்துக்கொண்டே, 'போடா படவா.  உங்க அப்பாவ பத்தி நோக்கு என்ன தெரியும்? அவன மாதிரி ஆத்மார்த்தமா பழகற மனுஷாள பார்க்கிறது ரொம்ப ரொம்ப அபூர்வம்.'

'போதுமே மாமா.  நீங்க அழ ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நான் கிளம்பறேன்.'

தொடரும்...

No comments:

Post a Comment