Friday, May 13, 2022

ரகோபதேஸம்_11

 #ரகோபதேஸம்

எழுதியது பாஸ்கர் சத்யா 

#ரகோபதேஸம்_11

எத்தனை நேரம் யோசித்துக் கொண்டிருப்பது?  ஒருவேளை இதுக்காகவா அல்லது இப்படி இருக்குமோ என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றினாலும் குருநாதர் வாயாலேயே கேட்பதுதான் உசிதம் என்ற தீர்மானத்திற்கு வருகிறேன்.

'ஒண்ணும் சொல்ல தெரியல மாமா?'

'ஆச்சர்யமா இருக்கே நோக்கே ஒண்ணும் தோணலையா?  சரி.  பரவாயில்ல.  நானே சொல்றேன்.'

'ஒவ்வொரு ஸ்டான்ஸாவிலேயும் நீரப் பத்தியும் நீரோட ஆதாரத்த பத்தியும் சொல்லிட்டு இத அறிஞ்சுண்டவன் புத்ஸாலி இத புரிஞ்சுண்டவன் புண்யசாலி அப்படின்னு மந்திரத்துல இருக்கு இல்லையா?  பொதுவா மனுஷாளோட இயற்கை குணம் புகழை விரும்பறது.  புத்ஸாலி புண்ணியசாலி அப்படின்னு மந்திரங்கள் இருக்கும்போது நாம இப்படி புத்திசாலியா இருக்கணும் புண்ணிய சாலியா இருக்கணும் அப்படிங்கறது இயற்கையா தோணிடும் தானே.  உடனே நாம என்ன பண்ணுவோம்?  அந்த ஆதாரங்கள் பத்தி முழுமையா தெரியாட்டி கூட தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சு புத்திசாலியாவும் புண்ணியசாலியாவும் ஆவோம் தானே?  அதுலயும் இந்த மந்திரத்தை எல்லோரும் சேர்ந்து சொல்றதால அதைக்கேட்டு கூடுதல் ஆர்வம் நமக்கு கிடைக்கறது இல்லையா?'

'அடுத்து இந்த மந்திரத்தோட உட்பொருளோட நீரையும் நீரோட ஆதாரங்களையும் மனசு உள்வாங்கும் போது அந்த ஆதாரங்களுக்கு நாம இடைஞ்சல் பண்ணக்கூடாது அந்த ஆதாரங்களை பாதுகாக்கணும் அப்படிங்கிற உணர்வும் மறைமுகமா நம்ம மனசுல நெலச்சு நிக்கறது.'

'உதாரணமா நீருக்கு ஆதாரம் காற்று அதாவது வாயு.  அந்த காத்துல நாம மாசை கலக்கக்கூடாது அதாவது நச்சுப் பொருள்களையும் அழுக்குகளையும் சேர்த்துடக் கூடாது என்பதுல கவனம் செலுத்தணும் அப்படிங்கிற உறுதிமொழியையும் மறைமுகமா நாம இந்த மந்திரத்தின் மூலமா ஏத்துக்கறோம்.'

'சுருக்கமா இந்த மந்திரத்தோட அர்த்தங்களை சொல்றேன் கேட்டுக்கோ.  நீர் என்பது வேத புஷ்பம்.  லோக க்ஷேமத்துக்கு நீர் ஆதாரம்.  அந்த நீருக்கு ஆதாரமா சந்திரன் சூரியன் அக்னி வாயு நட்சத்திரம் மேகங்கள் மழைக்காலங்கள் இவைகள் இருக்கு.  இந்த ஜலமான வேத புஷ்பங்கள் கூட ஆதாரங்களாய் சொல்லப்பட்டிருக்கிற வஸ்துக்களுக்கு ஆதாரமாக இருக்கு.  அதாவது ஒன்றுக்கொன்று ஆதாரம்.  அப்பேர்ப்பட்ட ஆதார நுணுக்கங்களை அறிந்தவன் புத்திசாலி புண்ணியசாலி.  இப்ப புரிஞ்சுதோ?'

'மாமா ஒரு சந்தேகம்.  ஆரத்தி சமயத்துல இதைச் சொல்லணும் அப்படிங்கறேள்.   பொதுவா ஆரத்தியின் போது பகவான் கிட்ட பிரார்த்தனை பண்ணிண்டா நல்லது இல்லையா?  ஆனா பிரார்த்தனைக்கான வாசகங்கள் இந்த மந்திரங்கள்ல இருக்கறதா தெரியலையே?'

'நல்ல கேள்வி பாஸு.   ஹாரத்தி காமிக்கும்போது நம் கண்கள் பொதுவா நம்மையும் அறியாம மூடிக்கிறது.  தெய்வீக உணர்வுகள் நமக்குள்ள சேர்ந்து அந்த சமயத்துல நாம லயிச்சு நிக்கறோம்.  ஏற்கனவே பகவானுக்கும் நமக்கும் உள்ள கனெக்டிவிட்டி உணர்வுகளால் கிடைக்கும் அந்த சமயத்துல லோக க்ஷேமத்தை உட்பொருளா வைத்திருக்கிற இந்த மந்திர புஷ்ப மந்திரங்கள சேர்க்கும்போது லோக க்ஷேமத்துக்காக பிரார்த்தனையும் செய்கிறோம் அப்படிங்கறது தானே உண்மை.  அதோடு மாத்திரமில்லாமல் இந்த ஆதார விஷயங்களை நான் தெரிந்து கொண்டதால என்னை புத்திசாலியாகவும் புண்ணியசாலியாகவும் மாற்றிவிடு அப்படிங்கற உட்பொருளான பிரார்த்தனையும் சேர்ந்து தானே இருக்கு?'

'நீங்க சொல்ல சொல்ல எனக்கு புல்லரிக்கிறது மாமா.  மந்திர புஷ்ப ஸ்லோகத்துல இப்படி ஒரு அர்த்தமும் சூட்சுமங்களும் இருக்கறத கேட்க கேட்க அமிர்தமாய் இருக்கு மாமா.'

'லோகம் நன்னா இருக்கணும் அப்படின்னு நெனைக்கற தன்னலமில்லாதவாளுக்கு இந்த மந்திரம் ரம்மியமாத் தானே இருக்கும்?'

'இந்த மந்திரங்களோடு சேர்த்து இன்னொரு மந்திரமும் இருக்கு அப்படின்னு நான் ஏற்கனவே சொன்னேனே நோக்கு ஞாபகம் இருக்கோ?'

'இருக்கு மாமா.'

'கோவில்கள்ல மாத்திரம் அல்ல, வீடுகளிலும் பகவானை அர்ச்சித்து, நைவேத்தியம் எல்லாம் சமர்ப்பித்து கடைசியில் கற்பூர ஹாரத்தி காட்டும்போது அனைவரும் கன்னத்தில் விரல்களால் போட்டுக்கொண்டு தலைக்கு மேல் கரம் தூக்கி கற்பூர ஜோதியில் தெரியும் விக்ரஹத்தின் திவ்ய ரூபத்தை மனநிறைவோடு வணங்குகிறோம்.  அற்புதமான தரிசனம் கிடைத்தது என்கிறோம். கற்பூர ஹாரத்தி காட்டும்போது சொல்லும் மந்திரம் இது.  இப்ப நான் அந்த மந்திரத்தையும் அதோட அர்த்தத்தையும் சொல்றேன் கேட்டுக்கோ.' 

ஓம் ராஜாதிராஜாய’ ப்ரஸஹ்ய ஸாஹினே” |
நமோ’ வயம் வை”ஶ்ரவணாய’ குர்மஹே |
ஸ மே காமான் காம காமா’ய மஹ்யம்” |
காமேஶ்வரோ வை”ஶ்ரவணோ த’தாது |
குபேராய’ வைஶ்ரவணாய’ | மஹாராஜாய நமஃ’ |

”ஹே ராஜாதி ராஜனே, என் பிரபுவே, உன்னை போற்றுகிறேன். ஜெயத்தை அளிப்பவனே. விருப்பங்களை நிறைவேற்றி தருபவனே, செல்வத்தை வாரி வழங்குபவனே, குபேரனே, உன்னை போற்றுகிறேன். ராஜாவுக்கெல்லாம் ராஜாவான மஹாராஜனே, வணங்குகிறேன் உன்னை. அருள்வாயாக.'

'நிறைவுப்பகுதியா இன்னொரு மந்திரமும் இருக்கு.  அதையும் சொல்றேன் கேட்டுக்கோ.'

ஓம்” தத்ப்ரஹ்ம | ஓம்” தத்வாயுஃ | ஓம்” ததாத்மா |
ஓம்” தத்ஸத்யம் | ஓம்” தத்ஸர்வம்” | ஓம்” தத்-புரோர்னமஃ ||
அம்தஶ்சரதி பூதேஷு குஹாயாம் விஶ்வமூர்திஷு
த்வம் யஜ்ஞஸ்த்வம் வஷட்காரஸ்த்வ-மிம்த்ரஸ்த்வக்‍ம்
ருத்ரஸ்த்வம் விஷ்ணுஸ்த்வம் ப்ரஹ்மத்வம்’ ப்ரஜாபதிஃ |
த்வம் ததாப ஆபோ ஜ்யோதீரஸோ ‌அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம் |
ஓம் ஶாந்திஃ ஶாந்திஃ ஶாந்திஃ’ |

'இது மந்த்ர புஷ்ப ஸ்தோத்ரத்தோட கடைசி பகுதி. இதையும் சேர்த்து தான் சொல்வது வழக்கம். . இதற்கு என்ன அர்த்தம்?'

'ஓம். இது தான் ப்ரம்மா. ஓம். இது தான் வாயு என்கிற காற்று. உயிர் மூச்சு. ஓம். இது தான் என்னுள்ளே இருக்கும் ஆத்மா. ஓம். இது தான் நிரந்தரமான பேருண்மை. ஓம். இது தான் எல்லாமே. ஓம். என்னுடைய நமஸ்காரங்களுக்குரிய புருஷனே, எங்கும் எந்த உயிரிலும் உள் நின்று இயங்கும் விஸ்வமூர்த்தியே . நீயே நான் செய்யும் யாகத்தீ. நீயே வேதம் சொல்லும் தியாகங்களின் உருவகம். நீயே இந்திரன். நீ தான் வாயு எனும் காற்று. நீ தான் சம்ஹாரம் செய்யும் ருத்ரன். நீயே காக்கும் மஹா விஷ்ணு. நீயே படைக்கும் ப்ரம்ம தேவன். சகல உயிர்களுக்கும் தலைவன் நீயே. ஓம். நீர் என்பதே ஒளி வடிகட்டிய அம்ருத சக்தி. ஏழுலகிலும் பிரம்மத்தின் தத்வம். எங்கும் அமைதி உள்ளும் புறமும் அமைதி. அமைதி. அமைதி.'

'இப்படி பகவானை உள் மனசுல வாங்கிண்டு ஆத்மார்த்த உணர்வுகள கூட்டிண்டு கண்களை மூடிண்டு மூடிய கண்களின் இடுக்குகள்லேந்து தாரை தாரையா சுரக்கும் கண்ணீரோட இந்த மந்திரங்களையும் சேர்த்துண்டு பகவான் கிட்ட ஒரு நேரடி தொடர்போடு சரணாகதி தத்துவத்துல இருந்துட்டா அமைதி நமக்கு கெடைக்காம போயிடுமா என்ன?'

அவர் இந்த மந்த்ர புஷ்ப மந்திரங்களின் அர்த்தங்களை எனக்கு புரிய வைத்த விதம் என் கைகளைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று சில நிமிடங்கள் பகவானிடமே சேர்த்தது போல இருந்தது.

அந்த அமைதி ...  இட் இஸ் bபியாண்ட் டிஸ்க்ரிப்ஷன்.

பரிபூரண அமைதியில் இருந்து வார்த்தைகள் வெளிவராமல் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த என் நிலைமையை அவர் புரிந்து கொண்டு இருந்திருக்க வேண்டும்.

'என்கிட்ட வா பாஸு'

அனிச்சையாக இரண்டடிகள் முன்வைத்து அவரிடம் செல்கிறேன்.  என் தலையில் அவருடைய இரண்டு உள்ளங்கைகளை வைத்து நன்றாக அழுத்துகிறார்.  வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்த குரு ஸ்பரிஸம்!

'என்ன நேரம் ஆச்சே கிளம்பலாமா?'

தெய்வீகப் ஸ்பரிசமே கிடைத்திருந்தாலும் மனிதன் அந்த நிலையில் எப்போதும் இருந்துவிட முடியுமா என்ன?

அமைதியோடு நான் காட்டிய தலையசைப்பு அவருக்கு சம்மதம் கொடுத்தது.

தொடரும்...

No comments:

Post a Comment