மூன்று தலைமுறை -35
By N Krishnamurthy
இப்படி பஞ்சுவும் விசுவும்,விசு அமெரிக்கா செல்ல மும்முரமாக இருந்தபோது விசாலிக்கு அந்த திட்டம் பிடிக்கவேயில்லை. அதற்கு அவளுக்கு மூன்று முக்கிய காரணங்கள் இருந்தன. முதல் காரணம் குழந்தையிலிருந்தே அவள் விசுவை விட்டு அதிகம் பிரிந்ததே இல்லை.
ஐந்து வருடங்கள் பிரிந்து இருக்க வேண்டுமென்பது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதை அவள் ஐந்து வருட சிறை தண்டனை என்றே நினைத்தாள். ராமன் தன்னை விட்டுப் பிரிந்த போது தசரதன் உயிர் போனது போல தன் உயிரும் போய்விடுமோ என்ற அவள் அதீதமாக கற்பனை பண்ணிக்கொண்டாள். விசுவுக்கு 22 வயது முடியப்போகிறது. நிச்சயம் அவனுக்கு அவனுடைய வயதை ஒத்தவர்களுக்குண்டான ஆசாபாசங்கள் அவனுக்கும் இருக்கும்.ஐந்து வருடங்கள் கழிந்ததும் அவன் வயது 27 ஆகிவிடும். நல்ல பையன் தான்,ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் திடீர்னு ஒரு நாள் ஒரு வெள்ளைக்காரியை கூப்பிட்டுக் கொண்டு வந்து "அம்மா. இதுதான் உன் மாட்டுப் பெண்" என்று சொன்னால் அவள் என்ன செய்வாள்?
இது இரண்டாவது காரணம். மூன்றாவதாக அவளால் வெளிப்படையாக சொல்ல முடியாத ஒரு காரணம் அவள் உள்ளுணர்வில் இருந்தது.விசு அமெரிக்கா சென்று படிப்பதின் விளைவுகள் நன்றாக இருக்காது என்று ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது.இதைத்தான் Intuition என்கிறோமோ?
தனிமையில் பஞ்சுவுடன் இருக்கும்போது தன்னுடைய முதல் இரண்டு காரணங்களைக் கூறி அழுதாள்.
கல்யாணம் ஆனதிலிருந்து இதுவரை குரலை உயர்த்தி பஞ்சுவிடம் பேசாத விசாலி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் குரலை உயர்த்திப் பேசினாள். ஆனால் அதை பஞ்சு கண்டு கொள்வதாகவே இல்லை.
'ஐந்து வருடங்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் போய்விடும்' என்று பஞ்சு பேசி முடித்து விட்டு 'எஞ்சினீயரிங் படித்த ஐந்து வருடங்கள் எவ்வளவு சீக்கிரம் ஓடிவிட்டது.அது போலதான் இதுவும். எப்படியும் ஐந்து வருடத்தில் விசு திரும்பி விடுவான்.அவன் எதிர்காலத்தை உன் சுயநலத்துக்காக கெடுக்காதே"என்றார். மேலும் பஞ்சு கடகடவென்று சிரித்துவிட்டு "உம்பையன் மேல உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் நான் என்ன செய்வது. நிலை தடுமாறி போகக்கூடியவன் இல்லை விசு. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
கடவுள் மேல் பாரத்தை போடு.அவர் பார்த்துக்கொள்வார்"என்றார் பஞ்சு.
'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்று விசாலிக்கு புரிந்தது.
ராஜகோபால அய்யரும் இதில் ஒன்றும் தீர்மானமாக முடிவு எடுக்க முடியவில்லை. நாம் ஏதாவது சொல்லப் போக அது பஞ்சுவுக்கோ விசாலிக்கோ எதிராக போய்விடும் என்பதால் அவர் மௌனமாகவே இருந்தார்.
.விசாலி சொன்னபடி பஞ்சு கேட்டிருந்தால் எல்லாம் நல்லபடியாகவே முடிந்திருக்குமோ என்னமோ?
பெண்புத்தி பின் புத்தி என்ற தவறான பழமொழி தவறாக போய்விட்டிருக்கலாம்.
விதி வலிது.அது யாரை விட்டது?
கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை மொழி பெயர்த்த உமர்கய்யாமின் அழகான கவிதை தான் நினைவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment