மூன்று தலைமுறை-22
உபநயனம் முடிந்தவுடன் சுந்தரேசன் தம்பதிகள் பெண் வீட்டில் நான்கு நாட்கள் இருந்து விட்டு நல்லூருக்கு கிளம்பினார்கள்.
தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஊருக்கு செல்லும்போது விசு நமஸ்காரம் செய்தான். தவறாமல் அபிவாதனம் செய்தான்.
பின்பு பள்ளிக்கு விசு ரெகுலராக செல்ல ஆரம்பித்தான். காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து ப்ராத சந்தியாவந்தனம் முடித்துவிட்டு விசாலியுடன் சேர்ந்து ஸ்லோகங்கள் சொல்வான்.
காலையில் பல நாட்களில் பசுந்தயிர் விட்டு பிசையப்பட்ட பழையது, வடுமாங்காயுடனோ அல்லதோ வீட்டிலே போடப்பட்ட எலுமிச்சை/கடாரங்காய் ஊறுகாயுடனோ போடப்படும். (பழையது சாப்பிட்டு எத்தனை யுகம் ஆகி விட்டது.
பழையது என்ற முந்தய நாள் சாதத்தைப்பற்றி ஒரு நாள் முழுவதும் எழுதலாம்.என்னைக்கேட்டால் தற்கால குழந்தைகள் தவறவிட்ட பல ஐட்டங்களில் பழையது முதன்மை வகிக்கிறது என அடித்துக்
கூறுவேன்)
சில நாட்கள் இட்லி அல்லது தோசை உண்டு.
ஒன்றும் இல்லாத நாட்களில் குறைந்த பட்சம் சத்து மா(வு) கஞ்சி உண்டு.
காலை உணவு முடிந்ததும் நடந்தே பள்ளிக்கு செல்வான் விசு. மதியம் லஞ்ச் டைமில் வீட்டுக்கு வந்து முதலில் மாத்யானம் செய்துவிட்டு, பின் சாப்பிட்டுவிட்டு திரும்ப பள்ளிக்கூடம். சாயங்காலம் பள்ளியிலிருந்து வந்தவுடன் சாயம் சந்தியாவிற்கு நேரம் நெருங்கி இருக்கும்படியால் வெளியில் விளையாடப் போக முடியாது.
இது முதலில் விசுவுக்கு கொஞ்சம் ஏற்றுக்கொள்ள சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் நாளாவட்டத்தில் பழக்கமாகி விட்டது.
இது போன்ற சிறுசிறு தியாகங்களை செய்ய வேண்டியிருந்தது.
இதற்கு காம்பன்ஷேஷன் செய்வது போல ஞாயிற்றுகிழமைகளில் மதியம் 2 மணியிலிருந்து 5:30 வரை விசு
நண்பர்களுடன் ஆசை தீர விளையாடி விட்டு வருவான். தினமும் சாயம் சந்த்யாம் முடிந்தவுடன் அன்று நடந்த பாடங்களையும்,ஹோம் வொர்க்கையும் தவறாமல் செய்துவிடுவான் விசு.1950 வருடம் நான்காவது முடித்துவிட்டு இருந்தான் விசு.அந்த வருடம் சுந்தரேச ஐயருக்கு 60 வயது நிரம்பி இருந்ததால் சஷ்டி அப்தபூர்த்தி கொண்டாடப்பட்டது. இந்துக்களுக்கு உண்டான 16 சம்ஸ்காரங்கள் சஷ்டியப்தபூர்த்தியும். ஒன்று.வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் மேல் கொண்டு வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்காக தெய்வத்திடம் வேண்டிக் கொள்ள ஏதுவாக இருக்கும் சில சடங்குகளில் சஷ்டியப்தபூர்த்தியும் ஒன்று. நல்லூரில் அவர் வீட்டிலே நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகவே ராஜகோபாலன் குடும்பத்தினர் நல்லூருக்கு வந்து விட்டிருந்தார்கள்.
இந்த கதை இரண்டாம் தலைமுறை விசுவைப் பற்றி முக்கியமாக எடுத்துக் கூறுவதால் சுந்தரேச அய்யருடைய சஷ்டியப்தபூர்த்தி பற்றி நான் அதிகம் விவரிக்கப் போவதில்லை. மாலை மாற்றுதல்,தாலி முடிதல் போன்ற கல்யாணத்தில் நடந்த அனைத்தும் நடந்தேறின. ராஜகோபாலய்யர் சுந்தரேசய்யர் தம்பதிகளுக்கு வேட்டியும்,புடவையும் மற்றும் பணம் கொடுத்து மரியாதை செய்தார். அவர்களுக்கு திருப்பி எதிர் மரியாதையும் செய்யப்பட்டது. சஷ்டியப்தபூர்த்தி முடிந்து அடுத்த நாள் ராஜகோபலன் குடும்பத்தினர் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். அடுத்த வருடம் விசு தன்னுடைய ஐந்தாவது வகுப்பு படிப்பை முடித்தான். அத்துடன் அவனது சொந்த ஊரில் உள்ள அவன் படிப்பு முடிந்தது. சிக்ஸ்த் பார்ம் போவதற்கு அருகிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளை நாட வேண்டி இருந்தது.அந்த சம்மர் லீவில் ராஜகோபால ஐயருக்கு 60 வயது பூர்த்தி அடைந்தது. அவருடைய சஷ்டியப்தபூர்த்தியும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அடுத்து விசுவை எங்கு சேர்ப்பது என்று குடும்பத்தில் ஆலோசித்தார்கள்.
ஒன்று கும்பகோணத்தில் உள்ள டவுன் ஹைஸ்கூலில்(Town High School)
சேர்க்கலாமா அல்லது குத்தாலத்தில் இருக்கும் போர்ட் ஹை ஸ்கூலில்
(Board High School) சேர்க்கலாமா என்று விவாதித்தார்கள். குத்தாலம் சொந்த ஊருக்கு மிக அருகில் இருந்தது.
2 கிலோ மீட்டர் தூரம் தான்.அங்கேயே சேர்க்க முடிவு செய்யப்பட்டு.
பஞ்சு விசுவை அழைத்துக்கொண்டு குத்தாலத்திலுள்ள ஸ்கூல் ஹெட்மாஸ்டரை பார்க்க சென்றார்.இன்றிலிருந்து விசுவிற்கு வாழ்க்கையில் இரண்டாம் கட்டம் ஆரம்பம்.
No comments:
Post a Comment