Monday, April 3, 2023

மூன்று தலை முறை -16

 மூன்று தலை முறை -16

முதல் நாள் பூர்வாங்கம்(அதாவது முதல் நாள் நடத்தப்பட வேண்டியநிகழ்ச்சிகள்) ஆரம்பமானது.இந்த பதிவை எழுதுவதற்கு முன் எனக்கு சொந்தமும்,வைதீக குடும்பத்தில் வந்தவருமான  ஒருவரை கேட்டு சேகரித்த பல விஷயங்களை உங்கள் அனைவரிடமும்  பகிர்கிறேன்.

உதக சாந்தி, ப்ரதி சரபந்தம், பாலிகை, நாந்திஹோமம் ஆகியன செய்ய வேண்டும். சுமார் 1லிட்டர் கொள்ளவுள்ள பித்தளை குடத்தை சுற்றி  நூல்கண்டு கட்டப்பட்டது.உதக சாந்தி குடத்துக்குள்  ஏலக்காய் பவுடர், க்ராம்பு, பச்சை கல்பூரம், வெட்டி வேர், விலாமிச்சை வேர் போடப்பட்டது. விசுவிற்கு மாலையும் கும்பத்திற்கு மாலையும் கும்போணத்திலிருந்து வந்தது.

உதக சாந்தி முடிந்ததும் குடத்திலிருந்த ஜலத்தை எல்லோர் மேலும் தெளித்தார்கள்.

விசுவுக்கு பிரதிசரபந்தம்(அதாவது பூணல் போட்டுக்கொள்ள போகும் பையனுக்கு கையில் காப்பு கட்டுதல்)செய்யப்பட்டது. நாந்தி ஆரம்பமானது.

நாந்தி  மிக முக்யமான சடங்காகும்.சீமந்தம், உபநயனம் மற்றும் கல்யாணத்திற்கு முன் கட்டாயம் நாந்தி நடத்தப்பட வேண்டும்.

வாழ்ந்து மறைந்த மூன்று தலை முறையை சேர்ந்த தகப்பனார்,  தாத்தா,தகப்பனாரின் தாத்தா,தகப்பனார் இருந்தால் தாத்தா,கொள்ளு தாத்தா,எள்ளு தாத்தா இவர்களும், இவர்களின் மனைவிகள், தாயின் தந்தை, தாயின் தாத்தா, தாயின் தகப்பனாரின் தாத்தா

முதலிய முன்னோர்கள், நாந்தி சோபன பித்ருக்கள் அதாவது மங்கலமான பித்ருக்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்கள் நமது வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்க இருக்கும் போது ஒரு சில நாட்கள் முன்னதாகவே நம்முடைய இருப்பிடத்திற்கு , ஸந்தோஷத்துடன் ஆசி கூற அவர்களாகவே வருகிறார்களாம்.

அவ்வாறு வரும் அவர்களுக்கு சாப்பாடு போட்டு நல்ல வஸ்த்ரம் கொடுத்து அவர்களை ஸந்தோஷபடுத்தி அவர்களின் ஆசியை பெற செயும் செயல் தான் நாந்தி. அப்போதுதான் முன்னோர்களின் அநுக்கிரஹம் கிட்டும். இவர்களை Represent செய்யும் வேத பிராமணர்களுக்கு பிதுர்களுக்கு தரும் மரியாதையை தரப்படும். ச்ராத்தம் என்றால் சிரத்தையுடன் செய்வது என அர்த்தம். ஈடுபாட்டுடன் செய்வது என்று அர்த்தம். இதில் அமங்கலம் ஏதுமில்லை. இதுவும் மங்கலமானதுதான். உபநயனம், விவாஹத்திற்கு முன் அவச்யம் செய்ய வேண்டும். 'நாநிஷ்ட்வா து பித்ரூன்ச்ராத்தே, வைதிகம் கர்ம ஸமாசரேத்' என்பதாக ஆபஸ்தம்பர், முதலிய அனைத்து மஹரிஷிகளும் வலியுருத்தி கூறுகிறார்கள். நாந்தி பித்ருக்களை பூஜிக்காமல் வேதத்தில் கூறப்பட்ட எந்த கர்மாவும் செய்யக்கூடாது.செய்யாமல் விட்டால் பித்ருக்களின் தோஷம் ஏற்படும். ஆதலால் மங்கல நிகழ்ச்சிகளுக்கு முன்னால் நாந்தியை கட்டாயம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment