மூன்று தலை முறை -24
ஹெட்மாஸ்டர் அடுத்த ஆனந்த அதிர்ச்சியை அள்ளி வீசினார்.
"பஞ்சு சார்.விசு சென்னை ராஜதானியில் இரண்டாவது மாணவனாக வந்திருக்கிறான்.மெட்ராஸ் ராமகிருஷ்ணா ஸ்கூலை சேர்ந்த கங்காதரன் என்ற மாணவன் விசுவைவிட மொத்தத்தில் 2 மார்க்கு கூட வாங்கி முதல் ரேங்க் எடுத்துள்ளான். இது நம் பள்ளிக்கு மட்டுமில்லாமல் தஞ்சாவூர் ஜில்லாவிற்கே பெருமை' என்றார்.
இதையெல்லாம் கேட்ட பஞ்சுவுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. சந்தோஷத்தில் திக்கு முக்காடினார். விசுவுக்கு முத்தமாரி பொழிந்தார். விசுவுக்குமிகவும் வெட்கமாகி விட்டது.
பஞ்சு வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி கடவுளை கும்பிட்டார்.
பின் விசுவுக்கு எஸ்.எஸ்.எல்.சி சர்டிபிகேட் புக் தரப்பட்டது.
ஹெட்மாஸ்டர் பஞ்சுவிடம்" நேற்று ஜில்லா கல்வி அதிகாரி பேசினார்.விசுவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டுமென்று விரும்புகிறார்.இது அனேகமாக கும்பகோணத்தில் நடைபெறும்.நான் தேதி தெரிந்ததும் சொல்லி அனுப்புகிறேன். நீங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்" என்றார்.
'ஆகா.அப்படியே ஆகட்டும்" என்றார் பஞ்சு.
பின்பு பஞ்சுவும் விசுவும் மிக உற்சாகமாக சொந்த ஊர் திரும்பினர்.விஷயத்தை கேள்வி பட்ட விசாலிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.விசுவை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். ராஜnகோபாலனும், மங்களமும் மகிழ்ச்சியில் நெகிழ்ச்சி அடைந்தார்கள். சந்தோஷத்தை கொண்டாட விசாலி அன்று பால் பாயசம் செய்தாள். விஷயத்தைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் ஒவ்வொருவராக வந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு வாரத்தில் கும்போணத்தில் நடந்த பாராட்டு விழாவிற்கு விசு, பஞ்சு, இரண்டு தாத்தாக்கள், பாட்டிகள் கலந்து கொண்டார்கள்.விசுவுக்கு பள்ளியின் சார்பில் 51 ரூபாய் பணமும்,தஞ்சாவூர் ஜில்லா கல்வி ஆதிகாரி சார்பில் கேடயமும் தரப்பட்டது.
அடுத்து கல்லூரி படிப்பு எங்கே என்ற கேள்வி எழுந்தது.
பஞ்சுவைத்தவிர அனைவரும் கும்போணம் ஆர்ட் காலேஜில் சேரலாம் என்றனர்.
பஞ்சு அதை ஒத்துக்கொள்ளவில்லை. தலைநகரான மெட்ராஸே சிறந்த இடம் என நினைத்தார்.அவர் விசுவின் மேல் படிப்பிற்காக பெரும் மனக்கோட்டை கட்டி யிருந்தார்.மெட்ராஸ் போவது என்றால்,
பஞ்சுவும், விசாலியும் மெட்ராஸில் குடுத்தனம் வைக்கலாம் என்று ராஜகோபாலன் நினைத்தார்.
ஆனால் பஞ்சுவிற்கு வயதான பெற்றோரை தனியாக விட்டு விட்டு மதராசில் குடுத்தனம் வைக்க மனமில்லை.பஞ்சு,தந்தையின் நண்பரும் தன் மேலதிகாரியுமான பரசுராமனை சந்தித்து நிலைமையை கூறி அறிவுரை கேட்டார்.
அவர் 'நல்ல வேளை என்னிடம் நிலைமையை கூறினாய்.உனக்கு எல்லாமே கூடிவருகிறது.மெட்ராஸில் நமது ஆபீஸ் கிளை திறக்க எண்ணியுள்ளோம்.நீ அங்கு பொறுப்போற்றுக்கொள்ள முடியுமா?" என்றார்.
பஞ்சு கடவுளே அவருக்கு வழிகாட்டியதாக எண்ணினார்.பரசுராமனிடம்"கரும்பு தின்ன கூலியா"என்று கூறி நன்றி சொன்னார். ஊருக்கு வந்து ராஜகோபலனிடம் பஞ்சு நடந்ததையெல்லாம் கூறினார்.
பஞ்சு, விசாலி,விசு மதராசில் தனிக்குடுத்தனம் வைக்க வேண்டுமா அல்லது மொத்த குடும்பமே ஊரை காலி பண்ணிவிட்டு மதராஸ் போகப்போக வேண்டுமா என்று முடிவு செய்ய மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
நல்ல காற்று,தண்ணீர்,சொந்த பசு மாட்டிலிருந்து கிடைத்த பால்,தயிர், வெண்ணை, சொந்த நிலத்திலிருந்து கிடைத்த அரிசி இவையெல்லாம் விட்டு விட்டு பட்டணம் போவதா என்ற பெரும் குழப்பத்தில் அந்த குடும்பம் ஆழ்ந்தது.
No comments:
Post a Comment