மூன்று தலைமுறை -26
ஊரை விட்டு கிளம்வதற்கு முதல் நாள் அக்ரஹாரத்தில் உள்ள அனைவரும் ராஜகோபல அய்யர் வீட்டுக்கு வந்திருந்து அவர்கள் கிராமத்தை விட்டு மதராஸ் போவதில் தங்களக்கான வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்கள்.விசு அன்று முழுவதும் அவன் நண்பர்களுடனே பொழுதைக் கழித்தான்.
ஒரு நல்ல நாள் பார்த்து ஐவரும் மதராசுக்கு வந்தார்கள்.அன்று காலை அனைவருக்கும் இராமநாத ஐயர் வீட்டு சாப்பாடு. சாப்பாடு முடிந்த கையோடு வாடகை வீட்டிற்கு சென்று பார்த்தார்கள். இவர்கள் வரும் நாளை முன் கூட்டியே அறிந்திருந்த வீட்டு சொந்தக்காரர், வீட்டை பெருக்கி, அலம்பி, வாசலில் மாக்கோலம் போட ஏற்பாடு பண்ணியிருந்தார். சாமான்களை ஏற்கனவே லாரி மூலம் அனுப்பி இருந்ததால் அவைகள் முன்னமே வந்து கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.
எல்லாவற்றையும் எடுத்துப் பிரித்து வைக்க விசாலிக்கு பஞ்சுவும், விசுவும் உதவி செய்தனர்.ஒரு வழியாக சாயங்காலத்திற்குள் எல்லா சாமான்களும் அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இரவு சாப்பாட்டை மிளகு ரசம், கத்தரிக்காய் எண்ணை கறியுடன், ராமநாத அய்யல் வீட்டில் இருந்து வந்த தயிருடன் சேர்த்து முடித்தனர். சொந்த ஊரில் இருக்கும் வரையில் வாழையிலையில் சாப்பிட்டு வந்தார்கள்.மதராசுக்கு வந்தவுடன் தட்டுக்கு மாற வேண்டியதாயிற்று.
மங்களத்துக்கும் ராஜகோபாலனுக்கும் சிலவற்றை ஏற்க முடியாது போனாலும் வெளியில் காட்டிக் கொண்டால் பஞ்சு,விசாலம் வருத்தப்படுவார்கள் என்று மனதுக்குள்ளே வைத்துக்கொண்டார்கள்.
ராமனாத அய்யர் மிகவும் உறு துணையாக இருந்து வந்தார். அடிக்கடி வந்து வேண்டிய உதவிகளை செய்தார்.
தினந்தோறும் அவருக்கு காலை இரண்டாம் காபி விசாலி கையால்தான் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
பஞ்சுவை கடை கண்ணிக்கு அழைத்து சென்று அங்குள்ளவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
மளிகை கடையில் மாதாந்திர கடனுக்கு சாமான்களை ஏற்பாடு பண்ணினார். மொத்தத்தில் ராமனாத அய்யர் மட்டும் இல்லையென்றால் பஞ்சுவுக்கு மதராஸ் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்திருக்கும்.
பஞ்சுவும், விசுவும் ஒரு நாள் முழுவதும் அலைந்து ராஜ கோபல அய்யருக்கு ஈசி சேர், கயித்து கட்டில், பத்தமடை கோரைப்பாய் ஆகிய பலவற்றை வாங்கி வந்தனர்.
ராஜ கோபல அய்யர் தம்பதிகள் அருகிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தினம் செல்ல ஆரம்பித்தனர்.
அதன் விளைவாக அங்கே இருவருக்கும் அவர்கள் வயதை ஒத்தவர்கள் சினேகம் கிடைத்து.விசாலியை ராமனாத அய்யர் மனைவி காமாக்ஷி மாமி தனக்கு தெரிந்த பெண்டுகள் வட்டாரத்துக்கு அறிமுகப்படுத்தினாள்.வந்து இரண்டு வாரம் கழிந்தது. பஞ்சு உத்தியோகத்திற்கு செல்ல ஆரம்பித்தார். நல்லவேளை ஆபீஸ் புது மாம்பலத்தில்(அதாம்பா T.Nagar) இருந்தது.பஞ்சு ஆபிசுக்கு சைகிளில் செல்ல ஆரம்பித்தார்.விசு P.U.C ஐ எந்த காலேஜில் படிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
No comments:
Post a Comment