Saturday, April 15, 2023

மூன்று தலை முறை - 23

 மூன்று தலை முறை - 23

குத்தாலம் போர்டு ஹைஸ்கூல்  ஹெட்மாஸ்டர்  விசுவை கேட்க வேண்டும் என்பதற்காக சில கேள்விகள் கேட்டார்.

அவன் பதில் சொன்ன விதமும், அவனுடைய துரு துரு பார்வையும் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக அந்த ஸ்கூலில்  அவனுக்கு அட்மிஷன் கிடைத்தது. முதல் கொஞ்ச நாட்களுக்கு பஞ்சு அவனை சைக்கிளில் டபுள்ஸ் மிதித்துக் கொண்டு குத்தாலம் சென்று விட்டு வந்தார். முதல் ஃபார்மில் தசரா விடுமுறையின் போது விசுவுக்கு ஒரு குட்டி சைக்கிள் வாங்கி கொடுக்கப்பட்டது. விடுமுறையின் போது ஒரு வாரம் அவன் நன்றாக சைகிளைப பழகினான்.  விடுமுறை முடிந்து பள்ளி திறந்தபோது பஞ்சுவும் அவனுடன் சேர்ந்து அவன் நன்றாக ஓட்டுகிறானா என்று பார்க்க தானும் தன் சைகிளில் சென்று வந்தார். அடுத்த வாரத்திலிருந்து அவன் தனியாக சைக்கிளில் சென்று வந்தான். அவன் ஊரிலிருந்து சில நண்பர்களும் அதே பள்ளியில் படித்ததால் அவனுக்கு சைக்கிளில் துணை இருந்தது.

விசு படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்தான்.

அவனுக்கு எதை ஒரு முறை சொன்னாலும்  கிரஹித்துக் கொள்ளக் கூடிய கற்பூர புத்தி.  மனப்பாடம் செய்வதில் மன்னன். வகுப்பில் அவன்தான் முதல் இரண்டு ரேங்க்கில் வந்து கொண்டிருந்தான்.ஒவ்வொரு வருடமும் ஸ்கூலில் நடக்கும் பேச்சு போட்டியிலும், ஸ்லோகம் சொல்லும் போட்டியிலும் விசுவுக்கு நிச்சயம் பரிசு உண்டு.

காலையும் மாலையும் இரண்டு வேளை மட்டும் சந்தியாவந்தனம் பண்ண முடிந்தது.பள்ளி நாட்களில் மாத்யனீகமும், சமிதா தானமும்  செய்யமுடியவில்லை . ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இவ்விரண்டையும் செய்துவந்தான்.

இதற்கிடையே விசு உடல் வளர்ச்சியும் பெற ஆரம்பித்தான். உயரமாக வளர ஆரம்பித்தான்.

ஒரு வருடம் தைத்த காக்கி அரை டிராயர், வெள்ளை சட்டை யூனிபார்ம் அடுத்த வருடத்தில் சின்னதாகிப்போனது.

போர்த் பார்ம் படிக்கும் போது குரல் உடைய ஆரம்பித்தது. உதட்டின் மேல் லேசாக,பென்சிலில் கோடு வரைந்தாற் போல், மீசை எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.

கொஞ்ச நாளிலேயே விசு பள்ளியில் எல்லோர் கவனத்தையும் கவர்ந்து சிறந்த மாணவன் என்று பெயர் பெற்றான். விசாலிக்கு இதுகுறித்து பெரிய கர்வம் உண்டானது. இதைத்தான் வள்ளுவர் 

'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்று கூறியிருக்கிறாரோ? 

கட கடவென வருடங்கள் உருண்டோடின.1957 ஆம் வருடம் விசுவுக்கு எஸ்.எஸ்.எல்.சி பரிட்சை கொடுக்க வேண்டி வந்தது. அதற்கு முன்னால் நடந்த மாணவர் மன்றம் தமிழ் பரிட்சையில் விசு முதல் வகுப்பில் பாஸ் செய்திருந்தான். எஸ்.எஸ்.எல்.சி போட்டிக்காக மிகவும் கவனமாக படித்தான்.

விசாலி அவனுக்கு உறுதுணையாக இருந்தாள். அவன் தூங்காமல் படிக்க இரவில் டீ போட்டு கொடுத்தாள். அவனுக்கு  சந்தேகம் வந்த போதெல்லாம் அவன் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் பஞ்சு. எஸ்.எஸ்.எல்.சி பரிட்சை முடிந்தது. மிகவும் அருமையாக பரீட்சை எழுதி இருந்தான் விசு. ஆனுவல் லீவு முடியும் சமயம் ஒருநாள் அவனும் பஞ்சவும் எஸ்.எஸ்.எல்.சி முடிவை அறிய ஸ்கூலுக்கு சென்றிருந்தார்கள்.

இவர்கள் இருவரையும் பார்த்த ஹெட்மாஸ்ர் சந்தோஷமாக 'பஞ்சு சார்.ஒரு முக்கியமான சந்தோஷமான சமாசாரம் கூறப்போகிறேன். நீங்கள் ஸ்வீட் கொடுக்க வேண்டும்' என்று பீடிகை போட்டோர். பஞ்சுவுக்கு முதலில் என்னவென்று புரியவில்லை.

பின்பு ஹெட்மாஸ்டர் கூறினார் 

'விசு  நம் பள்ளிக்கு மிகவும் பெருமை தேடிக் கொடுத்திருக்கிறான்.

600 மார்க்குக்கு 458 மார்க்குகள் வாங்கி பள்ளியில் முதல் மாணவனாக வந்திருக்கிறான்.பள்ளிக்கு கடந்த பத்து வருடங்களில் இது ஒரு ரெக்கார்ட் ஆகும்' என்றார். பஞ்சுவுக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. ஹெட்மாஸ்டர் மேலும் கூறினார் 'இதைவிட ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. அதைக் கேட்டால் நீங்கள் இன்னும் ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்து விடுவீர்கள்' என்று கூறினார். இதைவிட வேறு சந்தோஷமான செய்தி என்ன இருக்க முடியும் என்று பஞ்சுவுக்கு தெரியவில்லை. வாசகர்களாகிய உங்களுக்கு புரிந்திருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும். இல்லை என்றால் அதை நான் உங்களுக்கு நாளை தெரியப்படுத்துவேன்.

No comments:

Post a Comment