Monday, April 24, 2023

மூன்று தலைமுறை -32

 மூன்று தலைமுறை  -32

By N Krishnamurthy 

விசு ரெகுலராக கல்லூரிக்கு சென்று வர ஆரம்பித்தான். அவனும் கணேசனும் மாம்பலம் பஸ் ஸ்டாண்ட் வரை சென்று அங்கிருந்து 

5 B பஸ்சில் ஏறி, காலேஜ் வாசலில் இறங்கி கொள்வார்கள். மதியம் லஞ்ச் எடுத்து செல்வதற்காக ஒரு சிறிய எவர்சில்வர் டிபன் பாக்ஸ் வாங்கப்பட்டது. விசு இன்ஜினியரிங்  படிப்பதால் அதற்கேற்ப விசுவின் மதிய உணவு வெறும் தயிர் சாதத்திலிருந்து கொஞ்சம் வித்யாசமாக மாற்றினாள்  விசாலி. எள் சாதம், எலுமிச்சை சாதம்,தேங்காய் சாதம், சாம்பார் சாதம் இவற்றில் ஏதாவது ஒன்று தினமும் இடம் பெறும்.

விசு  சௌகரியமாக படிப்பதிற்கு ஒரு ஸ்டீல் மடக்கு நாற்காலி,சிறு மர மேஜை,டேபிள் லேம்ப் ஆகியவற்றை பஞ்சு வாங்கி வந்தார்.

வீட்டு ஓனர் போர்ஷனுக்கும் இவர்கள் போர்ஷனுக்கும் இடையில் உள்ள காலி இடத்தில் ஒரு தென்னை மரம் இருந்தது.விசு அதில் ஒரு ஆணியை அடித்தான்.

காலேஜிலிருந்து வந்ததும் சந்தி பண்ணி விட்டு சாப்பிட்டுவிடுவான்.

பின்பு கெரசினில் எரியும் லாந்தர் விளக்கை ஏற்றி தென்னை மர ஆணியில் மாட்டி விடுவான்.மேஜையும் நாற்காலியும் வீட்டிலிருந்து தென்னை மரத்தின் அடிக்கு இடம் பெயரும்.

கிட்டத்தட்ட இரவு 8 மணியிலிருந்து 11 வரை விசு தென்னை மரத்தடியில் அப்போதைக்கப்போது அடிக்கும் காற்றை அனுபவித்திக்கொண்டு மேத்ஸ் மற்றும் அப்ளைடு மெக்கானிக்ஸ் பிராபளங்களை சால்வ் செய்ய முயற்ச்சிப்பான்.

காற்று நிற்க்கும் இடைவெளியில் கொசு கடித்து பிராணனை வாங்கும். (அந்த காலத்து மாம்பலம்,கோடம்பாக்கம், வில்லிவாக்கம் கொசுக்கள் உலக பிரசித்தம். கொசுவை விரட்ட கொசு வத்தி சுருளோ,குட் நைட்டோ வராத காலம் அது).

பஞ்சு ஒரு மாதம் சம்பளம் வாங்கியவுடன் கொஞ்சம் லேட்டாக வீட்டிற்கு வந்தார். கையில் ஒரு பெட்டி.அதை அவர் திறந்து உள்ளிருந்த பொருளை வெளியில் எடுத்ததும்  எல்லோர் கண்களும் விரிந்தன. ஆச்சரியப்பட்டார்கள். அது வேறொன்றுமில்லை Gentlemen.5 valve,3 band, 'Murphy' ரேடியோதான் அது.

அந்த வார ஞாயிற்றுக்கிழமை, மாடியில் ஆன்டனாவை விசுவும், பஞ்சுவும் சேர்ந்து கட்டினார்கள்(வீட்டு ஓனர் அனுமதி வாங்கியபின்தான்.

அவர் போட்ட ஒரே கண்டிஷன் நல்ல பாட்டு கச்சேரி இருந்தால் அதை கேட்க அவரை அழைக்கப்பட வேண்டும் என்பதே).

என்னப்பா ஒரு ரேடியோவிற்கு இத்தனை பில்டப்பா என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது.அந்த காலத்தில் ஒரு ரேடியோவோ,சைகிளோ வாங்குவது இந்த காலத்தில் ஆடி கார் வாங்குவதற்கு சமம்.இந்த ரேடியோவை மாத தவணையில் கொடுத்து செல்வம் ஈட்டிய பன்னீர்தாஸ் ஞாபகம் வர வில்லையா? 

அடுத்த நாள் பஞ்சு மாம்பலம் போஸ்ட் ஆபிசுக்கு சென்று ரேடியோவுக்கான ஒரு வருட லைசன்ஸ் பணத்தை கட்டினார்.

காலைப்பொழுது முழுவதும் ரேடியோ விசாலியின் ஆளுமையில் இருந்தது.

AIR ன் 'பக்தி  ரஞ்சனி' மேலும் பக்தி பாடல்கள் என அவளுக்கு பிடித்தது காலை நேரங்களில் ஒலி பரப்பாகும்.

ராஜகோபலய்யரும், மங்களமும் சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷதர்,எம்பார் விஜயராகவாச்சாரியார்,கிருபானந்த வாரியார் மற்றும் T.S.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியோரின் கதா காலட்சேபங்கள் ஒலிபரப்பப்பட்ட போதெல்லாம் கேட்டு மகிழ்ந்தனர். சாயங்காலத்தில் விசு ஹிந்தியில் "ஜெயமாலா" விரும்பி கேட்பான்.வட இந்திய இசை அமைப்பாளர்கள் கொடி கட்டி பறந்த காலம் அது.ஹிந்தி எதிர்ப்பு ஆரம்பிக்காத நேரம் அது.

ஹிந்தி பாஷை புரியாவிட்டாலும் பாடல்களில் உள்ள இசை நயத்தை கோடானகோடி ரசிகர்கள் ரசிப்பார்கள். நல்லது எது, கெட்டது எது என பகுத்தறியும் உண்மையான பகுத்தறிவாளர்களாக தமிழக மக்கள் அக்காலத்தில் இருந்தார்கள். போலி பகுத்தறிவு வாதம் என்ற விஷ விதை விதைக்கப்படாத காலம் அது.

காலேஜுக்கு போட்டுக்கொள்ள வேண்டிய பேன்ட்,சர்ட்டை முதல் நாள் இரவே விசு அயர்ன் செய்துகொண்டு விடுவான்.அயர்ன் பாக்ஸ் இல்லாத காலம் அது.பெரிய ஏனத்தில்(பாத்திரத்ததில்) அடுப்பு கரி தணலை போட்டு பாத்திரத்திதை (சூடு கையில் படாமல் இருக்க)

துணியால் பிடித்ததுகொண்டு அயர்ன் செய்யும் டெக்னிக்கில் விசு கை தேர்ந்தவனானான்.

தேவைப்பட்டால் அப்படி அயர்ன் செய்த துணியை தூங்கப்போகு முன் தலைகாணிக்கு அடியில் வைத்து காலையில் எடுத்துக்கொள்வான்

No comments:

Post a Comment