Wednesday, April 26, 2023

மூன்று தலைமுறை -34

 மூன்று தலைமுறை  -34

By N Krishnamurthy 

முதல் இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.

இரண்டாம் வருட ஆண்டு விடுமுறை முடிந்து மூன்றாவது வருடம் ஆரம்பிக்கும் சமயம் இரண்டாம் வருட தேர்வு முடிவு வந்திருந்தது.

விசு நல்ல மார்க் எடுத்திருந்தான்.முதல் 5 ரேங்க்குக்குள் வந்திருந்ததால், அவன் விருப்பப்படியே பிரான்ச்சை முடிவு செய்யலாம் என்று தெரிவித்து இருந்தார்கள். அந்த வருடம் Telecommunication என்ற புது பிரான்ச் தொடங்கப்பட்டு இருந்தது.இதைப்படித்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விசு Telecommunication பிரான்ச்சையே தேர்ந்தெடுத்தான். மெக்கானிக்கல் பிரான்ச்சை பிரண்ட் கணேசன் எடுத்துக் கொண்டான்.விசு படிப்பிற்காக விசாலியும், பஞ்சுவும் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.காலச்சக்கரம் யாருக்கும் காத்திராமல் மகாபாரதம் சீரியலில் வருகிற மாதிரி அதி வேகமாக சுழன்றது. கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. விசுவின் பைனல் இயர் பரிட்சைகள் 1962 ஏப்ரலில் தொடங்கி மே மாதம் வரை நடந்தன.

விசு மிகவும் கஷ்டப்பட்டு இரவு பகல் பாராமல் படித்துக்கொண்டிருந்தான். கல்லூரி லைப்ரரிக்கும், கன்னிமரா லைப்ரரிக்கும் வேண்டும்போதெல்லாம் சென்று வந்தான்.

விசு பரிட்சையை நன்றாக எழுதி இருந்தான்.லேப்(பிராக்டிகல்)பும் நன்றாக பண்ணியிருந்தான். ஜூலை முடிவில் ரிசல்ட்டு வரும் என தெரிந்தது. அப்போது CEG மெட்ராஸ் யூனிவர்சிட்டியை சேர்ந்ததாக இருந்தது. ரிசல்ட் வருவதற்கு முதல் நாள் பேப்பரில் மறுநாள் B.E ரிசல்ட் வருவதாக தெரிவித்து இருந்தபடியால் விசுவும் கணேசனும் சேப்பாக்கில் உள்ள மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வைக்கப்பட்டிருந்த ரிசல்ட் போர்டை பார்க்க சென்றார்கள்.இருவரும் பஸ்ட் கிளாஸ் வாங்கி இருந்தது தெரியவந்தது. இரண்டு நாட்கள் கழித்து விசு கல்லூரிக்கு சென்றான். பிரின்சிபால் அழைப்பதாக அறிந்து அவர் அறைக்கு சென்றான்.இவனை பார்த்ததும் "கார்த்திகேயன்.கங்கிராட்ஸ் இம்மானிலத்திலேயே இந்த வருட B.E யில் நீ தான் முதல் ரேங்க் வாங்கி இருக்கிறாய். உனக்கு கோல்ட் மெடல் கிடைக்கப் போகிறது' என்றார். 'நன்றி சார்' என்று சொல்லி விட்டு வெளியே வந்த அவன் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தான். மொத்தத்தில் எப்படி வீட்டுக்கு போனான் என்று அவனுக்கே புரியவில்லை. வீட்டுக்கு போய் தாத்தா பாட்டி,அம்மாவிடம் விஷயத்தை கூறி விட்டு அப்பாவிற்கு சொல்லிவிட்டு வருகிறேன் என்று கூறி சைக்கிளை எடுத்துக்கொண்டு பஞ்சுவின் ஆபீஸுக்கு சென்றான் விசு. தீடிரன விசுவை பார்த்தவுடன் பஞ்சுவுக்கு பயம் வந்து விட்டது "என்னடா விசு திடீர்னு வந்து இருக்கே"என்று கேட்டார். "அப்பா.ஒரு நல்ல விஷயம் சொல்ல வந்தேன்" என்றான். விஷயத்தை கேட்டவுடன் பஞ்சுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பட்ட கஷ்டத்துக்கெல்லாம் கடவுள் கைமாறு செய்துவிட்டார் என்று புரிந்தது. மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு பர்மிஷன் வாங்கிக்கொண்டு விசுவும், பஞ்சவும் புது மாம்பலம் சிவா விஷ்ணு கோவிலுக்கு சென்று ஸ்வாமி கும்பிட்டபின் வீடு வந்து சேர்ந்தார்கள். வந்தவுடன் இருவருக்கும் விசாலி அவல் பாயசம் கொடுத்தாள்.ராஜகோபல அய்யர் விசுவை தட்டி கொடுத்தார்.மேலும் 'டே விசு.நான் ஒரு கிராமத்தான். இப்படியெல்லாம் திட்டம் போட்டு குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என எனக்கு தெரியாமல் போயிடுத்து. தெரிஞ்சிருந்தால் அந்த காலத்தல பஞ்சுவையும் கிராஜுவேட் ஆக்கியிருப்பேன்'என்றார்.

அவரது பேச்சு தான் அவ்வாறு செய்ய முடியவில்லையே என்ற கழிவிரக்கத்தை விட பஞ்சு விசுவுக்கு செய்திருப்பதை பாராட்டும் விதமாகவே இருந்தது. விஷயத்தை கேள்விப்பட்ட ராமனாத சாஸ்திரிகள் நேரில் வந்து விசுவை மிகவும் பாராட்டினார். இந்த சந்தோஷத்திலே இரண்டு நாட்கள் சென்று விட்டன. காலையில் பஞ்சு ஆபிஸ் கிளம்புவதற்கு முன் விசுவைப்பார்த்து "மேற்கொண்டு என்ன செய்யப்போற" என்று கேட்டார். 'ஏதாவது ஒரு நல்ல கம்பெனியாக பார்த்து அப்ளை செய்யவேண்டும்.

I.S.R.O, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற கம்பெனிகளில் பிரஷ்ஷாக இன்ஜினியர்களை எடுக்கிறார்களாம். அதற்கும் அப்ளிகேஷன் போடலாம் என்று இருக்கிறேன்' என்றான் விசு. "ஏன் இப்பொழுது வேலையை பற்றி நினைக்கிறாய்.உனக்கு வேலைக்குப் போகும் வயசாயிட்த்தா என்ன? நீ ஏன் மேல்கொண்டு படிக்க கூடாது?" என்றார் 'படிக்கலாம் அப்பா.P.G படிக்கலாம். அது தேவையா என்று பார்க்கிறேன்" என்றான் விசு.பஞ்சு கூறினார் "நீ P.G யோடு ஏன் நிறுத்த வேண்டும்? படிப்பின் உச்சத்தைத் நீ தொட வேண்டும் என்று தான் நான் உன் சிறுவயது முதல் எண்ணிக் கொண்டிருக்கிறேன். என்னையும் அதற்காகவே நான் தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நான் படிக்க முடியாத படிப்புகள் எல்லாம் என் மகன் படிக்க வேண்டும் என்று நான் நினைக்க கூடாதா?" என்றார் பஞ்சு.அவர் சொன்னதை கேட்டு மனம் நெகிழ்ந்த விசு

"நிச்சயம் அப்பா.உங்கள் ஆசையையும், லட்சியத்தையும் நான் நிறைவேத்துவேன்" என்றான் உணர்ச்சி பெருக்குடன். அப்போது பஞ்சு கூறினார் 

"நீ பிறந்த உடன் கும்பகோணத்தில் உன் ஜாதகத்தை கணித்து பலனை கேட்டபோது ஜோசியர் இரண்டு விஷயங்களை கூறினார். ஒன்று நீ நன்றாக படிப்பாய் என்றார். இன்றுவரை நீ மிகவும் நன்றாக படித்துக் கொண்டு வருகிறாய். இரண்டாவது விஷயம் நீ படிக்க கடல் கடந்து போவாய் என்றார்.

அதற்கு இப்போ வேளை கூடி வறதோ என்னமோ. அவர் கூறிய இரண்டாவது விஷயத்தை நான் யாருக்கும் இதுவரை சொன்னதில்லை. இப்போதுதான் உனக்கு சொல்கிறேன்"என்றார்.

பஞ்சுவுக்கு இப்பொழுது ஜோசியர் சொன்ன அடுத்த விஷயம் ஞாபகம் வந்து தொலைத்து விட்டது .

எதை நினைத்து மனதை அலை பாயவிடக்கூடாது என்று நினைத்தாரோ அது இப்போதுதான ஞாபகம் வர வேண்டும்.

அதை நினைத்தவுடன் அவருக்கு மனம் சங்கடமாகிவிட்டது. வெளியே சொல்ல முடியாத நிலைமை. அப்படி ஒரு நிலமை வருவதாக விதி இருந்தால் அதை அனுபவித்து தான் தீர வேண்டும் என்று பஞ்சு மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டார்.

"நீ போஸ்ட் கிராஜுவேஷன் வெளிநாட்டில் தான் செய்ய வேண்டும்" என்று கூறினார் "அப்படி எல்லாம் போய் படிக்க ரொம்ப செலவாகுமே அப்பா" என்றான் பஞ்சு. 'செலவையெல்லாம் அப்புறம் பாத்துகலாம். அதுக்கு நான் ஒரு யோஜனை வைச்சிருக்கேன். Foreign யுனிவர்சிட்டிகளில் உன்னைப்போன்ற புத்திசாலிகளுக்கு ஸ்காலர்ஷிப் நிச்சயம் கிடைக்கும் முதலில் கொஞ்சம் செலவழிக்க வேண்டியது தான். பின்பு ஈசியாய் விடும். முடித்தவுடன் அங்கே ஒரு வருடம் இரண்டு வருடம் வேலை செய்தால் மேல் கொண்டே P.hD யும் பண்ண வசதியா இருக்கும்" என்றார். அப்பாவின் தொலைநோக்குப் பார்வையை எண்ணி விசு ஆச்சரியப்பட்டான். இதே போன்ற ஒரு தந்தையும், எனக்காக உயிரையும் கொடுக்க கூடய தாயாக விசாலியும் கொடுத்ததற்காக கடவுளுக்கு மனதிற் குள் நன்றி கூறினான்.

No comments:

Post a Comment