Saturday, April 22, 2023

மூன்று தலை முறை -30

 . மூன்று  தலை முறை -30

By N Krishnamurthy 

பஞ்சுவும்,விசுவுடன் கிண்டி என்ஜினியரிங் கல்லூரிக்கு ( இனி இதை CEG என அழைப்போம்) சென்றார்.அப்போது புதிதாக பிரின்சிபாலாக பொறுப்பேற்றிருந்த ப்ரொபசர் ராஜகோபல் பிள்ளையை இருவரும் சந்தித்தனர்.நிறைய வேலைகள் இருந்த காரணத்தால் பிரின்சிபால்  அவல்களிடம் அதிக நேரம் செலவிட முடியவில்லை.

விசு கல்லூரியில் சேருவதை வரவேற்பதாக கூறிய பின் ஆபிசில் முதல் டெர்ம் பீஸை கட்டுமாறு கூறினார்.

முதல் டெர்ம் பீஸான 96 ரூபாயை( நம்பினால் நம்புங்கள்.நம்பாவிட்டால் போங்கள்.வெறும் 96 ரூபாய் தான். இன்றைக்கு சரவண பவனில் இந்த தொகைக்கு இரண்டு காபி தான் குடிக்க முடியும்). பஞ்சு CEG  ஆபிஸில் கட்டி ரசீது பெற்றார்.

அடுத்த புதன் கிழமை கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்திருந்ததால் இருவரும் வீடு திரும்ப தீர்மானித்தனர். அதற்கு முன் பஞ்சு விசுவைப்பார்த்து "கல்லூரியை சுற்றி பார்க்கலாமா" என்றார்.

இருவரும் கல்லூரியை ஒரு ரவுண்ட் அடித்தனர்.பெரிய மைதானத்தில் சிலர் கிரிகட் ஆடிக்கொண்டிருந்தனர்.பஞ்சு கல்லூரியை சேர்ந்த சிலருடன் கேட்டு தெரிந்து கொண்ட முக்கியமான செய்தி,ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டியது கட்டாயமில்லை.வீட்டிலிருந்தே வந்து படிக்கலாம் என்பது.

முதல் இரண்டு வருடங்கள் பொதுவான சப்ஜட்டுக்கள் படிக்க வேண்டும் என்றும், இரண்டாம் வருட மார்க்குகள் அடிப்படையில் மூன்றாம் வருட ஆரம்பத்தில்  பிரான்ச் கொடுக்கப்படும் என்பது பஞ்சு தெரிந்து கொண்ட அடுத்த செய்தி.

விசு தன்னைப்போல சேர வந்திருந்தவர்கள் சிலருடன் பேசினான்.விசு பழைய மாம்பலத்திலிருந்து வரும்  கணேசன் என்ற மதுரையை சேர்ந்த மாணவனுடன் கொஞ்ச நேரம் செலவிட்டான். விசுவும்,பஞ்சுவும்  சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்தார்கள். மறுநாள் இருவரும் கவர்ன்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ் சென்று ஜனாப் மீர் ஷபீர் ஹுசனை சந்தித்து விஷயத்தை கூறினர்.

அவர்,ஒரு விதத்தில், விசு தங்கள் கல்லூரியில் தொடர முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் அவன் என்ஜினியரிங் படிக்கப்போவது தனக்கு ரொம்ப சந்தோஷம் அளிப்பதாக கூறினார்.விசு அவரை நமஸ்கரிக்க முற்பட்டபோது அவனை தடுத்து நிறுத்தி அவரது பேன்ட்டின் இடது பாக்கெட்டில் கை விட்டு இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து விசுவிடம் கொடுத்தார்.விசு வாங்க மறுத்த போது விடாப்பிடியாக அவன் கைகளில் பணத்தை திணித்தார். பஞ்சுவிடம் பஞ்சு சார் 'எப்போது என்ன உதவி வேண்டுமானாலும் என்னை அணுகலாம்' என்றார்.

அவரது அன்பையும்,பரிவையும் பார்த்து விசுவுக்கும், பஞ்சுவுக்கும் கண்களில் நீர் தளும்பியது.நல்லவர்களுக்கு ஜாதி, மத, இன பேதம் கிடையாது.மேன் மக்கள் என்றும் மேன் மக்களே.

எத்தனையோ மீர் ஷபீர் ஹீசைன்கள் இவ்வுலகத்தில் உண்டு.நம் கண்ணுக்குத் தான் புலப்படுவதில்லை.

விசுவின் வாழ்வில் மீர் ஷபீர் ஹீசைன் ஒரு முக்கிய பங்கு வகித்தார் என்றால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment