Thursday, April 6, 2023

மூன்று தலை முறை -20

 மூன்று தலை முறை -20

By N Krishnamurthy 

விசுவின் பிரம்மோபதேசத்தை விவரிக்கு முன் பிரம்மோபதேசத்தின் முக்யத்துவத்தை பார்க்கலாம்.

பிரம்மோபதேசத்தின்போது காயத்ரி மந்திரத்தை 'வடு' வின் தகப்பனார் வடுவின் காதில் சொல்ல வேண்டும் .காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதை ரகசியமாக தான் சொல்ல வேண்டும்.ஏதோ ஒரு விஷயத்தை நாம் ரகசியமாக சொல்லும்போது அந்த விஷயம் மிக முக்கியமானது என்று அறிந்து கொள்கிறோம். காயத்ரி மந்திரம் எனர்ஜி வாய்ந்தது.ஒரு எலக்ட்ரிகல் எனர்ஜிக்கு இதை ஒப்பிடலாம். எலக்ட்ரிக்கல் சர்க்யூட்டில் ஏதாவது லீக் இருந்தால் அந்த எனர்ஜி குறைகிறது.  அதேபோன்றே காயத்ரி  மந்திரத்திலும் பிறர் கேட்கும்படி  லீக் செய்தால் அதனுடைய பலன் குறைகிறது. 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனும் கீதையில் தான் மந்திரங்களில் காயத்ரி மந்திர ஸ்வரூபனாக இருப்பதாக கூறுவதிலிருந்து இதன் மகிமையை நாம் அறியலாம். இம்மந்திரம் வேதங்களை பிழிந்தெடுத்த சாரம்(Essence) என்கின்றனர்.இந்த காயத்ரி மந்திரத்தின் மகிமையை தொன்று தொட்டு வழங்கி வரும்  இரு கதைகள் மூலம் விளக்கஎண்ணுகிறேன்.

 *முதல் கதை:* 

பூணூல் போடப்பட்டபையனுக்கு காயத்ரி மந்திரம் உபதேசம் கொடுத்த குரு அந்த பையனிடம் 'காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் உனக்கு எல்லா விதமான சக்தியும் கிடைக்கும்' என்று கூறியிருந்தார். தொடர்ச்சியாக ஆறுமாதம் சொல்லிக் கொண்டிருந்தபோது அந்த பையனுக்கு ஒரு சந்தேகம் முளைத்தது. தனக்கு என்ன சக்தி கிடைத்தது என்று யோசித்துப் பார்த்தான். ஒன்றும் கிடைக்காதது மாதிரி இருந்தது. இதனால் மனம் வெறுத்த அவன் ஒரு கிணற்றடியில் போய் நின்று கொண்டு உரத்த குரலில் 'காயத்ரி தேவியே. உன்னுடைய மந்திரத்தை தினம் தினம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் எனக்கு ஏதும் புதிதாக சக்தி கிடைக்கவில்லை.எனவே நான் கிணற்றில் குதித்து என் பிராணனை விடப் போகிறேன்' என்று கூறினான். அந்த சமயத்தில் திடீரென்று உரத்த குரல் எழுந்தது'அப்படி எதுவும் செய்து விடாதே.

நீ தற்கொலை செய்து கொண்டால் என்னைப்போன்ற பூத பிசாசாக மாறி விடுவாய். அப்போது உனக்கு குடிப்பதற்கு மனிதனின் ரத்தம் தேவைப்படும். அவ்வாறு நீ செய்வது நல்லதல்ல' என்று ஒரு பிசாசு சொன்னது.  சிறுவன்'இவ்வளவு தூரம் அறிவுரை கூறும் நீ ஏன் என் முன் வந்து நின்று இந்த அறிவுரை கூற கூடாது?'என்று கேட்டான்.

அதற்கு அந்த பிசாசு சொல்லியது 'நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் உன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. என்னால் உன் அருகில் நெருங்க கூட முடியவில்லை . நீ ஓதும் காயத்ரி மந்திரத்தின் பலன்  உனக்கு முழுவதும் கிடைத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்' அதை கேட்ட அந்த சிறுவன்  தற்கொலை செய்யும் எண்ணத்தை விடுத்து மீண்டும் காயத்ரி மந்திரத்தை மிக அதிகமாக நேசித்து உச்சரிக்க ஆரம்பித்தான்.

 *இரண்டாம் கதை:*

முதல் கதை காயத்ரியை சிரத்தையாக செய்தால் கிடைக்கும் பலனை பற்றி கூறியது.

இரண்டாம் கதை காயத்ரியை அசிரத்தையாக செய்தால் என்ன ஆகும் என்று விளக்குகிறது.

ஒரு நாட்டில் ஒரு ஏழை பிராமணன் இருந்தான்.  அவன் தினமும் 1008 காயத்திரி மந்திரம் செய்து கொண்டு மிகவும்  சாஸ்திரோக்தமாக இருந்து வந்தான். அவனுக்கு பணம் தேவைப்பட்டது. மகளின் திருமணத்திற்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன். நாட்டை ஆண்ட அரசனிடம் சென்று தனம் தறுமாறு கேட்டான். அரசனும் 'இந்த   பிராமணனைப் பார்த்தால் 25 கிலோ கூட தேரதா ஒல்லிபிச்சானாக காட்சி அளிக்கிறான் எண்ணி எடைக்கு எடை தங்கம் தரலாம்.'25 கிலோ தங்கம் தன்னைவிட்டு போவதால் குடி முழுகி போய்விடாது' என்று தீர்மானித்தான். அதன் மூலம் தனக்கும் புண்ணியம் கிட்டும் என நினைத்தான். எடை தராசில்  ஒரு பக்கம் பிராமணனை அமர வைத்துவிட்டு மற்றொரு பக்கத்தில்  தங்கத்தை வைக்கச் சொன்னான் மன்னன். தங்கம் வைக்க வைக்க பிராமணன் அமர்ந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. கிட்டத்தட்ட கஜானாவில் இருந்த தங்க முழுவதும் காலியான நிலை. மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை. கதிகலங்கி விட்டான். இதுபோன்ற மன்னர்களுக்கு மதியூக மந்திரி ஒருவன் நிச்சயம் இருப்பான். அப்படிப்பட்ட மந்திரி இந்த மன்னனுக்கும் இருந்தான்.

அவன் உடனே ஏழை பிராமணனை பார்த்து 'ஐயா இன்று முடிந்துவிட்டது. நீங்கள் நாளை மறுபடியும் வாருங்கள். தொடரலாம்' என்று கூறினான். 'சரி நாளை பார்க்கலாம்' என்று கூறி வந்து விட்டான் பிராமணன்.அன்று இரவு முழுதும் பிராமணனுக்கு உறக்கம் வரவில்லை. நாளை எவ்வளவு தங்கம் கிடைக்குமோ? நிறைய கிடைத்தால் பரவாயில்லை. கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது. மன்னன் மனம் மாறி தங்கத்தை கொடுக்காமல் ஏமாற்றி  விடுவானோ என்றெல்லாம் எண்ணி எண்ணி  தூங்காமல் இருந்தான்.அன்று மாலை சந்தியா வந்தனம் மனம் ஒன்றி கிரமமாக செய்ய முடியவில்லை. விடிந்ததும்  அரண்மனைக்கு சென்றான்.அன்று காலையும் கிரமமாக சந்தி செய்ய அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.மந்திரியும் அவனை தராசில் அமரச் செய்தான்.

அவன் அமர்ந்த உடன்  ஏற்கனவே முதல் நாள் தங்கம்  போட்டிருந்த தட்டு கீழே வந்தது. இரண்டு தட்டையும் சமன் செய்ய மன்னனுடைய ஆட்கள் தங்கத் தட்டில் இருந்து தங்கத்தை எடுக்கத் தொடங்கினார்கள். மிகக்குறைந்த தங்கம் இருக்கும் போது தட்டுகள் சமமானது. எனவே மன்னன் தட்டில்  இருந்த தங்கத்தை பிராமணனுக்கு கொடுத்தான். அவனுக்கு அதை வாங்கி கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அவனும் அதை வாங்கி கொண்டு மன்னனுக்கு வாழ்த்து தெரிவித்து  சென்றுவிட்டான்.மன்னன் மந்திரியை பார்த்து'இது எப்படி நடந்தது.

தங்க தட்டின் அடியில் ஏதாவது கனமான பொருளை வைத்து விட்டாயா?' என்று கேட்டான். மந்திரி'மன்னா.உங்கள் உப்பை தின்று வளர்ந்த நான் அது போன்று நீசத்தனமாக நடந்து கொள்வேனா?  நேற்று அந்த பிராமணன் வந்தபோது அவன் காயத்ரி செய்திருந்த பலன் முழுதும் அவனிடம் இருந்தது. நேற்று இரவு முழுதும் அவன் இந்த பணம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற வருத்தத்தில்  இருந்ததால் அவன் காயத்ரி ஜபம் செய்த போது அவன் மனம் ஒன்றி ஜபம் செய்ய முடியவில்லை.காயத்ரி மந்திரத்தின் முழுபலனையும் அவன் இழந்துவிட்டி ருந்தான்.அவன் எடைக்கு எடை தங்கம் சுலபமாக  கொடுக்க முடிந்தது'என்றான்.

No comments:

Post a Comment