மூன்று தலைமுறை -19
By N Krishnamurthy
பிராமணர்களை பார்ப்பான் என்று ஆரம்பத்தில் கூறி, பின்பு கேவலமாக பாப்பான் என்று கூறுவது வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் சில கேடு கெட்டவர்கள். பார்ப்பான் என்பது நல்ல தமிழ் வார்த்தை என்பது அவர்களுக்கு தெரியாது.அருமையான அர்த்தம் உடையது. *பார்ப்பு அன்னான்* என்பதே மருவி பார்ப்பான் ஆகிவிட்டது. பார்ப்பு என்றால் பறவை.அன்னான் என்றால் போன்றவன். அதாவது பார்ப்பான் பறவை போன்றவன். எப்படி? முட்டையாக தாயின் கருவில் இருக்கும் போது ஒரு உயிரும், வெளியில் வந்த பிறகு மற்றொரு உயிருமாக இரண்டு உயிர் உடையது பறவை என்கிறார்கள். பிராமணர்களுக்கும் பிறந்தவுடன் ஒரு உயிரும், உபநயனம் முடிந்தவுடன் மற்றொரு உயிரும் இருப்பதாக சொல்கிறார்கள். இதையே சமஸ்க்ருதம் "த்விஜன்" என்று குறிப்பிடுகிறது.
இன்று விசுவுக்கு நடந்த உபநயனத்தை விரிவாக பார்ப்போம்.
ஆத்து வாத்தியார் நாகராஜ கனபாடிகள் காலையிலேயே வந்துவிட்டார். தொடர்ந்து வைதீக பிராமணர்கள் வந்தார்கள். பஞ்சுவும், விசாலியும் மங்கள ஸ்னானம் முடித்து முறையே பஞ்சகச்சம் மற்றும் மடிசார்
உடித்துக்கொண்டார்கள்.விசுவும் எழுந்து குளித்தாய் விட்டது. விசேஷத்திற்கு தேவையான எல்லா பொருட்களும் இருக்கின்றனவா என்று ஒரு முறை சரிபார்த்துக் கொண்டார் ராஜகோபாலன். உபநயனத்தின் போது தந்தையே மகனுக்கு குருவாக இருந்து காயத்ரி மந்திரத்தை உபதேசிக்க வேண்டும்.அந்த தகுதி அவருக்கு வரவேண்டும் என்பதற்காக நாகராஜ கனபாடிகள் கூறியபடி பஞ்சு முந்தய பத்து நாட்களில் தினமும் 1008 காயத்ரி செய்து மொத்தம் 10080 காயத்ரி செய்து இருந்தார்.ஆனால் தற்சமயம் பூணல் போடும் குழந்தையின் தகப்பனார் தினமும் த்ரிகால(3 வேளை) சந்தியா வந்தனம் பண்கிறாரா என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.
முதலில் பிள்ளையார் பூஜை ஆரம்பமானது. எல்லா பூஜையும் பிள்ளையார் பூஜை செய்த பின்னரே ஆரம்பிக்கப்படுகிறது.
கணபதியை வழிபடுவதால் விசேஷங்கள் விக்னம்(தடை) இல்லாமல் நடைபெறும் என்பது நம் எல்லோரது நம்பிக்கை. கொஞ்ச நேரம் சென்றதும் குமார போஜனம் ஏற்பாடானது.விசு விற்கு பக்கத்தில் ஏற்கனவே உபநயனம் செய்யப்பட்ட இரண்டு பிரமச்சாரிகளை உட்காரவைத்து மூவருக்கும் இட்லி பரிமாறப்பட்டது. இந்த குமார போஜனத்துடைய தாத்பரியம் பழைய கால சம்பிரதாயத்தை அடிப்படையாக கொண்டது.உபநயனம் முடிந்த கையோடு பூணல் போடப்படும் 'வடு' வேதம் படிக்க குருகுலத்திற்கு அனுப்பட்டுவிடுவான்.
அவனுக்கு அடுத்த பல வருடங்களுக்கு வீட்டிலிருப்போர் யாரும் துணையிருக்க முடியாது.
குமார போஜனத்தில் அவனது பக்கத்தில் அமர்ந்து சாப்பிடும் பிரம்மச்சாரிகள் பிற்பாடு புதிதாக பூணல் போட பட்டவன் குருகுல வாசம் செய்யும் போது,அவன் அருகில் இருந்து அவனுக்கு வேண்டிய எல்லா உதவிகளும் செய்வார்கள் என்பதாக அர்த்தம். சிலர் சம்பிரதாயங்களில் குமார போஜனத்தில் 'வடு'வினுடைய அம்மாவும் பக்கத்திலிருந்து சாப்பிட வேண்டும் என்று விதி இருக்கிறது.
குமார போஜனம் ஆனதும் சௌளம் ஆரம்பமானது. இந்த சௌளத்தின் போது விசுவிற்கு தலையில் உள்ள முடியை அகற்றினார் உள்ளுர் நாவிதர்.(சில சம்பிரதாயங்களில் 'வடு'வின் தகப்பனார் முதலில் சிம்பாலிக்காக குழந்தையின் சில முடிகளை நீக்கவேண்டும் என்கிறார்கள்). முன் பக்கத்தில் நான்கு முடியும் உச்சந்தலையில் ஒரு முடியும் மட்டும் அகற்றப்படவில்லை.
இந்த முடி நீக்கும் சம்பிரதாயத்திற்கும் ஒரு அருமையான விளக்கம் இருக்கிறது.பொதுவாக தலைமுடி மனிதனுக்கு அழகைத் தருகிறது என்று கூறுவார்கள். இது போன்ற அழகை தரக்கூடிய சின்னஞ்சிறு விஷயங்களில் ஈடுபாடு கொள்ளாமல் தன் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த 'முடி துறத்தல்' செய்யப்படுகிறது. இதற்கு சிலர் வேறுமாதிரி விளக்கம் கூறுவார்கள். முடியை முழுதும் எடுத்து விட்டால் பின்பு முடி மிகவும் அடர்த்தியாக
வளரும் என்பதே அவர்கள் வாதம். அக்கால கட்டத்தில் குழந்தைகள் பெரியோர்கள் சொற் கேட்டு நடந்ததால் இந்த மொட்டை அடிக்கும் நிகழ்ச்சிக்கு ஏதும் மறுப்பு தெரிவிப்பதில்லை.
ஆனால் இக்காலத்தில் நிலைமை வேறு.நிறைய உபநயனங்களில் இப்பழக்கமே இல்லை.சிலர் மட்டும் போனால் போகிறது என்று தலையின் முன்புறம் உள்ள சில முடிகளை மட்டும் அகற்ற பெரிய மனது பண்ணி ஒத்துக் கொள்கிறார்கள். சௌளம் முடிந்ததும் பஞ்சு நாவிதருக்கு தக்க சன்மானம் செய்தார்.
அடுத்து ஸ்னானம் செய்த விசு, சுந்தரேச தாத்தா வாங்கி கொடுத்த பட்டு வேஷ்டி உடுத்தி அங்கவஸ்தரத்தை இடுப்பில் துண்டாக கட்டிக்கொண்டான்.நெற்றிக்கு விபூதி,சந்தனம் இட்டுவிட்டார்பஞ்சு.
தொடர்ந்து ஹோமம் வளர்க்கப்பட்டு பஞ்சு வாத்யார் சொன்ன மந்திரங்களை கூறி ஹோமகுண்டத்தில் சமிதியை போட்டுக் கொண்டிருந்தார்.
நாகராஜ கனபாடிகள் பஞ்சுவிற்கு பஞ்சபாத்திரத்திருந்து நீரை வலது கையால், உத்தரணியால் எடுத்து அச்சுதாய நம:அனந்தாய நம:
கோவிந்தாயா நம: என கூறியபடி எப்படி ஆசமனம் செய்ய வேண்டும் என சொல்லிக்கொடுத்தார்.இது முடிந்தவுடன் மந்திரங்கள் முழங்க விசுவிற்கு யக்னோபவிதம்(பூணல்)போடப்பட்டது. இடுப்பில் மான் தோல் கட்டப்பட்டது.இதனை அடுத்து முக்கியமானதும்,இந்த விசேஷத்திற்கு அடிப்படையானதுமான (காயத்ரி மந்திர) பிரும்மோபதேசம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment