மூன்று தலைமுறை-28
By N Krishnamurthy
விசு தினம்தோறும் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தான். மதிய சாப்பாட்டை அலுமினியம் டிபன் பாக்சில் எடுத்துக் கொண்டு செல்வான்.மதிய சாப்பாடு தயிர்சாதமும், தொட்டுக்கொள்ள மாவடுவோ,ஏதேனும் ஊறுகாயோ தான். காலேஜின் பின்புறம் ஒரு ஸ்டோர் ரூம் இருந்தது.அதை கடந்ததும் பெரிய விளையாட்டு மைதானம் உண்டு. மைதானத்தில் முடிவில் கூவம் நதி ஓடும்.ஓடும் என்றா சொன்னேன்.
மன்னிக்கவும். ஓடாது.
வெறுமனே நிற்கும். கல்லூரியில் சில நாட்கள் வகுப்பில்லாத போது மைதானத்தில் உள்ள மரத்தின் அடியில் அமர்ந்து பாடங்களை படிப்பான். விசுவுக்கு வாய்த்த லெச்சரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். வைஸ் பிரின்சுபால் அவர்களிடம் விசுவின் மேல் தனி கவனம் செலுத்துமாறு கூறியிருந்தார். அவர்களும் விசுவுக்கு எப்போது பாடத்தில் உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் உதவினார்கள். விசுவும் சிறப்பாக படிக்க ஆரம்பித்தான். ஆண்டு முடிவில் P.U.C எக்ஸாம் வந்தது. பரிட்சையை நன்றாக பண்ணியிருந்தான் விசு. சம்மர் வக்கேஷன் முடிந்தும் ஒரு நாள் விசுவும் பஞ்சவும் ரிசல்ட் தெரிந்து கொள்ள காலேஜ் சென்றிருந்தார்கள். இவர்களைப் பார்த்த ஜனாப் மீர் ஷபீர் ஹுசைன் அவர்கள் வாயெல்லாம் பல்லாக 'வாங்க பஞ்சு சார். ரொம்ப சந்தோஷமான ந்யூஸ்' என்றார் 'விசு கல்லூரியில் முதலாக வந்திருக்கிறான். கணிதத்தில் சென்டம்,
பிசிக்ஸ்,கெமிஸ்ட்ரியில் டிஸ்டிங்ஷன் பிளசும், காமர்சில் டிஸ்டிங்ஷனும் வாங்கியிருக்கிறான். கல்லூரியில் கடந்த இருபது வருடங்களில் இதே போன்ற ரேங்க் யாருமே வாங்கவில்லை' என்று வைஸ் பிரின்சிபால் கூறினார். விசுவை பார்ப்பதற்கு என்று ஒரு கூட்டமே இருந்தது.அந்த கல்லூரியை சேர்ந்த வேற டிபார்ட்மெண்ட் லெக்சரர்களும் மற்றும் மாணவர்களும் அக்கூட்டத்தில் இருந்தார்கள்.
ஜனாப் மீர் ஷபீர் ஹுசைன் விசுவை கட்டி தழுவிக்கொண்டார்.பஞ்சு மிகவும் சந்தோஷப்பட்டார்.பஞ்சு விசுவின் கிரேட் சர்டிபிகேட்டை வாங்கிக்கொண்டு அங்கு திரண்டிருந்த அனைவருக்கும் நன்றி சொன்னார். 'மேற்கொண்டு என்ன செய்வதாக உத்தேசம்' என்றார் வைஸ் பிரின்சிபால். 'தெரியவில்லை சார். யோசிக்கணும்' என்றார் பஞ்சு. 'உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நமது கல்லூரியில் பி.எஸ்.சி மேத்ஸ்ஸோ, பிசிக்ஸோ சேரலாமே' என்றார்.
'அதுவும் நல்ல ஐடியாதான்.கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.நான் யோசித்து சொல்கிறேன்' என்றார் பஞ்சு.அவர் மனதில் வேறு ஒறு எண்ணம் இருந்தது. இருவரும் வீட்டிற்கு வந்து சந்தோஷ சமாஜாரத்தை எல்லோரிடம் பகிர்ந்து கொண்டார்கள். அனைவரும் அக மகிழ்ந்தார்கள். விசுவின் ரிசல்ட்டை கொண்டாடும் விதமாக அன்று விசாலி தேங்காய் பர்பி பண்ணியிருந்தாள். விஷயத்தை கேள்விப்பட்ட ராமனாத சாஸ்திரிகள் அன்று சாயங்காலமே பஞ்சு வீட்டிற்கு வந்தார்.
விசாலி அவரிடமும் 'ஸ்வீட் எடுத்துக்கோங்க மாமா' என்று கூறி ஒரு தட்டில் நான்கு பர்பிகளை கொடுத்தாள். 'தாராளமா எடுத்துக்கறேம்மா. எனக்கு பரம திருப்தி.
என் பேச்சைக் கேட்டு பஞ்சு அந்தக் கல்லூரியில் சேர்த்த ற்கு நல்ல பலன் கிடைத்துவிட்டதால் பரம சந்தோஷம்' என்று கூறினார். விசாலி அவரிடம் ஒரு சம்படத்தை கொடுத்து
"ஆத்துலே மாமிக்கும்,சபேசனுக்கும் கொடுங்கோ" என்றாள். அதனுள் ஐந்து,ஆறு பர்பிகள் இருந்தன. ராஜகோபாலனும், மங்களமும் தங்களுக்கு ஏற்படும் சிறு சிறு கஷ்டங்களைப் பற்றி கவலைப்படாமல் விசு நன்றாக படித்து மார்க் வாங்கி இருப்பது குறித்து பெருமிதப் பட்டனர்.
அவன் பேரில் காசி விச்வனாதருக்கு அர்ச்சனை செய்தனர். மேற்கொண்டு என்ன படிப்பது என்ற ஒரு கேள்வி எழுந்தது. 'அப்பா.
நான் பி.எஸ்.சி மேக்ஸ் படிக்கிறேன்' என்றான் விசு. அதற்கு பஞ்சு 'உன்னை வெறும் பி.எஸ்.சி படிக்க வைக்கத்தானா நாமெல்லாம் மெட்ராசுக்கு வந்தோம்? என்ஜினீரிங் என்று ஒன்று இருப்பது உனக்கு தெரியாதா?" என்றார். 'எனக்கு தெரியும் அப்பா. ஆனால் அதற்கு செலவு அதிகமாகும். நம்மால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை' என்றான். அதற்கு பஞ்சு 'செலவை பற்றி நீ கவலைப்படாதே. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். படிப்பை மட்டும் நீ பார்த்துக்கொள்' என்றார். அப்போது சென்னையில் ஐ.ஐ. டி,காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி, குரோம்பேட்டையில் உள்ள
எம் ஐ டி,A.C tech ஆகிய 4 என்ஜினியரிங் கல்லூரிகள் இருந்தன. எம் ஐ டி யில் பி.எஸ்.சி படித்தவர்களை மட்டும் எடுத்தார்கள். P.U.C முடித்தவர்கள் ஐ.ஐ.டி அல்லது கிண்டியில் தான் சேர வேண்டும் என்று இருந்தது. இரண்டுக்கும் அப்ளிகேஷன்களை வாங்கி வந்தார்பஞ்சு.
பூர்த்தி செய்த பார்ம்களை தபால் மூலம் அனுப்பினார்கள் .
விசு தினந்தோறும் இன்டர்வ்யூ கார்டுக்காக போஸ்ட்மேன் வரவை வழி மேல் விழி வைத்து காத்திருந்தான். பத்து நாள் கழிந்தது.
அன்று காலை 11 மணி.'சார்.போஸ்ட்" என்ற குரல் கேட்டு கூடத்திலிருந்த விசு வாசலுக்கு ஓடினான்.
No comments:
Post a Comment