Monday, April 3, 2023

மூன்று தலை முறை -17

 மூன்று தலை முறை -17

---------------------------------------------------------

பாலிகை விடுவதை பற்றிகொஞ்சம் பார்ப்போம்.

பாலிகை விடுவது சுப காரியங்கள் நடப்பதற்கு முன்னோடியாக நடத்தப்படுகிறது.இது பெரும் பழமை வாய்ந்த மரபாகும்.இது பிராமணர்களுக்கு மட்டும் உரித்தான சடங்கு இல்லை.

இந்து மதத்தில் எல்லோருக்கும் பொதுவானது இது.

தமிழர்கள் வாழ்க்கையில் இந்த பழக்கம் அந்த நாள் தொட்டு இருந்து வருவதை “விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகார வரிகள் உறுதி செய்கிறது.

இதை கண்ணகியின் திருமணத்தின் போது நடந்ததாக இளங்கோ அடிகள் குறிப்பிடுகின்றார்.

இந்த பாலிகை விடும் சடங்கு தொன்மையானது என்பதற்கும்,தமிழனின் வாழ்வில் பின்னிப்பிணைந்தது என்பதற்கும் இதைவிட Documented proof இருக்க முடியுமா?

முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமக்களும் அவர்கள் குடும்பமும் அல்லது பூணல் போட்டுக்கொள்ளப்போகும் சிறுவனின் வாழ்க்கையும் எதிர் காலத்தில் முளைவிட்டு பல்கிப் பெருகி அமைய வேண்டும் என்பதே. 

பாலிகை என்பது மண்ணால் ஆன சிறு பாத்திரம் ஆகும்.

இதில் ஐந்தைப் பயன்படுத்துவார்கள்.  பூர்வாங்கம் செய்வதற்கு முந்திய நாளே நெல், உளுந்து, கருப்பு எள், பச்சைப்பயிறு போன்ற நவதானியங்களை ஒரு பாத்திரத்தில்  நிரப்பி அதன் மேல் சிறிது பாலும்  தண்ணீரும்  சேர்த்துக் கொள்வார்கள். மறுநாள் விக்னேஸ்வர பூஜை முடிந்த பின் சங்கல்பம் செய்து கொண்டு புண்ணியாக வாசனம் செய்வார்கள். மத்தியில் பிரம்மாவுக்கு உண்டான பாலிகையையும், கிழக்கில் இந்திரனுக்கும், மேற்கில் வருணனனுக்கும், வடக்கில் சோமனுக்கும் தெற்கில் யமனுக்கும் உண்டானதாக ஐந்து 

பாலிகைகளையும் அமைப்பார்கள். புண்ணியாகவாசனம் செய்த பாத்திரத்திலிருந்து தீர்த்தத்தை கூர்ச்சத்தால் எடுத்து பாலிகைகள் மேல் தெளிப்பார்கள். தர்ப்பைப் புல்லை பாலிகை மேல் வைப்பார்கள். வைதீகர்கள் மந்திரம் சொல்ல சொல்ல நடுவில் உள்ள பாலிகையில் ஒரு முறை பாலிகை தான்யத்தை கர்த்தா

(பூணல் போட்டுக்கொள்ளப்போகும் பையனின் அப்பா அல்லது அப்பா  ஸ்தானத்தில் இருப்பவர்) இடுவார். பின் மந்திரம் இல்லாமல் இரண்டு முறை  பாலிகை தான்யத்தை அதே பாலிகையில் கர்த்தா இடுவார்.இதேமாதிரி மீதி நான்கு பாலிகை பாண்டங்களும் நிரப்பப்படும். பின்பு பாலிகைகள் மேல் சிறிதளவு  பஞ்சகவ்யம் சேர்ப்பார்கள்.(பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். 

பாலில் எடுக்கப்படுகின்ற தயிர் முதலியன ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையும், குணமும் உடையன. இவற்றை கலந்தால் சிறந்த பொருள் கிடைக்கிறது. கோமியம் மற்றும்  பசுஞ்சாணம் மருத்துவக் குணம் கொண்டவை.

பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் - 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்

இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இதுதெவ்ய வழிபாட்டின்போது முக்கிய பூஜை பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், வேளாண்மை( பயிர் பாதுகாப்பிலும்) யிலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.

பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள்:

பசும்பால் :ஆரோக்கியம் ,ஆயுள் விருத்தி
பசுந்தயிர்:பரம்பரை விருத்தி
பசும்நெய்:மோட்சம்
கோமியம் :தீட்டு நீக்கம்
பசுஞ்சாணி:கிருமி ஒழிப்பு

பொதுவாக பாவங்கள் குறைய புண்ணியங்கள் சேரும்.கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் எப்போதும் குளிர்ச்சியில் இருக்கின்றன .பெரும்பாலான கருவறைகளில் சூரிய ஒழி புகுந்து படிவதில்லை எனவே மிக குளிர்ச்சி,மிக்க இருட்டின் காரணமாக கருவறைகள் , சிலைகள், இடுக்குகள், பிளவுகள் முதலான இடங்களில் கிருமிகளும் , பாசிகளும், பூச்சிகளும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் ,அவற்றை அறவே அழிக்கின்ற ஆற்றல் பஞ்சகவ்யத்திற்கு அதிகமாக உண்டு.

புனிதம் என்ற ஒரே காரணத்திற்காகப் பஞ்சகவ்யம் ஒரு சிறந்த அபிஷேக பொருளாக மதிக்கப்படுகிறது.

பல திறம்பட அருமையான பொருள்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பிறகு அந்த சிலைகளின் இயற்கையான நுண்ணிய ஆற்றல் சற்று கூடுதலாகின்றது என்பது அறிவியல் அடிப்படையில் நிருபிக்கப்பட்டுள்ளது.

பஞ்சகவ்யதால் அபிஷேகம் செய்த பிறகு அச்சிலைகளின் அற்புத அதிசய தெய்வீக ஆற்றல் அதிகமாகின்றது என்பதும் உண்மையாகும்)

அந்த காலத்தில் இதையெல்லாம் கிரமமாக நிறுத்தி, நிதானமாக செய்வார்கள்.இந்த காலம் மாதிரி அவசர கதியில் காரியங்கள் நடக்காது. விசுவுக்கும் இப்படி கிரமமாகவும், சாஸ்த்ரோக்தமாகவும் பூர்வாங்க சடங்குகள் நடந்தன.

=பின்பு பிராமணாள் மடி பந்தி முடிந்ததும் அடுத்த பந்தியில் மீதி உள்ளவர்கள் சாப்பிட்டார்கள்.இரவு வெளிச்சத்திற்காக இரண்டு பெட்ரமாக்ஸ் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன.விளக்கை சுற்றி விட்டில் பூச்சிகள் பறந்த வண்ணம் இருந்தன.வந்திருந்த உறவினர் அனைவரும் பழங்கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.

'அந்த நாள்ல' என்று மீண்டும் கிடைக்காத பொற்காலத்தை நினைத்து புலம்பிக்கொண்டிருந்தனர்

(இன்றும் நம்மில் பலர் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்.'சென்றிதினி மீளாது. முடரே' என்று மகாகவி பாரதி இடித்துரைத்தாலும் கூட).ஒரு வயசான மாமா வந்து வெளியில் வம்பளந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து 'வெட்டிப்பேச்சு பேசினதுபோறும்.

எல்லோரும் போய் படுத்து தூங்குங்கோ.காலையில சீக்ரம் எழுந்திருக்கணம்' என்றார் உரத்த குரலில்.

பெட்ரமாக்ஸ் விளக்குகள் அணைக்கப்பட்டு அனைவரும் கிடைத்த இடத்தில் கட்டையை சாய்க்க ஆரம்பித்தனர்.நாமும் இன்று இத்துடன் முடித்து நாளை விசுவின் உபநயனத்தில் சந்திப்போம்.காலையில் சீக்கிரம் வந்து விடுங்கள்.தவறினால் பொங்கலும்,தொட்டுக்கொள்ள அருமையான கொத்சும் கிடைக்காது.

No comments:

Post a Comment