Sunday, April 2, 2023

மூன்று தலை முறை -14

 மூன்று தலை முறை  -14

விசு  பள்ளியில் சிறந்த மாணவனாக இருந்தான்.  சாயங்கால வேளையில்  விசாலி அவனுக்கு தவறாமல் ஸ்லோகங்கள் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள். விசுவுக்கு கற்பூர புத்தி. சொல்லிக்கொடுத்த நான்கு,ஐந்து நாட்களுக்குள் அவனுக்கு ஸ்லோகம் மனப்பாடம் ஆகிவிடும்.பஞ்சு கும்போணம் சென்று அவனுக்கு சின்ன சைக்கிள் வாங்கிக் கொண்டு  கொடுத்தார்.அதை வைத்துக் கொண்டு அக்ரஹார முழுதும் ரவுண்ட் அடித்தான். ஆரம்பத்தில் இரண்டு, மூன்று முறை சைக்கிளிலிருந்து கீழே விழுந்து கால் முட்டியில் அடி பட்டது. விசாலி விசுவின் முட்டி காயத்தை பார்த்துமனம் கலங்கினாள்.காயத்தின் மேல் தேங்காய் எண்ணெய் தடவினாள்.

அக்ரஹாரத்தில் சக வயதுடைய மீதி குழந்தைகளுடன் விசு அந்த கால விளையாட்டுக்களான கோலி(அதில் முக்கியமாக பேந்தா ஆட்டம்), கில்லி தாண்டல், கிட்டிப்புள் போன்ற ஆட்டங்களையும் ஆடினான்.ஊரிலுள்ள சிவன் கோயில் குளத்தில் ஓட்டாஞ்சில்லை அடித்து அலைகள் வட்ட வட்டமாக பெருகிப்போவதை கண்டு மகிழ்வான்.

பூவரச மர இலையை பறித்து  சுருட்டி வாயில் வைத்து நாதஸ்வரம்  மாதிரி ஊதுவான். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விசுவுக்கு உடலை சுத்தம் செய்ய பேதிக்கு  கொடுத்தார்கள். வீட்டின் பின்புறம் ஆமணக்கு செடி இருந்தது. அதிலிருந்து கொட்டையை எடுத்து தண்ணீரில் போட்டு சூடு படுத்துவார்கள்.மேலே நுரையுடன் எண்ணை  மிதக்க ஆரம்பிக்கும்.ஒரு பாத்திரத்தில் எண்ணையை சேர்த்துக் கொள்வார்கள். இதுதான் விளக்கெண்ணெய் ஆகும். காலையில் எழுந்தவுடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையை கொடுத்துவிட்டால் எட்டு மணியிலிருந்து பேதி ஆரம்பிக்கும். மாலை 2 மணி வரை நீடிக்கும். வயிறு முழுவதும் சுத்தமாகிவிடும். பிறகு ரசம் சாதமும், தொட்டுக்கொள்ள பருப்பு  துகையலும் ஊட்டுவார்கள். அந்தக் காலத்தில் பேதிக்கு கொடுப்பது என்பது மிகவும் முக்யமான ஒன்றாக இருந்தது. இப்போதெல்லாம் அந்த பழக்கமே இல்லை.

அதனால்தான் பெரும்பாலோர் தற்காலத்தில் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். சிலர் வெளியே சொல்கிறார்கள்.பலர் மனதுக்குள்ளே வைத்து புழுங்குகிறார்கள். *மனச்சிக்கலை விட மலச்சிக்கல் மோசமானது.* 

இதற்கிடையில் கும்பகோணத்தில் டென்ட் கொட்டாய்(திரை அரங்கம்) வந்தது.தரை டிக்கெட்டுக்கு  4 அணாவும், பென்ச்  டிக்கட்டுக்கு8 அணாவும், சேர்(Chair) டிக்கெட்டுக்கு ஒரு ரூபாயும் வசூலித்தார்கள். ஒரு ரூபாய்க்கு 16 அணா. டென்ட் கொட்டாவுக்கு முதலில் போகத் தயங்கிய மக்கள் பின்னால் கூட்டம் கூட்டமாக செல்லத் தொடங்கினார்கள்.

தரை டிக்கட் பாமர ஜனங்களுக்கு சவுகர்யமாக இருந்தது. மணலில் எச்சில் துப்ப முடிந்தது.

படம் பிடிக்கவில்லை என்றால் மணலில் படுத்து சிறு தூக்கமும் போட முடிந்தது.எல்லிஸ் டங்கன் டைரக்ஷனில், M.S, G.N.B மற்றும் சிறு களத்தூர் சாமாநடித்த சகுந்தலை படம் பிரமாதமாக ஒடியது.கர்னாடக சங்கீத ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த M.S உம் G.N.B யும் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்தார்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ராஜகோபலனை பார்க்க அவருடைய பள்ளி நண்பரான பரசுராமன் குத்தாலத்திலிருந்து வந்திருந்தார். நெடுநேரம் தன்னுடைய பால்ய நண்பருடன் அளவளாவிய பரசுராமன் 'ஏண்டா ராஜு. உன் பையன் என்ன பண்றான்' என்று கேட்டார் .

'நில புலன்களை பாத்துண்டு வீட்டோட இருக்கான்'  என்றார் ராஜகோபாலன். 

'F.A படிச்சிருக்கானில்லையோ' என்று கேட்டார் பரசுராமன். "அவன் F.A பஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணி இருக்கான்டா' என்றார் ராஜகோபாலன் பெருமையுடன். பதிலுக்கு பரசுராமன் 

'படித்த புத்திசாலி பையனை சும்மா வீட்டில் உக்கார வெச்சிண்டிருக்கயே' என்ற பின் 'கும்பகோணத்துக்கு அனுப்பு. நான் வேலை செய்யும் காசிராமன் டிரான்ஸ்போர்ட்டில் அவனுக்கு ஒரு வேலை போட்டு தருகிறேன்' என்றார் பரசுராமன். அவர் காசிராமன் டிரான்ஸ்போர்ட்டில் உயர் அதிகாரியாக இருந்தார். ராஜகோபால் 'யோசித்து சொல்றேன்டா' என்று கூறிவிட்டார். பின்பு இதை பஞ்சுவிடம் கூறினார். தனிமையில் இருக்கும்போது பஞ்சு விசாலியிடம் இதுபற்றி  கூறி 'உன் அபிப்பிராயம் என்ன' என்று கேட்டார்.

விசாலம் 'இதில்  நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது' என்று கூறியதோடு நிறுத்தாமல் 'உத்தியோகம் புருஷ லக்ஷணம்ன்னு எல்லோரும் சொல்றாளே' என்றாள். பெண்கள் இதுமாதிரிதான். நேராக தம் கருத்தை  தெரிவிக்க மாட்டார்கள். வெறுமனே கோடி காட்டி விடுவார்கள். புரிந்து கொள்வது, அதன்படி நடந்து கொள்வது

புத்திசாலி கணவனுக்கு அழகாகும். இல்லாவிட்டான் அவர்கள் படும்பாடு  அந்த கடவுளுக்கே வெளிச்சம். பஞ்சு ராஜகோபாலனிடம் 'என்னப்பா. நான் பரசுராமன் சாரை போய் பாக்கலாமா' என்றார்.

ராஜகோபாலன் உடன் சம்மதம் தெரிவித்தார். கும்பகோணத்தில் அவரைப் போய் பார்த்தான் பஞ்சு. 'உன்னால் எப்போ முடியுமோ அப்போ வந்து வேலைக்கு சேந்துகோ' என்று கூறினார் பரசுராமன்.ஒரு நல்ல நாள் பார்த்து பஞ்சு காசிராமன் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அதேசமயம் விசாலி அக்ரஹாரத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கு ஸ்லோகம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள். இலவசமாகத்தான்.

பஞ்சு வேலைக்கு சேர்ந்ததும், குழந்தைகளுக்கு விசாலி ஸ்லோகம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்ததும் பிற்காலத்தில் அவர்களுக்கு எப்படி உதவப் போகிறது என்று அவர்களுக்கே தெரியாது. கடவுள் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு மாதிரி எல்லோருக்கும் வழி காட்டுகிறான். நமக்குத்தான் அதை புரிந்து கொள்ளும் சக்தியோ,ஞானமோ இருப்பதில்லை

No comments:

Post a Comment