Sunday, November 6, 2022

மாகாளி கிழங்கு

 மாகாளி கிழங்கு 

,நன்னாரி வேர் நிலத்தடியில், அதுவே பூமிக்கு மேலே மாகாளி. இது பலர் அறியாதது.

இந்தக் காயே பலர் அறியாதது. ஆனால் மதுரை பக்கம் மிகப் பிரசித்தம்.

இது ஒரு acquired taste தான். ஏனோ எல்லோருக்கும் பிடிக்காது. மாவடு போலவே தயிர் சாதத்தை நிறைய உள்ளே தள்ள உதவும்.

மாகாளி ஊறுகாயின் வாசம் அலாதி, எனக்கு மிகவும் பிடிக்கும். பலர் அதை முகர்ந்தோ சுவைத்தோ பார்க்காமலே மூட்டைப் பூச்சி நாற்றம் எடுக்கும் என்று மற்றவர் சொல்வது கேட்டுச் சொல்வார்கள். அவர்களிடம் நான் கேட்பது: மூட்டைப் பூச்சியைச் சுவைத்தது உண்டா? 😖😵‍💫

இளம் மாகாளியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்குவதே ஒரு பெரும் வேலை. நடுவிலுள்ள தண்டு மிகவும் கடினமானது. இளசான காயில் அதுவும் எளிதாக நறுக்க வரும். விரல்கள் கருக்காமல் சிறிது எண்ணையோ, அவ்வப்போது தண்ணீரோ தடவியபடி நறுக்க வேண்டும்.

மஞ்சள் பொடி கலந்த கடைந்த கெட்டி மோரில் இந்தத் துண்டுகளைப் போட்டு பொடியாக அறுத்த எலுமிச்சம்பழத்தை அப்படியே அதில் போட்டு, தேவையான உப்பு சேர்த்து , அதில் மெல்லிய சிறு வட்டங்களாக நறுக்கிய பச்சை மிளகாயைப் போட வேண்டும். சிலர் கொஞ்சம் பெருங்காயத் தூள் சேர்ப்பார்கள். ஊறுகாய் தயார்! தாளித்தல், வதக்குதல், எண்ணெய் சேர்ப்பது என்று எதுவுமே கிடையாது. ஜாடியில் போட்டு வைக்கலாம்.

அதன் பச்சை கலந்த இளம் மஞ்சள் நிறமே அழகு. ஆனால் சில நாட்கள் ஊறிய பின்னரே அதைச் சாப்பிட்டால்தான் சுவையாய் இருக்கும்.

சிலர் பச்சை மிளகாய்க்குப் பதில் தூள் ( சிவப்பு ) மிளகாய் உபயோகித்துச் செய்வார்கள். அது ஊறுகாயையே பயங்கரமாகக் கெடுத்து விடும்.🙄

இது ஒரு வருடமானாலும் கெடாது. ஆனால் காய் ஊறி விடும் முன்பே நறுக் என்று வாயில் கடிபட சாப்பிட்டால் அத்தனை ருசி!

ஒரு வசதி என்னவென்றால் எப்போது வேண்டுமானாலும் மிஞ்சிய கெட்டி மோர், பிழிந்த எலுமிச்சை (சதை சிறிது மீதி வைத்த) துண்டுகள், பச்சை மிளகாய், தேவையானால் உப்பு, இவற்றை இதில் சேர்க்கலாம். ஆனால் தகுந்த அளவு காய் இருக்க வேண்டும்.

நன்றி சாயா சந்திரன்

No comments:

Post a Comment