Wednesday, October 6, 2021

Desert Safari – Dubai

 😀😀😀😀😀😀😀😀😀😀

நான் பயணித்த இடங்களைப் பற்றிய அடுத்த பதிவு இதோ..

Desert Safari – Dubai

நந்து சுந்து

துபாயில் இருக்கும் என் உறவினர் ஒருவர் “துபாய்க்கு நம்ம வீட்டுக்கு ஒரு தடவை வந்துட்டுப் போங்களேன்” என்று மரியாதைக்குக் கூறியிருந்தார். 

உறவினர் யாரேனும் இப்படி வாய் தவறி கூப்பிட்டு விட்டால் அது உக்ரேண் நாடாக இருந்தால் கூட போய் விடுவேன் என்பது தெரியாமல் கூப்பிட்டு விட்டார். 

துபாய் உறவினர் ‘ஒரு தடவை’ என்று தான் கூறியிருந்தார். நானும் ஒரு தடவை தான் போனேன். ஆனால் அது பல தடவைக்கு சமமாகி விட்டது. ஜஸ்ட் 28 நாட்கள் மட்டுமே இருந்தேன். காலண்டரில் 27 நட்சத்திரங்களும் ஒரு ரவுண்ட் வந்து விட்டது. ஒரு நட்சத்திரத்துக்கு மட்டும் இரண்டாம் சுற்று யோகம் அடித்தது. 

பொதுவாக டூர் ஆபரேட்டர்கள் நோட்டீஸில் போடுவார்கள். போக வர கட்டணம், உணவு, தங்குமிடம் ஆகியவைகள் அடக்கம். ஊர் சுற்றிப் பார்க்கும் சிலவுகள் தனி என்று. இந்த உறவினர் பாவம், ஊர் சுற்றிப் பார்க்கும் சிலவுகள் கூட ஏற்றுக் கொண்டார்.

அந்த சிலவுகள் பலவுகள் ஆகும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

துபாயில் நல்ல பிஸியான மெயின் ரோடில் வீடு. பக்கத்திலேயே Barjuman Mall. இரண்டு பக்கமும் மெட்ரோ ரயில் ஸ்டேஷன். 

பகலெல்லாம் பர்ஜுமான் மாலில் தனியாக சுற்றிக் கொண்டிருப்பேன். அங்கு பர்ஸ் மட்டு திறக்க மாட்டேன். மாலையில் உறவினருடன் ஊர் சுற்றல். 108 விதமான சப்பாத்தி, ரொட்டி விற்கும் ரெஸ்டாரண்டுக்குக் கூட ஒரே ஒரு முறை கூட்டிப் போனார்.

“Desert Safari போறீங்களா அங்கிள். எனக்கு ஆபீஸ் வேலை இருக்கு. டிக்கெட் புக் பண்ணித் தர்ரேன். தனியா போயிட்டு வந்துடுங்க” என்றார்.

“எங்கே வேணும்னாலும் போறேன். உங்க ஆபீஸ் வேலைக்குக் கூட போறேன்” என்றேன். இதைக் கேட்டவர் ஷேக் ஆகிப் போனாலும் எனக்கு Desert Safari க்கு டிக்கெட் போட்டு விட்டார்.

இதற்கு 80 திராமிலிருந்து 200 திராம் வரை பல விதமான பேக்கேஜுகள் உள்ளன. திராம் என்பது துபாய் நாட்டின் திரவியம். அந்த நாட்டு கரென்ஸியின் பெயர் அது. A.E.D என்று பெயர். Arab Emirates Dirham. அதைக் கேட்கும் போதெல்லாம்  Additional Excise Duty யை A.E.D என்று நம்மூரில் கூறி வந்தது நினைவுக்கு வரும்.

டிக்கெட் போட்டு விட்டார் உறவினர். மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை Safari. அதற்குப் பிறகு லுங்கி.

அடுத்த தெருவில் ஒரு ஸ்டார் ஹோட்டல் இருந்தது. அங்கு தான் பிக் அப். ஹோட்டல் வாசலில் போய் நின்றேன். சரியான நேரத்துக்கு ஒரு வேன் வந்தது. ஏ.சி வேன். துபாயில் எல்லாமே ஏ.சி தான். பஸ் ஸ்டாப் கூட ஏ.சியுடன் கூடிய கண்ணாடிக் கூண்டு தான்.

அரை மணி நேரப் பயணம். நகர்ப் புறம் மறைந்து பாலைவனம் தெரிய ஆரம்பித்தது. இறங்கச் சொன்னார்கள்.

ஒரு ஜீப் காத்துக் கொண்டிருந்தது. அதில் ஏறச் சொன்னார்கள். நான் ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டேன். (நான் எப்போதுமே ஜன்னல் ஓரம் தான். வீட்டில் மட்டும் இரவு படுக்கும் போது ஜன்னல் ஒரம் கிடையாது. பேய் கையை விட்டு பிராண்டும் என்று பயம்)

இப்போது மணலில் ஜீப் சவாரி செய்யப் போகிறோம். இதற்கு Dune bashing என்று பெயர்.

ஒரு ஜீப்பில் ஆறு பேரை ஏற்றிக் கொள்கிறார்கள். ஜீப் வேகமாக மணலில் போகும். E.C.R ல் தண்ணி அடித்தவன் கார் ஓட்டுவது போல தாறுமாறாகப் போகும்.

மணலில் போவதற்கு ஏதுவாக டயரில் காற்று கொஞ்சம் பிடுங்கியிருக்கும். பெட்ரோல் பங்கில் காற்றடிக்கும் பையனுக்கு கொடுக்கும்  5 ரூபாய் மிச்சம் அவர்களுக்கு.

ஜீப்பில் ஏறிக் கொண்டோம். ஜீப்பைக் கிளப்பினார் டிரைவர். விர்ரென்று வேகமாகப் போனது. பாலைவனத்தில் மணல் ஒரே லெவலாக இல்லாமல் சிறி சிறு குன்றுகள் போல் இருக்கும்.

அந்த குன்றின் மேல் ஜீப்பை விடுவார். பிறகு அதிலிருந்து வேகமாக இறங்குவார். ஜீப்பை  ஜெயிண்ட் வீல் மாதிரி உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஊசி போடும் முன் சிரிஞ்சிலிருந்து எதையோ பீச்சி அடிப்பாரே நர்ஸ்..அது போல நம் இருதயத்துக்கு ரத்தம் ஹை ஸ்பீடில் பாயும். பெருங்குடல் அடுத்த ப்ளாட்பாரத்துக்குப் போகும்.

இறங்குவது கூட நேராக இறங்க மாட்டார். பீக் ஹவர் டவுன் பஸ் மாதிரி ஒரு பக்கமாக சாய்த்து இறக்குவார். 

ஜீப்பில் இருந்த பெண்கள் கத்த ஆரம்பித்தார்கள். கத்தலைக் கேட்டல் நன்று என நான் அதை ஜாலியாகக் கேட்டுக் கொண்டே வந்தேன்.

நான் கத்தவில்லை. ஏனோ என்னை கத்தல் ஃப்ரூப்பாக படைத்து விட்டார் கடவுள்.

ஓன்றிரண்டு இடங்களில் மேட்டின் மீது வேகமாகப் போகும் போது ஜீப் சில நொடிகள் ஆகாயத்தில் பறந்தது. ஆகா வென்று இருந்தது. 

இப்படி கிறுக்குத்தனமாக ஓட்டுவதற்கு டிரைவர்களுக்கு நிறைய பயிற்சி வேண்டும். 

கிறுக்குப் பயணம் முடிந்து ஜீப் நின்றது. மொத்தம் 30 நிமிடங்கள் ஜீப் சவாரி என்று சொன்னார்கள். ஆனால் 26 நிமிடங்கள் தான் போன மாதிரி இருந்தது எனக்கு. மீதி நான்கு நிமிடங்களுக்கு refund கொடுப்பார்களா எனத் தெரியவில்லை.

எதிரே ஒரு பாசறை இருந்தது. நான்கு பக்கமும் தடுப்பு போட்டு கே.கே. நகர் பஸ் ஸ்டாண்ட் சைஸுக்கு இருந்தது. அந்தக் காலத்தில் ஊருக்கு வெளியே கலை விழா என்று தட்டி போட்டு மறைத்து ஒரு மைதானம் இருக்குமே...அது போல இருந்தது.

வெளியே இரண்டு ஒட்டகங்கள் நின்று கொண்டிருந்தன. அதன் முதுகில் சிவப்பு கலரில் துபாய் ஜமக்காளம் போர்த்தியிருந்தது.

இந்த பேக்கேஜில் ஒட்டக சவாரி இலவசம். ஒரு ஒட்டகத்தில் இரண்டு பேர் அமரலாம். முன்னால் ஒருவர். பின்னால் ஒரு பில்லியன். அவர் ஒல்லியனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குண்டர்களையும் ஒட்டகம் சுமக்கிறது. 

ஒட்டகம் மேல் ஏறுவது ஒரு பெரிய கலை. அதன் முதுகில் ஏறி ஒரு கைப்பிடியைப் பிடித்துக் கொண்டதும் பின்னங்காலைத் தூக்குகிறது. முறத்தில் போட்ட நெல்லிக்காய் மாதிரி நாம் முன்னால் போவோம். அப்போதே நாம் ஊறுகாய் ஆகி விடுவோம்.

அதன் பிறகு முன்னங்காலை திடீரென தூக்கி கோவை காந்திபுரம் ப்ளை ஓவர் உசரத்தில் நம்மை எங்கோ தூக்கி நிறுத்தும். ஜீப்பில் கத்திய பெண்டிர் இப்போது மறுபடியும் கத்துவார்கள். அந்த ஒட்டகக் கத்தர்களப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

ஒட்டகம் ரொம்ப தூரம் எல்லாம் போகாது. கல்யாணத்தில் மாப்பிள்ளை காசி யாத்திரை போவது போல கொஞ்ச தூரம் போய் விட்டு திரும்பி விடும். ஒட்டகம் மேல் அமர்ந்து கொண்டு அனைவரும் போட்டோ பிடித்துக் கொள்வார்கள்.

நானும் ஒட்டகத்தில் ஏறினேன்.  தனியாகப் போயிருந்ததால் என்னால் போட்டோ எடுத்துக் கொள்ள முடியவில்லை. 

ஒட்டகத்துக்குப் பக்கத்திலேயே ஒரு ஆள் ஒரு கழுகு வைத்திருந்தார். பத்து திராம் கொடுத்தால் அந்த கழுகை நம் தோளில் வைக்கிறார்.

கழுகு அழும்பு பண்ணாமல் கம்மென்று உட்கார்ந்து கொள்கிறது. நாம் போட்டோ பிடித்துக் கொள்ளலாம். நல்ல வேளையாக என் கையில் கழுகு இருப்பதை ஒருவர் போட்டோ பிடித்துக் கொடுத்தார். அந்த போட்டோவில் நான் கேவலமாக இருப்பதால் அதை தனிச் சுற்றுக்கு மட்டுமே உபயோகப்படுத்தி வருகிறேன். இங்கு போடுவதற்கில்லை. (இமேஜ் முக்கியம் அமைச்சரே)

Quad Bike என்று ஒன்று இருக்கிறது. நான்கு சக்கரங்கள் இருக்கும் பைக். அதில் ஏறி மணல் பரப்பில் சவாரி செய்யலாம். அதற்கு தனியாக திராம்கள் அழ வேண்டும். எனக்கு அதற்கு திராணி இல்லாதததால் ஏறவில்லை.

அந்த பைக்கில் வீரமாக ஏறிய பல பைங்கிளிகள் மணல் பரப்பில் பேலன்ஸ் செய்ய முடியாமல் பொத் பொதென்று விழுந்து கொண்டிருந்தது செம காமெடியாக இருந்தது. 

கலை விழா நடக்கும் பாசறைக்குள் போனேன். துபாய் பாரம்பரிய உடை வாடகைக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

வெள்ளை நிறத்தில் ஒரு அங்கி. அதை போட்டுக் கொண்டால் திருப்பதி உண்டியல் மாதிரி இருப்போம். தலையில் செஸ் போர்ட் மாதிரி கட்டம் கட்டமாக போட்டிருந்த ஒரு துண்டை கட்டுகிறார்கள். அதற்கும் மேல் குக்கர் கேஸ்கட் போல் ஒரு வளையத்தை வைக்கிறார்கள். துபாய் ஷேக் ரெடி.

வயதானாலும் ஆசை விடவில்லை. நானும் அதை அணிந்து கொண்டேன். ஒரு போட்டோவும் பிடித்துக் கொண்டேன். அந்த ஷேக்கிழார் போட்டோவை பதிவிட்டுள்ளேன். பார்த்து ‘உய்’யவும்.

நடுவே கம்பளம் போட்ட ஒரு பெரிய மேடை. சுற்றிலும் இருக்கைகள். அந்த மேடைக்கு நடுவே நடனம் நடக்கும். பெல்லி டான்ஸ் உண்டு.

முதல் வரிசையில் இடம் கிடைக்கவில்லை. இரண்டாம் வரிசையில் வசதியாக அமர்ந்து கொண்டேன்.

மாலை வந்ததும் நடனம் ஆரம்பித்தது. முதலில் Tanura Show எனப்படும் நடனம். கலர் துணியில் ஒட்டுப் போட்ட மாதிரி ஒரு நைட்டியை போட்டு வந்தார் ஒரு ஆண். தலையில் முண்டாசு.

 சுழண்டு சுழண்டு ஆட ஆரம்பித்தார். அவர் உடை குடை ராட்டிணம் மாதிரி அழகாக சுற்றியது.

போகப் போக வேகம் அதிகமானது. இதை ஆடுவதற்கு அசாத்திய திறமை வேண்டும். மிகவும் சிறப்பாக இருந்தது.

அடுத்தது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பெல்லி டான்ஸ். உயரமாக ஒரு பெண் வந்தார். இடுப்பில் பெல்லி சில்க்ஸில் வாங்கிய ரிப்பன்கள் நிறைய கட்டியிருந்தார்.

ஸ்பீக்கரில் ஹிந்தி பாட்டு போட்டார்கள். புடலங்காய் மாதிரி இருந்த உடம்பை வளைத்து வளைத்து ஆடினார். ஆபாசமாக இல்லை. இருந்தாலும் கவர்ச்சியாக இருந்தது. இரண்டுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டுமென்றால் நடிகைகளின் பேட்டிகளைப் படிக்கவும்.

அவர் வைத்த பெல்லி சூனியத்தில் பலரும் கிறங்கிப் போயிருந்தார்கள். ஒரு சில ஆண்கள் மேடைக்குப் போய் கூடவே நடனம் ஆடினார்கள். ஆடலாம். ஆனால் 440 வோல்ட்ஸ் மின்சாரத்தை தொடுவதற்கு மட்டும் அனுமதியில்லை.

அதன் பிறகு இன்னொரு Tanura டான்ஸ். இப்போது உடம்பு முழுக்க கலர் லைட்ஸ் போட்டுக் கொண்டு ஆடினார். ஆடி மாத வேம்புலியம்மன் மாதிரி சீரியல் பல்புகள் உடம்பில் பிரகாசித்தன. அதனுடனே ஆடினார். ஒரு Visual delight அது.

 பெல்லி கேர்ள் இன்னொரு டான்ஸ் ஆடினார். மறுபடியும் ஹிந்தி பாட்டு. சிரிச்சு சிரிச்சி வந்தான் சீனா தானா டோய் பாட்டு அவர்களை ரீச் செய்யாதது துரதிர்ஷ்டமே.

அதன் பிறகு சாப்பாடு. சாப்பாடு பார்ப்பதற்கே கேவலமாக இருந்தது. அதற்கும் பெரிய க்யூ நின்றது. வெஜிட்டேரியன் சாப்பாடு புக் செய்தவர்கள் பாவப்பட்டவர்கள். ஒன்றுமே இல்லை. அதற்கும் அடி தடி.

கொலைப் பட்டினியாக திரும்பி வந்தேன். ஆனால் பிரச்சினையில்லை. உறவினர் வீட்டு டைனிங் டேபிளில் எப்போதும் எட்டு ஐட்டம் இருக்கும்.

Desert Safari  போகும் அன்பர்களுக்கு ஒரே ஒரு உபதேசம். நன்றாக சாப்பிட்டு விட்டுப் போகவும். அல்லது கையில் ஏதாவது கட்டிக் கொண்டு போகவும். 

மற்றபடி அது வாழ்வில் மறக்க முடியாத ஒரு பொன்மாலைப் பொழுது தான். 

 நந்து சுந்து






No comments:

Post a Comment