கமலா கிருஷ்ணமூர்த்தி
#ஆன்மீகம்
"ராமகிரி" இந்த ஸ்தலம் நாகலாபுரத்தில் இருந்து சுமார் 3 Km தூரத்தில் உள்ளது. இது ராமாயணத்தோடு தொடர்புடைய இடம். "கிரி"என்றால் மலை. இது சிவன் கோவிலாக இருந்தாலும் இது ஒரு "காலபைரவர்" ஷேத்திரம் ஆகும். இங்கு "காலபைரவருக்கே" முக்கியத்துவம்.
முதல் தரிசனமும் அவரே தருகிறார். இந்த கோவிலில் வீற்றிருக்கும் சிவன் பெயர் "வாலீஸ்வரர்" காரணப்பெயர்.
சிவன் கோவிலாயிருந்தாலும் சிவன் சன்னதியைவிட பைரவர் சன்னதியே பெரிசு. பைரருக்கே முதல் மரியாதை. பைரவரை பார்த்துவிட்டுதான் சிவனைப்பார்க்க முடியும்.
கோவில் உள்ளே கார் நிறுத்த இடம் இருக்கு காரில் இருந்து இறங்கி இடதுபுறம் சென்றால் சுவற்றில் ஒரு நந்தி தேவன் சிலை இருக்கு. அந்த சிலையின் வாயிலில் இருந்து சதா 24 மணி நேரமும் தண்ணீர்கொட்டிக் கொண்டே யிருக்கும். அப்படி நிற்காமல் கொட்டி கொட்டி ஒரு குளமே உருவாகியிருக்கு. இந்த குளத்து நீர் வற்றுவதே இல்லை.
இந்த தண்ணீர் வருடம் 365 நாளும் 24 மணி நேரமும் கொட்டிக் கொண்டேயிருக்கு. இந்தவூரில் உள்ள மக்கள் குடி தண்ணீருக்காக இதைத்தான் உபயோகிக்கிறார்கள். மினரல் வாட்டர் எல்லாம் இந்த நீரில் அருகேகூட வரமுடியாது. அவ்வளவு சுத்தமாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கு. வழக்கம் போல் ஒரு பாட்டிலில் நீரை சேகரித்துக்கொண்டு வந்திருக்கிறேன்.
இந்த கோவில் ராமாயணத்தோடு தொடர்பு உடையது. ராமர் ராவணணை வதம் செய்தபிறகு அவருக்கு பிரும்மஹத்தி தோஷம் பிடித்தது. அதை போக்குவதற்கு ராமரின் குருமார்கள் காசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து ராமேஸ்வரத்தில் பிரதிஷ்ட்டை செய்தால் தோஷம் நீங்கும் என்று கூறினார்கள்.
ராமன் அனுமனைக்கூப்பிட்டு காசியில் இருந்து ஒரு சிவன் சிலை எடுத்துவரச் சொன்னார். அப்பொழுது அனுமன் காசி சென்று ஒரு சிவன் சிலையை எடுத்துவரும்போது காலபைரவரிடம் அனுமதிபெறாமல் எடுத்து வந்து விடுகிறார். காசியில் நாம் "காசி விஸ்வநாதரை" தரிசித்தாலும் "காலபைரவரை" தரிசிக்கா விட்டால் நாம் காசி ஷேத்திரம் சென்ற பலன் கிடைக்காது.
அப்பொழுது காலபைரவர் கோபமுறுகிறார். அவரை பைரவர் சமாதானப் படுத்துகிறார். ஆனால் காலபைரவர் சூரியனிடம் அனுமனுக்கு தாகம் ஏற்பட்டு களைப்படையச் செய்ய வேண்டும் என வேண்டுகிறார். அதே போல் கங்கையிடம் ஒரு நீர்நிலையை ஏற்படுத்தி தரவேண்டுகிறார். அவ்வாறே இங்கே ஒரு நீர் நிலை ஏற்படுகிறது. அப்படி கங்கையால் ஏற்படுத்தப்ட்ட நீர்நிலைதான் நந்தி வாயில் இருந்து கொட்டுகிறது.
ஆஞ்சநேயர் தண்ணீர் தாகம் தாங்காமல் கையில் சிவன் சிலையோடு அங்கும் இங்கும் சுற்றி இந்த நீர் நிலையை அடைகிறார். ஆனால் கையில் உள்ள சிலையை கீழே வைக்க இயலாமல் சுற்றுமுற்றும் பார்க்கிறார். அப்போது காலபைரவர் ஒரு ஆடுமேய்க்கும் சிறுவன் வடிவெடுத்து அங்கேவர ஆஞ்சநேயர் அந்த சிறுவனிடம் இந்த சிவன் சிலையை அந்த சிறுவனிடம் கொடுத்துவிட்டு கீழேவைக்காமல் கையிலேயே வைத்துக்கொள்ளவும் நான் அருகே உள்ள நீர்நிலையில் தாகத்திற்கு தண்ணீர் அருந்திவிட்டு வருகிறேன் எனக்கூறி சென்று விடுகிறார்.
சிறுவன் தன் கையில் வாங்கிய சிவலிங்கத்தை அங்கேயே வைத்து விடுகிறார். அனுமன் நீர் அருந்திவிட்டு வந்து பார்க்கும்போது சிவன் சிலை கீழே வைக்கப் பட்டுள்ளது. அந்த சிலையை எடுத்துக்கொண்டுபோக அசைத்து பார்ப்பார் ஆனால் அவரால் முடியவில்லை. மீண்டும் தனது வாலை வீசி சிவனை தூக்க பார்க்கும் போது அது லேசாக சாய்ந்ததே தவிர அந்த இடத்தைவிட்டு அசைக்கக்கூட முடியவில்லை.
ஆஞ்சநேயர் தனது வாலைக்கொண்டு சிவனை அசைக்கப் பார்த்ததால் இவர் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் காலபைரவரும் அங்கேயே சிவனோடு தங்கிவிட்டார்.
இங்கு சிவனை தனது வாலைக்கட்டி அசைக்க முடியாத ஆஞ்சநேயர் அப்படியே சிவன் முன்னே கை கூப்பி அமர்ந்துவிட்டார். எனவே சிவன் முன் அவரின் வாகமான நந்தியம் பெருமானார் இவருக்கு இங்கு இல்லை. ஆஞ்சநேயர்தான் சிவன் முன்.
மேலும் இங்கே சிவனுக்கும் நந்தியம் பெருமானுக்கும் உகந்த "பிரதோஷவழிபாடு" கிடையாது. அதற்கு பதிலாக அஷ்ட்டமி திதியே இங்கே கொண்டாடப் படுகிறது. காலபைரவரே இங்கே பிரதானமாக வழிப்படப் படுகிறார். இது சிவன் கோவிலாக இருந்தாலும் பைரவர் ஷேத்திரமாகவே அறியப்படுகிறது.
மேலே மலைமீது ஒரு முருகன் கோவில் உள்ளது. அதற்கும் போகணும்னுதான் ஆசை. ஆனால் அதுபாதை கொஞ்சம் கரடு முரடானது. மேலும் இப்போதான் கால் சற்று தேவலாம் வேண்டாம் விஷப்பரீட்சை என அரைமனசோடு வந்துவிட்டேன்.
அம்மன் "மரகதாம்பிகை" நல்ல ஆகுருதியான தோற்றம் அமைதியான முகம்.
வெளியே மொட்டை கோபுரம்தான். அதில் 12 ஜோதிர் லிங்கங்களும் "சுதை"சிற்பமாக இருக்கு. நடுவில் இந்த ஸ்தலத்தில் ஆஞ்சநேயர் வாலால் சிவனை இழுப்பதும் "சுதை" சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது.
கோவிலை சுற்றி "பைரவர்" தான் கிட்டதட்ட ஒரு இருபது பேராவது சுற்றுகிறார்கள். நமக்குதான் பயமாயிருக்கும். ஆனால் அவை எதுவும் செய்யாது.
இது பல்லவர்களால் கட்டப்பட்ட கோவில். மேலூம் கோவில் வெளி பிரபகாரத்தில் சப்தமாதா வீரபத்திரர் முருகன் ஆகியோர் உள்ளார்கள்.
கோவில் காலை 8.0. மணிக்கே திறக்கப்படுகிறது. 11.45 வரை பின் மாலை 3.0 மணியில் இருந்து 5.45 வரை.
நாளை "நாராயண வனம்" பத்மாவதியை திருமணம் செய்த ஸ்தல.பெருமாள் பற்றி சொல்லறேன்.
"அவன் என்ன நினைப்பான் இவன் என்ன நினைப்பான் பார்ப்பவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான் என்ற பயத்துடன் வாழாதீர்கள் நம்மை படைத்தவன் என்ன நினைப்பான் என்ற பயத்துடன் வாழுங்கள் வாழ்க்கை வளமாகும்."
"கடவுள் எனக்கு கஷ்ட்டங்கள் கொடுத்துவிட்டாரே என வருந்துவதைவிட அந்த கஷ்ட்டகாலத்தில் நம்மைச்சுற்றி எத்தனை போலி உறவுகள் இருந்தன என அடையாளம் காட்டினாரே என சந்தோஷப்படு"
அன்புடன்
கமலா.
No comments:
Post a Comment