Wednesday, October 6, 2021

நாகலாபுரம்

 திருமதி கமலா கிருஷ்ணமூர்த்தி முகநூல் பதிவு

#ஆன்மிகம் நேற்று எனது தோழி ஒருவர் போன் செய்து கமலா Work from home ல் வீட்டிலேயே இருந்து இருந்து ரொம்ப கஷ்ட்டமாயிருக்கு எங்காவது கோவிலூக்கு போகலாம் என்றாள்.

எனக்கும் காசி கயா போய் விட்டு வந்து ஒரு மாதம் ஆயிடுச்சு காலும் சற்று தேவலாம்.  சரி போகலாம் என்று போனமாதம் புகழ்பெற்ற  சிவன் கோவில்கள் தரிசிச்சாச்சு இந்தமாதம் புகழ்பெற்ற பெருமாள் கோவில்கள் தரிசிக்கலாம் என்று நான்தான் சொன்னேன்.  

அவளும் மற்றொரு தோழியும் சம்மதிக்க நாங்க மூன்று தோழியர் ஒரு கார் ஏற்பாடு செய்துகொண்டு முதலில் "நாகலாபுரம்" பெருமாளின் முதல்  அவதாரமான "மச்சஅவதாரம்" எடுத்த நாகலாபுரத்தில் இருந்து ஆரம்பிப்போம் என்று முதலில் அங்கே செல்வது என்று முடிவு செய்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பியாச்சு.

நான் தயிர் சாதம் ஆவக்காய் ஊறுகாய் நாலு பாக்கெட் மதியத்துக்கு எங்கள் மூன்று பேருக்கும் டிரைவருக்கும் சேர்த்து எடுத்துக்கொண்டேன். எனது தோழி காலை டிபன் இட்லி தக்காளி தொக்கு எடுத்துவருவதாக சொன்னதால் எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பியாச்சு.

முதலில் நாங்கள் சென்ற ஊர் " நாகலாபுரம்" .  இந்த "நாகலாபுரம்" என்ற சிறிய ஊர் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 80 Km தொலைவில் உள்ளது.

இங்கு எழுந்துள்ளபெருமாள் பெயர் "வேத நாராயண பெருமாள்" தாயார் பெயர் "வேதவல்லி தாயார்" நின்ற கோலம்.  இடுப்பில் இருந்து "மீன்" வடிவம்.  தசாவதாரத்தில் முதல் அவதாரமான "மச்சஅவதார" தோற்றம்.

ஒரு சமயம் "பிரும்மா" உயிர்களை படைத்து படைத்து மிகுந்த களைப்படைந்த சமயம் அந்த யுகம் முடிவடையும் சமயமாக இருந்தது.  இவருக்கு களைப்பினால் தூக்கம் அதிகமாக கண்களை மூடி வாயை திறந்து தூங்கிக்கொடிருந்தார்.  அப்போது பிரும்மா வாய்வழியே நான்கு வேதங்களும் வெளியே வந்து விட்டது.

அதை "சோமகுரு" என்ற அசுரன் எடுத்துக்கொண்டு சென்று விடுகிறான். நான்கு வேதங்களின் அடிப்படையிலேயே பிரும்மா உலகில் உயிர்களையும் மற்ற ஜீவராசிகளையும்  படைக்க முடியும்.  எனவே  பிரும்மா முதலிய தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட இவர் "மச்சாவதாரம்" எடுத்து அந்த வேதங்களை மீட்டெடுத்து மீண்டும் பிரும்மாவிடமே ஒப்படைத்தார் என்பது ஐதீகம்.

இன்னொரு ஸ்தல வரலாறும் உலா வருகிறது. 

ஒரு சமயம் "சத்தியவரதன்" என்ற பக்தன் சாயந்திரம் சந்தியாவந்தனம் செய்யும் போது அவரது கமண்டலத்திலிருந்து சிறிய மீனாக வெளிவந்து பிறகு ஒரே நாளில் படிப்படியாக பெரிய மீனாக உருவெடுத்து மச்சாவதாரம் எடுத்து வேதங்களை மீட்டார் என்கிறது வரலாறு.

இந்த மச்சாவதார நோக்கமே தேவர்களிடம் இருந்து வேதங்களை எடுத்துச்சென்ற அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டெடுத்து திரும்ப தேவர்களிடமே ஒப்படைத்தது.  எனவே தன் பக்தர்களின் எதிரிகளையும் அழிக்கும் பலத்தோடும் கையில் சுதர்ஸன சக்கரத்தோடும் காட்சிதருகிறார் பெருமாள். 

இந்த பெருமாளின் சிறப்பு.  கையில் சுதர்ஸன சக்கரத்தை பிரயோகிக்கும் நிலையில் வைத்துக்கொண்டு நிற்கிறார் அதாவது (Dynamic) position. எந்த நொடியிலும் சக்கர பிரயோகம் நடக்கும் எனவே பக்தர்கள் வேண்டியதை வேண்டியவாறு பெற்றுக்கொள்ளலாம்.

இந்த பெருமாளின் கருணை ததும்பும் முகமும் மீன்வடிவ நின்ற கோலமும் பார்க்க   கண்கள்  இரண்டு போதாது.  நாங்கள் போன நேரம் அதிக கூட்டமில்லை.  கற்பூர ஹாரத்தி மட்டுமே காட்டுகிறார்கள்.   துளசியோ தீர்த்தமோ கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.  நின்று நிதானமாக பார்த்தேன்.

இந்த கோவிலில் உள்ள வேதவல்லி தாயார் தன் கணவர் எடுத்த மீன் வடிவை கண்களில் தேக்கி வைத்துள்ளார்.  தன் கண்களாலேயே எப்படி மீன் தன் குஞ்சுகளை காப்பாற்றி பசி ஆற்றுமோ அதேபோல் இவள் தன் கருணை ததும்பும் விழிகளைக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை நீக்குகிறாள்.

முகம் தாமரை போன்று மலர்ந்து கருணைவிழிகளோடு வீற்றிருக்கிறாள்.

இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு இந்த கோவில் மேற்கு நோக்கி உள்ளது. ஒவ்வொரு வருடமும் "மார்ச்"மாதம் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தேதிகளில் சூரியன் தன் கிரணங்களால் மற்ற பக்தர்களோடு பக்தனாக வாசல் வழியே வந்து தரிசிக்கிறார்.

இதில் மற்றொரு சிறப்பு முதல்நாள் பாதங்களில் சூரியன் கிரணங்களின் மூலம் வணங்குவதும் இரண்டாம்நாள் மார்பு பகுதியை வணங்குவதும் மூன்றாவது நாள் சிரசிலும் வணங்குவதையும் காணலாம்.

இந்த கோவில் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது.  அவரது தாயார் பெயர் நாகம்மா.  எனவே இந்த கோவில் கட்டி அந்த ஊருக்கு "நாகலாபுரம்" என்றும் பெயரிட்டார். மிகச்சிறிய கிராமம் தான்.

தற்சமயம் இந்த கோவில் "திருப்பதி தேவஸ்தானம்" கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

இந்த இடம் சென்னைக்கு 80 Km தொலைவில் திருப்பதி போகும் வழியில் இரூக்கு.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 6. to 12 மாலை 4 To 8. ஆந்திராவில் உள்ளது.  

அடுத்த  கோவில் நாளை "அதிசய நந்தி" ராமகிரி.

"நான் சந்தோஷமா இருக்கிறேன் என்பது மற்றவர்கள் முன்னால் சிரித்துக்கொண்டிருப்பது மட்டும் இல்லை தனியே இருக்கும்போதும் அழாமல் இருப்பதும் தான்."

"எத்தனைபேர் என்ன சொன்னாலும் நமக்கு பிடித்தாற்போல் நாம் வாழ்வதென்பது நமக்கான அடையாளம்."

அன்புடன்

கமலா.

No comments:

Post a Comment