தோச மொளகாப் பொடி !
கார்த்தாலே புதுசா அரைச்ச மாவில் தோசை பலகாரம். பாதி சாப்டரச்சே எலும்பெல்லாம் அலண்டு போராப்போல் ஒரு ஃபீல். கஸ்தூரி அப்படி ஒரு பார்வை பாத்தா. நீங்க அவ பக்கம்! நீ என்னத்தை செஞ்சாய்னு கேப்பேளே! சொல்ரேன்.
தோசை மொளகாப்பொடி தேவாம்ருதம்போல் இருந்தது. நல்லண்ணை விட்டு குழைக்கரச்சே ஃப்ளேவர் மூக்கை கழட்டிப் போட்டது. தோசை விள்ளலை அதில் அமுக்கரப்போ பொடி அத்தன நைஸாவும் இல்லாம நறநரன்னு இல்லாமலும், ஆங்காங்கே கடலப் பருப்பு பொடிபடாமல். வாயில் போட்டுண்டா அத்தனை ருசி. எவ்வளவு உறைக்கணுமோ அவ்ளவே, மேலண்ணத்துலேந்து நாசிக்குள் நல்லெண்ண கலந்த சுகந்தம் தலைக்கேறவே என்னையும் அறியாம “மொளகாப்பொடி இன்னைக்கு வெகு ஜோர்”னுட்டேன். அதுக்குத்தான் மொறச்சான்னா பாத்துக்கோங்கோ.
மொளகாப்பொடிய புகழ்ந்ததுக்கு ஒரு காரணம் உண்டு. அதைத் தெரிஞ்சிண்டே ஆணம்னா நீங்க என்னோட டயம் மெஷீனில் ஏறி ரெண்டு வாரம் பின்னாடி பயணிக்கணும்.
அன்னைக்கு சாதம் போட சித்தே நாழியாகிடுத்து. அப்பப்ப ஆரதுதான். எனக்கோ கொலைப் பசி. அதுக்கும் காரணம் இருக்கு. கொல்லைப் பக்கம் இருந்த மூங்கில் செடி நீண்டு வளர்ந்து பக்கத்தாத்து சுவத்துல் உரசித்தாம். அதுனால் அவாத்து தண்ணீ பைப் பிட்டுண்டுடுத்தாம். அதுபாட்டுக்கு பீச்சி அடிக்க, அவாத்து ப்ளம்பர், சரி செஞ்சவன், அவாளண்டை இந்த மரக் கிளையை வெட்டினாத்தான் உங்க பிராப்ளம் சால்வ் ஆகும்னுட்டான். அதை அவர் இவகிட்டே சொல்ல “இதோ வெட்டிடரேன் மாமா.” சொன்னவள் என் கையிலேயே அரிவாளத் தந்து “மூங்கிலையும் அந்தண்டை போர கொய்யாக் கிளையையும் வெட்டிடுங்கோ இல்லைன்னா அக்கம் பக்கத்தில் சண்டை வரும்”.
மூங்கில வாஸ்த்துன்னு இவதான் வச்சா. கொய்யா எங்கப்பா இந்த வீடு கட்டினப்போ வச்சது. இதை வெட்டர சாக்கில் அதையும் ஒரு கை பாத்துடணும்னு பிளான். எனக்கு அவன் கொய்யாக் கிளையையும் சொன்ன ஞாபகம் வரலை. இவள் சொல் பேச்சு கேட்டு வெட்டினேன். நாங்க அரிவாள கையிலெடுத்தா வெட்டாம வைக்கர பறம்பரை இல்லை. அதெல்லாம் செஞ்சு முடிச்சுட்டு, விழுந்த இலை தழை, சின்னச் சின்ன முள் நிறைஞ்ச மூங்கில் பத்தைன்னு திரட்டி கயித்தால் கட்டி வாசல்ல வச்சுட்டு தோட்டத்தை பெருக்கிண்டே வரேன். “சாப்பிட வரேளா இல்லையா?”
பாதி வெட்டரச்சே சாப்பிடலாமான்னு நான் கேட்டிருந்தேன்னா திட்டியிருப்பள். இப்ப ‘கிட்டத்தட்ட இந்த பிராம்ணன் சொன்ன வேலைய முடிச்சிட்டான், சாப்பாடு ரெடீன்னா இன்னும் பரபரன்னு செய்வன்’னு சொல்லியிருக்கா. கம்ப்ளெயின் செஞ்ச அடுத்தாத்து நரசிம்மன் மொட்டை மாடீலேந்து நான் அல்லாடரதை வேடிக்கை. அவரை அப்பரமா தனியா வச்சுக்கலாம்னு கைகால் அலம்பிண்டு உள்ளே போரேன்
சாப்பிட உக்காந்தா தட்டில் எல்லாம் போட்டே வச்சிருக்கு. சரித்தான்னு ஆசையா சாப்பிடரேன். குழம்புஞ் சாதம் சாப்டு முடிக்கரேன், “தட்டில் உக்காந்தா உம்முனு சாப்பிடப் பிடாது”. “பின்னே எப்படி?” இத்தனை வருஷம் கழிச்சு எப்படி சாப்பிடனு சொல்லித் தரப் போராளா? பாப்பம்னு நிமுந்து அவ முகத்தை பாக்கரேன். கையில் ரசக் கரண்டி. ஜாக்கிரதையா நடந்துக்கணும். அதை ஆட்டிண்டே சொல்ரா, “இத்தனை ஐடம் பண்ணியிருக்கேன், சாப்டரச்சே நன்னா இருக்கு இல்லன்னு சொல்லிண்டே சாப்டாத்தான் செஞ்சு போடரவாளுக்கு மகிழ்ச்சி. உங்காத்தில் ஒண்ணுமே சொல்லித் தரலையா?”
நானும் சும்மா இல்லாம, “அதான் கீரை மசியலை இன்னும் கொஞ்சம் போடுன்னு ரெண்டு வாட்டி கேட்டு வாங்கிப் சாப்டேனே. அது இண்டிகேஷன் இல்லையா நன்னா பண்ணியிருக்காய்னு?” “அதெல்லாம் ஏத்துக்க முடியாது. வாய் விட்டுச் சொல்லணும். நான் காதில் கேக்கணும். வேர ஏதாவது ஒண்ணுணா சத்தமா பக்கத்தாத்துக்கு கேக்கராப்போல் திட்டக் கிளம்பரேளா மாட்டாளா? பாராட்ட மட்டும் மனசுக்குள்ளேயே சொல்லிப்பேளா?” ஞாயமாப் பட்டது. கஸ்தூரி லாஜிக்கா பெசுவள். லாஜிக்கே இல்லாதப்பவும். அவ இழுத்த இழுப்புக்கு நான் வந்திண்டிருக்கேன்னு சட்டுன்னு புரிஞ்சிண்டு “இன்னைக்கு சமயலில் என்ன பிடிச்சது சொல்லுங்கோ?
கீரை ஏற்கனவே சொல்லியாச்சு. கோஸ் தேங்காய் பருப்பு போட்டது. உப்பில்லை. அதை மறைச்சு “கோஸ்கரி ஏ1. அதுகிட்டே யாரும் ஜெயிக்க முடியாது” பொத்தாம் பொதுவா சொல்லி வச்சேன். “கத்திரிக்காய் சாம்பார்?” எடுத்துக் கொடுக்கரா. புளி தூக்கலா, காய் வேகலை. சொன்னா கையில் இருக்கும் கரண்டிய வச்சு என்ன செய்வளோ? “சாம்பார் ராத்திரி இட்லீக்கு பேஷா இருக்கும்”. அவ மத்தியானம் சித்தே தூங்கரப்போ, அவளுக்குத் தெரியாம சித்தே அரிசி மாவை கரைச்சு ஊத்தி, இன்னும் கொஞ்சம் கொதிக்க விட்டுடுட்டா ஆச்சுன்னு தெரியும். அத்தோட நிறுத்தியிருக்கணுமா வேண்டாமா? “ரசத்தை பத்தி ஒண்ணுமே சொல்லலை?”
இன்னும் ரசம் சாதமே சாப்பிடலையே! சாப்பிடாம ஒரு ஃப்ளோல அதுவும் பேஷ்னு சொல்லியிருந்தேன்னா கரண்டி உடெஞ்சிருக்கும். எங்கம்மா என்னை உஷாரா வளர்த்திருக்கா. “நீ சாதம் போட்டு ரெண்டு கரண்டி ரசம் ஊத்தினியானா அதையும் சாப்டூட்டு எப்படி இருக்குன்னு சொல்லுவேன்.” ஒரு போடு போட்டேன்னா பாருங்கோ! அவள் வச்ச டெஸ்ட்டில் நான் பாஸ் செஞ்சுட்டேனாம், ஆசையா பாத்தா. மனசுக்குள் “என் ஜக்கூஸ்”னு காதல் ததும்பித்தோ!
பொம்மனாட்டிகள் அவா செய்யும் சமையலை சாப்பிடரச்சேயே பாராட்டணும்னு நினைப்பதில் தப்பில்லை. அதுதான் என் அபிப்ராயமும் கூட. ரெண்டு நல்ல வார்த்தை சொல்வதில் என்ன குறைஞ்சு போயிடப் போரம்? காசா பணமா? அவா எத்தனை செய்யரா நமக்காக. நன்னா இல்லைன்னாலும் பேஷ்பேஷ்னு சொல்லிண்டே சாப்டா தாம்பத்யம் ஸ்மூத்தா போகுமோனோ? ஆனா நாமளும் சிலதை எதிர்பாப்பமே!
நாம வேலைக்குப் போய் 35 வருஷமா சம்பாதிச்சிண்டு வந்து ஆத்து சிலவுக்கு பணம் தரமே. ஒரு வாட்டியாவது இவள் பேஷ் பேஷ் இந்த மாச சம்பளம் நன்னா வந்திருக்கு. போன மாசத்தைவிட ஜோர்னோ, இல்லை இப்படி கொண்டு வந்து சுளையா மாசாமாசம் தரத்துக்கு நீங்க எத்தனை சிரமப்படரேள்னு அங்கலாய்ப்பையாவது கடுகத்தனை காமிச்சிருக்கலாமே. செய்யலை.
நேத்தைக்கு அப்படித்தான் புதுப் புடவையா ஒண்ணு உடுத்திக்க எடுத்து வச்சிண்டு “மேட்சிங்க் ரவிக்கய காணம் தேடித்தாங்கோ.” கூப்பிட்டா. தேடிக் தந்தேன். இதெல்லாம் செய்யரதுதானே! அன்னைக்கு இன்னொண்ணும் தெரிஞ்சிண்டேன். ஒரே புடவைக்கு மூணு விதமா மேட்ச் செய்யராப்போல் ரவிக்கை வச்சிருக்கா. இப்ப குழப்பம் என்னன்னா எதை எடுத்துத் தர? தப்பானதை கொடுத்தா திட்டுவளா? “இது கூட உங்களுக்கு யாரும் சொல்லித் தரலையானா? எதுக்கெடுத்தாலும் இது. இவளை கல்யாணம் செஞ்சுக்கரத்துக்கு மின்னாடியே ஏதாவது டுடோரியலில் சேர்ந்து இதெல்ல்லாம் கத்திண்டு வந்திருக்கணுமா என்ன? இதுக்கெல்லாம் கிளாஸ் எடுக்கராளா? எங்கம்மாவும் அப்பாவை அப்பப்போ படுத்தி எடுப்பா. இத்தனை படுத்தினது இல்லை.
அப்புரமா அவளே சொன்னா. “புடவை ஒண்ணுதான். ஆனா அக்கேஷணுக்கு தோதா ரவிக்கை மாறும். மாத்திப் போட்டுண்டா புடவையைப் பாத்தவாளுக்கே வேற புடவை மாதிரி தெரியும். அசத்தலாம்”. அட! இது நல்ல உத்தியா இருக்கே. ஒரு புடவை வாங்கித் தந்தா போதும். மூணு புதுப் புடவை எஃபெக்ட் வந்துடும்னு பட்டது. உங்களுக்கும் தோணும். தோணித்தோனோ! அதான் இல்லை. ரவிக்கைத் துணி வாங்கி இவா டெய்லர்கிட்டே தெய்ச்சு அப்புரம் உடனே ஆல்டெர் செய்யர சிலவு, போய்டு வர 2 ஓலா வாடகை, ரவிக்கை தெய்க்கர கூலி எல்லாத்தையும் ஒரு ஆடிட்டர வச்சு கணக்கு பண்ணிப் பாத்தேள்னா, மூணு புடவை சிலவு வந்திடும். அதுக்குத்தான் எந்த ஒரு விஷயத்தையும் ஆத்துக்காரி சொல்ரான்னு சட்டுன்னு நம்பி புளகாங்கிதம் அடைஞ்சுடப் பிடாது.
ஆனா அதுக்கப்புரம் நடந்ததுதான் விசேஷம். புதுசு உடுத்திண்டு கையில் பார்டர் வச்ச ரவிக்கை மேட்சிங்கா மாட்டிண்டு அவ பாட்டுக்கு காரியம் செஞ்சிண்டிருக்கா. இன்னைக்கு என்ன அகேஷன்? எதுக்கு புதுசு உடுத்திக்கணும்? வெளீலே போவாளா? கேக்கத் தோணித்து. கேக்கலை. தானே தெரியவரும் பாத்துக்கலாம்னு. உள்ளே சக்கரைப் பொங்கல் பண்ர வாசனை தூக்கலா வந்தது. வெல்லவுலாக் கூட இருக்கும், ரெம்ப நாக்கத் தொங்கப் பொடப் பிடாதுன்னு என்னை சமாதானப் படுத்திண்டேன். சாமிகிட்டே உக்காந்து ஸ்லோகம் படிக்கரா. ஓ இன்னைக்கு சஷ்டியாச்சே!
அப்பரமா “பிரஸாதம் இந்தாங்கோ” கையில் ஒரு ஸ்பூன் வச்சா. அவல்தான். சக்கரைப் பொங்கல் மாதிரி நன்னா குழைஞ்சு. டேஸ்ட் பண்ணி பாராட்டணுமா கூடாதான்னு தெரியலை. நெய்வேத்யம் ஆகிடுத்தே. எப்படி இருந்தாலும் அந்த முருகன் சகிச்சிண்டுட்டான். நாம ஏன் வாயக் கொடுக்கணும்னு வாயில் போட்டு மெல்ரச்சே அடீ தீஞ்சாப் போல் லெசா. அதாவது இன்னும் 30 மைக்ரோ செகண்ட் அடுப்பில் இருந்திருந்தா முருகனே வீட்டை விட்டு ஓடிப்போய் பக்கத்தாத்து நரசிம்மனாத்தில் அவா ஐயங்காரா இருந்தாலும் பரவாயில்லைன்னு ஒளிஞ்சிண்டிருப்பர். அப்பத்தான் கஸ்தூரி கேக்கரா. “என்ன ஒண்ணும் கமென்டே அடிக்கலை. எப்படி இருக்குன்னு சொல்லவேயில்லை?”
ஓஹோ, அதுக்குத்தான் வெயிட்டிங்கான்னுட்டு, “நன்னா இருக்குடீ. ஆனா என்ன தோணித்துன்னா சித்தே சீக்கிரம் அடுப்புலேந்து எடுத்திருக்கணுமோ? கோவிச்சுக்காதே!” “புடவையை அடுப்புலேயா போட்டேன்? ஏன் இப்படி அபசகுனமா பெசரேள்?” எனக்கு திக்குன்னுது. என்ன சொல்ரா இவள்? ஓஹோ! அவள் புதுப்புடவை உடுத்திண்டு சுத்தரதை பாத்து நான் இன்னும் கமென்ட் தரலையா. வெல்லவுலைப் பத்தி வாயக் கொடுத்து மாட்டிக்க இருந்தெனே! மயிரிழையில் தப்பிச்சிருக்கேனோ? முருகா, நீ காப்பாத்திட்டாய். சாயங்காலம் குமரன் குன்றத்தில் வந்து சதர் தேங்காய் உடைக்கரேன்.
“புடவையா? ரெம்ப நன்னா இருக்குடீ கஸ்தூரி. மின்னமே வாங்கி உள்ளேயே வச்சிருந்தாயா. அதான் நீ கட்டிண்டதும் மின்னாடி போட்டுண்டதோன்னு ஒண்ணும் சொல்லலை. புடவை நன்னா இருக்கு. இந்த பார்டரும் மேட்சிங்கா. எங்கே வாங்கினாய்?” அவளோ கடுகடுன்னு மூஞ்சிய வச்சிண்டு முறைச்சுப் பாத்து “நான் என்ன கெக்கரேன் நீங்க என்ன சொல்ரேள்”. அச்சச்சோ! அவல் பத்தித்தான் கேக்கரா. “புரியலை. வெல்லவுல் சித்தே தீஞ்சா மாதிரி பட்டது. நீ எதைப்பத்தி கேட்டாய்?” “எம்புடவையைப் பத்தி.” “அதான் சொல்லிட்டேனே, ஜோரா இருக்குன்னு” விடுக்குன்னு கோவிச்சுண்டு உள்ளே போய்டா. “என்னடீ இப்ப எதுக்கு கோவிச்சுக்கராய்?’ பின்னாடியே போரேன். சொல்ரா. “புதுசு உடுத்திண்டு எதுக்கே வந்து நின்னா புடவைய புகழப் பிடாது. அதில் நான் எப்படி தெரியரேன்னு புகழணும். உங்களுக்கு ஒண்ணுமே உங்காத்தில் சொல்லித் தரலையா?”
மோவாக் கட்டையை தோளில் ஓங்கி இறக்கிட்டு கொல்லைப் பக்கம் போனா. அவள் செஞ்சது என் கழுத்து வலிச்சதே.
நேத்து நடந்த இந்த அசம்பாவிதத்தை சரிக்கட்ட இன்னைக்கு ப்ரேக்ஃபாஸ்ட் சாப்டரச்சேவே சரிக் கட்டிடணும்னு ஒரு தீர்மானத்தோடத்தான் தூங்கி எழுந்திண்டிருக்கேன். எது தட்டில் விழுந்தாலும் அதுக்கு ஒரு பாட்டே எழுதிடணும்னு. ராஜாவப் பாக்கப் போன புலவர் மாதிரி நிறைய பாராட்டுக் கவிதைகளை மனசில் எட்டுக் கட்டி வச்சிண்டு.
தோசைன்னு இண்டிகெஷன் தந்திருந்தா. தொட்டுக்க தேங்காய்ச் சட்னீன்னா இப்படி சிலாகிச்சுப் பெசலாம், சாம்பார்னா இப்படி, தக்காளி வெங்காயச் சட்னீன்னா இதெல்லாம் வர்ணிக்கலாம், ஏன் தோசையையே அதன் ரவுண்ட் ஷேப்பையும், அதன் ம்ருதுவான தன்மையயும் ஓரத்தில் முறுகலா வந்ததையும் சொல்லி சொல்லி இவளை திக்குமுக்காட வைக்கணும்னு பிளான். அதான் தோச மொளகாப்பொடீலெந்து ஆரம்பிச்சேன். இது தப்பா? அதுக்குத்தான் மொதப் பேராவுலே ஈரக்குலை நடுங்கராப்போல் அந்த லுக்.
“என்ன வாய் ரெம்பத்தான் நீள்ரது?” “ஏன் என்ன சொல்லிட்டேன்? இப்படி கோவிச்சுக்கராய்?” “இந்த மிளகாப்பொடி அம்பிகா அப்பளம் ஸ்டோரில் வாங்கிண்டு வந்தது”.
No comments:
Post a Comment