(சென்னையிலிருந்து திருப்பதி மார்க்கம்..)
(பகுதி −5..)
.....இருபுறமும் சிறுமலைகளால் ஆன ப்ரதேசம்...
அதில் நமது இடது புறத்தில் காணப்படுகின்ற மலையிலிருந்து விழுகின்ற ஒரு அழகான நீர்வீழ்ச்சி, கண்களையும் கருத்தையும் ஒரு சேரக் கவருகிறது!..
வருடம் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும் வற்றாமல் வீழுகின்ற இந்த நீரின் உற்பத்தி ஸ்தானம் எங்குள்ளது என்பது இதுவரையிலும் யாராலும் அறியப்படவில்லை என்று கூறுகிறார்கள்..
நீர்வீழ்ச்சியினால், ஏற்பட்ட பெரிய குளம்போன்ற பகுதியில்
பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என்று சுமார் முப்பது பேர் அமிழ்ந்து ஆனந்தமாக நீராடிக் கொண்டிருந்தனர்..
பத்மாவதியோடான தனது திருமணத்திற்கு முன்னர், ஶ்ரீநிவாஸ பெருமான், இந்த நீர்வீழ்ச்சியில் நீராடிவிட்டுச் சென்றதாகவும், அதனால் இங்கு நீராடுவது புனிதமான செயல் என்றும் இங்கே கருதப்படுகிறது..
நமது வலது புறத்தில் காணப்படுகின்ற சிறிய குன்றின் மேல் ந்ருஸிம்ஹன் குடியிருக்கின்ற அந்தத் திருக்கோயில் தென்படுகிறது...
சுமார் முப்பது படிகளே இருக்கின்றன..
"இந்த முப்பது படிகளயும் கடந்தாச்சுன்னா....
தன்னோட இருமாதரோட சேவை சாதிக்கற அந்த சிம்மத்த நம்ம விழிகளுக்குள்ள சிறை பிடிச்சுடலாம்..."
.....மனதின் வேகம், கால்களின் வேகத்தையும் தாண்டியது!..
மேலே ஏறியதும்... சிறிய அழகான கோயில் நம்மை வரவேற்கிறது..
கோயிலின் சுற்றுச் சுவர்களும், மேற்கூரைகளும் நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன..
நாங்கள் சென்ற அன்று சுமார் ஐம்பது பேருக்கும் மேலாகக் குழுமி இருந்தார்கள்..
அதனால் எம்பெருமானைத் தரிசிக்க, காத்திருக்க வேண்டியதாயிற்று..
பெருமானைச் சேவிப்பதில், யாருக்கும் இங்கே முன்னுரிமை தரப்படுவதில்லை!..
முன்னே வந்தவர்கள் சேவித்து நகர்ந்த பிறகே, பின்னே இருப்பவர்கள் சேவிக்க வாய்ப்பு வருகிறது..
சுமார் இருபது நிமிட காத்திருப்பிற்குப் பிறகு, கருவறையின் வாசலில் நின்றோம்...
கண் குளிரக் குளிர சேவை...
ஶ்ரீதேவியும் பூதேவியும் இருபுறமும் இருக்க...
....அந்த சீரிய சிங்கன் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் தோற்றத்தை...
....ஓரிரு வரிகளால் பேசிவிட முடியாது!..
அவரவரும் நேரில் சென்று தரிசித்தால்தான், அந்த காம்பீர்யத்தை உணர இயலும்!
அபய ஹஸ்தத்தோடு அவன் நிற்கின்ற திருக்கோலம்....
....நம்மை அறியாமல் மனதுள் மேவியுள்ள பயங்கள் எல்லாம், அக்கணமே "ஆதவனைக் கண்ட அடர்இருள்" போல் ஓடி ஒளிந்து கொள்கிறது!..
கண்களைப் பலவந்தமாக அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டு, சற்றுத் தாழ நோக்கினால், அங்கே அமர்ந்த திருக்கோலத்தோடு, யோக ந்ருஸிம்ஹனாய், அவனே சேவை சாதிப்பதையும் காணமுடிகிறது!..
ப்ரகாரத்தைச் சுற்றி வரும் பொழுது ந்ருஸிம்ஹன் சந்நிதிக்கு நேர் பின்னே தனிச்சந்நிதியில் செஞ்சுலக்ஷ்மி தாயார் தரிசனம் தருகிறாள்..
இப்பொழுது திருக்கோயில் நிர்வாகத்தினரோடு, கோயிலைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கும் பொருட்டு, கொஞ்சம் வார்த்தையாடினோம்...
அவர்களும் நம்மை மதித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்..
கீழே நாம் பார்த்த நீர்வீழ்ச்சியிலிருந்துதான் பெருமாளின் திருமஞ்சனம், தளிகை முதலியவைகள் நடைபெறுகின்றன என்றும், அதற்காகக் கோயிலில் நிர்வாகத்தினர், நீரைத் தனியாகச் சேமித்து வைத்திருக்கின்றனர் என்றும்,
அது "பால தீர்த்தம்" என்ற பெயரால் அறியப்படுகிறது என்றும் அவர்கள் வாயிலாக அறிந்தோம்..
பெருமானுக்கான ஆஹாரமும், திருமடப்பள்ளியில் இந்த தீர்த்தத்திலிருந்தே அன்றாடம் தயாரிக்கப்பட்டு, பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படுகிறது என்ற தகவலும் உபரியாக அவர்களிடமிருந்து கிட்டியது..
கோயிலில் தினமும் அன்னதானமும் நடப்பதாகத் தெரிகிறது.. இதைத் தவிரவும் கோ சம்ரக்ஷணத்திலும் கோயில் நிர்வாகம் கவனம் செலுத்துகிறது..
நாம் விரும்பித் தருகின்ற நன்கொடைகளை ஏற்று அதற்கான ரசீதையும் தந்து விடுகிறார்கள்..
மொத்தத்தில்... மலை அடிவாரத்தில்...
.....ஏகாந்தமான அழகிய சூழலில்....
.......நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ள இந்த ந்ருஸிம்ஹனின் தரிசனம், அவசியம் நம்வாழ்நாளில் ஒருமுறையேனும் அடையத் தக்கது என்பதை மறுப்பதற்கில்லை!..
காடுமேடு கடந்துவந்து
நாடிஇவனைத் தொழுதுவிட்டால்
தேடுமின்பம் தேடிவரும்!
தேவனருளும் கூடிவரும்!..
(வளரும்...)
No comments:
Post a Comment