Friday, October 8, 2021

தண்ணீர்த் தொட்டி வீடு

 முகநூலிலிருந்து 

சாரதி....

என்னுடய டயரியின் இன்றைய பக்கங்கள் 

                                                 தண்ணீர்த் தொட்டி வீடு

                                            ( கதையல்ல நிஜம். நிஜம் மட்டுமே )

சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனையும் பேலஸ் தியேட்டரையும் இரு கரைகளாகக் கொண்டு அமைந்தது டாக்டர் சுப்பராயான் தெரு. என்னுடய சேலம் வாழ்க்கையின் ஆரம்பக் காலப் பகுதியின்   ஏழு வருடங்கள் இங்கே அமைந்து இருந்த லைன் வீட்டில்தான்.

இந்த டாக்டர் சுப்பராயன் தெருவின் முதல் வீடு பற்றியதுதான் இந்தக் கதை. முன்பே சொன்னது போல இது கதை அல்ல. நிஜம். கற்பனை சிறிதும் கலக்காத அக்மார்க் உண்மைக் கதை. வீட்டைப் பற்றியது என்றால் வீட்டில் இருந்த மனிதர்களைப் பற்றிய கதை. அதிலும் குறிப்பாக ஒருவனைப் பற்றிய கதை. 

அந்தத் தெருவிலேயே மிகப் பெரிய மாடி வீடு அது. அக்ரஹார வீடுகளைப்போல மிக நீண்ட , காரைக்குடி செட்டியார்கள் வீட்டைப் போல விசாலமான கூடம் , வேலைப்பாடமைந்த ஜன்னல்கள், உறுதியான தூண்களால் தாங்கப்பட்ட மேற்கூரைகள். மேற்கூரைகளும் , தூண்களும் அழகான வேலைப்பாடுகளுடனும், மேற்கூரைகள் சூரிய வெளிச்சம்  உள்ளே வர வசதியாக   வண்ணக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டும் இருக்கும். சுவர்களில் மரத்தால் ஆன ஷெல்புகள் அமைக்கப் பெற்று பளபளவென்று கண்ணாடி போல மின்னும். மாடியிலும் கீழுமாக சேர்த்து எட்டு அறைகள். அறைகள் என்று நான் சொன்னாலும் ஒவ்வொரு அறையும் நான் குடியிருந்த லைன் வீடுகளின் ஒரு வீட்டுக்கு சமம். 

இவ்வளவு சிறப்பாக அமைந்ததற்கு காரணம் அந்த வீடு முதலில் டாக்டர் சுப்பராயனுக்கு சொந்தமானது. சுப்பராயன் 1930 ல் அப்போதைய சென்னை ராஜதானியின் முதல்வராக இரண்டு வருடங்கள் இருந்தவர். அவரது குமாரர் குமாரமங்கலம் இந்திய ராணுவ தளபதியாகவும் , அவருடய பேரன் மோகன் குமார மங்கலம் இந்திரா காந்தி அமைச்சரவையில் அமைச்சராகவும், கொள்ளுப்பேரன் ரங்கராஜன் குமாரமங்கலம் ராஜீவ் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர்.

அவரிடமிருந்து ஒரு கலெக்டர் வாங்கினார். அது பின்னர் கோபால் செட்டியாரால் வாங்கப்பட்டது. இத்தனை பிரபல்யம் இருந்தும் அந்த வீடு தண்ணீர்த் தொட்டி வீடு என்றே அழைக்கப் பட்டது.

அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அந்த வீட்டு வாசலில் மூன்று பிரம்மாண்டமான தண்ணீர்த் தொட்டிகள் எப்பொழுதும் நிரப்பப்பட்டு இருக்கும். பொழுதெல்லாம்  ஜட்கா வண்டிகளில் பூட்டப்பட்ட,  சவாரியில் களைத்துப் போன குதிரைகளும், பாரங்களை சுமந்து தாகத்தால் தவிக்கும் வண்டி மாடுகளும் தங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள இங்குதான் நீர் பருகும். அதனை ஓட்டிய வண்டிக்காரர்களும் கைகால் கழுவி, முகத்தில் குளிர்ந்த தண்ணீரை அறைந்து தெளித்துக் கொண்டு களைப்பை போக்கிக் கொள்வதும் இங்குதான். அவர்கள் கொண்டு வந்திருக்கும் சோற்று மூட்டைகளைப் பிரித்து பசியாறி , விக்கல்   வரும்பொழுது இந்தத் தொட்டித் தண்ணீர்தான் அவர்களுக்கு அமிர்தம். அருகில் வசிக்கும் குடும்பங்களின் தினப்படி புழக்கத்துக்கு தண்ணீர் கொடுக்கும் ஒரு வற்றாத ஜீவ ஊற்றாய் இந்தத் தொட்டிகள் இருந்தன.

இது என்ன பெரிய விஷயமா என்று நம்மில் பலருக்கு இப்பொழுது தோன்றக்கூடும். அறுபதுகளில் சேலம் கடுமையான தண்ணிர் பிரச்சினையை எதிர் கொண்டிருந்த காலம் அது. தெருவுக்கு ஒரு குழாய் அமைத்து தெருவே தண்ணீருக்கு அங்கே கூடியிருக்கும். ஒரு நாளைக்கு சில   மணி நேரங்களே தண்ணீர் வரும் என்பதால் பலமான போட்டியும் , கடுமையான சண்டைகளும் இருக்கும்.  மனிதர்களுக்கே தண்ணீர் இவ்வளவு தட்டுப்பாடு என்கின்றபோது வாயில்லா ஜீவன்களின் தேவையைப் பற்றி யார் கவலைப் படுவார்கள். ஆனால் கோபால் செட்டியார் கவலைபட்டார். அதனால்தான் இப்படி தொட்டி அமைத்து நீரினை நிரப்பி தாகம் தீர்த்தார். தாகம் தீர்ந்த மனிதர்களும் , குதிரைகளும் மாடுகளும் கண்டிப்பாக செட்டியாரின் குடும்பத்தை வாழ்த்தியிருக்கும்.

அந்த வீட்டின் இரண்டாவது மகன் லஷ்மி நாராயணன் என்னுடய நெருங்கிய நண்பன். சேலம் வாழ்வில் எனக்குக் கிடைத்த முதல் சினேகிதன் அவன். சினேகிதன் என்பது ஒரு மிகச் சாதாரண சொல். அதன் எல்லைக்குள் அவனை அடக்கி விட முடியாது. நடக்க முடியாத எனக்கு அவன் கால்களாக இருந்தான். ஆறாவதில் நானும் அவனும் ஒன்றாகப் படித்தோம். ஆறாவதில் அவன் பெயில் ஆனான். அன்றிலிருந்து எனக்கு ஒரு கிளாஸ் குறைவாகவே படித்து வந்தான். எஸ்.எஸ்.எல்.சி  முடித்து நான் பியுசி பாஸ் செய்த பொழுது அவன் எஸ் எஸ் எல் சி பெயில் ஆனான். 

லஷ்மணன் படிப்பில்தான் சுமாரே தவிர கூடைப்பந்து , கிரிக்கெட் போன்றவற்றில் சிறந்து விளங்கினான். அவன் ஆடும் மேட்சுகளுக்கு என்னையும் சைக்கிளில் வைத்து அழைத்துப் போவான். எல்லா சினிமாக்களுக்கும் என்னை சைக்கிளில் கூட்டிப் போவான். எனக்கு பெயர் மட்டுமே சாரதி. உண்மையில் எனக்கு அவன் சாரதியாக இருந்தான். எஸ்.எல்.எஸ்.சி லீவில் டைப் சேர்ந்த பொழுது எனக்காக அவனும் டைப் கிளாசில் சேர்ந்தான். அவனுக்கு வேலையே அனாவசியம். டைப் தெரிய வேண்டிய அவசியமே இல்லை. எனக்கு யார் யார் என்ன உறவோ , அவர்கள் அவனுக்கும் அப்படியே . மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என்று எல்லோரையும் அழைப்பான். 

அவர்களுக்கு தருமபுரியில்  இரண்டு சினிமா கொட்டகைகள் இருந்தன . சேலம் மற்றும் தருமபுரியில் இரண்டு அரிசி, ஆயில் மில்கள் இருந்தன. ஒரு முறை தீபாவளிக்கு முதல் நாள் சேலத்தில் அலங்கார் தியேட்டரில் தேடி வந்த மாப்பிள்ளை சினிமாவுக்குக் கூட்டிப் போய் விட்டு , அங்கிருந்து பஸ் பிடித்து தருமபுரியில் அவர்களுடைய கொட்டகைகளில் சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் , மாலதி மூன்று சினிமாக்களுக்கும் அழைத்துச் சென்று, பின் சேலம் வந்து ,  காவியத்தலைவி சினிமாவுக்கும் அழைத்துப் போய் வந்தான். என்னால் செலவு செய்ய முடியாது என்று எல்லாச் செலவுகளையும் அவன் தான் செய்தான். 1972 ல் நான் பி.ஏ முடிக்கும் பொழுது கூட அவன் எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்யவில்லை. அது அவனுக்கு பெரிதாகப் படவில்லை. நான் டிகிரி முடித்தது அவனுக்கு என்னை விட , என் அப்பா அம்மாவை விட , அதிக சந்தோஷம். நீ என்ன வேலைக்குப் போவே ? எந்த ஊரில் வேலைக்குப் போவே? எப்படி ஆபீஸ் போவே? என்று அவனுக்கு ஆயிரம் கவலைகள். 

அவனுக்கு அவர்கள் வீட்டின் முன்னர் ஒரு பலசரக்கு கடை வைத்து கொடுத்தார்கள். 

கடையை இரவு ஒன்பது மணிக்கு மூடி விட்டு ஹஸ்தம்பட்டியில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டு இருப்பான். அதென்னவோ என்னைப் பார்க்காமல் ஒரு நாள் கூட அவனால் இருக்க முடியாது. 

நான் சொல்வதுதான் அவனுக்கு வேதம். எனக்கு எல்லாமே தெரியும் என்பது அவனது நம்பிக்கை. அவனுக்கு அரசியல் தெரியாது. ஆனால் அவனுக்கு காமராஜர்தான் தலைவர். ஏனென்றால் எனக்கு அவரே தலைவர்.

அவனுக்கு எம்.ஜி. ஆர் தான் பிடிக்கும். என்றாலும் சிவாஜி கணேசன் ரசிகமன்றத்தில் உறுப்பினராகி என்னை சிவாஜி கணேசன் படத்துக்கு முதல் நாள் என்னை அழைத்துச் செல்வான். 

என்னை கிரிக்கெட் வருணனை செய்யச்சொல்லி , நான் சொல்வதை சக்தரபாணி, ஆனந்த ராவ் சொல்லுவதைப் போல ரசிப்பான். 

எனக்குத் தெரிந்த சக்ரவர்த்தி திருமகனை ( ராஜாஜி எழுதியது ) நான் அவனுக்கு கதையாக சொல்லும் பொழுது அவன் என்னை வாரியாராக , சிவானந்த விஜயலக்‌ஷ்மியாக தெரிவேன்.

சற்றும் சுருதி இல்லாமல் நடுங்கும் குரலில் நான் பாடும் நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் , அவனுக்கு டி.எம்.எஸ் பாடியதைவிட பிடிக்கும்

அரசியல் , சினிமா, கிரிக்கெட், புராணம் எல்லாவற்றிலும் நான் சொல்வதுதான் அவனுக்கு வேதவாக்கு .

அவன் ஒரு முறை என் அப்பா , அம்மாவுடன் திருப்பதி போனான். மொட்டை போட்டுக் கொண்டான். இன்னும் பல கோவில்களுக்குப் போக ஆசைப்பட்டான். சேலத்தில் இருந்து கிளம்பிய ஒரு பிரைவேட் டூரிஸ்ட் பஸ்ஸில் தனக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்தான்.

டூர் போவதற்கு முதல் நாள் ஆகஸ்ட் 13 , 1972 இரவு வழக்கம் போல கடையை அடைத்து விட்டு வழக்கம் போல எங்கள் வீட்டுக்கு வந்து பேசி விட்டு விடியற்காலை டூர் போகணும் .. கொஞ்சம் தூங்கிவிட்டு பஸ் ஏறணும் என்று சொல்லி விட்டு விடை பெற்றுக் கொண்டு போனான். ஒரேயடியாக விடை பெற்றுக் கொண்டு போனான் என்று அப்பொழுது எனக்குத் தெரியாது. 

அடுத்த நாள் ஆகஸ்டு 14 (1972 ) 

அவன் திருச்சி அம்மான் மண்டபத்தில் குளிக்கும் பொழுது தண்ணீரில் மூழ்கி இறந்தே போனான். இரண்டு நாட்கள் கழித்து அவன் உடல் கிடைத்தது. அப்பா மட்டும் போய் அவனது இறுதி சடங்குகளில் கலந்து கொண்டார்.

அதற்குப் பின்னரும் தண்ணீர்த்  தொட்டி இருந்தது.

அவர்கள் அந்த தண்ணீர் கைங்கரியத்தை செய்தார்கள்.

அந்த வீட்டைத் தண்ணீர் தொட்டி வீடு என்றே அழைத்தார்கள்

குதிரைகளும் மாடுகளும் மனிதர்களும் தாகமும் களைப்பும் நீங்கி வாழ்த்தினார்கள்.

எந்த வாழ்த்துக்களும் அவனைக் காப்பாற்றவும் முடியாது.  மீண்டும் கொண்டு வரவும் முடியாது .. என்றாலும் அந்த வீடு தண்ணீர்த் தொட்டி வீடு என்றே கடைசி வரை அடையாளம் சொல்லப் பட்டது.

இப்பொழுது அந்த வீடு இருக்கின்றதா ? தெரியாது.

தண்ணீர் தொட்டி ? தெரியாது.

குதிரை வண்டிகள் ? சுத்தமாய் வழக்கொழிந்து ரிக்‌ஷா , ஆட்டோ ,  காலம் போய் ஓலா காலம் ஆனாலும்

அந்த வீடும் , அவன் நினைவும் , அந்த நட்பும் என் நினைவில் இன்றும் ….

இனியும் …

எப்பொழுதும் என் நினைவில் இருக்கின்றது. 

எங்கேயோ படித்தேன்.

நண்பன் இறக்கலாம். நட்பு இறக்க கூடாது என்று.  ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

லக்‌ஷ்மணன் என் விரோதம் பாராட்டி பிரிந்தாவது எங்கேயாவது ஆயுளோடு இருந்திருக்கலாம் என நினைப்பது வழக்கம்.

 சாரதி.


14 August 2021

No comments:

Post a Comment