என்னுடய டயரியின் இன்றைய பக்கங்கள்
ஃ போர்ட்டிஸ் பிள்ளையார்.
முதன் முதலாக ஃ போர்ட்டிஸ் மருத்துவ மணையில் நுழைந்த பொழுது அதன்பிரமாண்டம் அச்சத்தைக் கொடுப்பதாக இருந்தது. ஆனால் அங்கு நிலவிய அமைதி , சுறு சுறுப்பு , நம்பிக்கையோடு நுழையும் என்னைப் போன்ற நோயாளிகள் என காலை எட்டு மணி முதலே யாருடய உத்தரவோ , அனுமதியோ இல்லாமல் மருத்துவ மனை இயல்பாக இயங்கத் தொடங்கியது.
பிரதான நுழைவு வாயிலில் ஒரு பிள்ளையார் சிலா ரூபமாய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். மருத்துவ மணையில் நுழைபவர்கள் அனைவரும் வணங்கிய பின்னர்தான் தங்கள் வந்த காரியத்திற்குள் பிரவேசிகீன்றார்கள். அவர்கள் மருத்துவ மணை ஊழியர்களானாலும் , மருத்துவர்கள் ஆனாலும் , மருத்துவத்துக்காக வந்தவர்கள் ஆனாலும் வணங்கத்தவறுவதில்லை. சிலர் நின்று கண்மூடி தியானிப்பதும் சிலர் போகிற போக்கில் கும்பீட்டுக் கொண்டே போவதுமாக இருக்க பிள்ளையார் அருள் பாலித்த வண்ணம் இருக்கின்றார். வணங்கும் முறையில் மாறுபாடு அவர் அருள் பாலிப்பதில் மாற்றம் இருக்கப் போவதில்லை .அத்தனையையும் கடந்த பரம்பொருளுக்கு அது தெரியாதா என்ன?
அடுத்த சில முறை வந்து போகும் பொழுது பிள்ளையாருக்கும் எனக்கும் நெருக்கம் ஏற்பட்டு விட்டது என்றே சொல்லலாம். Admission Procedure க்கு ஒவ்வொரு முறையும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரமாவது ஆகும். அந்த காத்திருக்கும் நேரத்தில் பிள்ளையாருக்கு நானும் , எனக்கு பிள்ளையாரும்தான் பேச்சுத் துணை. எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்கள் மற்ற யாருக்கும் கேட்டிருக்க முடியாது. அதன் சாரத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
எல்லா பிள்ளையார்களுக்குமே ஒவ்வொரு பெயர் உண்டு. இவருக்கு நான் சூட்டியபெயர் ஃபோட்டிஸ் பிள்ளையார். அதை அவரிடம் தெரிவித்த பொழுது அவர் சிரித்தாற் போல எனக்குத் தோன்றியது. “ இருக்கட்டும். பல இடங்களில் என் இருப்பிடம் வைத்தே என் பெயர் வழங்கப்படுகின்றது. ஆற்றங்கரைப் பிள்ளையார், அரச மரத்தடி பிள்ளையார் இப்படி. இங்கு ஃபோர்ட்டிஸ் பிள்ளையார் “
“ ஏன் ? உங்களுக்கு வீற்றிருப்பதில் அதிருப்தி ஏதேனும் உண்டோ ? “ என்று கேட்டேன்.
“ அப்படி எல்லாம் இல்லை. இங்கு இருப்பதால் வேறெங்கும் இல்லை என்று பொருளில்லை. அங்கு இருப்பதால் இங்கு இல்லாமல் போனதாக பொருளுமில்லை. ஆனால்...
“ ஆனால் என்பது தாங்கள் எதையோ சொல்ல நினைப்பதை காட்டுகின்றதே “ என்றேன்.
அவர் பதில் சொல்லத் தொடங்கும் பொழுது அவருக்கு நீராட்டி , சந்தனம் , தீப தூபங்கள் காட்டி, சந்தனம் , புஷ்பங்கள் சாற்றி , புதிய வஸ்திரம் அணிவித்து ஸ்தோத்திரம் சொல்லி ஆராதிக்கும் பணிகளை செய்பவர் வந்து தன் பணிகளைச் செய்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஆனது. அந்த சமயம் அவர் என்ன சொன்ன நினைத்தாரோ என்று மனம் ஆவலால் துடித்தது. என் அவளைப் புரிந்து கொண்டவராய் அவர் சற்றும் தாமதிக்காமல் சம்ப்பாஷனையைத் தொடர்ந்தார்.
“ மற்ற இடங்களில் வீற்றிருக்கும் என் சிலா ரூபத்துக்கும் இங்கு வீற்றிருக்கும் இந்த சிலா ரூபத்துக்கும் வித்யாசம் இருக்கத்தான் செய்கின்றது. மற்ற இடங்களில் பக்தர்கள் குறைகளை கேட்பதும் , வரங்களை அவர்கள் தகுதிக்கும் ,கரும வினைகளுக்கும் ஏற்ப வழங்குவதாக மட்ட்டுமே இருக்கும். இங்கு அத்துடன் சேர்ந்து அவர்களின் துன்பத்துக்கும் குறைகளுக்கும் சாட்சியாக இருக்க வேண்டி இருக்கின்றது. அவர்கள் பிரார்த்தனைகளின் ஆழமும் புரிகின்றது. ஆனால் அவை அனைத்தையும் அப்படியே நிறைவேற்ற வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் அப்படியே செய்யும் சக்தி எனக்கோ அல்லது மற்ற எந்த தெய்வங்களுக்கோ இல்லையே. என் தந்தை சங்கரனுக்கோ , அவர் தந்தை நான் முகனுக்கோ , அவரது தந்தை மஹாவிஷ்ணுவுக்கோ கூட இல்லை என்றே தோன்றுகின்றது. அவற்றை தீர்மானிப்பது அவரவர் கர்ம வினை தானே?
அப்பொழுது எங்களைக் கடந்து சென்ற ஒரு இளம் தம்பதியரைக் காட்டி அவர் பேச்சைத் தொடர்ந்தார். “ இவர்கள் பாக்கிஸ்தானில் இருந்து வருகின்றார்கள். அந்த பெண்ணின் கணவருக்கு புற்று நோய். அதற்கு அவர்கள் தேசத்தில் போதிய வசதி இல்லாத்தால் இந்தியாவுக்கு வந்து இந்த மருத்துவ மனைக்கு வந்துள்ளார்கள். அவர்கள் இந்த மருத்துவ மனை மருத்துவர்களையும் , அதற்கு மேலாக அல்லாவையும் நம்பித்தான் வருகின்றார்கள். நானும் அருள் புரிய காத்திருக்கிறேன். இறை அருள் வெல்ல அவர்களின் கர்மவினை உதவ வேண்டும்.
அதோ அங்கே பார். அந்த முதியவர் தன் மனைவியை வீல் சேரில் வைத்து தள்ளிக் கொண்டு போகிறார். அதில் அவருக்கு சிரமம் இருப்பதாக தெரியவில்லை. காரணம் வைத்தியம் நல்லபடியாக முடிந்து மகிழ்ச்சியுடன் செல்வதாலாக இருக்கும். அவர்கள் என் முன்னே நின்று எனக்கு தங்களின் நன்றியினை செலுத்துகின்றார்கள். அவர்களுக்குத் தெரியாது.அவரவர் கருமமே கட்டளைக்கல் என்று
ஆனால் எனக்குத் தெரியும்.நான் சம்பவங்களின் சாட்சி மட்டுமே என்று. “
“அப்பனே மூல முதல் கடவுள் நீ.அப்படி கருமமே காரணம் என்று சாதாரணமாக சொல்லி விட முடியாது.அதை உணர்ந்தவர்கள் கூட உன்னை வணங்கிப் பிரார்த்தனை செய்யத்தானே செய்கின்றார்கள். அவரகள் உன்னை நம்புவது உன் சக்தியை.அது அவர்கள் முயற்சி. காப்பது உன் கடமை. இருக்கட்டும். கர்மா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சற்று முன்னர் ஒரு ஆறு வயது குழந்தை தன் தாயாரின் மடியில் அமர்ந்தவாறு அந்த மருத்துவரிடம் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுகின்றது. அவரின் கேள்விகளுக்கு பதில் சொல்வதுடன் தன் சந்தேகத்தையும் தெளிவு படுத்திக் கொள்கின்றது. Are you going to give me another antibiotic? Are you going to stop blood thinner ? இந்த பிளட் தின்னர் என்பதை நான் எனது 69 பயதில்தான் கேள்விப்படுகின்றேன்.அந்த குழந்தை தனது ஆறாவது வயதில் கேட்கிறது. எனக்கு அறுபது வயது கடந்து வந்த துன்பம் அதற்கு புரியுமா ? “ என்றேன்.
பிள்ளையார் சற்று யோசித்தார்.“இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இவனையும் உன்னையும்
இந்த நோயினையும்படைத்த பிரம்மனிடம் கூட பதில் இருக்குமா தெரியவில்லை. ஆனால் அதே பிரம்மன் பலரை காக்கும் மருத்துவர்களையும் , மருந்துகளையும் படைத்தது எதற்கும் ஒரு விடிவு , வழி உண்டு என்பதைத்தானே காட்டுகின்றது. அந்த வழியில் பரமாத்மாவை நம்பி பயணிப்பதே உங்கள் கடமையாகின்றது. கடவுள் எதற்கு என்ற கேள்வி எழலாம். சோர்ந்து நிற்கும் வேளையில் சாய்ந்து கொள்ள பின் யார் தோள் கிடைக்கும்.?
இங்கு அமர்ந்ந்த நாள் முதல் எத்தனை முகங்களை பார்த்த்துவிட்டேன். அவற்றில் எத்தனை உணர்ச்சிகள் ? நம்பிக்கை , உற்சாகம் , மகிழ்ச்சி , விரக்தி , பயம் , கவலை இப்படி எத்தனை.ஒரு மனிதனின் கவலை இன்னொருவனை ஒவ்வொரு விதமாக பாதிக்கிறது. நம் நிலமை எவ்வளவோ பரவாயில்லை என்று ஆறுதலும் தருகின்றது. நம்பிக்கையைத் தருகின்றது.வேறு எங்கும் கிடைக்காத ஞானம் இங்கு வந்து போகின்றவர்களுக்கு கிடைக்கின்றது. அதற்கு சாட்சியாய் நான் இங்கு அமர்ந்துள்ளேன்.கண்டிப்பாக அருள் செய்வேன். அவர்கள் துயர் தீரவோ , குறையவோ அது உதவும்.
அதற்குள் அட்மிஷன் பிராசஸ் முடிந்தது. விடை பெற்றுக் கொண்டேன். அடுத்த முறை அவரைப் தரிசித்த பொழுது அவர் என்னிடம் அந்த சிறுவன் உடல் நலம் தேறிவருகின்றான். பூரண குணம் அடைவான்.நீயும்தான் . நம்புங்கள் .நல்லதே நடக்கும். அல்லது நடப்பது நல்லதாகவே அமையும் என்று சொல்வது எனக்குப் புரிந்தது.
ஃபோர்ட்டிஸ் பிள்ளையாரை நான் மட்டுமல்ல. இங்கு வருபவர்கள் அனைவரும் நம்புகின்றார்கள்.
நம்பிக்கைதானே வாழ்க்கை?
சாரதி
31/05 2021
No comments:
Post a Comment