Friday, October 8, 2021

ஸ்ரீரங்கத்து-தேவதைகள்-கதையா-?-கற்பனையா?

 ஸ்ரீரங்கத்து-தேவதைகள்-கதையா-?-கற்பனையா? - சுஜாதா - கட்டுரை

‘சற்றே பெரிய சிறுகதைகள்’ என்று வர்ணிக்கப்பட்ட (சிறுகதைகளுக்கு உச்சவரம்பு உண்டா என்ன?) ஸ்ரீரங்கத்து தேவதைகள் இரண்டாவது ஈடு சென்ற வாரம் முடிந்தது. இவற்றைப் படித்தவர்கள் பலர் என்னைத் திரும்பத் திரும்பக் கேட்ட கேள்வி – கதைகளில் எவ்வளவு கற்பனை, எவ்வளவு நிஜம்?

இந்தக் கேள்வியே ஒரு வகையில் எழுத்தின் வெற்றி என்று கொள்கிறேன். முழுவதும் கற்பனைக் கதையை யாராலும் எழுத முடியாது. அதேபோல் டெலிபோன் டைரக்டரி, ரயில்வே டைம்டேபிள் தவிர, முழுவதும் உண்மையும் சாத்தியமில்லை.

உண்மை, சொல்லும்போதே சற்றுப் பொய்யாகிவிடு கிறது என்பது என் அனுபவம். உண்மைக்கு மிக அருகில் எழுதினால், இலக்கியத்துக்கு வெளிப்பட்ட காரணங்களுக்காகக் கோபித்துக்கொள்ள பலர் காத்திருக்கிறார்கள். ஒரு பள்ளியைப் பற்றிய ஒரு வரிக்காக, விகடன் ஆசிரியரே மன்னிப்புக் கேட்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டது.

‘ஸ்ரீரங்கத்து தேவதைக’ளில் நிஜமானது ஸ்ரீரங்கம் மட்டும்தான். அதுவும் அம்பதுகளின், அறுபதுகளின் அரங்கம். இன்றைய ஸ்ரீரங்கம், திருச்சி கார்ப்பரேஷனின் ஓரங்கம். ஏ.டி.எம்-களும் தாறு மாறான கேபிள்களும் அம்மா மண்டபத்திலிருந்து தொடர்ந்து நிற்கும் ஆம்னி பஸ்களும் பெண்கள் கல்லூரியும் புதிய பள்ளிகளும் என்ன என்னவோ நகர்களும் மேம்பாலங்களும் என்னுடைய ஸ்ரீரங்கமல்ல!

ஸ்ரீரங்கத்தில் மாறாதது – ஸ்ரீரங்கநாதனின், ரங்கநாயகித் தாயாரின் விக்கிரகங்களும் கோயிலின் சில பகுதிகளும். கோபுரங்களையெல்லாம் அவசரப்பட்டு வானவில் வண்ண அக்ரிலிக் பெயிண்ட் அடித்து விட்டார்கள்.சாளுக்கியர், கிருஷ்ணதேவராயர், நாயக்கர் காலம் என்று மூன்று கால கட்டங்களைக் கடந்த மண்டபங்களும் சிலைகளும் சிதிலமாகிக் கொண்டிருக்கின்றன. கிழக்குவாசல் தாண்டி பள்ளிக்குச் செல்லும் பாதையில் உள்ள கட்டைகோபுரத்தில், விறகுக் கடை சுவரில் சாணிதட்டி காட்டுச்செடிகள் பீறிடுகின்றன. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட கோயில், தம்மிடையே தினப்படி பார்வையில் துருத்திக்கொண்டு இருப்பதைப் பற்றிக் கவலை இல்லாத இன்றைய நகரம் ‘மன்மதராசா’வையும் ‘மாத்தியோசி’யும் பாடிக்கொண்டிருக்கிறது.பக்தர்களை அரைமணிக்கொரு முறைடீசல் புகையுடன் கொண்டுவந்து உதிர்க்கிறார்கள். அரங்கனின் சந்நிதிக்கு வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கம்பி, சங்கிலித்தடுப்பு வைத்து டிக்கெட் வருமானம் அதிகரித்து… இன்றைய ஸ்ரீரங்கம் கடந்தகாலத் தொடர்புகள் பலவற்றை வேகமாக இழந்துகொண்டிருக்கிறது.

அதனால், அதைப் பதிவுசெய்ய வேண்டியது எழுத்தாளன் என்கிற தகுதியில் எனக்குக் கட்டாயமாகிவிட்டது. அந்த நாட்களின் வார்த்தைகள், பேச்சு வழக்குகள் எல்லாமே மாறிவிட்டன. எழுத்தில் நிரந்தரப்படுத்துவது அவசியம் என்று உணர்ந்து இந்தக் கதைகளை எழுதினேன்.

இன்றைய ஸ்ரீரங்கம்?

சாஃப்ட்வேர் திறமையாளரும் என் கதை, கட்டுரைகள் அனைத்தையும் சேர்த்துவைத்து எது, எந்தப் பத்திரிகையில், எப்போது வந்தது என்பதை நானே அவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு ஒழுங்காக ஒரு தகவல்தளம் அச்சு வடிவத்திலும் நெட்டிலும் வைத்திருக்கும் நண்பர் தேசிகன். போதாக் குறைக்கு ஒரு திறமை வாய்ந்த ஓவியர். அவரை ஸ்ரீரங்கத்துக்குச் சென்று, சில காட்சிகளை வரைந்து தருமாறு கேட்டுக்கொண்டேன்.

சிலவற்றைத் தந்திருக்கிறேன். ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் புத்தகமாக வரும்போது இவையும் பயன்படும். பக்கக் கட்டுப்பாடு காரணமாகச் சுருக்கப்பட்ட ‘மாஞ்சு’ கடைசிச் சிறு கதையும் முழுவடிவத்தில் அந்தப் புத்தகத்தில் வரும். தேசிகன் ராஜகோபுரம் ராயகோபுரமாக, மொட்டைக்கோபுரமாக முற்றுப்பெறாமல் இருந்தபோது எப்படி இருந்தது என்பதை ஏ.கே. செட்டியாரின் பழைய புத்தகத்திலிருந்து பார்த்து வரைந்தார்.மற்றவை நேரடியாக வரைந்தவை. நான் வளர்ந்த காலத்தில் கோபுரம் இப்படித்தான் இருந்தது. இப்போது இலங்கையை எட்டிப் பார்க்கிறது. கீழச்சித்திரை வீதி அதிகம் மாறவில்லை. வெள்ளை கோபுரம் ஒரு ‘அல்பைனோ’ (albino) போல உள்ளது. கம்பன் மண்டபம், சேஷ ராயர் மண்டபம், கிருஷ்ணன் கோட்டை வாசல், கொட்டாரம், கருடமண்டபம் போன்றவை பாதிக்கப்படவில்லை. சித்திரை, உத்திரை வீதிகள் கொஞ்சம் பழசை ஞாபகப்படுத்துகின்றன. மற்றபடி, ஸ்ரீரங்கத்தின் வெளிநகரம் முழுவதும் அடையாளமிழந்துவிட்டது.

கலாப்ரியாவின் ‘வனம் புகுதல்’ தொகுப்பிலிருந்து அண்மைக் கவிதை ஒன்றுடன் நிறைவுசெய்கிறேன்.

‘தூங்கும் முன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கதைகேட்ட குழந்தைக்கு கதை முடிந்ததும் நீதியைச் சொல்ல ஆரம்பித்தேன்

தூக்க சுவாரஸ்யமோ போதனையின் அசுவாரஸ்யமோ உன் கதையை நீயே வைத்துக்கொள் போ திரும்பிப் படுத்துக்கொண்டது சொன்ன பின் யாருக்குச் சொந்தம் கதை? 

சொன்ன கதையை திரும்பிவாங்கிப்புலனுக்குள் பூட்டக் கதைசொல்லிக்குமுடியுமோ?’

என் அனுபவத்தில் முடியாதுதான்! கதை சொன்னபின், அது உலகுக்குச் சொந்தமாகி, ஸ்ட்ரக்சரிலஸ்டுகள் (structuralists)பந்தாடுவார்கள்.

((ஓவியங்கள் நண்பர் திரு. Desikan Narayanan அவர்கள் வரைந்தவை)

No comments:

Post a Comment