Friday, October 8, 2021

ஊழியம்

 மத்யமர். ஜெயா பாரதி ப்ரியா


ஊழியம்

-----------------

முன்னுரை

இந்தக் கட்டுரை வங்கி மேலாளர்களையோ அதிகாரிகள் ஊழியர்களையோ சிஸ்டத்தையோ நிர்வாகத்தையோ குறை கூறுவதற்காக எழுதப்பட்டது அல்ல.ஒரு உண்மை ஊழியக்காரனின் மேன்மையை நினைத்துப் பார்க்கவே ..

நானும் அந்தப்படிகளை கடந்து வந்து தான் ஓய்வு பெற்று இருக்கிறேன்.

ஒரு அதிகாரியோ அல்லது ஊழியரோ மாறுதலாகிப்போகும்போது அல்லது ஓய்வு பெறும்போது சும்மா ஒரு பார்ட்டி வைத்து ஒப்புக்காக பாராட்டிப் பேசி மாலை  பொன்னாடை போர்த்தி அன்பளித்து வழி அனுப்பி விடுவோம்.

ஆனால் அபூர்வமாக சிலர் பிறவியிலேயே அர்ப்பணிப்போடு அவர்களின்வேலையை மட்டுமல்லாது தெரிந்த வரைக்கும் பிறர் சொல்லும் வேலைகளையும் கச்சிதமாக செய்து விடுவார்கள்.

பணியில் இருக்கும்போதே இது போன்ற ஊழியர்களைப் பாராட்டி Regional, Zonal மேனேஜர்கள் CMD கலந்து கொண்ட ஒரு சில உழியர் சங்க கூட்டங்களிலேயே எனது கருத்தை பதிவு செய்திருக்கிறேன்

எங்கள் வங்கி நடத்திய காலாண்டு இதழில் கூட நைசாக இவரைப்பற்றிஇவருக்கே தெரியாமல் கவிதையில் நுழைத்திருக்கிறேன்.

இனி அவரைப்பற்றி --

அவர் ஒரு பார்ட் டைம் ஸ்வீப்பர். PTS (Part Time Sweeper) சகல கலா வல்லவர்.அந்தக்கிளை இயங்கிய கட்டிட முதலாளியின் உறவினர்.

நான் அந்தக் கிளைக்குப் போகும்போதுஅவருக்கு முப்பது வயதிருக்கும்.

சென்ற தலைமுறை வங்கிப் பணியாளர்களில் ஒரு பகுதி நேர துப்புரவுத் தொழிலாளி கூட வங்கிக் கிளையை நடத்தி விடுவார் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

அவர் காலை 7 மணிக்கு மேலாளர் தங்கி இருக்கும் அறைக்குப் போய் அவரை எழுப்பி வங்கிக் கிளை சாவிகளை வாங்கி வந்து விடுவார்.

அப்போதெல்லாம் பர்க்ளர் அலாரம் சிஸ்டம் வரவில்லை.கிளையைத் திறந்து கூட்டிப்பெருக்கி அள்ளி சுத்தம் செய்து கவுண்டர் மேஜைகள் இருக்கைகள் அனைத்தையும் துடைப்பார்.

எட்டுமணிக்கு முன்பே மண்பானைகளில் குடிநீரும் எடுத்து வைத்து விடுவதால் அவர் ஒரு ஸ்வீப்பர் வேலை செய்பவர் என்று பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்குத்தெரியாது.

அப்புறம் தபால் அலுவலகம் சென்று தபால்கள் வாங்கி வந்து மேஜையில்பரப்புவார்.அதில் கணிசமாக எனக்கு வந்திருக்கும் பத்திரிகை அலுவலக தபால்களை ஜவுளிக்கடைப்பையில் போட்டு எனது டிராயருக்குள் வைத்து மூடி விடுவார்.  நான் அதை மாலை 5 மணிக்கு மேல்ஆபீஸ் முடிந்து செல்லும்போதுதான் வீட்டுக்கு எடுத்து சென்று பிரிப்பேன்.

 பிற்பாடு நிர்வாக அலுவலகத் தபால்கள், Confidentiel உறைகளை மட்டும் பிரிக்காமல் ஒரு கிளிப்பில் வைத்து மேலாளர் அறை மேஜையில் வைத்து விடுவார்.

மற்றவற்றை பிரித்து DD, DD Advice, Mail Transfer களை அந்தந்த செக்ஷனில் வைத்து விட்டு கலெக்ஷனுக்கு வந்த செக்குகள் கிளியரிங் செக்குகள் காசோலைகளை  SB செக்ஷன், கரண்ட் அக்கவுண்ட் என்று செக்ஷன் வாரியாக Branch seal  போட்டு வைப்பார்.

அப்புறம் ஸ்டாம்ப் பேடுகளில் மை ஊற்றி ஸ்டாம்புகள் ஊசிகள் ஜம்ப் கிளிப்புகள் ஸ்டாபுலர், பின்கள் எல்லாம் எடுத்து வைத்து ஸ்பாஞ்சுகளில் தண்ணீர் ஊற்றி வைப்பார்.

அப்படியே காலண்டர்களில் தேதி மாற்றி SB Current Account DD செலான்களில் சீல் போட்டு கட்டித் தொங்க விடுவார். ஒவ்வொரு  செக்ஷன் சீல்களிலும் தேதி மாற்றி வைப்பார்.

கிளியரிங் செக்குகளை வங்கி வாரியாகப் பிரித்து வைத்து விட்டு அவர் நிமிரும்போது மணி ஒன்பதரை நெருங்கும். 

அப்ரைசர் வந்திருந்தால் அவரை காவலுக்கு வைத்து விட்டு கணேஷ் பவன் ஹோட்டலுக்குப் போய் மேலாளருக்கு ரெண்டு இட்லி சீனிபோடாமல் ஒரு காபி, ஹோட்டலில் சாப்பிடும் மற்ற ஊழியர்களுக்கு டிபன் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து வைத்து விடுவார்.

ஆபீசில் எந்த ஃபைல் எங்கே இருக்கிறது என்பது அவருக்குத்தான் தெரியும்.

ஒரு ஹெட் பியூண் (Daftary) ஒரு கேஷ் பியூண் 2 டெம்பரவரி சப் ஸ்டாஃப் உட்பட நாலு பேர் இருந்தாலும் இந்த PTS இருந்தால்தான் கேட்டது உடனே கிடைக்கும்.

இன் ஆபரேட்டிவ் லெட்ஜர்கள், ஸ்பெசிமென் கையெழுத்து கார்டுகள், லோன் டாகுமெண்ட்டுகள், நூற்றுக்கணக்கான ஃபைல்கள் டிபார்ட்மென்ட் வாரியான சர்குலர்கள் எது வேண்டுமானாலும் உடனே கூப்பிட்டால் ஓடி வந்து ஒரு சில நிமிடங்களில் தேடி எடுத்து வந்து நமது மேஜையில் வைத்து விடுவார்.

11 மணியோடு அவரது வேலை நேரம் முடிந்தாலும் வீட்டுக்கு போக மாட்டார்.

படித்த படிக்காத வாடிக்கையாளர்களுக்கு பாஸ் புக் என்ட்ரி போட்டுத்தருவது செலான் எழுதிக் கொடுப்பதிலிருந்து பெரிய பார்ட்டிகள் கொண்டு வந்து தரும் ணப்பைகளை வாங்கி கேஷியரிடம்கொடுத்து கவுண்டர்ஃபாயிலை வாங்கிக்கொடுப்பது வரை எல்லாமே அவர்தான்.

டெபாசிட் பார்ட்டியோ லோன் பார்ட்டியோ எந்த ஆசாமியை எங்கே போனால் பிடிக்கலாம் என்பதை உள்ளங்கையில் அல்லது விரல் நுனியில் வைத்திருப்பார்

லெட்ஜரைத் திறந்து Debit Credit செய்து செக்சன் புக், டே புக்  எழுதி GL போஸ்டிங் செய்வதோடு பெரும்பாலான கிளார்க் வேலைகள் முடிந்து விடும்.

பாஸ் புக் எண்ட்ரிக்குக் கூட அவரிடமே பாஸ் புத்தகங்களை கொடுத்து விட்டு செல்வார்கள்.மாலையில் இவராக உட்கார்ந்து எண்ட்ரி போட்டு ஆபீசரிடம் கொடுத்து இனிஷியல் வாங்கி வைத்துக் கொள்வார்.இவர நம்பி எதிலும் சைன்போடுவார்கள். அவ்வளவு worth.

DD செக் புக் வழங்குவது லோன், நகை லோன் அக்கவுண்ட் திறப்பது கிளியரிங் பில் கலெக்ஷன் இதெல்லாம் 4 மணிக்குள் முடித்து விட்டு பெரும்பாலான கிளர்க்குகள் ஏறக்கட்டி விடுவார்கள்.

மதியம் சாப்பிட்டு விட்டு மூணு மணிக்கெல்லாம்  வந்து விடுவார்.அவர் இல்லா விட்டால் கேஷியர்களுக்கு வேலை ஓடாது.

அவர் கவுண்டருக்குள் போய் கேஷியரின் பின்னால் உட்கார்ந்து குவித்துப்போட்டிருக்கும் பணக்கட்டுகளை நூல் வைத்து கட்டி ஸ்லிப் ஒட்டி சீல் போட்டு கேஷியரிடம் கையெழுத்து வாங்கி அப்புறம் டினாமினேஷன் வாரியாக அடுக்கி அதைக்கொண்டு போய் கேஷ் ஆபீசர்களிடம் கொடுத்து எண்ணி கையெழுத்து வாங்கி அடுக்கி கொடுப்பார்.

நாலு மணிக்கு கேஷ் ஆபீசர் சரி பார்த்த பிறகு பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய்  சேஃபுக்குள் வைப்பதற்கு மட்டும் கேஷ் பியூண் வருவார்.சமயத்தில்  டெஸ்பாட்ச்சையும் இவரே போட்டு விடுவார்

அனுவல் குளோசிங் சமயத்தில் ராத்திரி 9 மணிக்கு மேனேஜரோடு உட்கார்ந்து பேலன்ஸ் புக் டோட்டல் போட்டுக் கொண்டிருப்பார்

மறு நாள் இன்ஸ்பெக்சன் வந்த ஆபீசரோடு கிராமம் கிராமமாக சென்றுலோன் பார்ட்டிகளை அடையாளம் காட்டிக் கொண்டிருப்பார்.

மாறுதலாகிப்போன ஊழியர்கள் வெளியூரிலிருந்து எந்த உதவி தேவைலும் இவரிடம்தான் கேட்பார்கள்.

இடையில் பெர்சனல் வேலை எது சொன்னாலும் மறுப்பே இருக்காது

யப்பா EB பில் கட்டணுமே ?

குடுங்க சார்

விஜிலாவில் மனதில் உறுதி வேண்டும் போட்டிருக்கானாமே

எத்தனை டிக்கெட் சார் வேணும் ?

நாளைக்கு காலையில பையனை ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுரணுமே

சரிங்க சார்

லாண்டரில துணி வாங்கிட்டு வரணும்

இதோ

கேஷியர் வந்து போகும் வில் வண்டி மாட்டுக்கு கூழம் கெடக்கான்னு பாரு

போட்டுட்டேன் சார்

சார் பாண்டிச்சேரி சரக்கு வந்திருக்கு

சரி

ஒரு நாலஞ்சு குவார்ட்டர் வாங்கிப்போட்டுரவா

சரி போட்டுறு

நான் ஒண்ணு எடுத்துக்கவா

ரெண்டா எடுத்துக்கோ

நாம் எது சொன்னாலும் உடனே அவர் செய்வது போலவே அவர் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லும் பழக்கம் ஆபீசில் யாருக்கும் கிடையாது.

ஆபீஸ் வேலையா சொந்த வேலையா எதுவானாலும் டாண் டாண் என்றுசெய்து மூடிட்டு முழிக்கு முன்னே செய்து முடிப்பதில் அப்படி ஒரு சின்சியாரிட்டி.

அவரோடு நான் இருபது வருடங்கள் ஒரேகிளையில் பணியாற்றி இருக்கிறேன்.

என்னோடு பணியாற்றிய ஒரு கிளார்க்ஆபிசராகி மேனேஜர் ஆகி அப்புறம் ரீஜினல் மேனேஜருமாகி பிராஞ்சு விசிட்டுக்கு வந்தவர் உள்ளே நுழையும்போது கேட்ட முதல் கேள்வி அவரை எங்கே ? 

அந்தக் கிளையிலிருந்து மாறுதலாகி 16 வருடங்களுக்குப் பிறகு நானும் ஓய்வு பெற்று வீடு திரும்பும் அன்று அந்த கிளைக்கு போன் செய்து மகேந்திரனை கூப்பிடுங்கள் என்றேன்.

எந்த மகேந்திரன் என்றார் மேனேஜர்

PTS மகேந்திரன்

மேனேஜர் ஆபீசில் உள்ள யார் யாரை எல்லாமோ கேட்டுப் பார்த்தார்.யாருக்கும் தெரியவில்லை.

கடைசியில் புனேவில் இருக்கும் அவரது மகளின் செல் நம்பர் கிடைத்தது.

ஈஸ்வரி நான் பாரதி அங்கில் பேசறேன் 

சொல்லுங்க அங்கில் நல்லா இருக்கீங்களா எந்த பிராஞ்சுல இருக்கீங்க

திருநெல்வேலில இருக்கம்மா. ரிட்டையர்டாகிட்டேன். அப்பா எங்கே 

இருக்கார். நம்பர் தர்றியா ?

ஒரு சின்ன மெளன இடைவேளைக்குப்பின் அந்தப் பெண் சொன்னாள்

அப்பா காலமாகி பத்து வருஷமாச்சு அங்கில்.பின்னாடியே அம்மாவும்.

ஓ ...

No comments:

Post a Comment