Friday, October 8, 2021

பாட்டி மசாலா

 '''பாட்டி மசாலா'''

பாட்டி   உங்க பையன், மருமகள், பேரன் ரெண்டு நாள் இங்க வரபோறான்னு சொன்னேளே. உங்களுக்கு எதாவது டவுன்லிருந்து சாமான் வாங்கி வர வேண்டுமா, என்று கேட்கதான் வந்தேன் என்று சொன்ன சேகரை பார்த்து புன்னகைத்தாள் சீதம்மா பாட்டி. 

இல்லப்பா நானே  எல்லாவற்றையும் வாங்கிண்டு வந்துட்டேன். இதோ சமையலும் ஆச்சு. அவன் வரவை எதிர்பார்த்து தான் இங்க திண்ணைல  உட்கார்ந்து இருக்கேன். 

அதோ ஒரு கார் வர்றது பார் . இரு நான் கொஞ்சம்  இறங்கிகறேன். செத்த கை கொடுப்பா. அவர் கை பிடித்து திண்ணையில் இருந்து இறங்க உதவினான் சேகர்.  

அந்த  கார் நிற்காமல் சென்றதை பார்த்து முகம் மாறிய பாட்டியை பார்க்க பாவமாக இருந்தது.

 பாட்டி உங்ககிட்ட எதாவது போன் நம்பர் இருந்தா கொடுங்கோ, நான் try பண்ணி பார்கறேன். உள்ள வா சேகர். ஒரு diaryல குறிச்சு வச்சு இருக்கும். ஆனா அது அவன் வெளிநாட்டு நம்பர். 

எனக்கு போன் வந்தா எடுக்க தெரியும். நேக்கா பண்ண தெரியாது. பரrவாயில்லை பாட்டி குடுங்கோ. நான் உங்க பையன் கிட்ட பேசி விவரம் சொல்றேன்.

 நம்பர் வாங்கி சிறு தயக்கதோடே ' ஹலோ' சதீஷ் பேசறேளா? ஆமாம் நீங்க யாரு.. 

நான் சீதம்மா ஆத்துலே இருந்து பேசறேன். அவாளுக்கு தெரிஞ்சவன். நீங்க எப்போ வருவேள்னு காத்துண்டு இருக்கா அம்மா.

 ஓ..அப்படியா,  இந்த weather எங்களுக்கு ஒதுக்கவே இல்லை. அங்க AC வேற கிடையாது அதுனால இங்க ஹோட்டல்லயே  தங்கி இருக்கோம். அம்மா கிட்ட சொல்லுங்கோ , நாளைக்கு வரோம்னு. 

இந்த செய்தி  கேட்டதும் சீதம்மா இடிஞ்சு போய்ட்டா. ஆசை ஆசையா பாயசம், பச்சடி, வடைனு அமர்களமா சமைச்சு வச்சு இருக்கா இந்த தள்ளாத வயசுல பாவம்.  பாட்டி நான் வேணா சுஜாவ அனுப்பி உங்களுக்கு உதவ சொல்லவா. நம்மாத்து fridgeல வைச்சுடுங்கோ.

 நாளைக்கு சுட பண்ணி போட்டுடலாம் என்று சொன்ன சேகரை வாஞ்சையோடு பார்த்தாள். இந்த பையனுக்குதான் எவ்வளவு கரிசனம் என் மேல.

 வேண்டாம் சேகர், சதீஷ் வேற நீ வேற கிடையாது எனக்கு. நீயும் சுஜாவும் இன்னிக்கு நம்மாத்துலேயே சாபிடுங்கோ. 

எனக்கும் மனசு நிறையும் என்று அன்பு பொங்க சிரித்த பாட்டி கை பிடிச்சு, வாங்கோ உள்ள போகலாம் வெயில் ஏறறது என்றான் சேகர்.

மறுநாளும் கொஞ்சம் கூட சலிப்போ, வெறுப்போ இல்லாமல், அன்போடு சமைக்க ஆரம்பிச்சா சீதம்மா பாட்டி. வீடே சாம்பார் வாசனை. சமையல் முடித்து எப்போதும் போல் திண்ணை யில் அமர்ந்தாள். 

சற்று நேரத்தில் கார் வந்து நின்றது. சதீஷ் தான் முதலில் இறங்கினான். கொஞ்சம் பூசின மாதிரி இருக்கான் இப்போ. நன்னா இருக்கட்டும் கொழந்தை என்று ஆசிர்வதிச்சுண்டே இறங்கினாள்.

 ஹnரிஷ் குட்டி அம்மா பின்னாடி ஒளிஞ்சுண்டு பயத்தோட சிரிச்சது. வாங்கோ வாங்கோ என்று வாய் நிறைய கூப்டுண்டே உள்ளே போனாள்.

 அம்மா ...

என்னடா சதீஷ். வேஷ்டி எதாவது தரவா..

இல்லமா shorts தான் சௌகர்யம்..அப்புறம் உடம்பு எல்லாம் நன்னா இருக்கயோனோ ...இரு ஒரு அவசர போன் வரது. பேசிட்டு வரேன்  என்று வாசல் பக்கம் போனான் சதீஷ்

" ஹேமா..எப்படி இருக்கே மா..டேய் கண்ணா . பாட்டிட்ட வாடா.

ஹரிஷ்க்கு ஒரே allergy இங்க வந்ததுலே இருந்து. ஒரே pollution. சாப்பாடு hygiene இல்லவே இல்லை. எப்போடா திருப்பி U.S. போவோம்னு ஆயிடுத்து. இவர் எங்க காணல. விசர்த்து கொட்றது. 

ஹேமா , சீக்கிரம் சாப்டலாம். எனக்கு அவசரமா ஒரு எடத்துக்கு போகணும். உங்கள ஹோட்டல்ல விட்டுட்டு போறேன்.

என்னடா சதீஷ் , இப்போ தானேடா வந்த. இப்படி கால்ல கஞ்சி கொட்டிண்ட மாதிரி கிளம்பணும்னு சொல்ற என்று குரல் கம்மி கேட்டாள் சீதம்மா.

சரி சாப்பிட வாங்கோ. சூடு ஆறிடும். உனக்கு பிடிக்குமேனு எல்லாம் ஆசையா பண்ணி இருக்கேன். வாங்கோ சாப்பிட.

நான் பக்ஷணம், சாம்பார் பொடி, பருப்பு பொடி, எல்லாம் பண்ணி வச்சு இருக்கேன் ஹேமா. ஞாபகமா எடுத்து வச்சுக்கோ. 

அம்மா luggage ஜாஸ்தி  ஆயிடும். வேற எப்போவாவது நான் தனியா வந்தா எடுத்துண்டு போறேன். நீ உடம்ப பார்த்துக்கோ கார்காரர் வேற ரொம்ப நேரமா வெயிட் பண்றார்.

குழந்தைக்கு முத்தம் குடுத்து எல்லோர்க்கும் டிரஸ் இருக்கற பை கொடுக்கும்போது கண்ணுல வந்த கண்ணீர கட்டுபடுத்த முடியாமல் அப்படியே திண்ணை தூண்ல சாஞ்சு உட்காந்துண்ட்டா சீதம்மா.

கார்ல ஏறினதும், ஹேமா சதீஷ்ஷை பார்த்து, நல்லவேளை நீங்க அசடாட்டம் பக்ஷணம் அது இதுனு வாங்கிண்டு வந்துடுவேளோனு பயந்தேன். சமத்து அழகா சமாளிசுட்டேலள். அப்படியே அந்த ""பாட்டி மசாலா"  கடைகிட்டே கார் நிறுத்துங்கோ. 

எல்லா சாமானும் அங்க வாங்கிக்கலாம். அந்த brandதான் ஒத்துக்கும் நம்மளுக்கு என்று கடைக்குள் சென்றாள் ஹேமா.

 அப்படியே கண்ணீரோடு  திண்ணை grillலில் சாய்ந்து கண் அசர்ந்த சீதாம்மாவை சைக்கிள் மணி சத்தம்  எழுப்பியது.வா ராஜு என்ன திடிர்னு. நான்  பக்ஷணம், பொடி எல்லாம் இந்த வார கடைசிலதானே டெலிவர் பண்றேன்னு முதலாளி கிட்ட சொன்னேன்.

இல்லமா, எங்களுக்கு தெரியும், ஆனா திடிர்னு  ஒரு foreign கஸ்டமர் வந்துடார், அதான் முதலாளி எவ்வளவு ஸ்டாக் இருக்கோ அவசரமா வாங்கிட்டு வரச் சொன்னார்.

சரி இரு, என் பையனுக்கு பண்ணினது இருக்கு. பாக்கெட் போட்டு தரேன் என்று எழுந்த சீதம்மாக்கு  அது  தன் மகன் கைக்கு தான் போய் சேர போறது "பாட்டி மசாலா" brandல என்று தெரியாது.

மத்யமார் குறுங்கதை போட்டி இது...💐🙋‍♂️😍

No comments:

Post a Comment