Friday, October 8, 2021

சாண்பிள்ளை, ஆண்பிள்ளை

 சாண்பிள்ளை, ஆண்பிள்ளை 

மனதை தொட்டுவிடும் கதை - ganeshamarkalam

“சாண் பிள்ளையானாலும் சரி ஆண் பிள்ளை”ன்னு கேள்விப்பட்டிருப்பேள். சாக்ஷாத் நான்தான். எங்கம்மாவுக்கு மூணு குழந்தைகள். அக்கா ஜானு, அப்புரம் நான் முரளி, கடைகுட்டி வித்யா. பழைய ஃபேமிலி போட்டோலே ரெண்டு பொட்டைகளுக்கு நடுவுலே என்னைப்பாக்கலாம். தனியா எடுப்பா தெரியுவேன்.

ஜானு அக்காவுக்கு என்மேல கொள்ளை ஆசை. தன் பங்கு அப்பளத்தை எனக்கு கொடுத்துடுவா. வித்யா நேர் எதிர். அந்த அப்பளத்தை எப்படித்திருடி தானே தின்னுடலாம்னு திட்டம் போடுவா. அவள் பின்னல் கையில் ஆம்பிடாதான்னு இருக்கும். 

ஹோம்வொர்க் செய்யரச்சே பின்னாடி வந்து குட்டிட்டு போவள். கூராச்சீவி வச்சிருப்பா. அவ பென்சிலை அவளுக்குத்தெரியாம எடுத்து எழுதிண்டிருப்பேன். குட்டிட்டு சிட்டா பரக்க வெடுக்குன்னு திரும்பரச்சே அவளை அறியாம அவ பின்னல் ஒரு வட்டம் அடிச்சு என்கிட்டே வரும், அதை லாகவமா பிடிச்சுண்டா போறும், ஓடினவ அப்படியே ஃப்ரீஜ் ஆகி தலை பின்னாடி வரும். “விட்டுடுடா, அம்மா”ன்னு கத்துவா. அம்மாவோ இங்கே என்ன நடக்கிரதுங்கிர ப்ரதிங்ஞயே இல்லாம “அவனை ஏண்டி படிக்கரச்சே வம்புக்கு இழுக்கராய்”ம்பா. அப்புரம் விஷயம் தெரிஞ்சு எனக்கு ரெண்டு பென்சிலும் ஷார்ப்பனரும் புதுசா வாங்கித்தருவா. ஆண்பிள்ளை நன்னா படிச்சாத்தான் நாளைக்கு ஒரு நல்ல இடத்துக்கு வரமுடியும். எனக்கு தர சலுகைகளைப் பாத்து ரெண்டுபேர் முகமும் சுளிக்கும்.

அது ஒரு காலம். நன்னா இருந்தது. இப்போ தலைகீழா நின்னாலும் திரும்பவராது. 

ஜானு காலேஜில் படிக்க ஆரம்பிச்சா. நான் +2. வித்யா 9ஆவது. அவா தோரணை ட்ரெஸ் எல்லாமே மாறிடுத்து. நானும் குழந்தை இல்லை, பேச ஆரம்பிச்சா கரகர குரலை கேட்டு ரெண்டும் சிரிக்கும், அதிலும் வித்யா நான் இல்லாதபோது என் குரலில் பேசி எல்லாரையும் மகிழ்விப்பா. அப்பா “போடி”ன்னு அவளை தொரத்துவர். லீவு விட்டாச்சுன்னா கும்மாளம்தான். அம்மா சமைச்சுவச்சுட்டு கோவிலுக்கு போனால் ஜானுதான் எங்க ரெண்டுபேருக்கும் அழகா பரிமாறுவள். அவ ஆத்துக்காரியம் செய்யரது அத்தனை பாங்கா, அம்மாவைபோலவே. 

ஒருதடவை எனக்கு டைஃபாயிட் ஜுரம். ரெண்டுவாரம் கடையாக்கிடெந்தேன். இவா ரெண்டுபேரும்தான் வாஞ்சையா பாத்துண்டா. சின்னவ சொல்லுவா, “சீக்கிரம் சுவஸ்தமாகி எழுந்துடு அண்ணா உன்னை இப்படி படுக்கையில் பாக்க முடியலை”. உண்மை என்னன்னா அவள் ஸ்கூல் புஸ்தகத்துகெல்லாம் அட்டை போடணும், நான் எழுந்து வந்து செய்வேன்னு.

இப்படி இருகச்சே அப்பா ஜானுவுக்கு வரன் பாக்க ஆரம்பிச்சர். நல்ல அத்திம்பேரா வரணும்னு சின்னவள் நவக்ரஹத்தை சுத்தினா. என்னையும் சுத்தச்சொன்னா. நியாமா பட்டது, சேர்ந்து சுத்தினேன். ஆனால் அதுக்கு நவக்ரஹம்தான் சரியான்னு தெரியலை. கொஞ்சநாள் போனப்புரம் ஆஞ்சேநேயர்னு யாரொ சொன்னான்னு வந்து சொல்ரா. அத்தனையும் வேஸ்ட்டுன்னு நினெச்சுண்டேன், இன்னொரு தடவை மாத்துவான்னு பிள்ளையாரையும் சுத்தினோம். கும்பகோணத்தில் எல்லா சுவாமியும் இருக்கு. கடைசீயா மொத்த கோவிலையும் ஒருதடவை. எதுக்கும் இருகட்டும்னு. கடைசீலே ஜானுவுக்கு நல்ல மாப்பிள்ளை, எங்களுக்கு அத்திம்பேர். உள்ளூரேதான். 

நாங்க நாச்சியார்தோட்டம் அவர் அன்னலக்ரஹாரம். அக்கா எங்கேயும் போகலை கிட்டக்கத்தான்னு எங்களுக்கு சந்தோஷம். இப்போவும் ஞாபகம் இருக்கு அத்திம்பேர் தலைதீபாவளிக்கு எங்களுக்கும் புதுதுணி கொடுத்து ஆச்சர்யப்படித்தினர். அதுனாலே அவரை செஸ் விளையாட கூப்பிட்டு தோக்கடிச்சுடலாம்னு போட்ட பிளானை வித்யா சட்டுன்னு வாபஸ் வாங்கிண்டுட்டா.

அடுத்தது உன் விக்கெட்னு கேலிபண்ணினேன். அவளுக்கு புரியலை. அம்மாதான் “அடுத்தது உன் கல்யாணம்னு உன் அண்ணா சொல்ரான்டீ”னா. இவளுக்கு அழுகையே வந்துடுத்து. “அண்ணா என்னைவிட 3 வயசு பெரியவன் அவனே முதல்ல பண்ணிக்கட்டும் அவன் குடுத்தனம் பண்ர அழகை பாத்துட்டு என் புக்காத்துக்கு போரேன்”னு பெரீய மனுஷி மாதிரி பிரகடனப்படுத்தினாள்.

அப்பாவுக்கு அவ்வளவு வசதி கிடையாது. சொந்தமா வீடு இருந்தது. கொஞ்சம் நிலம், ஆனா குத்தகைக்காரன் சரியா படி அளக்கமாட்டான். சண்டை போட்டு 3 மூட்டை வந்தால் பெரிசு. ஆர்ட்ஸ் காலேஜில் டீச்சர் உத்யோகம் காப்பாத்தித்து. எனக்கு தெரிஞ்சு நாங்க கேட்டு எதுவும் அவர் வாங்கித்தராமல் இருந்ததில்லை. ஆனால் அக்கா கல்யாணச்சிலவு கையை கடிச்சுடுத்து போலேருக்கு. குதறிடுத்துன்னே சொல்லலாம். இன்னொரு பொண் வளர்ந்து நிக்கரதை பாத்து மலைச்சுப்போவர், சிலசமையம் அது அதீத சிக்கனமா எங்கள் மேலே விடியும். அம்மாதான் என்ன ஆனாலும் சரி முரளி நன்னா படிச்சு தலையெடுக்கணும் அப்புரம் கவலையில்லைம்பா. 

அதுக்காக எனக்கு சலுகைகள் நிறைய. ராத்திரி குடிக்க ஒரு டம்ளர் பால் ஒரு உதாரணம். “வித்யாவுக்கு கிடையாதா”ம்பேன், நடப்பதை புரிஞ்சிண்டு “அய்யே, எனக்கு பால் வேண்டாம்”பா கோவில் பிரஸாதம் கொண்டுவந்தா எனக்கு முதலில். தலைதீபாவளிக்கு அடுத்த வருஷம் எனக்கு மட்டும் புதுசு வாங்கினா. இன்டெர்வ்யூ அது இதுன்னா போட்டுக்கணுமே!

அம்மாவிடம் தனியா இருக்கச்சே கேட்டேன். “அக்கா பிறந்ததும் ஆண் குழந்தை வேணும்னு ஆசைபட்டேளா”ன்னு. “ஆமாண்டா நிறைய வேண்டிண்டோம், அதான் முதல் பொண்ணாபோச்சே இப்போவாவது கருணை காட்டுன்னு. கடவுள் அனுக்ரஹம் நீ பிறந்தாய். அப்பா ரொம்பவும் சந்தோஷப்பட்டார்”. “அப்போ மூணாவது ஏன் ட்ரை பண்ணினேள்?” “ட்ரை ஒண்ணும் பண்ணலை, உண்டாயிடுத்து, கலைக்கவேண்டாம் இருகட்டும்னுட்டர். வித்யா பிறந்தா. அப்பா முழுசா 1 வருஷம் மூஞ்சியை தூக்கி வச்சிண்டிருந்தார். குழந்தைகிட்டேயே வரமாட்டர். அப்புரமா என்ன தோணித்தோ திடீர்னு மனசு மாறி, குழந்தை என்ன தப்பு பண்ணித்துன்னு ஆசையும் பாசமும் பொழிய ஆரம்பிச்சர். இப்போ கடைக்குட்டிதான் அவருக்கு எல்லாமும், வெளீலே காட்டிக்க மாட்டர், ஆனா எனக்கு தெரியும்டா”ன்னா.

எழுந்து போரச்சே “உன்மேல் ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கோம்டா, நீ சீக்கிரம் படிப்பை முடிச்சு நல்ல உத்யோகத்தில் அமர்ந்து இந்த குடும்பத்தை தூக்கி விடணும்.” எனக்கு புரிஞ்சா மாதிரி இருந்தது.

கடைசீ வருஷம் BSc படிக்கரச்சேதான் அத்தனை இடியும் எங்காத்து மேலே விழுந்தது. அப்பா திடீர்னு மாரடைப்பில் போயிட்டர். காலேஜில் மயங்கி விழுந்தர்னு ஆத்தில்கொண்டுவந்து போட்டா. டாக்டர் வந்து பாத்துட்டு “இல்லை”ன்னுட்டர். கஷ்டப்படுத்தாம கும்பேஸ்வரன் அழைசுண்டுட்டான். போர வயசில்லைதான். அம்மாவால் இந்த இழப்பை ஏத்துக்க முடியலை. படுத்த படுக்கையா ஆயிட்டா. 8 மாசம் எப்படியோ தள்ளினோம் அப்புரம் எங்கப்பா காலேஜிலேயே எனக்கு ஒரு வேலை போட்டுத்தந்தா. மாஸ்டர்ஸ் படிச்சிருந்தா இன்னும் நல்ல வேலை கிடைக்கும்னு தபாலில் படிக்க ஆரம்பிச்சேன். உலகம் புரிய ஆரம்பிச்சாச்சு.

அம்மா வைத்திய சிலவு. ஆத்து மாசாந்திர சிலவுகள். நிலம் குத்தகைக்காரனுக்கு சொந்தம்னு 10 வருஷத்துக்கு முன்னாடி ஒரு சட்டம் வந்ததாம். இப்போ எங்க நிலத்துலேந்து ஒண்ணும் வரதில்லை. போய் கேட்டால் ஆத்தை பத்தி வாஞ்சையா விசாரிச்சுட்டு, மோர் குடிச்சுட்டு போங்கோன்னு உபசரணை, ஆத்து மனுஷாளுக்கு என்னை பெரிய ஐயர் பையன்னு அறிமுகம், ஆனா குததகையை பத்தி பேச்செடுத்தால் முகம் கொடுத்துப் பேசலை. வெறுங்கையுடன் திரும்பினேன். ஆத்து வாசலில் வித்யா உக்காந்து படிச்சிண்டிருக்கா. அடுத்த 2 அ 3 வருஷத்தில் இவளுக்கு பாக்கணும். நினெச்சாலே களைப்பா இருந்தது.

அப்பா பணம் பேங்கில் இருந்தது குழாயை திரந்துவிட்டா கரையுமே அப்படி மெதுவா, என் சம்பளப்பணம் பூராத்தையும் இழுத்துண்டு.

அம்மாவோட ஒண்ணுவிட்ட அண்ணா அம்மாவை பாக்க வந்தர். “முரளிக்கு வரதக்ஷிணையோட நல்ல பொண்ணா பாத்து பண்ணிடலாம், அப்புரம் அதை வச்சு வித்யாவை கரை சேக்கலாம்”னு பேஸிண்டிருந்துட்டு போனர். நான் ஆத்தில் இல்லை. கேட்டிண்டிருந்த வித்யா, நான் வந்ததும், “அண்ணா நான் சொன்னாபுலே நீ முதல்ல கல்யாணம் பண்ணிக்கோ”ங்கிரா. ஆனா புது அர்த்ததோட. இந்த பிர்ச்சனையிலேந்து விலக வேர வழியே இல்லையா என்ன? யோசிக்க ஆரம்பிச்சேன். அப்பாவை சுத்தி சுழன்ற குடும்பம் இப்போ என்னை சார்ந்து சுழலரப்போ எல்லோருக்கும் நல்லது நடக்கிரா மாதிரி நான்தான் முடிவெடுக்கணும். 

மாமா சொன்னது சுலபமான சொல்யூஷன். அதில் ஆண்பிள்ளைத்தனம் எங்கே இருக்கு? அப்படி நான் செஞ்சால் எனக்கு வரப்போரவ என்னை எப்படி ஆண்பிள்ளையா ஏத்துப்பா? அவளிடம் மரியாதை கிடைக்காம எப்படி வாழ்நாள்பூரா குடுத்தனம் பண்ரது? அவள் கொண்டுவந்த சீரில் வித்யா புக்காத்துக்கு போனா, வித்யாதான் என்னை மதிப்பாளா? என்ன பண்ணலாம்?

பண்ணினேன், ஒவ்வொண்ணாய், நிறைய. நீங்க இப்படிப்பட்ட சமயத்தில் நான் செய்வேன்னு நினைக்காததை செஞ்சேன். காலேஜில் வேலையை ராஜீனாமா செஞ்சேன். எல்லோரும், குறிப்பா என் சொந்தக்காரா, அக்கா, அத்திம்பேர் எல்லாம் கட்டம் கட்டி திட்டினா. ஆனால் நான் எடுத்துக்கொண்ட பாதை பத்தி எனக்கு தெரியும், எங்கேயாவது கொண்டுபோகும், ஏதாவது நல்லது நடக்கும்னு. 

கோர்டில் எனக்குத் தெரிஞ்சவா மூலமா நிலக்குத்தகையை திரும்ப வாங்கிண்டேன். எனக்கு வேலையில்லைன்னு ஆதாரம் காட்டி, இந்த நிலமே வாழ்வாதாரம்னு. ரெண்டு மாசத்தில் நிலம் என் கைக்கு வந்தது. ஒரு பெட்டியில் என் துணிமணிகளை எடுத்துண்டு ஆடுதுரை பக்கத்தில் பேராவூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துண்டு போயாச்சு. அங்கேந்து நிலத்தை பாத்துக்கலாம். 

தண்ணிக்கு பஞ்சமில்லை. ரெண்டு பேர் வேலைக்கு கிடெச்சா. ஒரு வருஷம் பாடுபட்டேன். கையில் கணிசமா காசு வந்தது. எங்கூட படிச்ச சிலர் நாங்களும் செர்ந்துக்கரோம்னு வந்தா. அவாளை எனக்கு பக்கத்து நிலங்களை குத்தகைக்கு எடுத்து கொடுத்தேன். சேர்த்து பாத்துக்கரது சுலபமா இருந்தது. வேலையை பகிர்ந்துண்டோம். உடம்பு வருந்தி களைச்சுப்போய், தேகம் கருத்து ஆத்துக்கு கூட அடுத்தவாரம் சாவகாசமா போயிக்கலாம்னு தூங்கிடுவேன். வித்யா, ஜானு, அத்திம்பேர் வந்து பாத்துட்டு போவா.

அத்திம்பேர் ஏதாவது உதவி வேணுமான்னர். கூச்சப்படாம கேளுன்னர். தெரியும் ஜானு அவரை கேக்கசொல்லியிருப்பான்னு. அத்திம்பேர்கிட்டே வாங்கிக்கரதும், மாமா சொன்னாப்புலே ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கரா மாதிரி அவாளை கொள்ளை அடிக்கரதும் ஒண்ணுதான். போரச்சே வித்யா கிட்டெக்க வந்து “அண்ணா, நீ விவசாயத்தில் சக்சஸ் ஆகணும்னு சாரங்கபாணிக்கு விளக்கு போடரேன்”னா. “நன்னா விசாரிச்சுட்டு போடு, சக்ரபாணியா இருக்கப்போரது”ன்னு கேலி செஞ்சேன். அவா வந்துட்டு போனதே புத்துத்தெம்பு வந்தாப்புலே இருந்தது.

நாலு வருஷத்துலே முதலா செஞ்சுகாட்டணும்னு நினெச்சது நடந்தது. அம்மா எழுந்து உக்காந்தா. அவள் என்னை பாத்துட்டு கேட்ட முதல் கேள்வி, “என்னடா ஆச்சு உனக்கு, இப்படி ஆளே மாறியிருக்காய், மூஞ்சி கறுத்து கையெல்லாம் காய்ச்சுப்போய்?” இன்னும் நான் வித்யா பென்ஸிலை திருடிட்டு உக்காந்திருப்பவனாவே எதிர்பாக்கரா. அம்மாக்கள் அப்படித்தான். 

அதுலேந்து 5ஆவது வருஷம் வித்யாவுக்கு கல்யாணம் நடந்தது. அப்போ அவளுக்கு 29 வயசு. வைதீஸ்வரன் கோவிலில், சாதாரணமா ஆனா சத்தமா மேளதாளத்தோட. தஞ்சாவூர் மாப்பிள்ளை. பாக்க அவ்வளவு ஸ்மார்ட். ஜானுகூட விளையட்டா “நீ கல்யாணம் செஞ்ஜு வச்சிருந்தாயானால் எனக்கும் இப்படி அழகான மாப்பிள்ளையா பாத்திருப்பாய்”னு. நல்லவேளை யார் காதிலும் விழலை. வித்யா ஆத்துக்காரருக்கு நல்ல படிப்பு, நிச்சயமா மேலே வருவர். அப்பா அக்காவுக்கு என்ன செஞ்சரோ நான் வித்யாவுக்கு அதுக்கு மேல 2 பவுன் போட்டு அனுப்பி வச்சேன். போரச்சே என் கையை பிடிச்சிண்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினா. “குழந்தையை பெத்தெடுத்துண்டு வந்து காமி, அப்புரம் ஸ்கூல்லே செர்த்ததும் புஸ்தகங்களை இங்கே கொண்டுவந்து வச்சுடு அட்டை போட்டுத்தரேன்”னு சொன்னேன். அப்புரம்தான் அழுகை நின்னது.

எல்லாம் ஆச்சு. எனக்கும் நல்லது நடக்கணும்னு ஆத்தில் ஆர்ப்பாட்டம். அம்மாவுக்கும் மாட்டுப்பொண்ணை பாத்துடணும்னு ஆசை. “இப்போதான் கொஞ்சம் மூச்சுவிட நேரம் கிடெச்சிருக்கு. என் காலை கட்டிப்போட்டுடாதே.”

எனக்கு இப்போ 60. அம்மா இல்லை. யோசிப்பேன். இந்த சாண்பிள்ளை ஆண்பிள்ளை மேட்டர் சரியா? என் இடத்தில் வித்யாவோ, ஜானுவோ இந்த குடும்பத்தை தூக்கி வச்சிருக்க மாட்டாளா? ஆணாக பிறந்தாலும் அம்மாவா ஒரு பெண்ணின் மடி தேடி, அக்காவா ஒரு பெண்ணின் வாத்ஸல்யத்துக்கு ஏங்கி, தங்கைன்னு ஒரு பெண்மேல் கொள்ளை ஆசை வச்சு, அப்புரம் தாரம்னு ஒரு பெண்ணை வரிச்சு மாதொருபாகனா ஆகப்போரவனுக்கு சாண் என்ன முழம் என்ன?

 அப்படி ஒரு சிந்தனையில் அடெஞ்சு வெளீலெ வரத்தெரியாம தவிக்கரச்சே வாசல்லே பைக்கிலே ரெண்டு பசங்க. மூணாவதா ரெண்டு பொண்களுக்கு அப்புரம் பிறந்த ஜானுவின் பையன் கணேசனும், வித்யாவின் முதல் பையன் வாசுவும் வரா. 


எனக்குத் தெரியும் ரெண்டுபேரும் லேட்டா பிறந்த என் பொண் பத்மாவை கடலை போட வந்திருக்கான்னு.


Received in WhatsApp

No comments:

Post a Comment